கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இலங்கையில் இஸ்லாம் காலூன்றிய காலம்தொட்டு முஸ்லிம்களுக்கும் பேரீத்தம் பழங்களுக்கும் நோன்பு மாதத்துக்குமிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்கும், தேர்தல் காலங்களில் அவர்களின் வாக்குகளைத் திரட்டுவதற்கும், பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நோன்பு மாதம் வந்துவிட்டால் முஸ்லிம் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பேரீத்தம்பழ இறக்குமதியைப்பற்றி விசேட அறிக்கைகளை செய்தித் தாள்களிலும் வானொலி மூலமாகவும் வெளியிட்டு முஸ்லிம் சமூகத்துக்கான அவர்களது மகத்தான சேவையைப் பிரகடனப்படுத்துவது வழக்கம். அதிலும் குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலத்தில், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி தட்டுப்பாடான வேளையில், பேரீத்தம்பழ இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மேலும் பிரபல்யமான விளம்பர அறிக்கைகள் செய்தித் தாள்களில் வருவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான காலத்துக்குள்ளேதான் எதிர்வரும் நோன்பு மாதத்தில் போதிய அளவு பேரீத்தம்பழம் இறக்குமதி செய்தல் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நாடே வங்குறோத்து அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். ஏற்கனவே பேரீத்தம்பழம் உட்பட 367 இறக்குமதிப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் நீதி அமைச்சர் அலி சப்ரி உட்பட ஏழெட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் பிரதமரை அணுகி முஸ்லிம்களுக்கு இத்தடையால் ஏற்படப்போகும் பெரும் பாதிப்பைப் பற்றி வலியுறுத்தியதால் பிரதமரும் அதை உணர்ந்து உடனடியாக அத்தடையை நீக்குவதற்கு வர்த்தமானி ஒன்று விரைவில் வெளிவரப்போவதைப் படித்தேன். அதனைப் படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாததால் இவ்விடயம் பற்றிய எனது சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக, இஸ்லாம் மத்திய கிழக்கின், அரேபியாவிலே பிறந்ததால் அப்பிரதேசத்தின் இயற்கை வளங்களும் புவியியல் பண்புகளும் அம்மார்க்கத்தின் சில ஆசாரங்களில் கலந்துள்ளமை தவிர்க்க முடியாததொன்று. இது இஸ்லாத்துக்குமட்டும் சொந்தமான உண்மையல்ல. அனைத்துச் சமயங்களுக்கும் பொதுவான ஓர் யதார்த்தம். எல்லா மதங்களும் உலகத்தில் வாழ்பவர்களுக்காகவே வந்தன. ஆதலால் வாழ்பவர்களின் இயற்கைச் சூழலுக்கு மாறாக எந்த ஒரு மதமும் தனது ஆசாரங்களை அறிமுகப்படுத்த முடியாது. இது ஒரு சமூகவியல் அடிப்படையிலான உண்மை.
நாளெல்லாம் பசித்திருந்து அந்திவேளையிலே விரதத்தை நிறைவு செய்வதற்கு அரேபியாவிலே விளைந்த பேரீத்தங்கனி அரபு நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். வரண்டுபோன உடலுக்குச் சுவையுடன் சக்தியையும் ஊட்டும் ஒரு கனியாக அது அமைந்து அதற்கும் நோன்புக்கும் இடையறாத ஓர் உறவு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. காலவோட்டத்தில் இஸ்லாம் உலகெங்கிலும் பரவத் தொடங்கியபோது அதனுடன் பரவிய புரோகித இஸ்லாம் பேரீத்தங்கனியையும் நோன்புடன் இணைத்து பாமர மக்களிடையே அந்தக்கனி இல்லையென்றால் நோன்பே பூர்த்தியாகாது என்ற ஒரு மனோநிலையை வளர்த்து விட்டது. பேரீத்தங்கனிக்கு மத ரீதியான மகத்துவமொன்று ஏற்பட்ட வரலாறு இதுதான்.
இலங்கையிலோ அது அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. போதிய அளவு அக்கனியை இறக்குமதி செய்து முஸ்லிம்களின் விரத தாபத்தைத் தணித்துவிட்டால் அவர்கள் தமது நன்றியை வாக்குச்சாவடியிலே காட்டுவர் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச நினைத்துள்ளார் போலும். அத்துடன் அவருக்குப் பின்னால் நின்று அவரை ஊக்குவித்த அந்த ஏழெட்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் தாம் ஏற்கனவே 20ஆம் திருத்தப் பிரேரணைக்கு வாக்களித்த பாவத்துக்காக பேரீத்தம்பழத்தின் மூலம் பிராயச்சித்தம் தேடுகிறார்கள் போலும் தெரிகிறது. இருந்தும் முஸ்லிம்களின் பேரீத்தம்பழ அரசியல் என்றோ ஆரம்பித்துவிட்டதை ஏலவே குறிப்பிட்டுள்ளேன்.
இரண்டாவதாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் அரசுடன் இணைந்து பாடுபடுகிறோம் என்று பறை அடிக்கும் இப்பிரதிநிதிகளிடம் முன்வைக்க வேண்டிய ஒரு சில கேள்விகள் இருக்கின்றன. ஒன்று, பேரீத்தம் பழம்தான் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் தலையாய பிரச்சினையா? இரண்டு, கடந்த இரண்டு வருடங்களாக கேகாலை மாவட்டத்தில் நெலுந்தெனிய பள்ளிவாசல் வளாகத்திற்குமுன்பு இரவோடிரவாக புத்தர் சிலையொன்று தோன்றி அது இன்று நிரந்தரமாகி இருப்பது இந்தச் செயல் வீரர்களின் பார்வையில் விழவில்லையா? மூன்று, மகரை சிறைச்சாலையின் நூறு வருடப் பள்ளிவாசல் சிறைக்காவலர்களால் அபகரிக்கப்பட்டு அது இன்று அவர்களின் கேளிக்கை மண்டபமாக இயங்குவது இந்த அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு வரவில்லையா? நான்கு, பலாங்கொடையில் கூரகலையில் ஜெய்லானி பள்ளிவாசலின் மினாரா இடித்துத் தள்ளப்பட்டபோது எங்கே போனார்கள் இந்தப் போராளிகள்? ஐந்து, முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்களை அரசாங்கம் தீயிட்டுக் கொழுத்தியபோதும், அதனைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபை குரலெழுப்பிய பின்னர் அந்த ஜனாஸாக்கள் யாவற்றையும் மஜ்மா நகரில் மட்டுமே அடக்கம் செய்ய முடிவெடுத்து ஒரு வருட காலமாக முஸ்லிம்களின் மனோவேக்காட்டை வளர்த்துக் கொண்டிருந்தபோதும் வாய் மூடிச் செயலிழந்து நின்ற இந்தத் தலைவர்கள் கேவலம் நோன்பு திறக்கப் பேரீத்தம்பழம் பெற்றுத் தருகிறோம் என்று கூறுவது ஒரு கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா? ஆறு, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வைக்குள் முஸ்லிம் இனத்தின் தனித்துவங்களை அழிக்க முனையும் நடவடிக்கைகளைப்பற்றி மௌனிகளாய் இருந்துகொண்டு பேரீத்தம்பழத்துக்காகப் போர்க்கொடி தூக்கியதன் மர்மம் என்னவோ? ஏழு, அட்டாளைச்சேனையின் முள்ளிமலையில் ஒரு புத்தர் சிலையை நிறுவுவதற்குச் சில வாரங்களாக எடுக்கப்படும் முயற்சிகள் இந்த இனப்பக்தர்களுக்குத் தெரியவில்லையா? முதலில் இக்கேள்விகளுக்கு விடை கூறியபின் அவர்களின் பேரீத்தம்பழப் போராட்டத்தைப் பற்றி மக்களுக்கு விளக்கட்டும். சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பம்மாத்து அரசியலுக்கு முஸ்லிம்கள் இனியும் பலிபோக மாட்டார்கள் என்பதை எடுத்துக் கூறும் காலம் வந்துவிட்டது.
நோன்பு காலம் வந்துவிட்டால் எத்தனையோ ஏழை முஸ்லிம் குடும்பங்கள் பள்ளிவாசல் அரிசிக் கஞ்சியையே இரவுநேர உணவாகக்கொண்டு தமது நோன்புக் கடமையை நிறைவேற்றுவது காலம் காலமாக நடைபெறும் ஒரு சம்பவம். அதை இந்தத் தலைவர்களும் அறிந்திருப்பர். இன்றோ, ஜனாதிபதியின் கண்மூடித்தனமான பசளை இறக்குமதித் தடையால் அரசிக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு கஞ்சிகூடக் கிடைக்காமல் நோன்பு நோற்கும் நிலலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு இத்தலைவர்கள் கூறும் ஆறுதல் என்னவோ? அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லாமல் ஜனாதிபதியின் குறுகியநோக்குக் கொள்கைகளுக்கு ஆமா போட்டுக்கொண்டு இருந்துவிட்டு பேரீத்தம் பழத்துக்காக இப்போது கூத்தாடுவது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
தலையறுந்த சேவலொன்று திசையெங்கும் சுழன்று திரிவதுபோன்று என்னசெய்வதென்று தெரியாது திக்குமுக்காடுகிறது ராஜபக்ச அரசு. கடன்பட்டு வாழ்ந்த காலமும்போய் இனியும் கடன்கொடுப்பார் யாரோ என்று ஏங்குகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் நிதி அமைச்சர். தான் வகுத்த பாதைதான் நாட்டைச் செழிக்கவைக்கச் சிறந்த பாதை என்று தம்பட்டம் அடித்து பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளையெல்லாம் உதறித்தள்ளிய ஜனாதிபதி இன்று நாட்டையே இந்தியாவிடமோ சீனாவிடமோ அடகுவைக்கும் ஒரு பாதையைத் தேடுகிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தின் கடமையை நிறைவேற்ற நோன்பு நோற்கிறார்கள். ஆனால் லட்சோபலட்சம் சிங்கள, தமிழ்க் குடும்பங்கள் பொருளாதாரக் கஷ்டத்தால் பட்டினி நோன்பு நோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அந்தப் பட்டினிப்படையே இந்த ஆட்சிக்குச் சாவுமணி அடிக்கத் தொடங்கிவிட்டது.
ஆனால் முஸ்லிம்களுக்கோ பொருளாதாரக் கஷ்டங்களோடு இன்னுமோர் அடிப்படைப் பிரச்சினையும் எதிர்நோக்கியுள்ளது. அதாவது, இந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கும் பேரினவாதிகளின் பார்வையில் முஸ்லிம்களின் பிரஜாஉரிமையே ஒரு கேள்விக் குறியாக எழுந்துள்ளது. அதனால் முஸ்லிம்களின் மனித உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஏற்கனவே நமது தலைவர்களை நோக்கி எழுப்பிய கேள்விகள் இந்த மீறல்களையே சுட்டிக்காட்டுகின்றன. சுருங்கக் கூறின், முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கே உரியவர்களா என்ற கேள்வி கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அந்தக் கேள்விக்கு திட்டவட்டமான ஒரு பதிலை ஜனாதிபதியிடமிருந்தோ பிரதம மந்திரியிடமிருந்தோ இதுவரை கேட்க முடியாது இருக்கிறதே, ஏன்?
இந்த அரசு பேரினவாதிகளின் பிடியில் இருந்தாலும்கூட நாடே அவர்களின் பிடியில் இல்லை. அதைத்தான் நாடெங்கிலும் இப்போது உருவாகியுள்ள எதிரணிகள் எடுத்துக்காட்டுகின்றன. அந்த எதிரணிக்குள் சகல இனங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் சில பச்சோந்திகளும் அதில் நுழைந்துள்ளதையும் உணர முடிகிறது. அவர்களை இனங்கண்டு ஒதுக்கிவிட்டு நாட்டின் சகல இன மக்களும் சமமானவர்கள், அவர்கள் யாவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அத்துடன் அவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துக்கொண்டே இப்போது பேரினவாதக் கும்பலால் சூறையாடப்பட்டுச் சிதைந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் போராடும் ஆயுதம் ஏந்தாத முற்போக்குப் படைகளும் அவ்வணிக்குள் காணப்படுகின்றன. அந்தப் படைகளின் கரங்களை வலுப்படுத்துவதிலேதான் முஸ்லிம்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. அடிப்படைப் பிரச்சினைக்கான சுமுகமான விடையும் அப்படைகளிடமே உண்டு. அத்துடன், அந்தப்படைகளிடம் பேரீத்தம்பழ அரசியல் செல்லுபடியாகாது என்பதையும் விளங்குதல் அவசியம்.
மக்களின் செல்வாக்கை இழந்து, பொருளாதாரத்தையும் சீரழித்து, உலக அரங்கில் ஒரு கோமாளியாக மாறியுள்ள இன்றைய ஆட்சி அதனைப் பாதுகாத்துக்கொள்ள எந்த உபாயத்தையும் கையாளலாம். இராணுவ பலத்தைக் கொண்டு அடக்குமுறையைக் கையாளலாம். ஒருவேளை இனச்சுத்திகரிப்பில் இறங்கி சிறுபான்மை இனங்களை நசுக்கி பெரும்பான்மையின் ஆதரவைப் பெறவும் முயற்சிக்கலாம். இரண்டாவது உபாயம் இலங்கைக்குப் புதியதல்ல. இவற்றையெல்லாம் ஞாபகத்திற்கொண்டு முஸ்லிம் புத்திஜீவிகள் தமது சமூகத்தை இப்போது வழிநடத்த வேண்டியுள்ளது. அதற்கு அடிப்படையாக, பேரீத்தம்பழ அரசியலை ஒதுக்கித்தள்ளி அதனை முன்னெடுக்கின்ற தலைமைகளையும் ஓரங்கட்ட வேண்டியுள்ளது.- Vidivelli