எச்.எம்.எம். பர்ஸான்
“கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்வதை இடைநிறுத்தி, அந்தந்த மாவட்டங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்”
கடந்த பெப்ரவரி மாதம் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மற்றும் மஜ்மா நகர் மக்களை நாம் சந்தித்தபோது அவர்களது கோரிக்கை இவ்வாறுதான் இருந்தது. அவர்களது கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையில் கடந்த மார்ச் 5 ஆம் திகதி முதல் நாட்டின் எந்தவொரு பகுதியிலுமுள்ள மையவாடிகளில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் வகையில் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களது சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் எனும் கொள்கையை இலங்கை அரசாங்கம் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி 2170/08 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டது.
இறுதியில் சுமார் 11 மாதங்களின் பின்னர், அதாவது 25 பெப்ரவரி 2021 அன்று இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்து, ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பமானதும் கட்டாய தகனக் கொள்கைக்கு எதிராக ஒலித்து வந்த குரல்கள் ஓய்ந்தன. அதன் பிறகு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைப் பற்றி அறிய யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இங்கு மூவாயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவிடயத்தில் அரசாங்கத்திடமிருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை” என்கிறார் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர்.
“கொவிட் 19 பரவல் காரணமாக மூன்று தடவைகள் எமது பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டது. இதனால் எமது சபையின் வருமானம் 50 வீதத்தினால் குறைவடைந்தது. இந்நிலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளையும் எமது சபையே கவனிக்க வேண்டி ஏற்பட்டமையானது எமக்கு பெரும் சுமையாக மாறியது. தனவந்தர்கள், சமூக சேவை நிறுவனங்களின் பங்களிப்புகளால்தான் அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் பகிரப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் பிரதேச சபையின் ஊழியர்கள் பலர் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் ஒன்று முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்கான எரிபொருள், பழுதுபார்ப்பு செலவுகளையும் சபையே முன்னெடுத்தது. அவ்வப்போது தேவையான பொருட்களை எமது சபையின் நிதியிலிருந்தே கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது. இதற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சோ கொவிட் நிதியினைக் கையாளும் ஜனாதிபதி செயலகமோ அல்லது விடயத்துக்குப் பொறுப்பான சுகாதார அமைச்சோ ஒரு சதத்தைக் கூட ஒதுக்கவில்லை” என்றும் அவர் கவலைப்படுகிறார்.
“தினமும் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் 11 பேர் ஈடுபட்டனர். இதற்காக இவர்களுக்கு சிறிய கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்பட்டது. எனினும் அக் கொடுப்பனவைக் கூட கொழும்பிலுள்ள முஸ்லிம் சமூக நிறுவனங்களே வழங்கின. சடலங்களை அடக்கத் தேவையான பெட்டிகள், அடக்கம் செய்யப்பட்ட இடத்தை இலகுவாக அடையாளம் காண்பதற்கென நடப்படும் இலக்கமிடப்பட்ட கொங்கிறீட் தூண் ஆகியவற்றைக் கூட முஸ்லிம் தனவந்தர்களே வழங்கினார்கள்” என ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ். சிஹாப்தீன் குறிப்பிடுகிறார்.
“சடலங்களை அடக்கம் செய்வதற்கென நாம் எந்தவித கட்டணத்தையும் குடும்பத்தினர்களிடம் அறவிடவில்லை. இதனை முற்றிலும் ஒரு சேவையாகவே முன்னெடுத்தோம்” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் சடலங்களை அடக்கம் செய்யும் பணியை தனியாக ஒரு பிரதேச சபையினால் நிர்வகிப்பது என்பது எமக்கு ஒரு சுமக்க முடியாத சுமை. ஆனாலும் இதனை ஒரு தேசிய கடமையாகக் கருதியே செய்து வந்தோம். இங்கு முஸ்லிம்களது சடலங்கள் மாத்திரமன்றி பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் சடலங்களும் எந்தவித வேறுபாடுகளுமின்றி அடக்கம் செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்” என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
சகல மதத்தவர்களும் அடக்கம்
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி முஸ்லிம்கள் போராட ஆரம்பித்த போது ஏனைய சமயத்தவர்கள் அதனை ஓர் அநாவசியமான கோரிக்கையாகவே நோக்கினர். எனினும் நாட்கள் செல்லச் செல்ல இக் கோரிக்கையின் பின்னாலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்ததுடன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கியும் சமூக ஊடகங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஓட்டமாவடி மஜ்மா நகரில் கடந்த ஒரு வருட காலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களது புள்ளிவிபரங்களை நோக்கும்போது இந்த மையவாடியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அதற்கமைய, 2021 மார்ச் 5 ஆம் திகதி முதல் 2022 மார்ச் 5 ஆம் திகதி வரை இங்கு மொத்தமாக 3634 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முஸ்லிம்கள் – 2992, பௌத்தர்கள் – 287, இந்துக்கள் – 270, கிறிஸ்தவர்கள் – 85 என்ற ரீதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காணிகள் யாருடையவை?
ஓட்டமாவடி, மஜ்மா நகர் கிராமத்தில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்யவென 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 7 ஏக்கர் காணியிலேயே இதுவரை சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் காணியைச் சுற்றி மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கொழும்பிலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக இதனைச் சுற்றியுள்ள மேலும் 11.5 ஏக்கர் காணி ‘சூனிய வலயம்’ என்ற பெயரில் பொது மக்கள் நுழைய முடியாதவாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் சடலங்களை அடக்கம் செய்யவென காணிகள் தெரிவு செய்யப்பட்ட விதத்தை ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ். சிஹாப்தீன் எமக்கு விபரித்தார்.
“கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கென ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பொருத்தமான நிலப்பகுதியை அடையாளப்படுத்தித் தருமாறு மாவட்ட செயலாளர் மற்றும் இராணுவ தரப்பு மூலம் எமக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கமைய அரச காணி ஒன்றை நாம் அடையாளப்படுத்தினோம். எனினும் அது தாழ்வான பகுதியெனக் கூறி சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவினரும் இராணுவத்தினரும் நிராகரித்தனர். இதனையடுத்து அதற்கு மேற்புறமாக இருந்த மேட்டு நிலப்பயிர்ச் செய்கை செய்யப்பட்டு வந்த காணியை பொருத்தமானதென அதிகாரிகள் இனங்கண்டனர். இது அரச காணியாக இருப்பினும் இக் காணியில் பல வருடங்களாக பொது மக்கள் விவசாயம் செய்து வருவதால் அவர்களது அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
முதலில் காணிச் சொந்தக்காரரான ஜௌபர் என்பவரை நாம் அணுகிய போது அவர் தனது 3 ஏக்கர் காணியை வழங்க முன்வந்தார். அக் காணியிலேயே சடலங்களை அடக்கம் செய்யும் பணியை விரைவாக ஆரம்பித்தோம். பின்னர் அடக்கம் செய்யும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அருகிலிருந்த மேலும் 4 ஏக்கர் காணியை இதற்காக எடுத்துக் கொண்டோம். இப்போது மொத்தமாக 7 ஏக்கர் நிலத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மஜ்மா நகர் மக்களின் அவலம்
“கொவிட் சடலங்களை அடக்க 10 ஏக்கர் காணியை வழங்கினாலும் அப் பகுதியில் மொத்தம் 21.5 ஏக்கர் காணியை சூனிய வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். இதனால் எமக்கு அப் பகுதியில் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. இவை எமது பாரம்பரிய விவசாய காணிகள். முழு ஓட்டமாவடி பகுதியிலும் மரணிக்கும் மக்களை எதிர்காலத்தில் அடக்கம் செய்வதற்கான பொது மையவாடிக்குரிய காணியும் இப்போது இதற்குள் சிக்கியுள்ளது. கொவிட் சடலங்களை அடக்குகிறோம் என்ற போர்வையில் மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி எமது குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளை அரசாங்கம் அபகரிப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல். சமீம் குறிப்பிட்டார்.
மஜ்மா நகர் ஒரு மீள்குடியேற்ற கிராமமாகும். இங்கு சுமார் 320 குடும்பங்களே வசிக்கின்றன. இக் கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. பெரும்பாலானவர்கள் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். மேலும் பலர் கூலித் தொழிலாளிகள். குடிநீர், மலசல கூடம், முறையான வீதியின்மை என பல அடிப்படைப் பிரச்சினைகளை இக் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகிறார்கள். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 14 பேர் தற்போது காணிகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை எந்தவித நஷ்டயீடோ அல்லது மாற்றுக் காணியோ வழங்கப்படவில்லை.
மஜ்மா நகரில் சடலங்களை அடக்கம் செய்வதற்காக எந்த மறுப்பும் தெரிவிக்காது தனது 3 ஏக்கர் காணியை வழங்கிய எம்.எப்.எம். ஜௌபரை நாம் சந்தித்தோம். தான் எந்தவித எதிர்பார்ப்புமின்றியே இக் காணியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். “எனக்குச் சொந்தமான காணியை கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்வதற்காக தர முடியுமா என அதிகாரிகள் கோரியபோது நான் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மாத்திரமன்றி தமது உறவுகளின் சடலங்கள் நெருப்புக்கு இரையாகக் கூடாது எனப் பிரார்த்தித்த சகோதர மதத்தினர் கூட இந்த தருணத்திற்காகத்தான் காத்திருந்தார்கள். இந்த தேவைக்கு முன் எனது காணி ஒரு பெரிய விடயமே அல்ல. நான் எனது மனைவியின் சம்மதத்தையும் பெற்று உடனடியாகவே காணியை வழங்கினேன்” என ஜௌபர் குறிப்பிட்டார். “நான் இதற்காக எந்தவொரு நஷ்டயீட்டையும் எதிர்பார்க்கவில்லை. நான் இவ்வாறு காணியை விட்டுக் கொடுத்தமைக்காக பல முஸ்லிம் தனவந்தர்கள் என்னைத் தொடர்புகொண்டு பணம் தருவதற்கு முன்வந்தார்கள். நான் அதனை நிராகரித்துவிட்டேன். நான் நல்ல நோக்கத்திற்காக வழங்கிய காணிக்கு பணம் தர வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் அரசாங்கம் வேறு ஒரு இடத்தில் காணியை தருமாகவிருந்தால் அதில் எனது விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜௌபரின் காணிக்கு அருகிலிருந்த மேலும் 13 பேருக்குச் சொந்தமான காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமது சம்மதத்தைப் பெறாமலேயே காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக காணிச் சொந்தக்காரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அவ்வாறு காணியை இழந்தவர்தான் 49 வயதான எம்.ஏ. முகைதீன். விவசாயத்தை பரம்பரைத் தொழிலாக முன்னெடுத்து வரும் இவர், தமது குடும்பத்திற்குச் சொந்தமான 1.25 ஏக்கர் காணியை சடலங்களை அடக்கும் நடவடிக்கைக்காக தமது அனுமதியின்றியே அதிகாரிகள் எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
“காணியை சுவீகரித்த பிறகுதான் இது பற்றி எமக்கு அறிவித்தார்கள். 10 நாட்களில் உங்களுக்கு மாற்றுக் காணி தருவோம் என பிரதேச செயலாளர் எம்மை அழைத்து உறுதியளித்தார். இன்று ஒரு வருடம் கடந்தும் எமக்கு ஒரு துண்டுக்காணியோ வேறு நஷ்டயீடுகளோ கிடைக்கவில்லை” என கவலையுடன் கூறுகிறார் முகைதீன்.
எனினும் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் பிரதேச சமூக நலன் அமைப்புகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாகவே இக்காணிகளை மையவாடிக்காக பெற்றுக்கொண்டதாக பிரதேச சபையின் செயலாளர் எம்மிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் காணியை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குமாறு தாம் மாவட்ட செயலாளர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் பல முறை வேண்டுகோள்விடுத்தும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடுகிறார். இவர்களுக்கு வழங்கவென மாற்றுக் காணிகளை அடையாளப்படுத்தி அது தொடர்பில் உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கொழும்பு, கண்டி பள்ளிவாசல்கள்
சம்மேளனங்களின் பங்களிப்பு
கொவிட் சடலங்களை கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்தும் ஓட்டமாவடிக்கு அனுப்புவதற்கான பணியில் தன்னார்வமாகச் செயற்பட்ட கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஸ்லாம் ஒத்மானைத் தொடர்பு கொண்டு இது பற்றி வினவினோம்.
“கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்துடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வைத்தியசாலைகளில் மரணிக்கும் கொவிட் சடலங்களை ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லும் பணியை ஒருங்கிணைத்தன.
கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் சடலங்கள் நேரடியாகவே ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஏனைய பகுதிகளிலுள்ள சடலங்கள் கொழும்பு, குருநாகல், அநுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இராணுவப் பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன.
கொவிட் சடலங்களை அடக்கும் விடயத்தில் அரசாங்கம் பாரியளவு பொருளாதார உதவிகளை வழங்காவிடினும் இராணுவத்தினர் இதுவிடயத்தில் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என அஸ்லம் ஒத்மான் குறிப்பிடுகிறார். சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பை இராணுவத்தினரே முழுமையாக ஏற்றுச் செயற்பட்டனர். அதற்கான போக்குவரத்து, ஆளணிகளையும் அவர்களே வழங்கினர். அந்த வகையில் இராணுவத்தினரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும்” என்றார்.
எனினும் கொவிட் சடலங்களுக்கான பெட்டிகளை முஸ்லிம் தனவந்தர்களே வழங்கினர். ஒரு பெட்டியை தயாரிப்பதற்கு 4500 ரூபா வரை செலவாகியது. இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட பெட்டிகளை நாம் வழங்கியுள்ளோம் என்றும் அஸ்லம் ஒத்மான் குறிப்பிடுகிறார்.
சென்றுவர முடியாத தூரம்
அதிக போக்குவரத்து செலவு
பல கிலோ மீற்றர் தொலைவில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதால் விரும்பிய நேரங்களில் அடக்கஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனைகளிலோ ஏனைய மத வழிபாடுகளிலோ எம்மால் ஈடுபட முடியாதுள்ளமை கவலைக்குரியது என கொழும்பில் வசிக்கும் மொஹமட் சப்ரான் குறிப்பிடுகிறார். சப்ரானின் தந்தை கொவிட் தொற்றினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமானார். அவரது சடலம் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. “அடக்கம் செய்யப்பட்டதன் பிற்பாடு நாம் குடும்பமாக ஒரு தடவை அங்கு சென்று வந்தோம். ஒரு தடவை சென்று வர சுமார் 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகிறது. எனது தாயார் அடிக்கடி அடக்கஸ்தலத்தை தரிசிக்க விரும்புகிறார். ஆனாலும் நீண்ட தூர பிரயாணம், பொருளாதார செலவுகள் காரணமாக அவரது விருப்பத்தை எம்மால் நிறைவேற்ற முடியாதுள்ளது” என்றும் சப்ரான் குறிப்பிடுகிறார்.
இங்கு கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் பணி முடிவுக்கு வந்துள்ள போதிலும் அந்த பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள 3634 மனிதர்களதும் நினைவுகளைச் சுமந்தவாறு வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்திருக்கிறது மஜ்மா நகர்.-Vidivelli