தாக்குதல் நடாத்திய குழு முஸ்லிமாக இருந்தாலும் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதே இப்போதுள்ள பிரச்சினை
சிறில் காமினி ஆண்டகை.
நேர்காணல்
சிங்களத்தில் : பிரியன்த கொடிப்பிலி
தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்திய குழு முஸ்லிமாக இருந்தாலும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதே இப்போதுள்ள பிரச்சினை. தாக்குதலுக்கு முன்பு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. இது அரசியல் சூழ்ச்சி எனும் சந்தேகம் நிலவுகிறது’ என்கிறார் ‘ஞானாந்த பிரதீப’ எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் சிறில் காமினி ஆண்டகை.
அவருடனான முழுமையான நேர்காணலின் விபரம்;
கேள்வி: உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை நீடித்துச் செல்கிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு சென்றால் யார் குற்றவாளியாகுவார்கள்?
நாங்களும் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையில் இந்த விசாரணைகளின் இறுதி தீர்ப்பு, தீர்மானங்கள் தொடர்பில் எதுவும் தெளிவாக இல்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமையே எமக்கும் ஏற்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்களை அண்மித்துள்ளது.
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது ஹேமசிறி பர்ணாந்துவும், பூஜித் ஜயசுந்தரவும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் சுமார் 20 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என இனங்காணப்பட்டவர்களாவர். இந்த வழக்குகள் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ளன. என்றாலும் அதற்குப் பின்பு உருவான புதிய விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பது பற்றி எமக்குத் தெரியாது. இத்தாக்குதலின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கையாகும். ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது இத்தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற சந்தேகத்துக்கு இதுவரை விடை பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது.
இது தொடர்பாக இதுவரை நடைபெற்றுவரும் விசாரணைகளின் முறைமைகளை நோக்கும்போது உண்மை வெளிப்படுத்தப்படுமா? அல்லது நீதி வழங்கப்படுமா என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்விவகாரம் தொடர்பில் என்ன நடக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் அது போன்று சேனாதி தலைவராகவும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பூரண பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்தும் விடுபட அவரினால் முடியாது. ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியிலிருந்து இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் நிலந்த ஜயவர்தனவுக்குக் கிடைத்துள்ளன. 4 தடவைகள் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாம். இவை உண்மையான தகவல்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மைத்திரிபால சிறிசேன தகவல்கள் எதனையும் தான் அறிந்திருக்கவில்லையென்றும், எவரும் தனக்கு தகவல்களை வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். என்றாலும் ஜனாதிபதி ஆணைக்குழு இவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்பினை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதுபற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் சட்டமா அதிபரின் சிபாரிசு உள்ளது.
கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள்
மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையல்லவா? அதனால் இது அரசியல் சூழ்ச்சி எனும் சந்தேகம் நிலவுகிறது. அதாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது மற்றும்
அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் தேவைப்பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி இத்தாக்குதல் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்பதை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எமக்கு இதிலிருந்து தெளிவாகிறது. அவர் இத்தாக்குதல் பற்றி அறிந்திருந்தாரா அல்லது இல்லையா? இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமா? இல்லையா? என்பது சட்டத்தின் மூலமே தெளிவுபடுத்தப்பட வேண்டும். நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராகவும் இது போன்ற சிபாரிசு ஒன்று உள்ளது. அதனால் இவர்களை பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றே நாங்கள் கூறுகிறோம். மேலும் பலர் இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒருவரை இலக்கு வைக்குமாறு நாம் கூறவில்லை. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபர் கடமைப்பட்டுள்ளார். ஆனால் இது நடைபெறாமையே பிரச்சினையாகும்.
கேள்வி : இந்த தாக்குதல் பற்றி மூன்று வருட காலமாக கர்தினால் அடிக்கடி அறிக்கைகள் விடுகிறார். ஆனால் அரசாங்கம் இது பற்றி கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்கம் கர்தினாலைக் கூட கணக்கெடுப்பதில்லை அல்லவா?
அதுதான் எங்களுக்கும் உள்ள பிரச்சினை. இது தொடர்பான எதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்கம் என்று ஒன்று இருப்பது மக்களுக்காகவல்லவா? அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். இது போன்ற பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்ற பிறகு அது பற்றி முறையான விசாரணைகளை நடாத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், இரகசிய பொலிஸ் பிரிவு என்பவற்றின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சரியாக நிறைவேற்றப்படும் நிலைமை இங்கு இல்லை. இது பற்றி தெரிவிக்கப்படுபவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
கர்தினால் அவர்களும் இது பற்றி பல தடவைகள் கூறியிருக்கிறார். அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தாக்குதல் சம்பவத்தை மூடி மறைப்பது ஏன் என்ற சந்தேகமே எம்மத்தியில் நிலவுகிறது. பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உண்மையை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கர்தினால் உட்பட ஏனையவர்கள் கூறுபவைகளை கேட்பதற்கும் அதில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் செவிசாய்க்காமை சிக்கலை உருவாக்கியுள்ளது.
கேள்வி : இந்த சம்பவம் குறித்து கர்தினால் வத்திக்கான் சென்று போப் ஆண்டகையை சந்தித்தார். அந்த சந்திப்பின் பிரதிபலன் என்ன?
சில தினங்களுக்கு முன்பே இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின் விபரங்கள் முடிவுகளை விரைவில் வெளியிட முடியும். ஒவ்வொரு வருடமும் கர்தினால்கள் போப் ஆண்டகையை சந்திப்பது வழமையாகும். இந்த வருட சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேடமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பிரச்சினையை உள்நாட்டில் தீர்த்துக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளமையினாலேயே அது பற்றி வத்திக்கானில் பேசப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு சர்வதேச உதவி பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதற்காக நாம் திட்டங்களை வகுத்துள்ளோம்.
கேள்வி : இத்தாக்குதல் பற்றி ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதல்லவா?
இது மனித உரிமை மீறலாகும். இது ஒரு தாக்குதல். இந்தத் தாக்குதலின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமை அதாவது வாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இது பற்றி கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், நாட்டினால் முடியாது விட்டால் நாங்கள் சர்வதேசத்தை நாடவேண்டியேற்படும். கடந்த வருடம் ஜெனீவா அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டது. கடந்த வருடத்தினை விட இவ்வருடம் இவ்விடயம் கவனத்திற் கொள்ளப்படும்.
கேள்வி : அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இந்த பிரச்சினையை விவாதங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துகின்றன என்று நினைக்கத் தோன்றவில்லையா?
எங்களுக்கும் அப்படித்தான் தெரிகிறது, என்றாலும் நாம் எமது முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துக்கு இது தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றோம். பாராளுமன்றில் இது பற்றி விவாதித்தோம். அந்த விவாதத்தில் இரு தரப்பினரும் குற்றங்களை சுமத்திக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டமை மாத்திரமே நடைபெற்றது.
இந்தப் பிரச்சினையை அரசியல் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாதென்பது எமக்கு இப்போது தெளிவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் இதன் உண்மையை வெளிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிப்பதை விட இதனை தாமதித்து பிரச்சினையை மூடி மறைப்பதற்கு முனைவதாகவே எமக்குத் தெரிகிறது. அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் அணிகலனாகவே கையாள்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு மாத்திரமல்ல இன்று நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் பாராளுமன்றத்தில் சரியான தீர்வொன்று கிடைக்கப் பெற்றதில்லை.
கேள்வி : இந்தத் தாக்குதல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி என்ற சந்தேகம் உங்களுக்குள் நிலவுவதாக கடந்த காலங்களில் அடிக்கடி கூறி வந்தீர்கள். அந்த சந்தேகம் தொடர்ந்தும் அப்படியே இருக்கிறதா?
ஆம். அந்த சந்தேகம் தொடர்ந்தும் இருக்கிறது. காரணம் முன்னாள் சட்டமா அதிபரும் இத்தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சியொன்று இருந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார் அல்லவா? அவரிடமல்லவா தகவல்கள் இருந்துள்ளன? சட்டம் தொடர்பில் பொறுப்புள்ள உயர் அதிகாரியே இப்படிக் கூறிய பிறகு வேறு கதை எதற்கு? இதன் பின்னணியில் சூழ்ச்சியொன்று இருந்துள்ளது என சட்டம் தொடர்பிலான உயர் அதிகாரி கூறிய கருத்தினை நாம் நம்புகிறோம். இந்த சூழ்ச்சி பற்றி தேடிப்பாருங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம். இதனை தேடிப்பார்க்க முடியுமல்லவா?
எம்மிடம் மிகவும் பொறுப்பு வாய்ந்த சிறந்த இரகசிய பொலிஸ் அதிகாரிகள், உளவுப் பிரிவு அதிகாரிகள் இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் ரீதியான சூழ்ச்சியாக இருக்கலாம். வேறு காரணங்கள் இருக்க முடியாது. இதற்கு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையல்லவா? அதனால் இது அரசியல் சூழ்ச்சி எனும் சந்தேகம் நிலவுகிறது. அதாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது மற்றும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் தேவைப்பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. அரசாங்கத்தினால் மாத்திரமே இந்தச் சந்தேகத்தை இல்லாமற் செய்ய முடியும். அரசாங்கம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத வரை இந்த சந்தேகம் மேலும் அதிகரிக்கும்.
கேள்வி : நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பதை பிரதான தேர்தல் சுலோகமாகக் கொண்டே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. என்றாலும் அண்மையில் ஆலயமொன்றிலிருந்தும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆலயத்தில் இருந்தவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இது என்ன நிலைமை?
இது தான் எமக்குமுள்ள பிரச்சினை. இந்த ஆலய குண்டு சம்பவத்தில் பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சரும், பொலிஸாரும் நடந்து கொண்ட முறை பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. ஆலயத்தில் பல வருடங்களாக பணியாற்றிய சிலரை கைது செய்து விட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊடக மாநாடு ஒன்றினை நடாத்தினார். அங்கு அவர் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கூறினார். பின்பு கர்தினால் காலையில் சிசிரிவி கமரா பதிவுகளை சமர்ப்பித்த போது ‘அவர் இல்லை, வேறொருவர்’ எனக் கூறுகிறார். மேலும் ஒருவர் கைது செய்யப்படுகிறார். இதிலிருந்து விசாரணைகளின் இயலாமை மற்றும் ஒரு நாடகத்தன்மை தெளிவாகிறது. சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக நடைபெறும் முறை எமக்கு தெரியும். திறமையான அதிகாரிகள் இருக்கிறார்கள். தவறுகளை திருத்திக் கொள்ளலாம். அவர்கள் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படுகிறதா? என்பது தான் இங்குள்ள பிரச்சினை. அரசியல்வாதிகள் இவ்வாறான சம்பவங்களில் தலையிடுகிறார்கள் இல்லை என்று எம்மால் எப்படிக் கூற முடியும். எப்படி நம்பலாம். சுயாதீன நிறுவனங்களுக்கு உள்ள அரசியல் அழுத்தங்கள் தான் இறுதியில் மோசமான நிலைமை உருவாவதற்கு காரணமாகின்றன.
இந்த ஆலயத்தில் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. ஆனால் அந்த விசாரணைகளுக்கும் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்த விசாரணைகள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. அனைத்தையும் நாம் சந்தேகத்துடனே நோக்க வேண்டியுள்ளது.
கேள்வி : இச்சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்கள் இலக்கு வைக்கப்படுவதாக முறையிடப்படுகிறது. எதிர்காலத்தில் இது தொடர்பாக பேசுவதற்கு எவரும் இல்லாமற் போவார்களா?
அது தான் நடக்கப் போகிறது. என்னையும் மூன்று நாட்கள் சி.ஐ.டி க்கு அழைத்துச் சென்றார்கள். செஹான் மாலகவை பல நாட்கள் சி.ஐ.டி க்கு கொண்டு சென்றார்கள். பின்பு கைது செய்தார்கள். என் உரையொன்று தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவொன்றினை வெளியிட்டமைக்காக ஒருவரை விசாரிக்க சி.ஐ.டி க்கு அழைத்தார்கள். இதன் மூலம் என்ன முயற்சிக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்வதாகக் கூறிக் கொண்டு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுப்பவர்களின் வாயை மூடுவதற்கு முயற்சிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு செவிசாய்க்காமல் நாட்டு மக்கள் இலக்கு வைக்கப்படுவதே இங்கு நடக்கிறது.
தாக்குதலின் குற்றவாளிகளை தேடுவதற்குப் பதிலாக அவர்களை மூடி மறைப்பதே இங்கு தேவையாகவுள்ளது.
எங்களது வாயை மூட முடியாது. நாங்கள் இவற்றுக்குப் பயப்படப் போவதில்லை. சாட்சியங்களின் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்த முடியாது. இது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை. இதற்கு எல்லையிடுவதாயின் அதனால் பிரச்சினைகளுக்குள்ளாகப் போவது அரசாங்கமே.
கேள்வி : இந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு கர்தினால் அவர்களின் செயற்பாடுகளும் காரணமாய் அமைந்தன என்று சமூகத்தில் கருத்தொன்று நிலவியது. கர்தினால் அவர்களின் செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் பெரிதும் விமர்சனங்களுக்கு உள்ளாகினவே?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. இந்தத் தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்திக் கொள்வதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுமே எங்களது இலக்காக இருந்தது. மக்களின் தேவையும் இதுவாகவே இருந்தது. கோத்தாபய ராஜபக்ஷ தனது மேடைகளில் இத்தாக்குதல் தொடர்பில் பல உறுதிகளை வழங்கினார். பிரதான பேசு பொருளாகவும் இதுவே இருந்தது. கோத்தபாய ராஜபக்ஷ இது பற்றி அடிக்கடி கூறினார். அதனால் கர்தினால் அவர்களுக்கு மாத்திரமல்ல மக்களுக்கும் கோத்தாபய மீது நம்பிக்கையொன்று ஏற்பட்டது. எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன. 69 இலட்சம் மக்களும் கோத்தாபயவின் உறுதிமொழிகளை நம்பினார்கள். கோத்தாபய அதிகாரத்துக்கு வந்தால் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்பினார்கள்.
அதிகாரத்துக்கு வருவதற்கு முன் கூறியவைகள் பற்றி நம்பிக்கை வைத்தோம் என்பதற்காக அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அது பற்றி விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்றில்லையே. அவருக்காக ஆதரவு வழங்கினோமே என்று அவர்கள் தவறிழைத்தால் வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்க முடியாது.
கேள்வி : கர்தினால் முதல் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா?
இது தான் இப்போது நடந்திருக்கிறது. 69 இலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா? கியூ வரிசைகளில் நிற்கும் மக்கள் இதைக் கூறுகிறார்கள். சமூக ஊடகங்கள் பல்வேறு கருத்துகளை வெளியிடுகின்றன.
ஒரு பதிவு இவ்வாறு கூறுகிறது. “குற்றச்செயல்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருவதை நோக்கினால் அனைவரும் விடுதலையாகி இறுதியில் கர்தினால் அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலைமைதான் உள்ளது” உண்மையில் இது தான் மக்களின் நிலைப்பாடு. இறுதியில் இத்தாக்குதல் தொடர்பில் பேசுபவர்களே குற்றவாளியாவார்கள்.
நன்றி : ஞாயிறு லங்காதீப
-Vidivelli