மூலம்: திஸாரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்
1942 நவம்பர் மாதம் ஆகும் போது ஐரோப்பிய நாடுகளின் அனேகமான பகுதிகள் ஹிட்லரின் நாசிசப் படையினர் வசப்பட்டிருந்தது. சோவியத் நாடு ஜேர்மனியப் படைகளுக்கு எதிராக தனியாக நின்று யுத்தம் செய்து கொண்டிருந்தது. மிகப்பெரும் ஏகாதிபத்தியத்தின் சொந்தக்காரன்களாக இருந்தும் பிரித்தானியா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவாக மாறியது. அந்நாட்டு மக்கள் அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் எதிர்காலத்தை எதிர்கொண்டனர்.
பிரித்தானிய லிபரல் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சேர் வில்லியம் பெவரிஜ் யுத்தத்தின் பின்னரான பிரித்தானியாவின் வடிவம் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை இந்த இருள் சூழ்ந்த யுகத்திலும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. பெவரிஜின் அறிக்கை உடனடியாகவே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிரதிகள் ஏராளமான மக்களால் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அது பிரித்தானிய மக்களின் பிரதான பேசு பொருளாக மாறியது.
பெவரிஜ் அறிக்கையின் அடிப்படையாக அமைந்தது யுத்தத்தின் பின்னரான பொருளாதார சமூக மறுசீரமைப்புக்கான செலவுகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதாகும். மக்களை மேலும் மேலும் வயிறுகளைச் சுருக்கிக் கொள்ளுமாறு கூறுவதற்குப் பதிலாக அவர்களின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை அடுத்து வரும் ஆட்சியாளர் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.
இலவச வைத்திய சேவை, போதுமான அளவு ஓய்வூதியம், குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் பற்றி அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற் திட்டங்களுக்கான நிதியை உயர் வருமானம் பெறுபவர்களுக்கும் பாரம்பரியமாக தனவந்தர்களுக்கும் வரி விதிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.
பெவரிஜ் அறிக்கை தொடர்பாக பிரித்தானியாவின் சகல அரசியற் கட்சிகளினதும் இணக்கப்பாடு 1945 காலப் பகுதியில் வழங்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்தவுடன் அதாவது 1945 ஜூலை 5ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத் தேர்தலின் போது தொழிற் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக பெவரிஜ் அறிக்கை அமைந்திருந்தது. யுத்த காலப் பிரதம மந்திரியான வின்சென்ட் சாச்சிலையும் அவரது கட்சியான (கொன்ஸர்வேடிவ்) பழமைபேண் கட்சியையும் தோற்கடித்து ஒரு பாரிய வெற்றியை அமைத்துக் கொள்ள தொழிற் கட்சியினால் முடிந்தது. அதற்கான முக்கிய காரணம் யுத்தத்தின் பின்னரான மீள் கட்டுமானப் பணிகளின் போது செலவுகள் பொதுமக்கள் மீது திணிக்கப்படுவதில்லை என்ற தெளிவான செய்தி மக்களுக்கு வழங்கப்பட்டதாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து ஐரோப்பாவின் அனேகமான நாடுகள் இந்த உதாரணத்தைக் கையாண்டு இலாபத்துக்கும் சமூக நீதிக்குமிடையிலான ஒரு வகையான சமநிலையை உறுதிப்படுத்தும் பொருளாதார முறையின் பால் ஈர்க்கப்பட்டனர். வரிமுறையில் மறைமுக வரிகளில் தளர்வுகள் ஏற்படுத்தி நேரடியான வருமான வரி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. காணிகள் சொத்துகள் மீது வரி விதிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. வரி வருமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவெங்கும் கடும் நிதி நெருக்கடியும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் தலை தூக்கியது. யுத்த அழிவுகளினால் மொத்த ஐரோப்பாவுமே பிச்சைக்காரர்களானார்கள் என்று கூறினாலும் மிகையாகாது. வரலாற்றில் எப்போதுமில்லாத நெருக்கடியான நிலையில் பிரித்தானியா அதிகூடிய நலன்புரி சேவைகளை அறிமுகப்படுத்தியது ஏன் என்ற வினாவை வரலாற்றாசிரியரான (Tony Judt) டோனி ஜூட் தமது Post war என்ற நூலில் எழுப்பியிருந்தார். அதற்கு அவர் வழங்கும் பதில் இத்தகைய நலன்புரி வேலைத்திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தூண்டப்படக் காரணம் அவர்கள் எதிர்கொண்ட கடுமையான நெருக்கடிகளினாலாகும் என்பதாகும். யுத்தத்தினால் அல்லல் பட்ட மக்களிடையே நல்லதொரு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பை தோற்றுவிக்காதுவிடின் மீண்டும் அவர்கள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படலாம் என்ற ஆபத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு ஐரோப்பிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் புத்திசாலிகளாக இருந்தனர்.
இந்தப் பழைய கதை முன்னெப்போதுமில்லாத நெருக்கடியைச் சந்தித்துள்ள எமது நாட்டின் இன்றைய நிலைக்கும் பொருத்தமானது. 1970 -– 77 காலப்பகுதியில் சாதாரண மக்கள் மிகவுமே சிரமங்களுக்குள்ளானார்கள் என்பது உண்மை. ஆயினும் அது ஒரு பொருளாதாரக் கொள்கையின் தூர நோக்கின் ஒரு விளைவாக நிகழ்ந்தவையாகும். மூடிய பொருளாதாரத்தின் நன்மை தீமை பற்றி நாம் வேறாக ஆராய வேண்டும். இன்றைய நெருக்கடிகளுக்கு காரணம் பிழையான பொருளாதார கொள்கையல்ல. மாறாக பொருளாதாரத்தின் அ, ஆ கூடத் தெரியாத ஆட்சியாளர்களின் மடத்தனமான செயற்பாடாகும்.
நெருக்கடி மிகப் பாரதூரமானது என்பதால் செலவும் அதற்குச் சமமாக இருக்க வேண்டும். அது தொடர்பான அரசியல் களத்திலும் சமூகத்திலும் ஏற்பட வேண்டி பரந்த உரையாடல் இடம்பெற வேண்டியது தேர்தலை நெருங்கிய பின்னரல்ல, மாறாக இப்போதிலிருந்தேயாகும்.
தவறு எங்கே? யாருடையது?
2022 ஆம் ஆண்டின் எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தியைப் பெற முடியாது என சர்வதேச நாணய நிதியம் ஜனவரி மாதத்திலேயே அறிவித்தது. ரஷ்ய ஜனாதிபதி புடின் யுக்ரேனுக்கு படையெடுக்க முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகியது. அதற்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகள் உலகப் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பதை மதிப்பீடு செய்வதற்கு சற்றுக் காலமெடுக்கும். ஆயினும் அது எதிர்க் கணியமான பாதிப்பாக இருக்கும் என்பது தெளிவு.
2021 இல் இலங்கைத் தேயிலையின் இரண்டாவது பெரும் இறக்குமதியாளர் ரஷ்யாவாகும். இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளில் பெரும்பாலானோர் ரஷ்யாவையும் உக்ரைனையும் சேர்ந்தவர்கள். எனவே உக்ரைன் யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தில் வீழ்ந்த இன்னொரு பேரிடியாக அமையலாம். இந்த நிலைமையை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான விளக்கமோ தேவையோ எமது நாட்டு ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கொவிட் தொற்றுப் போலவே ரஷ்யா உக்ரைன் யுத்தமும் அரசாங்கத்தின் பலவீனத்தை மூடிக்கொள்ளக் கிடைத்துள்ள ஒரு போர்வை மட்டுமே.
உருவாகியுள்ள டொலர் நெருக்கடிக்கு தாமோ தமது அரசோ எவ்விதத்திலும் காரணமல்ல என்றும் ஒரே ஒரு காரணம் பெருந் தொற்று என்றும் சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கூறினார்.இப்போது அவர் தவறு யாருடையது? என்ற பட்டியலில் உக்ரைன் நெருக்கடியையும் உட்படுத்தியுள்ளார். அதுவல்லாது நாட்டுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ராஜபக்ஷக்களுக்குப் புரிந்துணர்வு உள்ளது என்பதை காண முடியாதுள்ளது. ஒரு பிரதேசத்துடன், மாகாணத்துடன் மட்டுப்படுத்தப்படாமல் முழு இலங்கையிலும் ஒரேமாதிரியான அபிவிருத்தி நடைபெறும் ஒரு காலம் இன்று போன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்று அன்மையில் கட்டுவன என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் கூறினார்.
ஒரு கிலோ அரிசி இரண்டு பேர்களுக்கு ஒரு வாரத்துக்குப் போதுமானது என அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். தனது குழந்தைக்கு மூன்று நாட்களாக பசிக்கு உணவு வழங்க முடியாத பரிதாப நிலையில் ஒரு தந்தை தற்கொலை செய்து கொண்ட ஒரு நாட்டையே தாம் ஆட்சி செய்வதாக ராஜபக்சக்களின் பேச்சுக்கள் உணர்த்தவில்லை.
2019 நவம்பரில் ராஜபக்சவாதிகள் 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வரும் போது இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி இருப்பு 7.5 பில்லியன் அமரிக்க டொலர்களாக இருந்தது. முன்னைய அரசாங்கத்தின் போது வெளிநாட்டுச் செலாவணி இருப்பு ஆகக்குறைந்த மட்டத்துக்குச் சென்ற 2016 இல் அது 6.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எனவே டொலர் நெருக்கடி சிறிசேன – விக்கிரமசிங்க ஆட்சியில் ஏற்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
கொவிட் தொற்று டொலர் நெருக்கடியில் செல்வாக்குச் செலுத்தியது என்பது உண்மையே. ஆயினும் இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி இருப்பு இழி நிலையை அடைந்தமைக்கான பிரதான காரணம் கண்மண் தெரியாமல் பணத்தாள் அச்சிட்டமையாகும். 2020 பெப்ரவரியில் இருந்து இன்று வரை இந்தப் பணத் தாள் அச்சடிப்புத் தொடர்கிறது.
அரசாங்கம் பணத்தை அச்சிட்டு தனது நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமானால் பொருளாதாரக் கோட்பாடுகள் எதற்கு? அச்சியந்திரங்களும் பணம் அச்சிடும் தாளும் இருந்தால் போதுமானது. இந்த எளிய உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ராஜபக்ஷாக்களுக்கு இல்லை. அந்த உண்மையை அவர்களுக்கு விளங்கும் பாஷையில் எடுத்துக்கூற எந்த அரசாங்க அதிகாரிகளும் முன்வரவுமில்லை.
இலங்கை ரூபாவின் மதிப்பை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டதால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் வங்கிகளுக்கு பணம் அனுப்புவதை தவிர்த்து உத்தியோகபூர்வமற்ற வழிகளை நாடத் தொடங்கினர். உதாரணமாக 2021 ஜனவரியில் இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து கிடைத்த டொலர்களின் எண்ணிக்கை 675.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2022 இல் அது 259.2 மில்லியன் டொலர்களை அதாவது 61% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் 1.5 டிரில்லியன் ரூபாய்களை அச்சிட்டமை காரணமாக இலங்கை இழந்த வெளிநாட்டுச் செலாவணி 5.5 பில்லியன் டொலர்களாகும்.
குறைந்து வரும் அரச வருமானத்தை ஈடு செய்யவே ராஜபக்சக்கள் பணம் அச்சிட்டனர். அரச வருமானம் 2020 ஜனவரி முதல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பெப்ரவரி மாதத்திலிருந்தே பணம் அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது கொவிட்-19 இலங்கையைத் தாக்கியிருக்கவில்லை. அரச வருமான வீழ்ச்சி 2019 நவம்பர்,- டிசம்பர் மாதங்களில் அரசாங்கம் வழங்கிய பாரிய வரிச்சலுகையுடனேயே தொடங்கியது. இவ்வாறு வரிச்சலுகை வழங்குவது குறித்து இலங்கை மத்திய வங்கி கூட அறிந்திருக்கவில்லை என்று மத்திய வங்கியுடன் எவ்விதக் கலந்துரையாடலும் இது தொடர்பாக நடத்தப்படவில்லை என்றும் அண்மையில் ரொய்ட்டர் சேவைக்கு வழங்கிய நேர்முகத்தில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிட்டார்.
எவ்வித ஆய்வுமின்றி வரிக் குறைப்பு செய்தமையே வீழ்ச்சியின் ஆரம்பமாகும். காலத்துக்கும் நாட்டுக்கும் பொருத்தமான வரிமுறையை முன்மொழிவதன் மூலமே இதனைச் சரி செய்ய முடியும். இதன் பின்னர் வரும் எந்த அரசாங்கமாயினும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய தெரிவு ராஜபக்ச வாதிகளின் பொருளாதார அனர்த்தத்தின் சுமையை மக்களின் எந்த வகுப்பினர் தாங்கிக்கொள்ளப் போகின்றனர் என்பதுமாகும்.
உயர் வருமானம் பெறுபவர்கள் மீது கூடிய வரி விதிக்கப்படுவதனால் பொருளாதார விருத்தியில் வீழ்ச்சியேற்படுவதில்லை என்பதை 1980 முதலான 40 ஆண்டு அனுபவத்தில் சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. வருமானம் அதிகரிக்கும்போது வரியை அதிகரிக்கும் Progressive taxation கூடிச் செல்லும் முறையை அரசாங்கங்கள் கையாளத் தயங்குவதற்குக் காரணம் சமூகத்தின் முக்கிய புள்ளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என்பதனாலாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது.
இந்தத் தீர்க்கமான தெரிவின் போது தமது நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பதை எதிர்க்கட்சிகளும் இப்போதிலிருந்தே தீர்மானிக்க வேண்டும். அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதுவல்லாமல் வெறும் வாக்குறுதிகளால் ஏதும் பயனுண்டா? என்ற கேள்வி எழுகிறது.
ரஷ்யாவின் உக்ரைன்
ஆக்கிரமிப்பும் நாமும்
விளாடிமிர் புட்டினின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கும் ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக் ஆக்கிரமிப்புக்குமிடையே வித்தியாசமில்லை. ஈராக் ஆக்கிரமிப்பைக் கண்டித்தவர்கள் சதாம் ஹுசைனின் ஆதரவானவர்கள் என்று சாதிக்க புஷ் நிர்வாகம் முயற்சிகள் எடுத்த போதிலும் உண்மை அதுவல்ல. சதாம் ஹுசைனை விரும்பாத பலரும் கூட அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பைக் கண்டித்தனர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிப்பது என்பது உக்ரைனை அப்பாவி என்று தீர்மானிப்பதன்று. உக்ரைனின் இன்றைய நிலைக்கு அந்நாடு அண்மைக் காலங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு செய்த கொடுமைகள் காரணமாக அமைந்துள்ளது. உதாரணமாக எமது நாட்டின் ‘சிங்களம் மட்டும்’ என்ற தவறையும் உக்ரைன் தாராளமாகச் செய்துள்ளது. உக்ரைன் மொழியை அந்நாட்டில் தேசிய மொழியாக சோவியத் யூனியனில் இருந்து பிரிவதற்கு முன்னரே அதாவது 1984 லேயே ஆக்கியது. 1991 இல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தினூடாக ரஷ்ய மொழி உட்பட ஏனைய மொழிகளுக்கு ஓரளவு இடம் வழங்கப்பட்ட போதிலும் இனப்பிரச்சினை ஏலவே துளிர்விட்டிருந்தது.
2014 ஆட்சி மாற்றத்தின் பின்னர் உக்ரைன் மொழியை உயர்த்தி வைத்து ஏனைய மொழிகளை கீழிறக்கும் மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் புட்டினுக்கு இவ்விடயத்தில் அழ இருந்தவன் கண்ணில் விரலைக் குத்தியது போலாகிவிட்டது.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் நேட்டோ அமைப்பைத் தோற்றுவித்த காரணங்களும் வலுவிழந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அமெரிக்க தலைமையிலான மேலை நாடுகள் ரஷ்யாவில் இருந்து பிரிந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த மார்ஷர் திட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் நேட்டோவை பலப்படுத்தி பரவலாக்கும் முயற்சியிலேயே தொடர்ந்தும் கவனம் செலுத்தினர்.
அன்று மேற்கைரோப்பாவிற்காக அமெரிக்கா நடைமுறைப்படுத்திய மாஷல் திட்டம் காரணமாக கம்யூனிசத்தின் வளர்ச்சி தடைப்பட்டது. 1989/90 களில் மேற்கத்தேய வல்லரசுகள் வோர்ஸோ (war saw pact) ஒப்பந்த நாடுகளில் அதே போன்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பின் அந்நாடுகளில் இனவாதம் பரவுவது தடைப்பட்டிருக்கும். 1945 இல் மேற்கைரோப்பிய நாடுகளில் போன்றே ஒரு நீதியான அபிவிருத்திப் பாதையை 1990 களில் ரஷ்யாவில் நடைமுறைப்படுத்தியிருப்பின் புட்டின் போன்ற ஒரு ஜனாதிபதி வராமலும் இருந்திருக்கலாம்.
2021 ஜூனில் ஜனாதிபதி புட்டின் (On the historic unity of Russian and ukrainian) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். யுக்ரேனியர்கள் வேறு ஒரு இனம் அல்ல எனவும் அவர்கள் சின்ன ரஷ்யர்கள் (Little Russians) மட்டுமே எனவும் சார் அரசின் கருத்தை இக்கட்டுரையில் எழுதியிருந்தார். 2021 பெப்ரவரி 21ஆம் திகதி நடத்திய ஓர் உரையில் உக்ரைனை உருவாக்கி விரிவுபடுத்தியமை லெனின், ஸ்டாலின், குருஷேவ் ஆகியோர் மேற்கொண்ட ரஷ்யன் விரோத நடவடிக்கை என்று அவர் குற்றம்சாட்டினார். அவரின் நோக்கம் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்குவதல்ல. சார் ஏகாதிபத்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதாகும். இப்போது நடைபெறும் ஆக்கிரமிப்பு வெற்றியடைந்தால் ரஷ்யாவின் ஒரு குடியேற்ற நாடாக மாறும் ஆபத்து உக்ரேனுக்கு உண்டு. அதிர்ஷ்டவசமாக உக்ரைன் ரஷ்யாவுக்கு மற்றுமொரு ஆப்கானிஸ்தானாக மாறக்கூடாது என்ற சமிக்ஞை கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.
கியூபா தொடர்பிலான அமெரிக்காவின் செயற்பாட்டை பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ஒரு மாபியாக் கோட்பாடு என வர்ணித்தார். அதாவது தனக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளை குரூரத்துடன் தண்டிப்பதாகும். உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கொள்கையும் இதனையொத்ததாகவே உள்ளது. பழிவாங்கும் தலைவர்களினால் தீங்கு விளைவது அண்மிய நாடுகளுக்கு மட்டுமன்றி தமது நாட்டு மக்களுக்கும் தான் என்பது உண்மை.
இலங்கையில் தற்போது 7 மணி நேரத்துக்கு மேற்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது தவிர ஆட்சியாளர்களிடம் மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வேதும் இல்லை. மசகு எண்ணெய் நெருக்கடிக்கான அவர்களின் தீர்வு துவிச்சக்கர வண்டியை மீளக் கொண்டு வருவதாகும். நாடும் மக்களும் அனர்த்தத்தில் இருந்து அனர்த்தத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த இக்கட்டான கட்டத்திலும் அரசாங்கம் தம் எதிரியைத் தேடிப் பழிவாங்குவதிலேயே குறியாக உள்ளது. உதிர்த்த ஞாயிறு தாக்குதலை நடக்க விடாது தடுக்காத குற்றத்துக்காக முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சானி அபேசேகர மீது குற்றம் சுமத்தி அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) கைது செய்யும் யோசனை இருப்பதாக ஊடகங்கள் கூறும் எதிர்வுகூறல் இதற்கான உதாரணமாகும்.
நாட்டில் இனங்களுக்கிடையிலான தொடர்புகளை முறையாக முகாமைத்துவம் செய்யாமையின் விளைவை உக்ரைன் ஆக்கிரமிப்பில் காணமுடிகிறது. புட்டினின் குரூரமான ஆக்கிரமிப்பினால் ரஷ்ய நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அதிகார வெறி பிடித்த தலைவர்கள் தமது பதவி ஆசைக்கும் நாட்டின் உண்மையான நன்மைக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் கண்டுகொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதேயாகும்.
இந்த இருவகைப் பிரச்சினைகளையும் இன்றைய இலங்கை எதிர்கொண்டுள்ளது. நாளை ராஜபக்சக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்தாலும் இந்த நெருக்கடி தீரப்போவதில்லை. ஆள் மாற்றுவதாக அன்றி கொள்கை மாற்றமும் எமக்குத் தேவை. ஒரு இரட்சிப்பவரைத் தேடுவதை விடுத்து இன்றைய சிதைவு களை நாளைய முன்மாதிரிகளாக மாற்றுவதே எமது பணியாக அமைய வேண்டும்.- Vidivelli