கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ச குடும்பத்தை மையமாகக்கொண்ட பௌத்த பேரினவாத ஆட்சியின்கீழ் முஸ்லிம்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஒன்றிரண்டல்ல. முஸ்லிம் மக்களைக் குறிவைத்தே இந்த அரசு பல முடிவுகளை பொருளாதார ரீதியாகவும் மத கலாசார ரீதியாகவும் எடுத்துள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் 2009லிருந்தே ஆரம்பித்துவிட்டபோதிலும் கடந்த இரண்டு வருடகாலத்தில் அவை ஒரு புதிய உத்வேகத்தை அடைந்துள்ளன. ஜனாதிபதியும், பிரதம மந்திரியும், அவர்களின் அரசாங்கமும், சிங்கள பௌத்த பேரினவாதிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தமையும் அதே பேரினவாதத்தையே இவ்விரு தலைவர்களும் தழுவி இருப்பதும் இந்த உத்வேகத்துக்கு ஒரு முக்கிய காரணம். இருந்தாலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை இங்கே பட்டியலிட்டு விபரிக்க இக்கட்டுரை விரும்பவில்லை. ஆனால் அவற்றுள் மிகவும் துயர்படிந்ததும் மறக்க முடியாததுமான ஒன்றைமட்டும் பொறுக்கியெடுத்து அது முஸ்லிம்களுக்குப் புகட்டும் ஒரு முக்கியமான பாடத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2020இல் உலகெங்கும் ஆரம்பித்த கொவிட் கொள்ளை நோய் இன்னும்தான் விட்டபாடில்லை. கோடிக்கணக்கான உயிர்களையும் பொருளாதாரச் செல்வத்தையும் விழுங்கி ஏப்பம்விட்டபின்னும் அதன் பசி தீரவில்லைபோலும். ஆனால் இலங்கையிலே அந்த நோய் பரவத்தொடங்கியபோது அதனை நாட்டுக்குள் கொண்டுவந்தவர்களே தப்லீக் ஜமாஅத்தினர்தான் என்ற ஒரு அபாண்டத்தை பேரினவாதிகள் அவிழ்த்துவிட்டனர். அதேபோன்றுதான் இந்தியாவிலும் இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களின் தலைமேல் பழியைப்போட்டனர். அது உண்மையல்ல என்பதை இரு நாடுகளும் பின்பு உணர்ந்தன. ஆனால் முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கம் பேரினவாதிகளைவிட்டும் நீங்கவே இல்லை. அதன் பிரதிபலிப்பாகவே கொவிட் நோயால் மரணிக்கும் முஸ்லிம் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கட்டளை ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. அதற்கான விஞ்ஞான ஆதாரத்தை வழங்கியவர் ஒரு மருத்துவ நிபுணரல்ல, சாதாரண ஒரு மண்ணியல் பேராசிரியை. இவரும் ஒரு சிங்கள பௌத்த பேரினவாதி என்பது பின்பு தெரியவந்தது. சுமார் ஒருவருட காலம் இந்தக் கட்டளையால் எத்தனையோ முஸ்லிம் ஜனாஸாக்கள் தீக்கொழுத்தப்பட்டன. இஸ்லாமிய மத உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளியாது உலக மருத்துவ விற்பன்னர்களதும் உலக சுகாதார நிறுவனத்தினதும் ஆலோசனைகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளி உதாசீனம் செய்து இந்த ஆட்சி முஸ்லிம்களைப் பழிவாங்கியது. எத்தனையோ மனிதாபிமானமுள்ள பௌத்த தலைவர்களும், பௌத்த துறவிகளும், கிறிஸ்தவ மதத்தலைவர்களும் சிவில் இயக்கங்களும் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கவேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தும் அரசின் கடும்போக்கு மாறவில்லை. இறுதியாக ஐ.நா. மனித உரிமைச் சபை 2021 இல் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கப்படுத்தி அரசுக்கெதிராகக் கொண்டுவந்த பிரேரணையே முஸ்லிம் கொவிட் ஜனாஸாக்களின் கட்டாய தகனத்தையும் நிறுத்தியது.
இருந்தும் அந்த நிறுத்தத்தால் பேரினவாத அரசு தோற்றுப் போகவில்லை. முஸ்லிம்களைப் பழிவாங்குதல் வேறு உருவத்தில் தோன்றியது. அதாவது கொவிட் நோயால் மரணித்த அனைத்து உடல்களையும் (முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட) ஓட்டமாவடியின் மஜ்மா நகர் மையவாடியிலேயே அடக்கவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பூமிக்கடியிலுள்ள நீருடன் மரண உடல்கள் கலப்பதால் நோய் தொற்ற வழியுண்டு என்ற மண்ணியல் பேராசிரியையின் அர்த்தமற்ற வாதம் பொய்யானது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் ஒரு வரண்ட பிரதேசத்தில் ஜனாஸாக்களை அடக்குவதால் அந்த ஆபத்தை தடுக்கலாம் என்ற இன்னொரு அபாண்டத்தை முன்வைத்து ஓட்டமாவடியே முழு இலங்கையின் கொவிட் புதைகுழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மஜ்மா நகரின் மரண ஓலம் பேரினவாதிகளுக்கு ஆத்ம ராகமாக அமைந்தது. இந்த முடிவால் எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் எவ்வளவு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டன என்பதை வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது. இறுதியாக, மேலும் ஒரு வருடத்தின்பின்னர் அந்தக் கட்டளை பின்வாங்கப்பட்டு இப்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அவ்வுடல்களை அடக்கலாம் என்று ஜனாதிபதி புதிய கட்டளையொன்றை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணமென்ன? முஸ்லிம்கள்மேல் அரசுக்கேற்பட்ட புதிய அனுதாபமா அல்லது அவரின் அதிகாரபலத்தை அதிகரிப்பதற்காக முஸ்லிம் சமூகத்தின் கோடரிக்காம்புகளாகச் செயற்பட்ட பிரதிநிதிகளின் துரோகத்துக்கான பரிசா? இல்லவே இல்லை. உண்மையான காரணம் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ. நா. மனித உரிமைகள் சபையின் 2022 ஆம் வருடக் கூட்டம். அந்தச்சபைக்கு ஒரு போலி முகத்தைக்காட்டி அச்சபையின் கண்டனங்களிலிருந்து தப்புவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் அந்தப் புதிய கட்டளை. இந்த வரலாறு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குப் புகட்டும் பாடம் என்ன? அதை விளக்குவதற்கு முன்னர் வேறு இரண்டு உண்மைகளையும் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம்.
முஸ்லிம்களின் கொவிட் மரண உடல்களை தகனம் செய்யவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது அப்போதைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவரோ எரிந்த உடலின் சாம்பலை எவ்வாறு இஸ்லாமிய முறைப்படி அடக்குவது என்ற ஒரு புதிய வியாக்கியானத்தை வெளிப்படுத்தியது பலருக்கும் ஞாபகம் இருக்கலாம். அநீதிகளை எதிர்த்துப் போராடத் துணிவற்ற தலைமைத்துவங்கள் எதிரியின் செயல்களுக்கு அனுதாப வண்ணம் பூசுவது வரலாற்றுக்குப் புதிதல்ல. எதிரியை மாற்ற முடியாவிட்டால் எதிரியுடன் சேர்ந்து செல்வதே நல்லது என்ற கோழைகளின் உபாயமே இது. அதற்குப் பிறகு கட்டாயத் தகனம் நீக்கப்பட்டபின் அதற்குக் காரணம் தாங்கள் அரசுக்கு வழங்கிய ஒத்துழைப்பும் ஜனாதிபதியுடனான சுமுகமான பேச்சுவார்த்தைகளுமே என்ற காரணத்தை முன்வைத்து தங்களது சமூகத் துரோகத்தை மூடிமறைக்க முற்பட்டனர் அந்தக் கோடரிக்காம்புகள். மதத்தலைவரின் வியாக்கியானமும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் விளக்கமும் எந்த அளவுக்கு முஸ்லிம் சமூகம் துணிவற்ற திறமையற்ற ஒரு தலைமைத்துவத்துடன் தடம்புரண்டு தவிக்கிறது என்பதை காட்டவில்லையா? பெயருக்கு ஒரு முஸ்லிம் மந்திரியாக இருந்தும்கூட அவரால் ஒரு துரும்பையேனும் முஸ்லிம் சார்பாக நகர்த்த முடியாதிருப்பதை என்னவென்று கூறுவதோ? இந்த நிலையை இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் இக்கட்டுரை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். எனவே முஸ்லிம்கள் ஒரு மாற்று வழியைத் தேடுவது அவசியம். அதனை இனி விளக்குவோம்.
கொவிட் ஜனாஸாக்கள் விடுதலையானது அரசின் காருண்யத்தாலோ முஸ்லிம் தலைமைத்துவங்களின் முயற்சியாலோ அல்ல. அதற்கு ஒரே காரணம் ஐ. நாவின் மனித உரிமைச்சபையும் அதன் செயலாளர் மிச்சேல் பச்சலெற் வீரமங்கையின் துணிவான செயற்பாடுகளுமே. அவருக்கு உடந்தையாகச் செயற்பட்டவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர். சிங்கள பௌத்த இனவாதத்தின் இனச்சுத்திகரிப்பு அழிவுகளிலிருந்து உருவானதே இப்புலம்பெயர் சமுதாயம். அது தமிழர்களோடு ஆரம்பித்து இன்று முஸ்லிம்களையும் உள்ளடக்கி சிங்களவர்களையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது. அதனிடமுள்ள மிகவும் சக்திவாய்ந்த செல்வம் அறிவு. அந்த அறிவினை ஆயுதமாகப் பயன்படுத்தி பிறந்த நாட்டின் அராஜகத்தினுள் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உலக நிறுவனங்களின் ஆதரவைத் திரட்டி இலங்கை மக்களின் நலனுக்காக அயராது உழைக்கின்றது இச்சமுதாயம். அதன் செல்வாக்கு ஐ. நாவையும் எட்டியுள்ளமை இலங்கை அரசுக்கு உருவான ஒரு புதிய தலையிடி. இந்தப் புலம்பெயர் சமூகத்தினூடாகவே இலங்கை முஸ்லிம்களும் தமது பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடுவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததொன்று. அதை எவ்வாறு செய்யலாம்?
முதலாவதாக, இலங்கை முஸ்லிம்கள் இறைதூதரின் உம்மத்துகளுள் ஓர் அங்கம், ஆதலால் அவர்கள் உலகின் பெரும்பான்மைச் சமூகத்தின் அங்கத்தவர்கள். அவர்களுக்கு ஆபத்துவந்தால் உலக முஸ்லிம் நாடுகள் ஐம்பத்தேழும் உலக முஸ்லிம் கூட்டுறவு நிறுவனத்தினூடாக அபயம் கொடுக்கும் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டும். மாறாக, ஐ. நா. போன்ற சர்வதேச அரங்குகளினூடாகவே தமது பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடவேண்டும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். உண்மையிலேயே உள்நாட்டு அரசு ஜனநாயக அடிப்படையில் எல்லாப் பிரஜைகளையும் சமமாக மதித்து நடக்குமேயானால் இது தேவை இல்லை. அது இல்லாத பட்சத்தில் வெளி உதவியை நாடுவதிலே தவறும் இல்லை. ஆகவே நாட்டின் அரசினை மாற்றுவதற்கு மற்ற இனங்களுடன் சேர்ந்து போராடும் அதேவேளை அது சாத்தியமாகும்வரை சர்வதேச வழியினை கையாள்வதைத்தவிர வேறு பரிகாரம் முஸ்லிம்களுக்கு இல்லை. அதற்கு அடிப்படைத்தேவை உள்நாட்டு முஸ்லிம் இயக்கங்கள் புலம்பெயர் முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை தக்க ஆதாரங்களுடன் அறியப்படுத்த வேண்டும். உதாரணமாக அண்மையில் பாதுகாப்புப் படையினரால் முஸ்லிம் பெண்களுக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் அதனை வெளியில் கூறப்பயந்து அவர்களின் குடும்பங்கள் மௌனம் சாதிப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இது பாரதூரமான மனித உரிமை மீறல். எனினும் திட்டவட்டமான ஆதாரங்களும் சாட்சியங்களும் இல்லாமல் இதனை எப்படி உலக அரங்கினுக்குக் கொண்டு வருவது? எனவே இவ்வாறான குற்றங்களையும் அநியாயங்களையும் உள்நாட்டு முஸ்லிம் அமைப்புகள் திரட்டியெடுத்துப் புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புகொண்டால் அந்த அமைப்புகள் அவற்றை மேலிடங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். தமிழ்ச் சமூகம் அவ்வாறுதான் செயற்படுகின்றது. அஞ்சினார்க்கு அரண் இல்லை என்பதை உணர்ந்து துணிவுடன் செயலாற்ற வேண்டிய காலம் இது.
கத்தோலிக்க பேராயர் எவ்வாறு துணிவுடன் தனது மக்களுக்காக நீதிகேட்டு உலக அரங்கினை நாடியுள்ளார் என்பதையாவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா போன்ற அமைப்புகள் உணர்வதில்லையா? எல்லாரும் வியாபார அரசியல் செய்து அரசு மூலம் பதவிகளும் பணமும் தேடும் நோக்குடன் செயற்பட்டால் சமூகத்தின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பௌத்த பேரினவாதம் ஒரு சூறாவளியாக நாட்டில் வீசுகிறது. எந்த எதிர்க்கட்சியாவது அதனை பகிரங்கமாக கண்டிக்க முன்வருவதாகக் காணோம். காக்கிப் படையும் காவிப்படையும் ஒன்றிணைந்து ஆளும் அரசைப் பாதுகாக்கிறது. அதே பாதுகாப்பைத்தான் எதிர்க்கட்சிகளும் எதிர்பார்க்குமானால் இலங்கையின் எதிர்காலம் இருள் படிந்ததாகத்தான் இருக்கும். எனவேதான் சர்வதேசத்தின் பார்வையை சிறுபான்மை இனங்களின் சார்பாக இலங்கைமேல் திருப்ப வேண்டியுள்ளது. கொவிட் மரணங்கள் புகட்டிய பாடமும் இதுதான். முஸ்லிம் புத்திஜீவிகளே, விழியுங்கள்.- Vidivelli