உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவொன்றே நடாத்தியதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் கூறியபோதிலும், ஓர் அரசியல் சதித்திட்டத்தின் அடிப்படையிலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் பொறுப்புகூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், குறித்தவொரு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினாலேயே இது முன்னெடுக்கப்பட்டதாக அறியப்பட்டது. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் முழுமையானதொரு அரசியல் சதி என்பது தெரியவந்துள்ளது” என கர்தினால் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாமும் உண்மைகளை கண்டறியுமாறு வலியுறுத்தி வந்த சிவில் அமைப்புக்களும் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக கோரி வந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மைகளை வெளிப்படுத்துமாறும் பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் குரலெழுப்பியவர்களை துன்புறுத்தியமை மற்றும் அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எனவேதான் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில் காணப்படும் உண்மைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் அதன் ஏனைய அங்கத்துவ நாடுகளிடமும் மிகவும் பொறுப்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என கர்தினால் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச அரங்கொன்றில் வைத்து கர்தினால் தெரிவித்துள்ள இந்தக் கருத்தானது, இத் தாக்குதலின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டமொன்று இருந்துள்ளது எனும் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் இதுவரை காலமும் இலங்கை முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை, கறைகளை துடைத்தெறிவதற்கான பலமான ஆதாரமாகவும் அமைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பலாக இருந்த போதிலும் அவர்களுக்குத் தேவையான உதவி, ஒத்தாசைகளை வழங்கியது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேவையைக் கொண்டிருந்த சில அரசியல் சக்திகளே என்பதை கடந்த மூன்று வருடங்களாக பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தக் கும்பலைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு முஸ்லிம் சமூகத்திலிருந்து பல்வேறு முறைப்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினருக்கு முன்வைக்கப்பட்டன. அதேபோன்று உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் இவர்கள் இவ்வாறானதொரு தாக்குதலை நடத்தவிருப்பதை முன்கூட்டியே எதிர்வு கூறியிருந்தன. இருப்பினும் இந்தக் கும்பலைத் தடுத்து நிறுத்தாது தாக்குதல் ஒன்று நடக்கும் வரை விட்டுவைத்தமையானது மிகப் பாரிய அரசியல் சதித்திட்டமே என்பது இப்போது படிப்படியாக வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது.
எனினும் துரதிஷ்டவசமாக, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பாரிய விலையைச் செலுத்த வேண்டி ஏற்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதுடன் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், நிறுவனங்கள் அனைத்தும் தேடுதலுக்குட்படுத்தப்பட்டன. பல முஸ்லிம் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் பற்றிய மிகத் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் சக இனத்தவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்த, இஸ்லாம் குறித்த அச்சம் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும், அரபுக் கல்லூரிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பன போன்ற பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. சில அமைப்புகள் தடை செய்யப்பட்டன. சுமார் 16 பள்ளிவாசல்கள் வரை மூடப்பட்டன. முஸ்லிம் சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க தடங்கல்கள் விதிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வியாபாரத்தலங்கள் மூடப்பட்டன. இன்றும் சுமார் 300 பேர் வரை சிறையிலுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் மூலம் ஒரு முஸ்லிம் சகோதரரின் உயிர் பறிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இவ்வாறு முஸ்லிம் சமூகம் இத் தாக்குதலை முன்னிறுத்தி பாரிய விலை கொடுக்க வேண்டியேற்பட்டது.
இந் நிலையிலேயே இப்போது இதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது, அரசியல் ரீதியாக அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பியவர்களின் சதித்திட்டமே இது என உலகின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயப்படும் உயர் சபையிலேயே பாதிக்கப்பட்ட சமூகத்தின் தலைவர் என்ற வகையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னராவது முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை இனவாத சக்திகள் கைவிட வேண்டும். அத்துடன் ஜெனீவாவில் கர்தினால் வலியுறுத்தியுள்ளதுபோன்று பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தாக்குதலால் எவ்வாறு நேரடியாக இலங்கை கிறிஸ்தவ சமூகம் பாதிக்கப்பட்டதோ அதேபோன்று முஸ்லிம் சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமூகத்திற்கும் நீதி கிடைக்க வேண்டியது அவசியமாகும்.- Vidivelli