பயங்கரவாத தடைச்சட்டத்தை எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து அகற்றுங்கள்
நகலை கிழித்தெறிந்து சபையில் எதிர்ப்பை வெளியிட்டார் ரவூப் ஹக்கீம்
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத தடைச்சட்டம் எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திருத்த நகலை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எதிர்ப்பை வெளிக்காட்டினார்.
அவர் அங்கு குறிப்பிடுகையில்,
பயங்கரவாதத் தடை சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த சட்டம் தொடர்பாக நீதிபதிகள் பலரும் தமது மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டு மக்கள் பலருக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது வெட்கக்கேடானது. எனவே இந்த திருத்தத்தை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
முன்னாள் பிரதமர் ரணில் தனது அனுபவங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரும் கட்சி நிலைப்பாட்டை தெரிவித்தார். அரசியல் நோக்கில் இந்த சட்டம் பயன்படுதப்படுவது வெட்கக்கேடானது. உயிர்த்த ஞாயிறு விசாரணை வேறுபக்கத்திற்கு செல்கிறது. கர்தினால் ஜெனீவாவுக்கு சென்றார். படையினர் இதில் தொடர்புபட்டுள்ளனரா என ஆராயுமாறு மனித உரிமை பேரவை ஆணையாளர் கோரியுள்ளார். எந்த குற்றச்சாட்டுமின்றி பலர் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து நகலை கிழித்தெறிந்தார்.- Vidivelli