இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்ற நிலையில் அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா குறிப்பிடத்தக்க உதவியை வழங்கியுள்ள நிலையில், சீனாவும் தற்போது உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பகீரதப் பிரயத்தனங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். அரசாங்கத்தின் பல சிரேஸ்ட அமைச்சர்கள் பல்வேறு அரபு நாடுகளுக்கும் விஜயம் செய்து எரிபொருள் இறக்குமதிக்காக உதவிகளைக் கோரியிருந்தனர். எனினும் எந்தவொரு நாடும் குறிப்பிடும்படியான உதவிகளை வழங்க முன்வரவில்லை.
கடந்த வாரம் சவூதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சவூதியிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தனர். நேற்று முன்தினம் கட்டார் அமீரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அந்நாட்டின் உதவியைப் பெற்றுக் கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அமைச்சர் பந்துல குணவர்தனவும் பல தடவைகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்து இலங்கைக்கு உதவுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் தனது பதவிக் காலத்தில் பல அரபு நாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்திருந்தார்.
துரதிஸ்டவசமாக மேற்படி முயற்சிகள் எதுவும் இதுவரை உரிய பலனைக் கொடுத்ததாக தெரியவில்லை. வழக்கமாக இலங்கைக்கு பல மில்லியன் டொலர்களை அள்ளியிறைக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது இக்கட்டான கட்டத்திலும் கூட உதவுவதற்கு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முதலில் விடை காணத் தலைப்பட வேண்டும்.
இது தொடர்பில் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தமையே இன்று அரபு நாடுகள் இலங்கைக்கு உதவ விரும்பாமைக்கான பிரதான காரணம் என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனாஸாக்களை எரிப்பதில் காட்டிய இறுக்கமான, மனிதாபிமானமற்ற போக்கே அரபு நாடுகள் இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கு தடையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதுவே யதார்த்தமுமாகும்.
57 அரபு நாடுகள் அங்கம் வகிக்கும் ஓ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கவுன்சில் இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கை தொடர்பில் பலத்த கண்டனங்களை வெளியிட்டிருந்ததுடன் இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையிலும் பிரதான பேசுபொருளாக முன்வைத்திருந்தது. குறிப்பாக இலங்கையில் பிறந்து 20 நாட்களேயான சிசுவின் சடலம் கூட எரிக்கப்பட்டமை உலகளாவிய முஸ்லிம் உம்மாவை கடும் கோபத்திலும் கவலையிலும் ஆழ்த்தியிருந்தது. இந்த அரசாங்கம் அன்று கடைப்பிடித்த இனவாத ரீதியான கடும்போக்கு கொள்கையே இன்று அரபு நாடுகளை விரண்டோடச் செய்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்தில் இலங்கையின் பாரிய அபிவிருத்திப் பணிகளுக்காக கோடிக் கணக்கான டொலர்களை சவூதி, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் வாரியிறைத்துள்ளன. மேற்குலக நாடுகளின் ஆக்கிரமிப்பினால் இன்று சிதைக்கப்பட்டுள்ள ஈராக், லிபியா போன்ற நாடுகள் கூட ஒரு கட்டத்தில் இலங்கைக்கு தாராளமாக உதவிகளை வழங்கியுள்ளன.
இலங்கைக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள் காரணமாக மேற்படி நாடுகள் எப்போதுமே பிரதிபலன் பாராது உதவிகளை வழங்கியே வந்துள்ளன. எனினும் இப்போது அவர்கள் உதவத் தயங்குவது இன்றைய ஆட்சியாளர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் கட்டியெழுப்பப்பட்டுள்ள மோசமான பதிவுகளினாலேயே என்பது தெளிவானதாகும். இதனை மாற்றியமைக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏராளமான அரபு நாட்டு செல்வதர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்திருந்தனர். எனினும் அரபு நாட்டவர்களை முதலீடு செய்ய அனுமதித்தால் இலங்கையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற இனவாதப் புரளி கிளப்பப்பட்டமை, முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம முதல் மினுவாங்கொடை வரை வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டமை காரணமாக அவ்வாறாக முதலீட்டாளர்கள் கூட இலங்கையிலிருந்து வெளியேற வேண்டிய துரதிஸ்டநிலை தோற்றம் பெற்றது.
எவ்வாறிருப்பினும் இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பன வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாகும். அந்த வகையில் இலங்கையை இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான கடப்பாடு இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள சகல நாடுகளுக்கும் உரியதாகும். இதில் அரபு நாடுகளும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இலங்கைக்கு நிபந்தனைகளுடன் கூடிய உதவிகளை வழங்குவதற்கு அரபு நாடுகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.- Vidivelli