லத்தீப் பாரூக்
இந்தக் கட்டுரை 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப் போக்கு உச்சத்தில் இருந்த காலகட்டதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இன்றைய தேவை கருதி அதன் தமிழ் மொழிபெயர்ப்பு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
குதுப் முஹியத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி அல்லது காயிதே ஆஸம் என அழைக்கப்படுபவர் இஸ்லாமிய வரலாற்றில் அறியப்பட்ட மிகப் பெரிய மகானும், கல்விமானும், ஞானியும் ஆவார். மத்திய கிழக்கு, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படும் போற்றப்படும் ஒருவராவார்.
அவரது மிகத் தீவிரமான பக்தி, ஆழமான அறிவு, ஏழ்மையான வாழ்வு முறை, அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவரிடம் காணப்பட்ட உன்னதமான உயர் பண்புகள் காரணமாக மக்கள் அவரை ஒரு மகானாகவும் புனிதராகவும் போற்றினர். இன்னும் பலர் அவரை நிறைந்த பக்தி மிக்கப் புனிதர் என்றும் போற்றினர்.
1976இல் நான் முதற்தடவையாக பக்தாதுக்கு விஜயம் செய்யும் போது அவரைப் பற்றி பல விடயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. நான் பக்தாத்தில் முதலாவதாக விஜயம் செய்த இடம் அவரது நினைவாலயம் அமைந்துள்ள பள்ளிவாசலாகும்.
ஈரானின் தென் பகுதியில் கஸ்பியன் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள நைப் என்ற கிராமத்தில் 1077 மார்ச் 18இல் பெரும் பக்திமயமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான் குதுப் முஹியத்தீன். அவரது சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார். இள வயதில் தனது தாயாரின் அனுமதியோடு அறிவைத் தேடி அவர் பக்தாத் நோக்கிப் பயணமானார். அந்தக் காலப்பகுதியில் உலகில் அறிவின் கேந்திர ஸ்தானமாகத் திகழ்ந்த இடம் பக்தாத் நகரம் மட்டுமே. 1166ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 91ஆவது வயதில் ஒரு மாலை வேளையில் அவர் மரணத்தைத் தழுவினார். பக்தாத்தின் றெஸாபா பகுதியில் உள்ள (டைக்ரீஸ் நதியின் கிழக்குக் கரை) அவரது கல்விக் கூடமான பாபுல் ஷேக் மத்ரஸாவில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது வாழ்நாளில் சுமார் 13 ஆண்டுகளாக அவர் மாயமாக மறைந்து இருந்ததாக இலட்சக் கணக்கான மக்களால் நம்பப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் தான் அவர் கூரகல அல்லது ஜெய்லானியில் (இலங்கையின் பலாங்கொடையில் இருந்து 15 மைல்களுக்கு அப்பால்) தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் உள்ள ஒரு மலைப்பாங்கான அடர்த்தியான காட்டுப் பிரதேசமாகும்.
1960களில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த முக்கிய பத்திரிகையாளரான எம்.எம்.தௌபீக் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் குதுப் முஹியத்தீன் அவர்கள் பாவா ஆதம் (அலை) மலைக்கு (இன்றைய சிவனொளிபாத மலை) விஜயம் செய்த பின் தியானம் செய்வதற்காக இந்தப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். மரிக்கார் அவர்களின் மூத்த புதல்வரும் பலாங்கொடை இஸ்லாமியக் கழகத்தின் தலைவருமாக இருந்த எம்.எல்.எம்.அபுசாலி இதுபற்றிக் குறிப்பிடுகையில் மலைப்பாங்கான இந்தப் பகுதியில் ஒரு குகை உள்ளது. இதன் நிலக்கீழ் தளம் 400 யார் நீளமானது. அதன் பிறகு ஒரு திடீர் வீழ்ச்சி காணப்படுகின்றது. அதைப் பற்றிப் பேசுவது கூட கடினமானது. இந்தக் குகை பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அங்கே வெளவால்கள் தாராளமாக உள்ளன. பாம்புகளும் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்தக் குகைக்குள் இருந்து யாரும் இன்னும் வெளியே வந்து இதன் உண்மை நிலையைக் கூறியது இல்லை. ஆனால் இந்த வழியானது கற்பாறையின் அடியில் முடிவடைகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. இது பின்தென்ன மலைத்தொடருக்கு ஆயிரக்கணக்கான அடிகள் கீழே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்தர் ஜெய்லானி மலைக்குகை பள்ளிவாசலின் தோற்றம்
அபுசாலி 1977 முதல் 1994 வரை பலாங்கொடை ஆசனத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தவர். இந்தப் பிரதேசத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க றத்வத்தை குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகா றத்வத்தையை தோல்வியுறச் செய்து பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவோடு தெரிவு செய்யப்பட்டவரே அபுசாலி. தப்தர் ஜெய்லானி மலைக்குகை பள்ளிவாசலின் வரலாறு பற்றி அவர் கூறுகையில் மகான் குதுப் முஹியத்தீன் கூரகலையில் இந்தப் பகுதியில் தியானம் செய்துள்ளார். இந்தப் பகுதிக்கான அவரின் விஜயம், அது ஒரு புனிதப் பிரதேசமாக இந்தப் பகுதியில் ஏற்படுத்திய தாக்கம் என்பன பற்றி பல கதைகள் உள்ளன. கி.மு 300ஆம் ஆண்டளவில் அரபிகள் மத்தியில் இலங்கை நன்கு அறியப்பட்ட ஒரு நாடாக இருந்துள்ளது என்பது உண்மையெனில் பாவா ஆதம் மலையும் மத்திய கிழக்கில் இருந்து பயணங்களை மேற்கொள்ளும் அரபிகள் மத்தியில் அந்தக் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதும் உண்மையேயாகும். அன்றிலிருந்தே அரபிகளின் பல ஆக்கங்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேலும் கூறி உள்ளார்.
முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி உலகிற்கு முதலாவதாக அனுப்பப்பட்ட மனிதன் ஆதம் ஆவார். அவர் தான் முதலாவது முஸ்லிம் ஆவார். இறைவனின் முதலாவது இறை தூதரும் அவரே. சஹீஹுல் புஹாரி (ஹதீஸ் கிரந்தம்) யில் உள்ள சில ஹதீஸ்களின் படியும் (முஹம்மது நபியின் பாரம்பரியம் மற்றும் கூற்றுகள்) குர்ஆனுக்குரிய விளக்க உரையான தப்ஸீர் பைஸவி மற்றும் தப்ஸீர் கஸின் என்பனவற்றின் படியும் ஆதம் செரண்டிப் எனும் பூமியில் “நூத்” எனும் மலையில் இறக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செரண்டிப் என்ற பூமிதான் இலங்கை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
ஆதம் மலையின் புனிதத்துவம் பற்றி பல குறிப்புக்கள் உள்ளன. சேர்.டயிள்யூ ஒஸ்லி என்பவர் தனது பிரயாண அனுபவங்கள் பற்றி எழுதி உள்ள ‘பெர்ஹான் கெட்டேயா’ என்ற ஒரு கையெழுத்துக் குறிப்பில் ஆதம் சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்ட கொண்டாட்டத்துக்குரிய மலை தான் செரண்டிப் எனக் குறிப்பிடப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறேனும் ஆதம் மலைக்கு மொரோக்கோவில் இருந்து விஜயம் செய்த மிகப் பிரபலமான அரபு பயணியாக இப்னு பதூதா காணப்படுகின்றார். இவர் 1344இல் இங்கு விஜயம் செய்துள்ளார். தன்னுடைய ஆக்கத்தில் ஆதம் மலைக்கு செல்லும் வழியில் பிரபலமான பல முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களைத் தான் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மலை உச்சிக்கு செல்லும் வழிகளில் அந்த நாட்களில் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடங்களும் காணப்படுகின்றன. இங்கு ஒரு முஸ்லிம் மகான் வாழ்ந்தமைக்கான தடயங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேன்செண்டன் என்பவர் தனது சோனகர் என்ற நூலில் இந்தப் பகுதிக்கு காதர் அல்லது கித்ர் என்ற பெயருள்ள ஒரு முஸ்லிம் வருகை தந்துள்ளார். அவரது வருகையால் தான் இந்த இடம் புனிதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலில் போர்த்துக்கேயர்களும் பின்னர் டச்சுக் காரர்களும்
இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்த பின் தப்தர்
ஜெய்லானி பெரும்பாலும் கைவிடப்பட்ட ஒரு பிரதேசமானது. முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதம் மலைக்கு செல்லப் பயன்படுத்திய இரத்தினபுரி கூரகல பாதையைக் கைவிட்டமை இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் 1850 வரை தப்தர் ஜெய்லானி என்ற பெயரில் மட்டுமே இந்தப் பகுதி அறியப்பட்டு வந்தது.
1344இல் ஆதம் மலைக்கான இப்னு பதூதாவின் பயணம் பற்றிய ஒரு தேச வரைபடத்தில் கூரகல ஊடான வழி காட்டப்பட்டுள்ளது. இதை டெனிஸ் பெர்ணான்டோ என்பவர் மீள் பதிப்பு செய்துள்ளதாக அபுசாலி எழுதியுள்ள நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் மிகக் கடுமையான பயணங்களை மேற்கொண்டு அரபிகளும் ஏனைய முஸ்லிம்களும் இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய இவை தான் காரணங்களாக உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூரகல ஊடான வழியைப் பின்பற்றி குதுப் முஹியத்தீனும் ஆதம் மலைக்கு சென்றுள்ளார் என்று நம்பப்படுகின்றது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வுகளின் பின் ஐக்கிய இராச்சியத்தின் ஹாவார்ட் பல்கலைக்கழக ஆய்வாளரும் கல்விமானுமாகிய சுசான் ஸ்கொம்பெர்க் என்பவர் அபுசாலியியிடம் தெரிவித்துள்ள தகவலில் இலங்கையில் ஆதம் மலை மற்றும் தப்தர் ஜெய்லானி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்த பின் மகான் குதுப் முஹியத்தீன் தென் இந்தியாவின் கீழ்க்கரையில் 40 தினங்களை தியானத்தில் கழித்துள்ளார்.
கூரகல தப்தர் ஜெய்லானி மலைக் குகைக்கு அவர் மேற்கொண்ட வரலாற்று ரீதியான விஜயம் பெரும்பாலும் இவரது இந்திய உப கண்டத்துக்கான விஜயத்தோடு தொடர்புபட்டுள்ளது. ஆதம் மலைக்கு அவர் விஜயம் செய்த பின் கூரகலயின் முனையில் அவர் தியானம் இருக்கும் நோக்கில் எவ்வாறு தஞ்சம் அடைந்தார் என்பது பற்றி பல்வேறு வகையான கதைகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன.
பலாங்கொடை பீட பூமியின் முனையில் காணப்படும் இரண்டு கற்பாறை வடிவங்கள் தான் கூரகலையும், ஹிட்டுவங்கலையும் ஆகும், இவை தான் பொதுவாக தப்தர் ஜெய்லானி என அழைக்கப்படுகின்றன. இரத்தினபுரிக்கும் ஆதம் மலைக்கும் செல்லும் பண்டைய வீதியின் மலைத் தொடராக இது அமைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்களில் அரபு மொழி வடிவமும் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இங்குள்ள கல்லறைகளும் புராணக் கதைகளும் குதுப் முஹியத்தீன் தனது தியான வாழ்வில் ஒரு பகுதியை கூரகல ஜெய்லானியில் கழித்துள்ளார் என்பதை உறுதியாக நம்ப வைக்கின்றன.
சதுரா சங்காரம் என்ற நூலில் இவரது விஜயம் பற்றி விரிவான விடயங்கள் பல சொல்லப்பட்டுள்ளன. முதலில் அவர் ஆதம் மலைக்கு ஏறி நபி ஆதமுக்கு தனது கௌரவத்தை செலுத்தி உள்ளார். பின்னர் அவர் தப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்து அங்கு 12 ஆண்டுகள் நோன்பு நோற்றல் மற்றும் தியானம் என்பனவற்றில் ஈடுபட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியின் அரசாங்க அதிபராக இருந்த ஆர்.எம்.தாய்னி 1914இல் தனது உத்தியோகபூர்வ டயரியில் “குறிப்பிட்ட இந்த மலை முஹம்மதியர்கள் மத்தியில் தஸ்தூர் அல்லது தக்மா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது என்பதை நான் அறிவேன். குதுப் முஹியத்தீன் சுவனத்தை நோக்கிய பாதையில் வந்துள்ளார். ஒருநாள் அவர் இந்தக் கற்பாறையில் தனது கையை வைத்த போது அது திறந்து கொண்டது. அதன் துவாரம் வழியாக அவர் உள்ளே சென்றார். பின்னர் அந்த கற்பாறை மூடிக் கொண்டது. அதன் பிறகு அவரை யாரும் காணவில்லை. இவ்வாறு தான் அந்த மலைப் பகுதிக்கு செல்லும் யாத்திரிகர்கள் தமது கை அடையாளத்தை அதில் பதித்து வருகின்றனர்” என்று எழுதி உள்ளார்.
குதுப் முஹியத்தீனுக்கு கூரகலயுடன் உள்ள தொடர்புகள் பற்றிய ஏனைய ஆதாரங்களில் 1922இல் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்காக புவி மேட்டுப் பகுதியில் இருந்து பத்து அடிகள் பள்ளத்துக்கு தோண்டப்பட்ட போது ‘முஹியத்தீனின் சீடர்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கி.பி. 1322 காலப்பகுதிக்குரிய கற்பாறை காணப்பட்டது. இது இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகைக்கு நீண்ட நாட்களுக்கு முன் மரணம் அடைந்த அவரது சீடர் ஒருவரின் அடக்கஸ்தலமாகும். போர்த்துக்கேயரின் வருகை உடன்தான் இலங்கையில் அராபியர்களின் இலாபகரமான வர்த்தகத்துக்கும், கூரகல வீதியின் பயன்பாட்டுக்கும் முடிவு கட்டப்பட்டது.
கி.பி.1322இல், குதுப் முஹியத்தீன் மரணம் அடைந்து 1543 வருடங்களின் பின் ஒரு கல்லறையில் அவர் பற்றிய எழுத்துக்களைப் பதிப்பதாயின் கூரகலக்கும் அந்த மகானுக்கும் இடையில் நிச்சயமாக தொடர்புகள் இருந்திருக்க வேண்டும்.
1922இல் ஹிட்டுவன்கல மலையின் கீழ் ஒரு சிறிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்தப்பள்ளிவாசலுக்கு கூரை தேவைப்படவில்லை. காரணம் இந்தக் கற்பாறை ஒரு நாகத்தின் வடிவில் அடர்த்தியாக அமைந்து தேவையான நிழலையும் மழையில் இருந்து பாதுகாப்பையும் வழங்கக் கூடியதாக அமைந்திருந்தது. அங்கிருந்து முஸ்லிம்கள் தொழுகைக்காக நோக்கும் புனித மக்காவில் உள்ள கஃபாவின் திசையை நோக்கியதாக அரபியில் எழுதப்பட்ட பல வசனங்கள் காணப்படுகின்றன. அந்த கற்பாறைக்குள் தொழுகைக்கான திசையை உறுதி செய்யும் வகையில் இவை அமைந்துள்ளன.
தர்வேஷ் முஹியத்தீன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 715ஆம் ஆண்டு
காலப்பகுதியின் கல்வெட்டு
அபுசாலி எழுதியுள்ள நூலின் படி சிலர் 1960 களில் கூரகல பௌத்த துறவிகளும் தியானத்தில் ஈடுபட்ட ஒரு இடம் என்று பௌத்தர்கள் சிலர் உரிமை கோரத் தொடங்கினர். இதற்கான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லாத போதிலும் கூட இந்த உரிமை கோரலோடு முரண்படாமல் முஸ்லிம்கள் முன்வைத்த ஏனைய கருத்துக்களையும் ஓரம் கட்ட முடியாது. மத்திய கிழக்குடனான வர்த்தகத் தொடர்பு ஆதம் மலையுடன் பல தொடர்புகளைக் கொண்டுள்ளது. பாதையுடனும் இது தொடர்புபட்டுள்ளது. அரபு எழுத்துக்கள், கல்வெட்டுக்கள், கல்லறை என்பன வரலாற்றோடு தொடர்புடைய உண்மைகள். வரலாற்றின் ஆரம்ப காலம் முதலே இலங்கைக்கும் மத்திய கிழக்குக்கும் இடையிலான உறவுகளை இவை பறைசாற்றி நிற்கின்றன.
1901 மற்றும் 1928ல் மற்றும் அதற்கு முந்திய காலங்களில் அச்சிடப்பட்ட தேச வரைபடங்கள் கூரகலயை ‘முஹம்மதிய வழிபாட்டிடம்’ என்று அடையாளப் படுத்தி உள்ளன. ஆனால் சுதந்திரத்துக்குப் பின் ஒரு மைலுக்கு ஒரு அங்குலம் என்ற ரீதியில் திருத்தி அமைக்கப்பட்ட தேச வரைபடத்தில் இந்த அடையாளம் 1971இல் நீக்கப்பட்டுள்ளது. 1971இல் மீளமைக்கப்பட்ட இந்த தேச வரைபடத்தில் குறிப்பிட்ட இடம் இரண்டாம் நூற்றாண்டுக்கு சொந்தமான ஒரு பௌத்த மடாலயம் என்று அடையாளம் இடப்பட்டுள்ளது. (1972இல் தம்மிடம் உள்ள ஒரே ஆதாரமாக தொல்பொருள் திணைக்களத்தால் காட்ட முடிந்தது இங்கு அவர்களால் வைக்கப்பட்ட ஒரெயொரு அறிவித்தல் பலகை மட்டுமே).
முஸ்லிம்கள் தமக்கு முக்கியமானதாகக் கருதிய ஒரு இடத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த, இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இனவாத பிரிவினர் திட்டமிட்டு வந்துள்ளனர் என்பதை இது மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
முதலில் போர்த்துக்கேயர்களும் பின்னர் டச்சுக்காரர்களும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்த பின் தப்தர் ஜெய்லானி பெரும்பாலும் கைவிடப்பட்ட ஒரு பிரதேசமானது. முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதம் மலைக்கு செல்லப் பயன்படுத்திய இரத்தினபுரி கூரகல பாதையைக் கைவிட்டமை இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் 1850 வரை தப்தர் ஜெய்லானி என்ற பெயரில் மட்டுமே இந்தப் பகுதி அறியப்பட்டு வந்தது.
சமய ரீதியாக முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான இந்த தப்தர் ஜெய்லானி பற்றி இரத்தினபுரி கச்சேரியில் உள்ள அரச அதிபர்களின் டயரிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எச். மூயார்ட்ஸ், 13 ஜனவரி 1857ல், எச்.வேஸ் 20 மார்ச் 1887ல், ஆர்.பி.ஹெல்லிங்ஸ் 12 பெப்ரவரி 1910ல், ஜி.குக்ஸன் 12 ஜனவரி 1911இல், ஆர்.என்.தாய்னே 26 மார்ச் 1914இல், ஜி.எச். கொலின்ஸ் 1922 மற்றும் 1929இல், என்.ஜே. லடிங்டன் 1935இல் தத்தமது டயரிகளில் இது பற்றிக் குறிப்புக்களை எழுதி உள்ளனர்.
தப்தர் ஜெய்லானியை காப்பாற்றும் பொறுப்பை முழுமையாக அந்தப் பள்ளிவாசலின் பணிப்பாளர் சபையினரே சுமந்துள்ளனர். வக்பு சட்டம் அமுலுக்கு வந்த போது பள்ளிவாசலும் சந்நிதானமும் அந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த சட்டத்தின் நியதிகளுக்கு இசைவாக பள்ளிவாசல் நிர்வாகமும் இடம்பெற்று வந்தது.
1940களில் காணித் தீர்வு அதிகாரிகள் பலாங்கொடைப் பிரதேசத்தில் காணித் தீர்வுகளைத் தொடங்கினர். அப்போது பலாங்கொடையில் பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி தன்ஜன்தென்ன என்ற இடத்தில் இரண்டு துண்டு காணிகளுக்கு முஸ்லிம்கள் உரிமை கோரினர். இது சம்பந்தமான சமர்ப்பணங்கள் இடம்பெற்ற பின் காணித் தீர்வு அதிகாரிகள் நான்கு ஏக்கர் காணியை முஸ்லிம்களுக்கு ஒதுக்க இணங்கினர். அன்றைய நில அளவையாளர் கொகுலன்தர என்பவருக்கு இது சம்பந்தமான உத்தரவு வழங்கப்பட்டது. 1953ல் இங்கு நில அளவை இடம்பெற்றது.
இவ்வாறுதான் முஸ்லிம்களின் உரிமை கோரலை அன்றைய அரசு ஏற்றுக் கொண்டது. 1958 பெப்ரவரி 18ல் அரசாங்க அதிபர் தப்தர் ஜெய்லானியின் வருடாந்த கொண்டாட்டத்தை யாத்திரிகள் சட்டத்தின் கீழ் கொண்டு வருமாறு பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அறிவித்தனர். எவ்வாறேனும் அதன் பிறகு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஏற்கனவே வழங்குவதாக ஒத்துக் கொண்ட நான்கு ஏக்கர் காணியை முன்னுரிமை குத்தகை அடிப்படையில் வழங்குவது என அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
இதனிடையே இந்த விடயத்தில் அக்கறை கொண்ட சில சக்திகள் மீண்டும் கூரகல பகுதி பௌத்த சமய முக்கியத்துவம் மிக்கது என உரிமை கோரினர். தொல்பொருள் திணைக்களம் தப்தர் ஜெய்லானியில் ஒரு புதிய பௌத்த கோபுரத்தை கட்டத் தொடங்கியது. கலாசார அமைச்சின் செயலாளராக நிஸ்ஸங்க விஜேரத்ன பதவி வகித்தபோது இது இடம்பெற்றது. 1971இல் இந்த பௌத்த கோபுரம் இரண்டடி உயரத்துக்கு கட்டப்பட்டது. அதன் பின் அவர்கள் இது 2000 ஆண்டுகள் பழமையானது என உரிமை கோரத் தொடங்கினர்.- Vidivelli