நாட்டின் பொருளாதார நிலைவரங்களை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் மாத்திரம் வெளிப்பட்டு வந்த இந்த எதிர்ப்புகள் தற்போது களத்துக்கு வந்துள்ளன.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இளைஞர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கொழும்பில் இரவு வேளைகளில் வீதியில் இறங்கி தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தியிருந்தது. அதேபோன்று தேசிய மக்கள் சக்தி, நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை வீட்டுக்குப் போகுமாறு கோரும் பதிவுகள் முன்னணியில் உள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஒன்று வெடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும் இன்றேல் கொழும்பில் ஓர் அரபு வசந்தத்தைக் காண வேண்டி வரும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
நாடு முழுவதும் தற்போது எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்து நிற்கும் மக்களும் தமது கோபத்தை வெளிப்படுத்துவதை காண முடிகிறது.
மக்கள் மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர ஆரம்பித்துள்ளனர். தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் கூட தாம் தவறிழைத்துவிட்டதாக வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துள்ளார்கள்.
அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தற்போது அரசாங்கத்தின் குறைபாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே இந்த நிலைமைக்கு காரணம் என்பதே அவர்களது குற்றச்சாட்டாகவுள்ளது.
எவ்வாறிருப்பினும் இப்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசியல் தரப்புகள் “ஆட்சி மாற்றம் வேண்டும், ஜனாதிபதித் தேர்தலை நடாத்துங்கள்” என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைப்பதைக் காண முடிகிறது.
உண்மையில் நாடு இப்போது தேர்தல் ஒன்றுக்குச் செல்கின்ற நிலைமையில் இல்லை. அவ்வாறு செல்வதாயினும் அதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவளிப்பதற்கு திறைசேரியில் பணமும் இல்லை.
மக்கள் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியின்றியிருக்கையில், தேர்தலைப் பற்றிச் சிந்திப்பதற்கும் அவர்கள் தயாரில்லை.
இன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவையாகவிருப்பது கொள்கை ரீதியிலான பாரிய மாற்றமேயாகும். இந்த நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை அரசியல்வாதிகளிடமன்றி பொருளாதார நிபுணர்களின் கைகளில் ஒப்படைக்கக் கூடிய மாற்றமே இப்போதைக்குத் தேவையாகும்.
விஞ்ஞான ரீதியிலேயே எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, அண்மையில் அமைத்த பொருளாதார சபையில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஜனாதிபதியின் இந்த நியமனம் கடும் விமர்சனங்களைச் சந்தித்ததையடுத்து, தற்போது இந்த சபைக்கு ஆலோசனை வழங்கவென 14 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல்வாதிகள் போதிய கல்வித் தகைமை கொண்டவர்களல்லர். இவ்வாறான நெருக்கடியாக நிலைமைகளில் அவர்களால் ஒருபோதும் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுக்க முடியாது. எனவேதான், சகல அரசியல் தரப்புகளும் ஒன்றிணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் பணியாற்ற முன்வர வேண்டும். இதனை ஒரு கட்சியால், ஒரு அமைப்பினால் மாத்திரம் செய்ய முடியாது. அதற்கு சகல தரப்பினரும் கைகோர்க்க வேண்டும்.
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தனது அண்மைய கட்டுரையொன்றில் “மாற்றத்துக்கான சமூகத்தை தயார்படுத்தும் பணியை தனியொரு கட்சி மட்டும் செய்ய முடியாது. அதற்கான பரந்த கூட்டணி வேண்டும். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், முற்போக்கான சமயக் குழுக்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆகிய சக்திகளினூடாக தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ளப்படும் பங்களிப்பின்றி மாற்றத்தை நோக்கிப் பயணித்தல் சிரமமானது” எனக் குறிப்பிடுகிறார். இதுவே யதார்த்தமாகும்.
இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி இதற்கு முன்னர் சந்தித்திராத ஒன்று. இதே நெருக்கடி நாளை நமது சந்ததியினருக்கும் ஏற்படக் கூடாது எனில் இப்போதிருந்தே வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதுவே உண்மையான தேசப்பற்றும் கூட.- Vidivelli