மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்
எமது நாட்டு மக்களின் குறிப்பாக வாக்காளர்களில் பெரும்பான்மையினர்களாகிய கிராமிய மக்களின் அரசியல் புரிதலை விருத்தி செய்வதற்கான வழி வகைகள் இல்லையா? கிராமிய சமூகத்தில் அரசியல் செய்யும் ஓர் அரசியல் செயற்பாட்டாளர் அண்மையில் என்னிடம் கேட்ட மேற்படி வினாவை கலந்துரையாடுவதற்காக இந்தக் கட்டுரையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
மக்களின் அரசியல் புரிதலும் அறிவும் கூர்மையாக மதிப்பிடப்படும் ஒரு சந்தர்ப்பம் பொதுத் தேர்தலாகும். அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளுக்கும் ஊடகங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கும் போலியான செய்திகளுக்கும் ஏமாறும் வாக்காளர்கள் தாங்கள் எதிர்காலத்தில் வேதனைப்படும் தீர்மானத்தை எடுக்கும் நிலைமை பொதுத்தேர்தல்களில் ஏற்படுகின்றது. இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் கட்டுரை மற்றும் வீடியோக்கள் மூலம் 2019 இல் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சியில் அமர்த்தியவர்கள் 69 இலட்சம் பேரும் அரசியல் ஞானமற்ற மடையர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. இதுபோன்ற கருத்துக்களுக்கு மக்களின் அரசியல் புரிந்துணர்வை அதிகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் எத்தகைய துலங்கலைச் செலுத்த வேண்டும்? என்பது பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளது.
இந்த விடயத்தை சற்று ஆழமாக யோசிக்கும் போது பார்க்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் நமது நாட்டு மக்கள் அரசியல் புரிந்துணர்வற்றவர்கள் என்று கூறுவது பிழையான கருத்து என்பதாகும். வளர்ந்தவர்களாகவுள்ள அனைவருக்கும் போல் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் அரசியலறிவு உண்டு. அரசியல் அறிவு இல்லாத அல்லது அரசியலில் கரிசனையற்ற ஒரு சிறு தொகையினர் இருக்கலாம். எவ்வாறிருப்பினும் கூடிக் குறைந்த அளவுகளில் அரசியல் அறிவு காணப்படுகின்றது என்று எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு ஜனநாயக சமூகத்தில் காணப்பட வேண்டிய அரசியல் புரிந்துணர்வுமாகும். அரசியல் ஞானம் அல்லது புரிதல் என்பதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டியது விமர்சன ரீதியான அரசியலறிவின் குறைந்த மட்ட நிலையாகும். அது சமூகத்தில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகும். மக்களிடையே சுயமாக உருவாகும் ஒன்றுமாகும். இது அரசியற் கட்சிகள் அரசியல் கழகங்கள் சிவில் சமூக அமைப்புகள் மூலம் உருவாக்கப்படுகின்ற ஒன்றுமாகும். பாடசாலைகள் பல்கலைக் கழகங்களில் படிப்பவை என்று கூறமுடியாது. இன்று இலங்கைச் சமூகத்துக்கிடையேயும் மக்களிடையேயும் விமர்சன ரீதியான அரசியல் அறிவைக் கட்டியெழுப்புதல் என்பது புதிதாக சிந்திக்க வேண்டியதொரு பணியாகும். அது ஒரு வித்தியாசமான கல்விப் பணியாகவும் உள்ளது.
அரசியல் பிரயோக அறிவு
அரசியல் பற்றி நாட்டு மக்களிடையே ஆழமான அறிவு இல்லாதது குறித்து ஆச்சரியப்படுவதற்கோ கவலையடைவதற்கோ தேவையில்லை. ஏனெனில் பொது மக்களிடையே அப்படியொன்று இல்லை என்பதனாலாகும். ஆயினும் பொதுமக்களிடையே வேறு வகையான அரசியல் ஆற்றல்கள் உள்ளன. அன்றாட நிகழ்வுகள் பற்றிய இற்றைப்படுத்தல், அரசியல் எதிர்பார்ப்புகள் இருத்தல், அரசியல் எதிர்வு கூறல்கள், மற்றும் தீர்மானங்கள் ஆகிய நான்கு வகை அரசியற் திறன்களும் காணப்படுகின்றன.
அரசியல் பற்றிய அன்றாட அறிவு என்பது அரசியல் பிரயோக ஞானம் என்றும் அழைக்கப்படும். பாடசாலைக் கல்வியில் குறைந்தவர்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வீடுகளில் வேலைசெய்யும் பணிப்பெண்கள் போன்றவர்களுடன் அரசியல் பற்றிப் பேசும் போது அவர்களிடம் மேற்கூறிய திறன்கள் கூடிக் குறைந்த அளவு இருப்பது புரியும். படித்தவர்கள் போன்றே அவர்களிடமும் அரசியல் ஓட்டம் இருப்பது விளங்கும்.
ஆயினும் மக்கள் அரசியல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறும் போது மேற்கூறிய அரசியல் அறிவை புறக்கணிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது. அதேநேரம் அத்தகைய வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கேள்வியாகும். இலங்கையை அதன் அரசியலையும் சமூகத்தையும் புதிய பாதையொன்றின்பால் திரும்புவதற்கு மக்களிடையே விமர்சன ரீதியான அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இப்போதுள்ள தடைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதும் முக்கியமாகும்.
விமர்சன ரீதியான விளக்கம்
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்வி பதில்களில் இருந்து மற்றுமொரு கருத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முடியும். அது யாதெனில் நாட்டில் இன்று நிலவும் கடுமையான நெருக்கடிகள் பிரச்சினைகள் பற்றிய உண்மையான புரிதல் எமது நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதாகும். அது ஆதிக்கவாத அரசியல் கட்சிகள் தமது நன்மைக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு விடயமுமாகும். இந்தப் பொய்களினால் ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் ஏமாற்றத்திலிருந்து தவிர்ந்து கொள்ளும் ஒரு சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு? என்ற வினாவும் இங்கு எழுகிறது. அரசியல் கோட்பாட்டு மொழிநடையில் கூறுவதானால் விமர்சன ரீதியான அரசியல் சிந்தனை ஆற்றலும் அரசியல் ரீதியான தீர்மானத்தை எடுக்கக்கக்கூடிய முதிர்ச்சியான சிந்தனை ஆற்றலும் உள்ள அரசியல் ரீதியான விழிப்புணர்வுள்ள உச்சநிலை இற்றைப்படுத்தலுடன் கூடிய ஏமாற்றுதலுக்கு உட்படாததும் குடியரசு சிந்தனையுடன் கூடியதுமான (அரிஸ்டோட்டில் குடிமகன்) ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு? என்பதே இந்த சவாலில் உள்ள கருப்பொருள் ரீதியான அர்த்தமாகும். நம்மில் அநேகர் தெரிந்து வைத்திருப்பதன்படி அரிஸ்டோட்டில் செம்மை வாய்ந்த கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு அரசியல் சிந்தனையாளர். அவர் குடியாட்சி வாதத்தின் முன்னோடியாவார். குடியரசு என்பது குடிமக்களை சமூகத்தை மையமாகக் கொண்டதாகும். நேரடி அரசியல் பங்குபற்றுதல் மையப்படுத்திய ஒரு அரசும் அரசாங்கமும் குடி மக்களும் இணைந்த அரசியல் வடிவமாகும்.
‘குடிமக்கள் நற்பண்புகள்’ என்ற அரிஸ்டோட்டில் எண்ணக்கரு மூலம் கருதப்படுவது தேர்தலில் வாக்களிக்கும் பிரஜைகளை மட்டுமல்ல தானும் அங்கம் வகிக்கும் அரசியல் சமுதாயத்தின் பொது நன்மை கருதி தனது பயன்பாட்டுக்கு என்று கருதாது அர்ப்பணிப்புடன் கருமமாற்றும் பிரஜைகளாகும். அரசியலில் வினைத்திறனுடன் பங்குபற்றுதல் அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகள், அரசாங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பது. ஏனைய பிரஜைகளுடன் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அரசியல் விழிப்புணர்வுடன் இருத்தல் என்பன குடிமக்களின் நற்பண்புகள் இயல்புகளாகும்.
இன்றைய அரசாங்கத்தின் பொருளாதார, விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களில் எதிர்ப்புகளைக் காட்டிய விவசாயிகளிடமிருந்து வெளிப்பட்டதும் அத்தகைய பிரசைகள் இயல்புகளாகும்.
தமது சம்பள முரண்பாடு தொடர்பாக பல மாதங்களாக போராட்டம் நடத்திய அரசாங்க ஆசிரியர்கள் வெளிப்படுத்தியதும் அதே இயல்புகளே. இவற்றிலிருந்து விளங்குவது எமது நாட்டின் பிரஜைகளிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய பிரஜைகள் பண்புகள் இருப்பதும் தேவையான இடங்களில் அதனது வெளிப்படுதலுமாகும்.
இதனை நாம் நினைவுபடுத்த வேண்டியிருப்பது அரசியல், சமூக சீர்திருத்தத்திற்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் சூழல் தொடர்பில் கவனம் செலுத்தினால் அதனூடாக புதிய நோக்கொன்றை உருவாக்கக்கூடியதாக இருக்கும் என்பதை குறிப்பிடுவதற்காகும். அதில் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ள ஒரு விடயமாவது வழக்கமாக பெரும்பாலான அரசியல் கட்சிகளினால் பிரஜைகளின் அரசியல் ஞானத்தைக் கூர்மையாக்கும் பணிகள் நடைபெறுவதில்லை என்பதாகும்.
இந்நிலைக்கு அரசியற் கட்சிகள் தள்ளப்பட்டதற்கான பிரதான காரணம் எமது நாட்டில் நிலவும் நலிவடைந்த பிரதிநிதித்துவ ஜனநாயக முறையாகும். மக்களின் மேலோட்டமான அரசியல் உணர்வைத் தூண்டி அவர்களின் சமய, இன, வர்க்க முரண்பாடுகளைப் பெருப்பித்துக் காட்டி பாதுகாப்பின்மை, குரோதம், சந்தேகம் போன்ற மனிதர்களிடையேயுள்ள அடிமட்ட கூட்டுணர்வுகளைத் தூண்டிவிட்டு “தேர்தலில் வெற்றி பெறுதல்” என்ற இலக்கை நோக்கி வாக்காளர்களை மந்தை கூட்டம் போன்று பிரசாரக் கூட்டங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இழுத்துச் செல்லல் அனேகமான அரசியல் கட்சிகளின் பிரதான பணியாகவுள்ளது. பிரஜைகளின் அரசியல் விளக்கத்தையன்றி அரசியல் மடமையை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வதில் அரசியல் தலைவர்கள் காட்டும் ஆர்வம் இன்று ஓர் அரசியல் சாணக்கியமாகவே பார்க்கப்படுகின்றது. பல அரசியல் தலைவர்களும் இந்தத் திறனை விருத்தி செய்து கொள்ளவே முயற்சி செய்கின்றனர்.
ஏமாறாத பிரஜைகளை நோக்கி
இந்த நிலைக்குச் சவால் விடவும் இதிலிருந்து மீண்டு குடியாட்சி உயர் பண்புகளுடன் கூடிய பிரஜைகளை உருவாக்கவும் குறைந்தபட்சம் சில அரசியல் கட்சிகளாவது தீர்மானிக்குமானால் அதன் மூலம் அதிகாரத்தை பிடிப்பதை மட்டும் நோக்காகக் கொண்ட கட்சிகளிடமும் அரசியல் தலைவர்களிடமும் ஏமாறாத பிரஜைகளைக் கொண்டு ஒரு அரசியல் சமூகத்தை உருவாக்கும் பணியில் இணைவதற்கு முடியுமாக இருக்கும். அவ்வாறு செய்யத் துணியும் அரசியற் கட்சிகளிடம் பின்வரும் பண்புகள், இயல்புகள் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும்.
அதில் முதலாவது “அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்போம்” என்ற குறுங்கால அரசியல் இலக்கை உள்ளத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். இலங்கை இப்போது எதிர்கொண்டுள்ள அரசியல், பொருளாதார, சமூக ரீதியான கடுமையான நெருக்கடிகள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தீர்க்கக் கூடியனவாக இல்லை. அவற்றை ஓட்டுப் போடுதல் மூலம் தீர்க்க முடியாது. அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள சமூகத்தைப் பழக்கப் படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறில்லாது கொள்கைகளின் தீர்வுகள் விடயத்தில் சமூகத்தின் எதிர்ப்பு கிளம்புவது தவிர்க்க முடியாதது. அப்போது நடப்பது வலுக்கட்டாயமாக அநீதிகளை அமுல் நடத்த முற்படுவதனூடாக நெருக்கடிகளைச் சந்திப்பதாகும். எமது நாட்டின் மீள் கட்டியெழுப்புதல் பணிக்கு மக்களைத் தயார்படுத்துவதுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுதல் என்ற குறுகிய இலக்குக்கு அப்பால் மக்களைக் கொண்டு செல்லும் பிரஜைகள் அறிவூட்ட வேண்டிய திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்.
அந்த தொடரின் இரண்டாவது விடயம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரஜைகளின் அரசியல் அறிவின் பண்பு ரீதியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் அடுத்த பத்தாண்டுகளாவது எதிர்க்கட்சியில் இருக்கத் தயாரான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் படிப்படியான இலக்கை நோக்கிய அர்ப்பணிப்புள்ள அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வராமல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சமூகத்தில் அரசியல் கலந்துரையாடல்களைத் தீவிரப்படுத்தி சமூகங்களின் அரசியல் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி சமூகங்களுக்கான புத்திஜீவித் தலைமைத்துவத்தை வழங்குவதாகும். அது சற்றுக் காலமெடுக்கும் ஒரு முயற்சியாகும். அவ்வாறிருப்பினும் மக்களிடையே நிகழும் அரசியல் கலந்துரையாடல்கள் வாத விவாதங்கள் ஒரு நோக்கத்தை இலக்காகக் கொண்டதாக மாற்றியமைக்கும் ஆற்றல் அத்தகைய அரசியல் கட்சிகளால் செய்ய முடியுமான ஒரு குறிக்கோளாகும்.
ஒரு கருத்தியலின் தேவைப்பாடு
மூன்றாவது விடயம் இத்தகைய செயற்பாட்டுக்கு வழிகாட்டும் தெளிவான ஒரு கருத்தியல் மற்றும் அக்கருத்தியல் சார்ந்த வேலைத்திட்டம் வளர்த்துச் செல்ல வேண்டிய கருத்தியல் தொகுதி என்பன அத்தகைய அரசியல் கட்சிகளிடம் அவசியம் இருக்கவேண்டும். தற்போது அநேகமான பிரஜைகளிடமுள்ள போலி அரசியல் ஞானத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமானால் அவர்களின் அரசியல் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் புதுப்பிக்கும் ஒரு புது சட்டகத்தை அமைக்கும் ஒரு புதிய கருத்தியற் தொகுதி காணப்பட வேண்டும். “புதிய கருத்தியலினால் பலமடைதல்” என்ற பண்டைய போல்செவிக் கட்சியினரின் அரசியல் அகராதியில் இருந்த எண்ணக்கருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. மாற்றத்தை கட்டியெழுப்புவதற்காக மக்களைத் தயார் படுத்துவதற்கும் தேவையான கருத்தியலை அது போன்ற வேறு சில கருத்தியல்களுடன் இணைக்கப்படுமானால் அதற்கான சமூகக் கவர்ச்சியும் பலமாக இருக்கும். ஜனநாயகம், சமவுடைமை வாதம், குடியரசு வாதம், பெண்ணியம் ஆகிய நான்கு முற்போக்குக் கருத்தியல் பார்வைகளும் இதற்கான சிறந்த மூலாதாரங்களாகும்.
இலங்கையின் முக்கிய பிரச்சினைகள் பற்றி விளக்கும் வகையிலும் மக்களுக்கு இலகுவாக விளங்கும் வகையிலும் இந்தக் கோணங்களிலான வழிகாட்டல் வழங்கப்படவேண்டும். மாற்றத்துக்கான சமூகத்தை தயார்படுத்தும் பணியை தனியொரு கட்சி மட்டும் செய்ய முடியாது. அதற்கான பரந்த கூட்டணி வேண்டும். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், முற்போக்கான சமயக் குழுக்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆகிய சக்திகளினூடாக தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ளப்படும் பங்களிப்பின்றி மாற்றத்தை நோக்கிப் பயணித்தல் சிரமமானது.- Vidivelli