(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தபோது உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டேன் என கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் இணை அமர்வொன்றில் இணையத்தளம் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அஹ்னாப் ஜெஸீம் இவ்வாறு தெரிவித்தார். அஹ்னாப் ஜெஸீம் மேலும் இங்கு உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது 49 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்வில் எனக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நான் எனது நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
நான் இலங்கையின் கொடிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் (PTA) அதிகம் பாதிப்புக்குள்ளானவன். வஞ்சிக்கப்பட்டவன். இச்சட்டம் நாட்டின் மனித உரிமைகளை பலியெடுக்கிறது. நான் இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டேன். எனது சுதந்திரம் ஜனநாயக உரிமை 19 மாதங்களாக பிடுங்கியெடுக்கப்பட்டது. இத்தனைக்கும் தமிழ் கவிதைகள் அடங்கிய ‘நவரசம்’ என்ற பெயரிலான ஒரு நூலை எழுதி வெளியிட்டமையே இதற்கு காரணம். நான் எனது மாணவர்களுக்கு தீவிரவாதத்தினைப் போதித்தாகவே என்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) என்னை முதலில் கைது செய்தது. ஆரம்பத்தில் என்னை ஒரு வருட காலம் தடுத்து வைத்திருந்தார்கள். அதன் பின்பு என்னை மேலும் 7 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். அங்கே நான் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டேன்.
நான் சிறையில் அவமானப்படுத்தப்பட்டேன். தரக்குறைவாக நடத்தப்பட்டேன். மிருகத்தனமான முறையில் துன்புறுத்தப்பட்டேன். அதிகாரிகள் என்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக பலவந்தப்படுத்தினார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள்.
நான் நிரபராதி, குற்றமற்றவன், எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை என திரும்பத்திரும்ப வாதிட்டேன்.
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்தில் நான் ஓர் முக்கியமானவன். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டது.
இந்த தாக்குதலைக் கண்டித்து நான் கவிதையொன்றினை வெளியிட்டேன். தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த தினமே கவிதையை வெளியிட்டேன்.
இஸ்லாமிய இராச்சியமோ அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ உண்மையான இஸ்லாத்தின் படி இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன்.
எனக்குத் தெரியும், நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இச்சட்டத்தின் கீழ் பொய்யான அல்லது சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் இச்சட்டத்தை நாட்டின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. யுத்த வெற்றிக்குப் பின்பு இலங்கை மக்களை இன ரீதியில் பிளவுபடுத்த முயல்கிறது.
இலங்கை அரசாங்கம் 1988–1990 சிங்கள இளைஞர்களின் போராட்டத்தின் போது இச்சட்டத்தைப் பயன்படுத்தியது. இதேபோன்று 30 வருட தமிழர்களுக்கு எதிரான போரின்போது இச்சட்டத்தை பயன்படுத்தியது.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றே நான் கூறுகிறேன். இச்சட்டம் மாற்றீடு செய்யப்படக்கூடாது.
பயங்கரவாதம் அல்லது அடிப்படைவாதம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமும் அனைவருக்கும் பொருளாதார உரிமைகள் வழங்கப்படுவதன் மூலமே இல்லாமற் செய்யமுடியும்.
அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.
எனது நாட்டின் அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் எங்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அணித்திரளுமாறு கோருகிறேன்.
அனைத்து நிறுவனங்களும் மற்றும் தனியார்களும் இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு மன்றாடிக்கேட்டுக் கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli