இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெறப் போவதில்லை
உயர் நீதிமன்றுக்கு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்; ஜூலை 11 இல் மேலதிக பரிசீலனைகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் கைதினையும் தடுப்புக் காவலினையும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப்பெறும் நோக்கம் இல்லை என உயர் நீதிமன்றுக்கு நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது.
அஹ்னாப் ஜஸீமுக்காக உயர் நீதிமன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனக ஈஸ்வரன் இதனை அறிவித்தார். நேற்றுமுன்தினம் (8) இந்த மனு பரிசீலனைக்கு வந்தது. உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, மனுதாரரான அஹ்னாப் ஜஸீம் சார்பில் மன்றில் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, லக்ஷ்மனன் ஜயகுமார் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனக ஈஸ்வரன் ஆஜரானார்.
இதன்போது மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி, அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு முன் வைக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புகளை முன் வைக்காத நிலையில், அவருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனை நோக்கி நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதிபதி பிரியந்த ஜயவர்தன, மனுதாரருக்கு மேல் நீதிமன்றில் பிணை கிடைத்துள்ள நிலையில் இம்மனுவை வாபஸ் பெறும் உத்தேசம் உள்ளதா என வினவினார்.
இதற்கு பதிலளித்த அஹ்னாப் ஜஸீமுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், கடந்த 2021 டிசம்பர் 8 ஆம் திகதி இம்மனு பரிசீலிக்கப்பட்ட போது தமது நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவித்துள்ளதாகவும், வழக்கை மீளப் பெறும் எண்னம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் மனுவை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி பரிசீலிக்க முடிவு செய்து அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தது.- Vidivelli