மூலம்: திஸரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்
அஸ்கிரிய பீடத்தின் உதவித் தலைவர் வெண்டருவே உபாலி தேரர் ஹிட்லராக மாறியேனும் நாட்டை கட்டியெழுப்புமாறு கோட்டாபய ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறினார். இந்தப் போதனை நடைபெற்றது 2018 இல் ஆகும். மனித வரலாற்றில் மிகப் பயங்கரமான மனிதப் படுகொலையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுமாறு போதனை செய்வது பௌத்த தத்துவத்துக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதை உபாலி தேரர் தான் விளக்க வேண்டும்.
உபாலி தேரரின் போதனைக்கு அரசியல் சமூகத்திலிருந்து துலங்கல் கிடைக்காவிட்டாலும் இணையத்தளத்தில் அத்தகைய பதில்கள் காணப்பட்டன. அத்தகைய துலங்கல்கள் அனேகமாக நகைச்சுவை கலந்த கலாய்ப்புகளாகவே இருந்தன. அந்த ஜோக்குகளின் சாரமாக அமைந்த விடயம் யாதெனில் உபாலி தேரர் லீக்குவான் யூ வையும் ஹிட்லரையும் போட்டுக் குழப்பிக் கொண்டார் என்பதாகும்.
ஹிட்லர் சோதனை மூலமும் அதற்கு சமூகத்தில் இருந்து கிடைத்த அசமந்தமான துலங்களில் இருந்தும் தெரியவருவது யாதெனில் ஹிட்லரின் நாசிசம் பற்றிய எமது விளங்காமையாகும். ஹிட்லரின் நோக்கின் படி மனித சமூகம் உயர் மானிடர் (Übermensch) கீழ் மானிடர் (Untermensch) என வகைப்படுத்தப்பட்டது. பூமியின் உண்மையான உரித்தாளிகள் உயர் மானிடரே. கீழ்மானிடர் வகையில் சேர்வோரை நேரடியாக அல்லது மறைமுகமாகக் கொலை செய்ய வேண்டும். அப்படியின்றேல் நிரந்தர அடிமைகளாக மாற்றவேண்டும் யூதர்கள், ரோமர்கள் (Gypsies) மட்டுமன்றி ஸ்லோவியர்களான ஐரோப்பியர்களும் கீழ் மானிடர்களிலேயே சேர்க்கப்பட்டனர். ஹிட்லரின் கோட்பாட்டின் படி கறுப்பு மற்றும் பொது நிற மக்களும் கீழ்நிலை மானிடராகவே மதிக்கப்படுவதனால் அவர்களையும் கொலை செய்யச் சிபாரிசு செய்கிறார் ஹிட்லர். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லா; வெற்றி பெற்றிருப்பின் இலங்கையோ சிங்களவரோ புத்த மதமோ இப்பூமியில் நிலைத்திருக்காது.
ஹிட்லர் மற்றும் நாசிசம் தொடர்பான மற்றுமொரு முக்கிய விடயம் யாதெனில் அவர் மனித வரலாற்றில் தோன்றிய மிக மோசமான ஒரு ஆட்சியாளர் என்பதாகும். ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் ஒரு ஆட்சியை (thousand year Reich) உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அவர் வாய்ச் சவால் விட்டார். தனது பலம் பற்றி அவரிடம் இருந்த கருத்தாவது இரண்டாம் உலக யுத்தத்தில் வென்ற பின்னர் உலகத் தலைநகராக மாறப்போகும் பர்லின் நகரத்தின் வடிவமைப்பு பற்றிய படங்கiயும் திட்டங்களையும் கூட அவர் வெளியிட்டிருந்தார்.
ஹிட்லரின் 1000 வருட ஆட்சிக் கனவு 12 வருடங்கள் மட்டுமே நீடித்திருந்தது. அவர் பதவிக்கு வரும்போது பொருளாதாரச் சீரழிவில் இருந்து ஓரளவு ஜேர்மனி; மீண்டு வரும் காலமாக இருந்தது. அவரின் ஆட்சி முடிவில் ஜேர்மனி சின்னாபின்னப்பட்டு நான்கு இராணுவங்களின் கீழ் ஆளப்படும் இரண்டு துண்டுகளாக மாறியது. ஹிட்லரின் 12 வருட ஆட்சியால் ஜேர்மனிக்குக் கிடைத்த நன்மை என்று எதுவும் கிடையாது. எஞ்சியதெல்லாம் பேரழிவும் மரணமும் தான். சுதந்திரம், தன்னாதிக்கம் மற்றும் நாட்டின் எல்லைகள் கிழிக்கப்பட்டு அபகீர்த்திக்கு உட்பட்டது தான் மிச்சம். ஹிட்லராக வர முயற்சிக்கும் ஒருவருக்கு ஜேர்மனியில் என்றால் மக்கள் வாக்களிப்பு மூலம் பதவிக்கு வர முடியாது.
ஹிட்லரின் போதனையின் அடிப்படை அறியாமையாகும். ஹிட்லர் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவர் அல்ல. ஒரு நாட்டை அழித்தொழித்த தலைவர். ஹிட்லர் ஒரு நாட்டை உலக சமூகத்தில் உயர்த்தி வைத்த, பலப்படுத்திய ஒரு தலைவர் அல்ல, நாட்டை நிர்மூலமாக்கி அந்நிய நாடுகளுக்கு அடிமைப்படுத்திய ஒரு தலைவர். ஹிட்லர் சுபீட்சத்தின் அல்லது அபிவிருத்தியின் சின்னமல்ல, மாறாக மரணத்தினதும், அழிவினதும் சின்னம். ஒரு தலைவர் ஹிட்லரை எடுத்துக்காட்டாக கொண்டால் அவரை முப்பத்து மூன்று கோடித் தேவர்களாலும் கூட காப்பாற்ற முடியாமற் போகும்.
பிரபல எழுத்தாளர் சுகதபால டி சில்வா எழுதிய ‘ஹிட்லர் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்’ என்ற தலைப்பிலான சிங்கள நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். அனர்த்தத்தை உருவாக்கிய நிபுணர் ஹிட்லர். அவருக்கு புதிதாக நினைவுச் சின்னங்கள் எதுவும் அமைக்கத் தேவையில்லை. நாலா பக்கங்களிலும் பார்த்தால் அனைத்து இடங்களிலும் அவர் பற்றிய அழிவின் நினைவுச்சின்னங்கள் தான் காணப்படுகின்றன.
புத்தரின் வழிகாட்டலின் மையம் ஞானமாகும். நிர்வாண நிலையை விளங்கிக் கொள்ளுதல் என்பதன் மூலம் அதுவே வலியுறுத்தப்படுகிறது. ஹிட்லரின் நினைவுச் சமாதி அமைக்கும் அத்திவாரம், எதிர்ப்பு மோகம் புரிந்து கொள்ளாமை என்பனவாகும். இரட்சிப்பவர் ஒருவர் பற்றிய கனவில் மிதந்த 69 லட்சம் இலங்கையர் (அதில் பெரும்பான்மையினர் சிங்கள – பௌத்தர்) 2019இல் ஞானத்துடன்தான் வாக்குரிமையைப் பயன்படுத்தினர் என்பதைவிட பக்தியினால் என்று கூறலாம். புரிதலைவிட நம்பிக்கை கொண்டு உச்சத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மனப்பாங்கிலாகும். இந்த மனப்பாங்கை ராஜபக்ச எதிர்ப்பு முகாமினர் கையில் எடுத்துக்கொண்டால் தலைவர்களின் பெயர்கள் மட்டும் வேறுபடும் ஒரு பயங்கர எதிர்காலம் உருவாகலாம்.
காரண காரியம் முதல் மூடநம்பிக்கை வரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு தடவை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஒரு விரிவுரை நடத்தினார். பலத்த எதிர்ப்பலைகள் கிளம்பிய அந்த உரையைப் பதிவிட ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர் அந்த உரையின் போது tool kit போன்ற பிரயோகங்களை அதிகமாக பயன்படுத்தினார். (கருவி தொகுதி) புதிய ஒரு tool kit ஐ பயன்படுத்துமாறு அவர் எச்சரிக்கும் பாணியில் குறிப்பிட்டார். எந்த வகையான கருவிகள் அத்தொகுதியில் இருக்க வேண்டும் என அங்கிருந்த எந்த அதிகாரிகளும் கேள்வி எழுப்பவில்லை.
தாம் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர் என்று 2008 இல் அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகப் போட்டியிட்ட சாரா பாலின் குறிப்பிட்டபோது இறுதியாக வாசித்த புத்தகம் அல்லது பத்திரிகை எது என ஊடகவியலாளர் கேட்ட சமயம் விடை சொல்ல முடியாமல் திருதிருவென விழித்த காட்சி கமராவில் பதிவாகி உலகமெங்கும் ஒளிபரப்பாகியது. டொனால்ட் ட்ரம்ப் அரசியலில் இறங்கியவுடன் தமது கிறிஸ்தவ பக்தி பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். பைபிளில் நீங்கள் அதிகம் விரும்பும் பகுதி எது என ஒரு ஊடகவியாளர் ட்ரம்பிடம் கேட்டார். அதற்கு விடை தெரியாமல் தவிப்பது உலகெங்கும் ஊடகங்களில் பரவியது.
அரசியல் தலைமையிடம் கேள்வி கேட்கும் வழக்கம் எமது நாடுகளில் இல்லை. விஷேசமாக தலைவர்கள் தங்களைப் பற்றிக் கூறும் விடயங்கள் பற்றிக் கேள்வி கேட்கும் நிலை இல்லை. பெரும் பணக்காரர்களுக்கு, அதிகாரிகளுக்கு, அமைச்சர்களுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கத்திலிருந்து தெரிய வருவதும் அதுபோன்றதொன்றே. இன்று ஒரு மனநோய் போன்று பரவிவரும் இந்தச் செய்கைக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த ஒருவர்தான் மரணித்த அமைச்சர் மங்கள சமரவீர. அவரின் அந்த துணிச்சலான பேச்சை ஆரம்பமாகக் கொண்டு கலந்துரையாட எமது தலைமைகள் அரசியல்வாதிகள் தயாராக இல்லை. தலைமைத்துவ வழிபாட்டில் அவர்களுக்கிருக்கின்ற ஆசையையே இது காட்டுவதாகக் கூறலாம்.
தலைமைத்துவ வழிபாடு இலங்கை அரசியலில் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் வெகுவாகப் பிரபல்யமடைந்துள்ளது. குறிப்பாக பாடசாலை மாணவர்களும் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து வணங்கும் மோசமான செய்கை 1980களின் பின்னர் தான் ஏற்பட்டுள்ளது. 90ஆவது தசாப்தத்தின் போது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலில் விழுந்து வணங்கும் சில அரசியல்வாதிகளின் புகைப்படம் வெளியான போது அது ஐக்கிய தேசிய கட்சியின் கேலிக்கு உட்பட்டது.
முனிதாச குமாரதுங்க என்ற பழம் பெரும் எழுத்தாளர் தான் நடத்திய லக்மிணி பஹன என்ற பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமொன்றில் பிக்கு சமூகத்தின் தவறுகளை விமர்சித்த போது யாரும் அவருடைய பத்திரிகை அலுவலகத்துக்கு தீ வைக்கவில்லை. எப்ரஹாம் கோவூர், ஈ.டப்லியூ அதிகாரம் போன்ற பகுத்தறிவுவாதிகள் தீ மிதிப்பு என்பது ஏமாற்று என்று சாதித்த போதும் அன்றைய சமூகத்தில் மதிக்கப்பட்டனர். எவ்வித பிரச்சினைகளுமின்றி பொலிசுக்கு போகாமல் நீதிமன்றப் படிகளில் ஏறாமல் அவர்களின் பணிகளைச் செய்ய முடிந்தது.
நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் பக்திப் பிரவாகமெதுவுமின்றி கால்கள் சுடுபடாமல், தீமிதிப்பில் ஈடுபட்டனர். இதில் பெண்களும் ஈடுபட்டனர். அன்றைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். இந்த அளவு திறந்த மனதுடன் கூடிய ஒரு பகுத்தறிவு சமூகத்தில் வைரஸைக் கொல்வதற்கு ஆறுகளில் முட்டிகளை இறக்கும் நிலையும் பிரித்நீரை ஆறுகளில் ஊற்றும் சம்பவங்களும் காளி அம்மாவின் அருள் பெற்ற பாணியை கொவிட்-19 நோயாளர்களுக்கு கொடுக்கும் நிலையும் உருவானது எப்படி என்பது ஆச்சரியமாக உள்ளது.
அதிமேதகு வணக்கத்துக்குரிய ஜனாதிபதி முறை
ஜே.ஆர் ஜயவர்த்தன பிற்போக்கான சமூக கருத்துக்களுக்கு தலை சாய்க்காத ஒரு தலைவர். ஆயினும் பிற்போக்கு அரசியல் சிந்தனைகளுக்கு அவரின் நோக்கில் இடமிருந்தது. ஜனாதிபதிப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் போது இலங்கையின் வரலாறு தொடர்பான ஒரு ஆவணத்தைத் தயார் செய்து கொண்டு சென்றார். இலங்கையின் அரச பரம்பரையும் அதில் அடங்கியிருந்து. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை அடுத்து இடம் பெற்றிருந்த பெயர் ஜே.ஆர் ஜயவர்த்தன என்பதாகும்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ் மன்னர் பரம்பரையில் தனது பெயரையும் சேர்த்தால் அந்த நாட்டில் அவருக்கு என்ன நடக்கும்? சார்பளவில் சர்வாதிகாரியொருவரை உருவாக்க இடம் வைக்காத ஜனாதிபதி முறை காணப்படும் நாடுகளுக்கிடையில் வரலாற்று ரீதியான ஓர் ஒற்றுமையுண்டு. ஒன்றில் மன்னராட்சி பரம்பரையற்ற அமெரிக்கா போன்ற நாடுகளாகும். பிரான்ஸ் நாட்டுக்கு ஒரு மன்னர் பரம்பரை காணப்படினும் மூன்று தடவைகள் மக்கள் புரட்சி மூலம் மன்னர்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாறும் அதற்குண்டு. 1789 இன் பிரான்சியப் புரட்சியின் பின்னர் 16 ஆம் லூயி மன்னரும் இராணி மாரி அன்டனியும் கொலை செய்யப்பட்டனர். 1830 இல் நடந்த புரட்சியின் போது 10 ஆம் சாள்ஸ் மன்னரும் 1848 புரட்சியில் லூயி பிலிப் மன்னரும் பதவி நீக்கப்பட்டார்கள். 1845 புரட்சியின் போது பரிஸ் நகரவாசிகள் சிம்மாசனத்தை வீதி வழியாக இழுத்துச் சென்று தீவைத்துக் கொளுத்தியமை குறிப்பிடத்தக்க சம்பவமாகும். ஜனாதிபதி முறை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லாத நாடுகளில் ஜனாதிபதியை மன்னராகச் சித்தரிக்கும் ஒரு வரலாறு இருந்ததில்லை.
எமது நாட்டுக்கு அப்படியொரு வரலாறு இல்லை. எமக்கு இருப்பது அரசரின் காலில் விழுந்து வணங்கிய வரலாறாகும். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் சிம்மாசனத்தை இழக்கக் காரணமாக இருந்த பிரபுக்கள் அதற்குப் பதிலாக இலங்கையை பிரித்தானிய கிரீடத்தின் கீழ் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அப்படியொரு வரலாற்றைக் கொண்ட இலங்கை ஜனாதிபதியை மன்னர் ஸ்தானத்துக்கு உயர்த்துவதும், ஜனாதிபதி கதிரையில் இருக்கும் வரை அரசன் அல்லது அரசியாக மதிப்பதும் ஆச்சரியமானதன்று.
2015 இல் பொது வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி முறையை ஒழிக்கும் பொருத்தத்தில் களமிறங்கியவர். சில நாட்களில் அதனை அவர் மறந்து விட்டார். அவருக்குப்பின் அப்பதவியை அடையக் கண் வைத்திருந்தவர்களுக்கும் ஜனாதிபதி முறையை ஒழிப்பது ஒரு பொருட்டாகப் படவில்லை. ஜனாதிபதியின் வருடப் பூர்த்தியின் போது அவரை மகா பராக்கிரமபாகு மன்னருடன் ஒப்பிட்ட ஒரு ஆவணப்படத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தயாரித்திருந்தது. அது இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட போது மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாக உத்தியோகபூர்வமாக அதனை வெளியிடாதிருக்க தீர்மானித்து விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது போன்ற ஒரு வீடியோவைத் தயாரித்ததிலிருந்து விளங்குவது ஜனாதிபதிக் கதிரையில் அமர்கின்ற ஒருவரின் மனப்பாங்கில் ஏற்படும் முரண்பாட்டுச் சிந்தனையாகும்.
எனது சமூகத்தில் ஒரு புற்று நோய் போல புரையோடியுள்ள தலைமைத்துவ வழிபாடு மேலும் தீவிரமடைந்து வரும் நிலைமை தான் ஆரம்பத்திலிருந்தே தெரிகிறது. ஜனாதிபதியை விழிப்பதற்கு “அதி மேதகு” என்ற பிரயோகத்தை முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அனுமதித்திருந்தார். இந்த பிரயோகத்தின் மூலம் ஜனாதிபதிப் பதவிக்கு அரசியல் தலைமையை மிஞ்சி நிற்கும் ஒரு ‘ராஜ‘ அந்தஸ்து புனையப்படுகின்றது. அரசன் ‘தேவர்’ (தேவயன் வஹன்ஸே) என்று கடவுள் அந்தஸ்தில் அழைப்பது எமது வரலாற்றுப் பாரம்பரியத்தில் உள்ளதாகும். தேவ அந்தஸ்தில் அழைக்கப்படும் போது அங்கு அரசர் மக்களில் ஒருவராக அன்றி மிகவும் உயர்ந்த தரத்தில் வைத்து மதிக்கப்படுகிறார். அவர் கடவுளின் அல்லது புத்த பெருமானின் நிலையில் வைத்து நோக்கப்படுகின்றார். ‘அதிமேதகு’ பிரயோகத்தின் மூலமும் உண்மையில் அது தானே எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தலைமைத்துவத்தை வழிபடும் போது அவர்கள் மனதில் ஒரு புனிதத்துவ உணர்வு தோன்றுகின்றது. அவர் அந்த உணர்வுடனே செயற்படும் போது மக்களின் வழிபாடு மேலும் அதிகரிக்கிறது. இது அடிமைத்துவ உணர்வை (a slavish cycle) தோற்றுவிக்கிறது.
ஹிட்லரின் போதனையைப் போன்றே கோட்டாபய ராஜபக்ச இந்நாட்டின் அண்மிய வரலாற்றின் மிகவும் பலவீனமான (fail) ஆட்சியாளராக முத்திரை குத்தப்பட்டுள்ளார். இப்போது அரசாங்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் தாங்கள் அடுத்த “அதிமேதகு” வாகக் கனவு காண்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி வகிக்கும் வரை ராஜபக்ச குடும்பத்தில் அழிவு ரீதியான அதிகாரப் போட்டியெதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் நிலை அவ்வாறன்று. ஜனாதிபதி கதிரைக்காக சில மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட இருமுனை வரையறை இப்போது மும்முனை நான்கு முனைப் போட்டியாக மாறும் அறிகுறிகளைக் காட்டுகின்றது. இந்த நிலை தணிக்கப்படாத விடத்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக அல்லது மூன்றாக பிளவு படும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஹிட்லரின் தலைமைத்துவத்தில் போன்றே ஹிட்லரின் போதனையிலும் பொதிந்திருக்கின்ற பிரதான ஒரு காரணி யாதெனில் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளாத அதீத ஆசை அல்லது மோகமாகும். ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தமையும் அமெரிக்காவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ததும் இவ்விரு நாடுகளினதும் யுத்த பலம் பற்றிய அறிவு அவருக்கு இல்லாதிருந்தமையினாலாகும். கோட்டபாய ராஜபக்சவும் பொருளாதாரத்தையும் சேதனப் பசளைச் செயற்திட்டத்தையும் குழப்பிக்கொண்டதும் இதனால் தான்.
யதார்த்தத்தை உணராமை ஹிட்லருடன் அல்லது அவரின் நினைவுச் சின்னங்களுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. அதிகாரத்தின் மீதுள்ள ஆசை ஒரு அதீத ஆசையாக மாறும் போது கூடிக் குறைந்த அளவுகளில் ஜனநாயகத் தலைவர்களுக்கும் இது பொருந்தும். ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றுடன் மற்றொன்று எதிரியானால் ராஜபக்சாக்களைத் தோற்கடிக்க முடியாது. ஜனாதிபதிப் பதவியால் கண்கள் நீலம் பாரிக்கின்ற எதிர்க் கட்சித் தலைவர்களின் தவறினால் ராஜபக்ச ஆட்சி பாதுகாக்கப்படின் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.- Vidivelli