அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி),
M.Phil.(UPDN)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
ஜாமிஆ நளீமிய்யா, பேருவளை
பிரதித் தலைவர்,தேசிய ஷூரா சபை
sheikhfaleel@gmail.com
வடக்கு கிழக்கில் தேங்காய் பூவும் பிட்டும்போல் வாழும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையும் மோதலும் ஏற்படுவது இரண்டு சமூகங்களையும் பாதிப்பதுடன் இந்த நாட்டின் ஒட்டு மொத்த பின்னடைவுக்கும் காரணமாக அமையும். சிங்கள – முஸ்லிம் ஒற்றுமையை விட தமிழ் -முஸ்லிம் ஒற்றுமை எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. முப்பது வருட யுத்த காலத்தில் இவ்வுறவு பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓரளவு அவ்வுறவு பலமடைந்தாலும் கடந்த காலங்களை விட மிக கிட்டிய காலத்தில் இவ்விரு சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.
இதன் பின்னணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த புவி அரசியல் நோக்கம் (Geopolitics) கொண்ட சில சக்திகளும், மதசகிப்புத்தன்மையற்ற (Religious Intolerance) சிலரும், உள்நாட்டு அரசியல் இலக்குகளை அடந்து கொள்ளும் (Political mileage) பிரித்தாளும் கொள்கையை (Divide and Rule) கொண்ட சில சக்திகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.காலா காலமாக ஒரே பிரதேசத்தில், ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்டு வாழும் அதுவும் பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்பட்ட இரு சிறுபான்மைச் சமூகங்கள் இப்படியிருப்பது இருள் மயமான எதிர்காலத்தையே தோற்றுவிக்கும் என்பதை இரு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும்.
பின்னிப்பிணைந்த சமூக வாழ்வு
இலங்கை முஸ்லிம்கள், தென்பகுதி சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வந்தது போலவே, தொன்றுதொட்டே வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழர்களுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்குப் போதியளவு முக்கியத்துவமளிக்கப்படாதிருப்பது ஒரு குறையாகும். ஆங்காங்கே எழுதப்பட்ட சில தகவல்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிணைக்கும் தாய்மொழி
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் அரபிகளது வழித்தோன்றல்களாக இருந்தும் அரபை தாய்மொழியாகக் கொள்ளவில்லை. சுமார் 70% முஸ்லிம்கள், சமூக தொடர்புகளுக்கான பிரதானமான மொழியாக சிங்களத்தைக் கொள்ளும் – வடக்கு கிழக்கு தவிர்ந்த- வெளி மாவட்டங்களில் வாழ்ந்த போதிலும், சிங்களம் அவர்களில் பெரும் பாலானவர்களது தாய் மொழியாக இல்லை. அவர்களும் பெரும்பாலும் தமிழையே தாய் மொழியாகக் கொள்கிறார்கள். இதிலிருந்து முஸ்லிம்களுக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குமிடையேயுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தை தமது மொழியாகக் கொள்ளாதிருப்பதால் பல சிரமங்களையும் நெருக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள். பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல்துறை, அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழை தமது தாய்மொழியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்து வருகிறார்கள். இன்பத் தமிழ் என அதனைப் போற்றினார்கள். தமிழை அரபு மொழி எழுத்துக்களில் ‘அரபுத்தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போதனைகளை அதனூடாகச் செய்தார்கள். ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத்தமிழ்’ என அதனைப் போற்றினார்கள்.
மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் சகவாழ்வைப் பேணி வந்தமையை இது குறித்து நிற்கிறது. இரு இனங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக தமிழ் மொழி அமைந்தது. இலங்கை முஸ்லிம்கள் ‘இனத்தால் தமிழர்கள், மதத்தால் முஸ்லிம்கள்’ என்று சேர். பொன்னம்பலம் இராமநாதன் கூறுமளவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறுபட்ட ஒற்றுமைகளோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
வடக்கு கிழக்காயினும் ஏனைய பிரதேசங்களாயினும் பொதுவாக முஸ்லிம் – தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக் ‘தமிழ் மொழியை இருசாராரும் பேசுவதால், ஒன்றுபட முடியும். தமிழை, முஸ்லிம்கள் தாய் மொழியாகக் கொண்டிருப்பது இரு சமூகங்களுக்கிடையே இறுக்கமான வரலாற்றுறவு இருந்திருப்பதைக் காட்டும். தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்டு மல்லாது, கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, பாரம்பரியம், திருமணச் சடங்குகள் போன்ற சிலவற்றில் சில அம்சங்களிலும், சிலவற்றில் முழுவதுமாக ஒருமைப்பட்டுக் காணப்படுகின்றனர். இவ்வம்சங்களிலான ஒருமைப்பாடுகள் பல தனிச்சிங்களப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதானது, முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் சிங்கள மக்களுடன் அல்லாது தமிழ் மக்களுடனேயே கூடுதலான உறவுகளை வைத்துள்ளனர் என்று நம்பச் செய்கிறது.” என்கிறார். “முஸ்லிம்களது சில பெயர்கள் தமிழர்களின் சில பெயர்களது திரிபுகளாகவும் ஒத்தவையாகவும் உள்ளன. உதுமாநாச்சி, மௌலாமக்காம் நாச்சியா, சின்னராசா சந்திரா போன்ற பெயர்களைப் பார்க்கும் போது, முன்னைய காலங்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.” என்றும் அவர் கூறுகிறார்.
சிங்களப் பகுதி முஸ்லிம்கள் கூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதற்கும் தமிழ் மக்களின் சில பழக்க வழக்கங்களை அவர்கள் கொண்டிருப்பதற்கும் காரணம் கூறும் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள், அராபியர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலில் குடியேறியபோது, அவர்களைத் தமிழர்களே வரவேற்றனர் என்றும் அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே தமது குடும்ப உறவுகளையும், வர்த்தக உறவுகளையும், திருமண உறவுகளையும் பெருமளவில் வைத்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் பெரியதோர் உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
வடபகுதியில் மட்டுமன்றி, தென்பகுதி முஸ்லிம்களும் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதற்கு பின்வரும் காரணமும் கூறப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்டது. இக்காலப்பிரிவில் சோள மண்டலக் கரையை (Coromandel Cost) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ்மொழி முக்கிய இடம் பெற்றது. அதேவேளை, தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோள மண்டலக் கரையிலுள்ள ‘மஃபர்’ பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும் கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது என கலாநிதி சுக்ரீ அபிப்பிராயப்படுகிறார்.
எனவே, ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் கூறும் காரணத்திலிருந்து கலாநிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்தியாசப்பட்ட போதிலும், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுக்கு மேற்படி இரு காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தமாக நோக்கின், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான உறவு மிகவும் பழமை வாய்ந்தது. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் முஸ்லிம்கள் சகவாழ்வைப் பேணி காலா காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். பழக்க வழக்கங்கள், சமூக உறவுகள், மரபுகள், வாழ்வு முறை என்பவற்றிலும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன
வடக்கில் சகவாழ்வு
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் தென்பகுதியைப் போலவே மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சிறுபான்மையாக வாழும் அவர்களது கிராமங்கள், தமிழ் கிராமங்களுக்கு அருகருகே அமைந்துள்ளன. வியாபார, கலாசார, அரசியல், சமூக உறவுகள் இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த சௌஜன்ய உறவு நீடித்ததாகக் கொள்ள முடியும். வடக்கு கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் பல்வேறுபட்ட விகிதாசாரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள்.
உதாரணத்துக்காக சில பிரதேசங்களது தகவல்களை மாத்திரம் இங்கு நோக்கலாம்:-
மன்னார் மாவட்டத்தைப் பொருத்த வரை மாந்தோட்டத் துறைமுகத்துடனான அரபிகளது தொடர்பு மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். ’12ம்-15ம் நூற்றாண்டு காலத்தில் இப்பிரதேசங்களுடனான (அவர்களது) தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் கருத்துப்படி இக்காலகட்ட மன்னார் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்பட்டது. மாந்தோட்டைத் துறைமுகம் இவர்களது கப்பல் இறங்கு துறையாகவும் வர்த்தக பண்டகசாலையாகவும் விளங்கியது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னார் பகுதி முஸ்லிம்கள் ஏற்றிறக்குமதியில் மட்டுமன்றி, முத்துக்குளிப்பது, சங்கு எடுப்பது, படகோட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்கள் இவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இருப்பினும், முத்துக்குளிப்பிலும், சங்கு குளித்தளிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்பட்டமைக்கு அத்தொழிற்துறைசார்ந்த அம்மக்களது தேர்ச்சிதான் காரணமாகும்.
1902ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி, மன்னார் மாவட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் செறிவை கொண்ட 29 குடியிருப்புக்களில், மாந்தை- நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 11 குடியிருப்புக்கள் இருந்தன. ஆனால், இப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப்பெற்றுள்ளன. இன்னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாக தொடர்பட்டிருந்தன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் தமிழர்களுடன் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இனத்தவரும் பரஸ்பரம் உதவி செய்தார்கள். கொடுக்கல் வாங்கல்களில் மிகவுமே கௌரவமாக நடந்துகொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாது அப்பிரச்சினையை சமூகமட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை வழிகளைக் கொண்டிருந்தனர். ஒருவரது சுகதுக்கங்களில் மற்றவர் மிகச்சரளமாக பங்கு பற்றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப்பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விருந்தோம்பல்களில் மற்றவர் எவ்வித சங்கடமுமின்றி பங்கேற்கும் வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது.
வடமாகாணத்தின் மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்தொகையில் 5% ஐக் கொண்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைத் தமிழர்களோடும், சிறுபான்மைச் சிங்களவர்களோடும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். 1921ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மரிடைம்பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்லிம்கள் 6.5% ஆகவும், முல்லைத்தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்தார்கள்.
முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800ஆம் ஆண்டு முதல் வாழ்கிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் கூறுகிறார். அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்களே உள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது, இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மூன்று கிராமங்களான தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பவற்றின் வரைபடத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்ளிவாசல், இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் இப்பிரதேசத்தில் அருகருகே அமைந்திருப்பது இப்பிரதேசத்தின் நீண்ட கால இன ஐக்கியத்திற்குச் சான்றாகும்.
கிழக்கில் சகவாழ்வு
கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர்களது சகவாழ்வு மிக நிண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அரபிகளில் ஒரு சாரார் பூநொச்சிமுனையில் குடியேறி வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் காத்தான்குடிப் பகுதிக்கும் வந்ததாகவும் இவர்களிடமிருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் தோற்றம் பெற்றதாகவும் திரு. P.R. சிற்றம்பலம் கூறுகிறார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட ‘முக்குவர்’ எனும் ஒரு சாரார் அங்கிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்த போது, அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த திமிலர்கள் அவர்களது வருகையை விரும்பாததால் அவர்களைத் துரத்தியடிப்பதற்கு நாடினர். அப்போது, முக்குவர்கள் அரேபியரது உதவியை வேண்டி நின்றனர். அவ்வாறு அந்த அரபிகள் அந்த திமிலர்களை துரத்தியடித்ததனால் அந்த அரபிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் அதிகரித்து அவர்களுக்கு மிகுந்த கௌரவம் கொடுத்தனர். தற்காலத்தில் குறுமண்வெளி இந்துக்கோவில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்படுகிறது. மேலும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் உள்ள குலவிருது பற்றிய பாடலில், முஸ்லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்படுகிறது. முக்குவர்கள் சவக்குலி ஏலம் விடும் போது ‘முக்குவர்களைக் காத்த பட்டாணியர் போற்றி’ என்று அதனை முடிக்கிறார்கள். இவற்றை அவதானிக்கையில் முக்குவர் – முஸ்லிம்கள் உறவு பற்றி தீர்மானிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும் பட்டாணிகளும் (முஸ்லிம்களும்) வந்து போன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரத்தைக் கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தெளிவாக்குகிறது. ‘காட்டான், பட்டாணி, சுல்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகம் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர்.’ என அந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
முக்குவர்கள் தமக்கு உதவி செய்த முஸ்லிம்களிடம் கைமாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்குமாறு கேட்டபோது, முஸ்லிம்கள் முக்குவர்களின் பெண்களை அடைந்து, இரத்த உறவைப் பலப்படுத்தினர். முஸ்லிம்கள் முக்குவர்களுடன் இணைந்து போரிட்டதனால் அவர்கள் முன்னர் குடியேறத் தடுக்கப்பட்டிருந்த ஏறாவூரில் குடியேறி வாழ அனுமதிக்கப்பட்டனர். வாழைச்சேனையில் குடியேறிய முஸ்லிம்களும் பெரும்பாலும் காத்தான்குடியிலிருந்தே வந்தனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம் பெறாது இருக்க திடசங்கற்பம் பூணுவதோடு சகவாழ்வுக்கான நீண்டகால திட்டமொன்று பற்றி இரு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் சிந்தித்து செயற்படுவது மிகப் பெரிய தேவையாகும்.
தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் ஊர்களைப் பொறுத்தவரையில், அங்கும் அரபிகளும் இந்திய வியாபாரிகளும் தமது வியாபார நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதிலும் உள்நாட்டுக்கு அவசியமான பொருட்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் அதிகமாகப் பங்கெடுத்தனர். வேடுவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வர்த்தக ரீதியான உறவுகள் இருந்துவந்தன. வியாபாரத்துக்காக இலங்கை வந்த பல முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கினார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மட்டக்களப்பு முஸ்லிம்கள்’ என்றே அண்மைக்காலம் வரை ஏனைய பிரதேசத்தவர்கள் அழைத்து வந்திருப்பதால் இவ்விரு பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக ‘மட்டக்களப்பு’ என்றே நோக்கப்படுகிறது. கண்டிப் பகுதியுடன் வர்த்தகத் தொடர்பைப் பேணி வந்த முஸ்லிம்கள், கண்டி மலைப் பிரதேசத்தையும் கிழக்கிலிருந்த துறைமுகப் பிரதேசத்தையும் இணைத்துக் கொடுத்தார்கள்.
அங்கு நல்லிணக்கத்தோடு வாழ்ந்த குடிமக்கள் பற்றிய தகவல்களைத் தரும் முக்கிய ஆவணமாக கி.பி. 1397ற்குரிய ‘நாடுகாடுப்பற்று பரவணிக் கல்வெட்டு’ அமைகிறது. அதில் உள்ள பின்வரும் வாசகம் இதற்கு சான்றாகும். ‘இவ்வாறு தமிழ் போடிகளும் முதலிகளும் காடுவெட்டி, களனியாக்கி வாழ்ந்து வரும் நாட்களில் சோனகர்களான குடிகள் இங்கு வந்து அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்துவரலாயினர்’ என்று கூறும் அக்கல்வெட்டுத் தகவல் பின்னர் அவ்வாறு வந்த ஏழு (முஸ்லிம்) குடிகளை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல்படுத்திவிட்டு, ‘இந்த ஏழு குடியும் வந்து, அவர்கள் சொற்கீழ் படிந்து நடந்து வருகின்ற காலத்தில் கண்டிய மகாராசா மட்டு(மட்டக்களப்பு) பார்க்கவும் விகாரைகள் பார்க்கவும் எழுந்தருளி வருகின்ற காலத்தில் முதலிமாரும் கூட வந்தார்கள். சோனகரும் போய் விண்ணப்பம் செய்தார்கள்’ என்று தொடர்ந்து கூறுகிறது. இதிலிருந்து முஸ்லிம்கள் 14ஆம் நூற்றாண்டு காலத்திலே பிற இனங்களோடு கலந்து அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
2012 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் பெளத்தர்கள் 23%, தமிழர்கள் 34.7%, முஸ்லிம்கள் 37% ஆக வாழுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு அருகருகே தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1971ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் (48.3%) இருக்க, சிங்களவர் (28.2%) தமிழர் (23.2%) ஆகியோர் அதற்கடுத்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள். 1981ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி அக்கரைப்பற்றில் 12,439 தமிழர்களும், 22,941 முஸ்லிம்களும், கல்முனை பட்டிண சபை எல்லைக்குள் இந்துக்கள் 4779 பேரும், முஸ்லிம்கள் 15,940 பேரும் வாழ்ந்தார்கள். இவ்விரு இனங்களும் ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாத அளவுக்கு வியாபாரத்திலும் உறவுகளிலும் ஒன்றில் மற்றையது தங்கியிருக்கின்றன.
எனவே, பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், ‘(முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான) இவ்வுறவு வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றியிருந்தது. கிழக்கு மாகாண வரலாற்றிலிருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப்பார்க்க முடியாது. கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிரதசேங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகிறார்கள். பொதுவாக ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள், அதற்கடுத்த கிராமத்தில் தமிழர்கள் என கிழக்கு மாகாணம் முழுவதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்தே வாழ்ந்துவருகிறார்கள். முஸ்லிம் ஆண்கள் ‘முக்குவா’ சாதிப் பெண்களை மணந்ததால், தமிழர் முஸ்லிம்களிடையே இரத்த உறவுகளும் உள்ளன. இதனால், தமிழர்களின் சாதி முறை மரபுகளுக்கு முஸ்லிம்களும் உரித்தாளிகளாகின்றனர்.
இங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் சாதி முறை முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு அது மிகக் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது முஸ்லிம்சமய ரீதியானதல்ல. மேலும், இங்கு தாய்வழி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழ் பாரம்பரியமே காரணமாகும். மணமகனின் காலைக்கழுவி, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, தாலிகட்டி, ஆராத்தி எடுத்து, பால்பழம் கொடுக்கும் சடங்குகள் முஸ்லிம் திருமணங்களிலும் நிறைவேற்றப்படுகின்றன.
கிழக்கில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் சமயம், சடங்குகள் என்பவற்றை மதித்து கௌரவப்படுத்துகின்றது. கல்முனை ஷாஹுல் ஹமீது வலியுள்ளாஹ்வின் பள்ளி விழா, பாண்டிருப்பு திரௌபதை அம்மான் கோயில் தீமிதிப்பு விழா போன்றவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி இரு சமூகத்தவர்களும் கலந்து கொள்கின்றனர். காரைத்தீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்டப்பள்ளயத்தில் அவுலியா தர்ஹா போன்ற முஸ்லிம் சமயத்தலங்கள் உள்ளன. இப்பகுதியில் வாழும் தமிழர்கள் இப்புனிதத் தலங்களுக்கு மதிப்பும் மரியாதையுமளித்து நேர்ச்சை முதலான கிரியைகளுக்காக இத்தலங்களைத் தரிசிக்கின்றனர். இவ்விரு சமூகங்களும் தமது நாளாந்த வாழ்க்கைக்கு ஒன்றையொன்று நம்பியே இருக்கின்றன. விவசாயம், மீன்பிடி, தச்சுத்தொழில் கொத்தனார்த் தொழில் போன்றவற்றில் இவ்விரு சமூகத்தினரும் சேர்ந்தே தொழில் புரிகின்றனர்.’ என அவர் தெரிவிக்கிறார்.
திருவாளர் பாலசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:- ‘இங்கு (மட்டக்களப்பில்) வாழும் தமிழ் இனத்தவருடன் சகோதரத்துவ மனப்பான்மை பூண்டு, நட்புறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோரான இந்துக்களும் இஸ்லாமியரும் மத அடிப்படையில் வேறுபட்டிருப்பினும் வாழ்க்கை முறைகள், பண்பாட்டு அம்சங்களில் ஒற்றுமைகள் உள்ளன.’ முஸ்லிம்கள் நான்கு திருமணம் செய்ய அனுமதி இருந்தும் செய்யாதிருப்பதற்கு தமிழ் மக்களுடன் அவர்கள் முன்னைய காலங்களில் ஏதோ வழிகளில் ஒன்றுபட்டிருந்திருக்கிறார்கள் என்று கூறுவதில் தவறில்லை என ஆய்வாளர் சித்தீக் கூறுகிறார்.
முஸ்லிம் – இந்து சமூகங்கள் ஒன்றிணைந்து வாழுவதனால் சாதகமான தாக்கங்களைப் போலவே பாதகமான பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்த மௌலவி அப்துர் ரஸ்ஸாக் குறிப்பிடுகிறார். முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாத்தின் தூய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு முரணான, இஸ்லாமிய கிரியைகளுக்கு அப்பாற்பட்ட கூடு எடுப்பது, திருமண சம்பிரதாயங்களில் முதலிடம் பெறும் ‘சீதனம்’ வாங்குவது போன்றன முஸ்லிம் சமுதாயத்தில் நுழைய இந்து மத, கலாசார செல்வாக்கு காரணம் என்பது அவரது கருத்தாகும்.
எது எப்படியிருப்பினும், இது போன்ற ஆய்வுகள் முஸ்லிம்களும் தமிழர்களும், குறிப்பாக இந்துக்களும் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கின்றன.
அறிவியல் துறை சகவாழ்வு
கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பரஸ்பரம் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தில் தங்கியிருந்தை வரலாறு சான்று பகர்கிறது.இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஆரம்ப கால அதிபர்களாகவும் போதனாசிரியர்களாகவும் தமிழ் வாத்தியார்கள் இருந்து மகத்தான சேவை செய்திருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் நன்றியுணர்வோடு நினைவு கூருகிறது.கல்விமான் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜமீல் தனது தந்தை ஷாஹுல் ஹமீதின் ஆரம்ப கல்வியைப் பற்றிக் கூறும் போது,சாய்ந்தமருதில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இரு அரசினர் பாடசாலைகள் அக்காலத்தில் இருந்தாகவும் அதில் ஒன்றில் தனது தந்தை கற்றதாகவும் அவ்விரு பாடசாலைகளில் கடமை புரிந்த ‘ஆசியர்கள் அனைவரும் தமிழர்கள்’ என்றும் குறிப்பிடும் அவர், தான் 1945ஆம் ஆண்டு காரைதீவு இராமகிருஷ்ன மிஷன் ஆண்கள் வித்தியாலத்தில் இருந்து தனது பாலர் கல்வியை ஆரம்பித்ததாக் கூறுகிறார்.கிழக்கு மாகாண இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளது முகாமையாளராக இருந்த சுவாமி விபுலானந்தர் தனது மூத்த வாப்பா முத்தலிபு வைத்தியரின் நெருங்கிய நண்பரென்றும் தனது சகோதரிகளும் சாச்சிமார்களும் இராம கிருஷ்ண மிஷனின் பெண்கள் பாடசாலையான சாரதா வித்தியாலயத்தில் கல்விகற்றதாகவும் சாய்ந்தமருது 6ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவ மாணவியர் அங்கு கற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.
பிற்காலத்தில் சமூகத் தளத்தில் ஜொலித்த கா.சிவத்தம்பி, ஆர்.சிவகுருநாதன், எஸ்.ராஜகோபால், கே.அருணாச்சலம், ராஜ புவனேஸ்வரன் போன்ற பல தமிழர்கள் முன்னணி முஸ்லிம் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுடன் கற்றவர்கள் என்பது குறிப்பித்தக்க விடயமாகும். அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என்ற பல நிலைகளில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்திருக்கிறார்கள். ரீ.பீ.ஜாயா,ஏ.எம்.ஏ.அஸீஸ் போன்ற கல்விமான்கள் அதிபர்களாக இருந்த அந்த பொற்காலங்களில் முஸ்லிம், சிங்கள, தமிழ் சகவாழ்வு ஸாஹிராவில் உச்ச நிலையில் இருந்தது.
பல்கலைக் கழக மட்டத்திலும் பேராசியர்களான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் கலாநிதி சுக்ரி, பேராசிரியர் நுஃமான், எஸ்,எச்.எம்.ஜெமீல் போன்ற முஸ்லிம் சமூகத்தின் பல முக்கிய புத்திஜீவிகளுக்கு விரிவுரையாளர்களாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருந்து அவர்களது ஆளுமை விருத்தியில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன.
குறிப்பாக தற்காலத்தில் கிழக்கு மாகாணத்தை நாம் எடுத்து நோக்கினால் அங்கு வர்த்தகம், கல்வி, சமூக உறவுகள், சுகாதாரம் போன்ற இன்னோரன்ன துறைகளில் முஸ்லிம்கள் தமிழர்களிலும் தமிழர்கள் முஸ்லிம்களிலும் தங்கி வாழுவது யதார்த்தமான உண்மையாகும். முஸ்லிம்களது கடைகளில் சாமான்களை வாங்கவும்முஸ்லிம் பிரதேசங்களில் கூலி வேலை செய்யவும் தமிழர்கள் வருகிறார்கள்.மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீல் அது பற்றி கூறும் போது, “முஸ்லிம்களது பணம் தமிழர்களுக்கும் தமிழர்களது சேவை முஸ்லிம்களுக்கும் தேவைப்பட்டது. தொழில் ரீதியாக பார்க்கையில் இரு சமூகங்களும் பிரிந்து வாழ முடியாது” என்கிறார்.
தமிழ் அதிகாரிகளுக்குக் கீழ் முஸ்லிம்கள் பணிபுரியும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. உதாரணமாக, ஒரே வைத்தியசாலையில் டாக்டர்களாக, தாதியர்களாக, ஊழியர்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் சரிசமாக இருந்து வேலை செய்கிறார்கள். பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அது தான் நிலை. இரு சமூகங்களுக்கு இடையில் பகைமை நிலவினால் இரு சாராரும் எப்படி வாழமுடியும்?
சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது. அண்மைக்காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த சௌஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.
எனவே, முஸ்லிம்- தமிழ் சமூகங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் பொதுவாக இலங்கையின் ஏனைய பாகங்களிலும் ஒற்றுமையாகவும், நலன்களைப் பகிர்ந்து கொண்டும், ஒருவர் மற்றொருவரில் தங்கியும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அந்த நிலை ஓரளவு நீடிக்கிறது. ஆனால் சில சக்திகளால் இத்தகைய மகத்தான சகவாழ்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவது மிகுந்த கவலை தருகிறது.
குறிப்பாக, அண்மையில் திருமலை சண்முகா வித்தியாலத்தில் இடம் பெற்ற ஹிஜாப் விவகாரத்தை குறிப்பிட முடியும். நீதித்துறையும் சமூகங்களும் விரும்பிய போதும் வேண்டாத சக்திகள் நமது சமூக உறவினை குழப்ப முனைந்து நின்றன. அது போன்று ஏட்டிக்கு போட்டியாக வெளிவரும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் விவாதங்களும் சாதாரண மக்கள் மத்தியிலே குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அதேநேரம், அது தொடர்பாக முகநூலில் வெளிவருகின்ற குறிப்புக்களும் வீணான அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இதற்கு முன்னர் கல்முனையில் இடம் பெற்ற பிரதேச செயலக விவகாரத்திலும் தேவையற்ற விதத்தில் மூன்றாம் சக்திகள் மூக்கை நுழைக்கச் செய்வதற்கு இடமளித்திருக்கிறது. இவை சீர்குலைந்து போன இனநல்லுறவு சீராக்கம் பெற்று வருகின்ற இச்சூழலில் வேதனை தருகின்ற விடயங்களாகவே அமைகின்றன. எனவேதான், இந்தக் காலகட்டத்தில் நாம் வலிந்து சில முடிவுகளுக்கு வந்தாகவே வேண்டும் அப்போது தான் நீடித்த நிலையான நமது உறவு பாரம்பரியத்தை தொடர்வதற்கான வழி வகையினை பெற முடியும்.
எனவே, கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம் பெறாது இருக்க திடசங்கற்பம் பூணுவதோடு சகவாழ்வுக்கான நீண்டகால திட்டமொன்று பற்றி இரு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் சிந்தித்து செயற்படுவது மிகப் பெரிய தேவையாகும். பரஸ்பரம் விட்டுக் கொடுப்பது, புரிந்துணர்வை வளர்ப்பது, ஒரு சமூகத்தின் நலன்களை வளர்க்க மற்ற சமூகம் ஒத்துழைப்பது போன்றவற்றுக்காக பாரிய முயற்சிகள் செய்யப்பட வேண்டும். சாதகமான சிந்தனைகள் (Positive Thinking), தியாகத்துடன் கூடிய, இதய சுத்தியுடனான முன்னெடுப்புக்கள் அவசியப்படுகின்றன. இல்லாதபோது பயங்கரமான இருள் சூழ்ந்த யுகத்தை இரு சமூகங்களும் சந்திக்க நேரிடும்.-Vidivelli