லத்தீப் பாரூக்
பொது பல சேனாவின் ஆதிக்கம் தான் அந்தக் கூட்டத்தில் காணப்பட்டது. சட்டப்படி தான் இந்த அச்சுறுத்தல் நிலைமைகள் கையாளப்பட வேண்டும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் விளக்கமளித்தார். சட்டமோ வரலாறோ ஏனைய எதுவுமே நமக்கு ஒரு பொருட்டல்ல, குறிப்பிட்ட தினத்துக்குள் கூரகல பிரதேசம் சுத்தம் செய்யப்படாவிட்டால் (குறிப்பிட்ட ஆண்டின் பெப்ரவரி 14ஆம் திகதி) நாங்கள் 25000 பேர் பலவந்தமாக அங்கு புகுந்து அந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என அவர்கள் அங்கு கூச்சலிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் கருத்துப்படி பெப்ரவரி 14ஆம் திகதி முற்றுகைக்கான அச்சுறுத்தல் நிலை தோன்றியது. இது புனித பிரதேசம் கலவர பூமியாக மாறலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்தது. காரணம் குறிப்பிட்ட அன்றைய தினம் ஜெய்லானி பள்ளிவாசலின் வருடாந்த நினைவு தினமாகவும் நூற்றுக் கணக்கான முஸ்லிம் பக்தர்கள் அங்கு கூடும் தினமாகவும் அமைந்திருந்தது. இருப்பினும் விரிவான கலந்துரையாடலின் பின் ஏப்ரல் 30ஆம் திகதி வரைக்கும் அந்தக் காலவரையறை ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள் ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சில் கூட்டம்:
சர்ச்சைக்குரிய மேற்படி கூட்டம் சரியான ஒரு முடிவை எடுக்கத் தவறியதால் முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேரடியான ஒரு சந்திப்புக்கு வாய்ப்பை கேட்டிருந்தனர். குறிப்பிட்ட தினத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் வந்தபோது ஏற்கனவே அங்கு பொது பல சேனா உறுப்பினர்கள் காணப்பட்டனர். இந்தக் கடினப் போக்கு குழுவுடன் இது சம்பந்தமாகப் பேச தாங்கள் தயாரில்லை என்று முஸ்லிம் பிரதிநிதிகள் திட்டவட்டமாக மறுத்தனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வேறு ஒரு பௌத்த தேரர்கள் குழுவை அங்கு வரவழைத்தார்.
இந்தக் குழுவில் மிதவாத போக்குள்ள மற்றும் கல்வித் தகைமை உள்ள பௌத்த தேரர்கள் காணப்பட்டனர். இதில் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிடத்தக்கவர். ஹலால் விடயத்தில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வை ஏற்படுத்தியவர் இவர்தான். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட்டு இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எந்த விதமான தீர்வுகளுக்கும் வர முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சர்ச்சைக்குரிய இடத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் இங்கு தான் வலியுறுத்தினர்.
புனித வழிபாட்டு இடத்தை சுற்றி எழுந்துள்ள பதற்ற நிலையைத் தணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் விஜயம் வழியமைக்கும் என ரொஷானா அபுசாலி நம்பினார். இந்த இடம் முற்றுகையிடப்படும் வெசாக் தினத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்குள்ள முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நினைவுப் பொருள்களும் அழித்தொழிக்கப்படும் என்ற கடும் போக்காளர்களின் அச்சுறுத்தலின் மத்தியிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விஜயம் அதை தணிக்க உதவும் என்று அவர் நம்பினார். தொல்பொருள் திணக்கள பணிப்பாளரின் கூட்டத்தின் மூலம் சில சாதகமான முடிவுகளுக்கு வரலாம் என்றும் அவர் நம்பினார். பள்ளிவாசலுக்கு எதுவும் நடக்காது.
குகையைச் சுற்றி உள்ள சில பகுதிகளை தனது நிர்வாகம் இழந்தாலும் பள்ளிவாசல் தமக்குக் கிடைக்கும். அங்கு வழமைபோல் சமயக் கிரியைகளை முன்னெடுக்கலாம். முஸ்லிம்கள் தொடர்ந்தும் அங்கு வருகை தரலாம் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படாது என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே தனது பிரதான கடமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்ச்சையை உருவாக்குதல்
இந்த நாட்டில் சட்டத்தை துச்சமென மதித்து சர்ச்சைகளை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பௌத்த பேரினவாத கடும் போக்காளர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் முக்கியமானதே கூரகலை விவகாரம். ஹலால் பிரச்சினை, ஹபாயா பிரச்சினை என தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியவர்களும் இவர்களே. சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் ஒரு வகை சித்தப்பிரமையை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். இவற்றின் தொடர் விளைவாகத்தான் முஸ்லிம்களின் வர்த்தகத்தை புறக்கணித்தல் அவர்களுடனான சிநேகபூர்வமான உறவுகள் கொடுக்கல் வாங்கல்களை புறக்கணித்தல் என்பனவும் அமைந்திருந்தன. இதன் உச்சகட்டாக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் தான் முஸ்லிம் சமூகத்தின் மீதான நேரடி வன்முறைகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் என்பன அமைந்தன.
முஸ்லிம் விரோதப் பிரசாரம் உச்ச கட்ட இழுபறி நிலைக்கு வந்துள்ளது. முஸ்லிம் சமூகமும் அவர்களது முதியவர்களும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமது சமூகத்தின் இளைஞர்களை பொறுமையாகவும் அமைதியாவும் வைத்திருக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. பதில் தாக்குதலுக்கோ அல்லது பழிவாங்கலுக்கோ அவர்கள் சென்றால் அது இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் கொழுந்து விட்டடெரியும் தீயை மூட்டிவிடும். ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான தொடர் பிரசாரங்களும் வெறுப்பூட்டல்களும் ஒரு நாட்டை சமய மற்றும் இன ரீதியான முறுகல் நிலையின் முனைக்கு கொண்டு வந்து விடும். இவை எல்லாவற்றையும் உலகின் இன்னொரு புறத்தில் இருந்து முஸ்லிம் நாடுகள் பல அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறந்து விடக் கூடாது.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கிளப்பப்பட்டு வரும் பதற்ற நிலை சம்பந்தமாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) பகிரங்கமான அறிக்கை ஒன்றை ஏற்கனவே விடுத்துள்ளது. அன்றைய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட முறையிலும் இது சம்பந்தமான ஒரு கடிதத்தை அந்த அமைப்பு அனுப்பி இருந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான கடினப் போக்கு அமைப்புக்களின் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
அதிகாரப் பகிர்வு, தேசிய நல்லிணக்கம், யுத்தக் குற்ற விசாரணைகள் என்பன போன்ற விடயங்கள் காரணமாக மேற்குலகின் ஆதரவை இந்த நாடு பெரும்பாலும் இழந்துள்ள நிலையில், இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியா கூட தனது சர்வதேச செயற்பாடுகளுக்காக பெரும்பாலும் ஆபிரிக்க மற்றும் முஸ்லிம் நாடுகளின் தயவை நாடியுள்ள பின்னணியில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு நாட்டுக்கு நன்மையளிப்பதாக அமையாது.
ஜெனீவாவில் (2012) இடம்பெற்ற மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பாதகத் தன்மையை தணிப்பதில் பாகிஸ்தான் தான் முன்னணியில் இருந்து செயற்பட்டது என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்துக்கு தேவையான சீரான ஆயுத விநியோகங்களை மேற்கொண்ட ஒரு சில நாடுகளில் பாகிஸ்தானும் உள்ளடங்கும். அந்தளவுக்கு நெருக்கமான உறவுகளை இரு நாடுகளும் கொண்டிருந்தன.
இவற்றை எல்லாம் மீறி இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப் போக்கு மேலோங்கியே காணப்பட்டது. அதன் தாக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளாகவும் பிரதிபலித்துள்ளன. முஸ்லிம் சமூகத்தின் மீதும் அதன் வர்த்தக மற்றும் வழிபாட்டு இடங்கள் மீதுமான தாக்குதல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தேவையான ஆதரவைத் திரட்ட தேவையான பிரசாரத்தில் ஈடுபடுவதில் பாகிஸ்தான் கூட இப்போது தடுமாற்ற நிலையில் உள்ளது. (முற்றும்)
குறிப்பு: அசல் பிரதி 2013 ஏப்ரல் 11 இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.- Vidivelli