லத்தீப் பாரூக்
உள்ளூரில் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டும் காங்கேசன்துறையில் உற்பத்தி செய்யப்பட்ட சீமெந்தையும் கொண்டு தான் இந்தக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரவை இந்த நிர்மாணத்தை உடனடியாகக் கைவிடுமாறு உத்தரவிட்டது. அதன் பிறகு 1971இல் பள்ளிவாசலும் குகையும் அமைந்துள்ள பகுதிகள் தொல்பொருள் பெறுமதி மிக்க இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன.
கூரகலயில் இவ்வாறானதோர் கோபுரம் ஒருபோதும் இருக்கவே இல்லை என்ற உண்மை கிரியெல்ல ஞானவிமல தேரர் எழுதிய ஒரு கட்டுரையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை 1971 ஜனவரி 21இல் தவஸ என்ற பெயரில் அன்றைய காலகட்டத்தில் வெளியான பிரபல சிங்கள தினசரிப் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது.
இந்த இடத்துக்கு தான் ஐந்து தடவைகள் விஜயம் செய்துள்ளதாகவும், அன்றைய பிரதி தொல்பொருள் ஆணையாளர் சார்ள்ஸ் கொடகும்புர உடன் இந்தப் பிரதேசத்தை முழுமையாக சோதனை செய்ததாகவும், இந்த இடத்தில் பௌத்தர்களுக்கு உரிமையான அவர்கள் சார்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் தாங்கள் காணவே இல்லை என்று அந்தக் கட்டுரையில் தேரர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் திணைக்களம் அவசரஅவசரமாகக் கட்டிய கோபுரம் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் என்பதால் சங்கைக்குரிய கிரியெல்ல ஞானவிமல தேரர் இது பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமான சான்றுகளாக அமைந்துள்ளன.
அமைச்சரவை தீர்மானத்தின் பின் கூரகல தப்தர் ஜெய்லானி சம்பந்தமான முஸ்லிம்களின் உரிமை கோரலில் எந்த வகையிலும் பாதிப்பு எற்படாது என அறிவித்து மும் மொழிகளிலும் தொல்பொருள் ஆணையாளரால் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன.
பின்னர் 1973 செப்டம்பர் 13இல் மீண்டும் மும் மொழிகளில் தொல்பொருள் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது ‘கூரகல பிரதேசத்தை ஒரு வணக்க வழிபாட்டுக்கான இடமாக முஸ்லிம்கள் பாவித்து வருகின்றமைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது’ என அதில் குறிப்பிடப்பட்டது.
அபுசாலியின் கருத்துப்படி சில அதிகாரிகள் பதவியில் இருந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் விரும்பத்தகாத தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கினர். தொல்பொருள் திணைக்களம் சிங்கள மற்றும் பௌத்த தொல்பொருள் விடயங்களில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தது. உதாரணத்துக்கு திரு. கொடகும்புரவிடம் தப்தர் ஜெய்லானி பள்ளியில் குறிப்பாக ஹிட்டுவங்கல கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ள அரபு எழுத்து வடிவங்களைப் பதிவு செய்யுமாறு கூறிய போது அது இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்டதல்ல என்று அவர் பதில் அளித்தார். அரபு எழுத்தணி வடிவம் இன்றும் மாறாத நிலையில் உள்ளதால் இந்தக் கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை யாராலும் ஊர்ஜிதம் செய்யவும் முடியாமல் உள்ளது. எவ்வாறேனும் இங்குள்ள அரபு வசனங்கள் மற்றும் எழுத்து வடிவம் என்பன பதிவு செய்யப்பட வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வலியுறுத்தினர். இதுபோன்ற பாரபட்சமான செயற்பாடுகள் தான் இன்றும் நாட்டில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு பிரதான காரணங்களாக அமைகின்றன.
அமைச்சரவை தீர்மானத்துக்கு இணங்கி இரு தரப்பினரும் நடந்து கொண்டதால் சிறிது காலம் ஜெய்லானியில் எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.
மீண்டும் தீவிர தேசியவாத போக்குடைய ஜாதிக ஹெல உறுமய அமைப்பு இந்த விடயத்தை கையில் எடுத்து கூரகல பிரதேசம் ஒரு பௌத்த மத்திய நிலையம் என உரிமை கோரி அங்கு பெருந்திரளான மக்களோடு விஜயம் செய்ததை அடுத்து மீண்டும் பதற்ற நிலை உருவானது. இந்த விடயத்தில் இனவாத சமய ரீதியான பாஸிஸ போக்குள்ள பொதுபல சேனா அமைப்பும் தலையிட்டதை அடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது. 2013 மார்ச் 17இல் கண்டியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் இனவாத தீயை கக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் அந்த வருடத்தின் வெசாக் தினத்தை கூரகலயில் கொண்டாடத் தயாராகுமாறும் சிங்கள மக்களைத் தூண்டும் வகையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இதேவேளை 2013 ஏப்ரல் 10இல் த பினான்ஸியல் டைம்ஸ் பத்திரிகையில் (The Battle For Sacred Ground) புனித பூமிக்கான யுத்தம் என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் தரீஷா பஷ்டியன் என்ற பிரபல பத்தி எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் அவரது இராணுவ, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பரிவாரத்தையும் தாங்கிச் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் பனிமூட்டம் நிறைந்த கூரகல கிராமத்தில் (2013 ஏப்ரல் 8இல்) தரையிறங்கியதும் அந்தக் கிராமம் மீண்டும் உயிர்ப்படைந்துள்ளது.
கூரகல ஒரு பண்டைய சூபி வழிபாட்டு இடம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். முஸ்லிம்களுக்கு இது புனிதமானது. அங்குள்ள கற்பாறைகளில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சமாதிகளும் அமைந்துள்ள இடமும் அவற்றுக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்படுகின்றன.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லேவல மேதானந்த தேரர் உட்பட பல தேரர்கள், மௌலவிகள், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹென்தவிதாரண, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர். இஸ்லாமிய வழிபாட்டு இடம் ஒன்று அமையப் பெற்றுள்ள மலை உச்சியின் முகப்பு பகுதி உட்பட அங்குள்ள பல இடங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பார்வை இட்டுள்ளார்.
கூரகல ஒரு பண்டைய சூபி வழிபாட்டு இடம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். முஸ்லிம்களுக்கு இது புனிதமானது. அங்குள்ள கற்பாறைகளில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சமாதிகளும் அமைந்துள்ள இடமும் அவற்றுக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்படுகின்றன. பக்தி மிக்க ஒரு இஸ்லாமியப் புனிதர் ஆதம் மலைக்கு செல்லும் தனது பயணத்தின் ஒரு அங்கமாக இந்த இடத்தில் சுமார் 12 ஆண்டுகள் தரித்திருந்து தியான வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமைக்கான வரலாற்றுத் தடங்கள் அங்கு உள்ளன. வருடாந்தம் பெருந்திரளான மக்கள் இங்கு சமய ரீதியான வழிபாட்டுக்காகக் கூடுகின்றனர். ஷேக் முஹியத்தீன் அப்துல் காதர் எனப்படும் அங்கு தியானம் புரிந்த மகானை அந்த மக்கள் நினைவு கூறுகின்றனர். ஏனைய எல்லா நாட்களிலும் அந்த இடம் சூபிஸம் போதிக்கும் தியானம் புரிபவர்களுக்கும் தனிமைப் பிரதிபலிப்புக்கும் ஒரு சொர்க்க பூமியாக அமைந்துள்ளது.
இந்த வழிபாட்டு இடத்தின் அமைதி அண்மைக்காலங்களில் மாறுபட்ட உரிமை கோரல்களின் விளைவாக சீர்குலைந்துள்ளது. இதே காரணத்தால் அதன் வரலாற்றின் அசல் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் அரங்கில் சூடேறி வரும் பௌத்த பிக்குகளும், கடும் போக்காளர்களும் இந்த மலைக் குகையை ஒரு பண்டைய பௌத்த மடாலயம் என்ற தமது ஒரு தசாப்த கால உரிமை கோரலை இப்போது மீண்டும் புதுப்பித்துள்ளனர். இங்குள்ள பள்ளிவாசல் உட்பட இஸ்லாமியக் கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என எல்லாவற்றையும் இங்கிருந்து அகற்றி விட வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். இந்த இடத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். ஜெய்லானி பள்ளிவாசலுக்கான எந்தவொரு அச்சுறுத்தலும் மற்றும் அந்த இடத்தின் வரலாற்றுத் தடங்களை மாற்றி அமைக்கும் எந்தவொரு முயற்சியும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் மிகப் பாரதூரமான பதற்ற நிலையை உருவாக்கும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்லானியின் பாதுகாப்பு பொறுப்பு
1970களில் பௌத்தர்களால் இவ்வாறான ஒரு உரிமை கோரல் இடம்பெற்ற போது தொல்பொருள் திணைக்களம் அதன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஜெய்லானி புனிதப் பிரதேசத்தின் பாதுகாப்பு பொறுப்பு, மலைக்குகை, பள்ளிவாசல், யாத்திரிகர்கள் தரிப்பிடம் என்பனவற்றின் பாதுகாப்பு பொறுப்பு அபுசாலி குடும்பத்தவர்களிடம் இருந்த போதிலும் தொல்பொருள் திணைக்களம் அதன் பொறுப்பை ஏற்றது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.எம். அபுசாலி தான் ஜெய்லானி புனிதப் பிரதேசத்தின் பிரதம தர்மகர்த்தாவாக இருந்தார். இன்று இந்தப் பொறுப்பை அவரது மகள் றொஷானா ஏற்றுள்ளார்.
இன்றைய பாதுகாப்புச் செயலாளர் அந்த இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின் அவரோடு ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் தர்மகர்த்தாக்கள் ஈடுபட்டனர். மௌலவிமார்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது அங்குள்ள எல்லா கட்டிடங்களும் அவற்றின் முகப்புக்களும் அகற்றப்பட வேண்டும் என்ற தொனியில்தான் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது. இந்தத் தொனியால் ஊக்கம் இழந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் இந்த விடயத்தில் ஏற்கனவே ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தோற்றுப் போய் விட்டதாகவும் உணர்ந்தனர். அங்கு குழுமியிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் சிங்கள கிராமவாசிகளுக்கும் தமது நிலைப்பாட்டை விளக்குமாறு பாதுகாப்பு செயலாளர் தொல்பொருள் ஆணையாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்கவை கேட்டுக் கொண்டார். அந்த இடத்தின் தொல்பொருள் முக்கியத்துவம் பற்றிய உண்மையான நிலையை விளக்குமாறு கூறப்பட்டது.
முன்மொழியப்பட்ட இணக்கப்பாடு
மலைக்குகை பள்ளிவாசலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என திஸாநாயக்க விளக்கமளித்தார். ஆனால் அதில் உள்ள எழுத்து வடிவங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் பற்றி தொல்பொருள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும். மலைக்குகையும் சோதனைக்கு உட்படும். பயணிகள் தங்குவதற்காகவும் பள்ளிவாசலின் வருடாந்த கொண்டாட்டங்களை நடத்தவும் அண்மைய பகுதிகளில் 26 ஏக்கர் காணி ஒதுக்கப்படும். பள்ளிவாசல் அப்படியே இருக்கும். ஆனால் தொல்பொருள் அகழ்வு வேலைகளும் விசாரணைகளும் இடம்பெறும் போது மலை முகப்பில் உள்ள ஏனைய கட்டிடங்கள் யாவும் அகற்றப்படும் என்று திஸாநாயக்க விளக்கமளித்தார்.
அவரது விளக்கத்தை செவியுற்ற முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் இந்த விடயத்தோடு இணங்கிச் செல்லவில்லை. ஜெய்லானியின் ஞாபகார்த்தங்கள் சரணடையச் செய்யப்படுவதாகவும், அதன் மூலம் இந்த நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமியப் புனிதப் பிரதேசங்களையும் அவற்றின் உண்மையான குடியேற்ற உரிமை கோரல்களின் அடிப்படையில் மீட்டு எடுக்க வேண்டிய கதவுகளைத் திறந்து விடுவதாகவும் அவர்கள் நம்பினர்.
எவ்வாறாயினும் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்படாது என்ற உத்தரவாதம் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பின் ஒரு மிதவாத போக்கில் இந்த விடயம் எச்சரிக்கையோடு கையாளப்பட்டது. முஸ்லிம்களுக்குப் புனிதமான பகுதிகளில் மேலும் எதையாவது இணைத்துக் கொள்ள முயற்சிகள் இடம்பெற்றால் சமூகம் ஒரு கடினமான போக்கை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தேவை ஏற்படின் இந்த விவகாரம் சர்வதேச சமூகத்துக்கும், 57 நாடுகள் அங்கம் வகிக்கும் மிகப் பெரிய இஸ்லாமிய அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பு பல ஆண்டுகளாக இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திஸாநாயக்க விடயங்களைத் தெளிவு படுத்திய பின் பள்ளிவாசலுக்கு எந்தப் பாதிப்பும் எற்படாது, முஸ்லிம் யாத்திரிகர்கள் இங்கு விஜயம் செய்வதிலும் எந்த இடையூறுகளும் இருக்காது என்று முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உறுதி மொழி வழங்கினார். அதுவரை அந்த இடத்தை சுற்றி பார்வையிட்டு விட்டு கோத்தாபய ராஜக்ஷவும் அங்கு வருகை தந்தார். முஸ்லிம்களது சமய உரிமைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை அவரும் அங்கு வழங்கினார் அத்தோடு அங்கு எந்தவிதமான பௌத்த நினைவுச் சின்னங்களையும் அரசு நிறுவாது என்றும் உறுதி அளித்தார்.
மேலும் அந்த இடம் ஒரு சுதந்திரப் பிரதேசமாக முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார். பலாங்கொடை பிரதேசத்திலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் இந்த விடயம் பெரும் பதற்றமாக உருவெடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியா அல்லது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் ஒரு முயற்சியா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. பிரதேச ரீதியான ஒரு உரிமை கோரலுடன் பெருந்திரளான பௌத்தர்கள் வரலாற்று ரீதியான உரிமைகோரலுடன் கூடிய பெருமளவு முஸ்லிம் யாத்திரிகர்களை எதிர் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். வேண்டத்தகாத சக்திகள் யாராவது அதற்குள் ஊடுருவினால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அது அமைதியை குலைக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.
ஒரு குழுவை நியமிக்குமாறு திஸாநாயக்கவுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனை வழங்கினார். புனிதப் பிரதேசத்தின் தர்மகர்த்தாக்கள், மேதானந்த தேரர், ஏனைய சில தேரர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்டதாக ஒரு குழுவை நியமிக்க ஆலோசனை வழங்கினார். கூரகல புனிதப் பிரதேசம் பற்றிய பதற்ற நிலையைத் தணிக்கும் சாத்தியமானதோர் இணக்கப்பாட்டுத் திட்டத்துக்கு வருமாறு அந்தக் குழுவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
இந்தக் குழு பற்றி எவ்விதமான கருத்துக் கூறவோ அல்லது அதில் கலந்து கொள்ளவோ பொது பல சேனா மற்றும் சிங்ஹல ராவய உறுப்பினர்களுக்கு எதுவித சந்தர்ப்பமும் வழங்கப்படாது என்ற உத்தரவாதமும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.
முஸ்லிம் யாத்திரிகர்கள் இங்கு வருகை தருவதற்கு பௌத்தர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்கள் என்று மேதானந்த தேரர் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மீண்டும் உறுதி அளித்தார். ஆனால் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் இன விவகாரங்களில் எப்போதுமே கடினமான போக்கையே பின்பற்றுபவர் அந்தக் கட்சி கூட சமாதானத்துக்கான கருத்துக்களை ஒரு போதும் முன் வைத்ததில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான மோசமான நிகழ்ச்சி நிரலுடன் பொது பல சேனா போன்ற அமைப்புக்களின் பிரவேசமே மேதானந்த தேரர் போன்றவர்கள் ஓரளவு மிதவாத போக்கை கைகொள்ள காரணமாயிற்று.
மலைக்குகையை முற்றுகையிடல்
ஜே.எச்.யூ தலைமையிலான பௌத்த தேரர்களைக் கொண்ட ஒரு அணி சில காலங்களுக்கு முன் கூரகல புனிதப் பிரதேசத்தை முற்றுகையிட்டது. அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றுவது, அங்கு பௌத்த மரபுரிமையை மீண்டும் நிலை நிறுத்துவது என்ற தீர்மானத்துடன் இந்த முற்றுகை இடம்பெற்றது. புனிதப் பிரதேசத்தின் அன்றைய தர்மகர்த்தா றொஷானா அபுசாலி மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அந்த இடத்தின் வரலாறு, முஸ்லிம்களுக்கு அதன் முக்கியத்துவம், முஸ்லிம்களது உரிமை கோரல்கள் மற்றும் அந்த இடத்தில் வாழ்ந்த முஸ்லிம் மகான் தொடர்பான ஆதாரங்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன் பிறகு இந்த விடயத்தை அப்படியே அமைதிப்படுத்துவது என பௌத்த தேரர்கள் இணங்கினர். ஆனால் அதிலும் சில கடினப் போக்கு குழுக்கள் தமது முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரத்தின் முக்கிய கவனத்துக்குரிய விடயமாக கூரகல விடயத்தை தொடர்ந்தும் கையாண்டனர்.
2013 ஜனவரியில் சிங்ஹல ராவய மற்றும் பொது பல சேனா குழுக்கள் ஜெய்லானி பள்ளிவாசலை முற்றுகையிட சுமார் 150 பேர் கொண்ட பௌத்த தேரர்கள் குழுவை ஏற்பாடு செய்தனர். இவர்களோடு பல பொலிஸாரும் உடன் சென்றனர். புத்த பிரானின் சிலைகளைக் கைகளில் ஏந்தியவாறு அவர்கள் மலை முகப்பை நோக்கி ஏறினர். ஆனால் அப்போது திடீரென அங்கு கடும் மின்னல் இடி முழக்கம் என்பனவற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அவர்கள் தமது முயற்சியில் இருந்து பின்வாங்கினர் என சம்பவ இடத்தில் இருந்த பலர் தெரிவித்துள்ளனர்.
பதற்ற நிலையில் ஒரு கூட்டம்
ஜெய்லானி முற்றுகை முயற்சி அதனால் உருவாக்கப்பட்ட பிணக்குகள் என்பன அதிகாரிகள் அவசரமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டின. அதனைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்கவின் கொழும்பு அலுவலகத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூரகல புனிதப் பிரதேசத்தின் தர்மா கர்த்தாக்கள், ஏனைய பிரதிநிதிகள், முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பொது பல சேனா, சிங்ஹல ராவய ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அங்கு வருகை தந்தனர்.
ஆரம்ப கட்டத்திலேயே மிகவும் கடுமையான தொனியைப் பாவித்த பௌத்த தேரர்கள் பள்ளிவாசல் தர்மகர்த்தா ரொஷானா அபுசாலி ஆங்கிலத்தில் உரைநிகழ்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கண்டித்தனர். தனக்கு சிங்களம் சரளமாக வராது என்றும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தன்னை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த அனுமதிக்குமாறும் அவர் தயவுடன் வேண்டினார். ஆனால் அதை ஏற்க பொது பல சேனா பிரதிநிதிகள் திட்டவட்டமாக மறுத்தனர். இலங்கை ஒரு சிங்கள நாடு எனவே அவர் சிங்களத்தில் தான் பேச வேண்டும் என அவர்கள் அடம் பிடித்தனர்.-Vidivelli