பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு
தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்குமாறு பெண்கள் மன்றாட்டம்
எம்.எஸ்.எம். நூர்தீன், எச்.எம்.எம்.பர்ஸான், எம்.இஸட்.ஷாஜஹான்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரு வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றது. இப் போராட்டத்திற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இம்முறை இப் போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் ஆதரவு வழங்கியமை ஊடகங்களில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது உறவினர்கள் பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இவற்றில் பங்கேற்றதுடன் தமது உறவுகளை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிப்பும், கண்டன ஆர்ப்பட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்ட சகோதரி ஒருவர் தெரிவித்த கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவரது முழுமையான உரை இவ்வாறு அமைந்தது.
“ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் எனது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் 8 மாதங்கள் சிறையில் இருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள எனது கணவரை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை. அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தியுள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் எதை திருத்தியுள்ளார்கள்? ஜெனீவா பேச்சுவார்த்தை நடக்கப்போகிறது என்று அறிந்து கொண்டுதான் இந்த சட்டத்தை திருத்துவதென்று ஒரு பம்மாத்து நாடகத்தை ஆடுகிறார்கள்.
எனது கணவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு இதுவரைக்கும் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் சிறையில் இருக்கிறார்.
இவ்வாறு எனது கணவர் சிறையில் அகப்பட்டுக் கிடப்பதினால் நாங்கள் வீதியில் கிடந்து, கஷ்டப்பட்டு வீடுவீடாகச் சென்று வேலை செய்து எங்களுடைய பிள்ளைகளை வளர்த்து, பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்.
இதேபோன்று எத்தனையோ சகோதரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒரு மனிதனை உயிருடன் எரித்து கொலை செய்வதற்கு சமமாக உள்ளது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குங்கள். நீக்காவிட்டால் எங்களுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை நாங்கள் இதற்கு எதிராக போராடுவோம்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் போன்றவற்றை ஏற்கனவே தமிழ் சகோதர, சகோதரிகள் அனுபவித்துள்ளார்கள்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர்தான் அதனுடைய பாரதூரம் என்னவென்று எங்களுக்கு தெரிந்தது. அதனை நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
நான் அரசாங்கத்திடம் சவால் விடுகிறேன். நீங்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்திய சூத்திரதாரிகளை முதலில் கண்டு பிடியுங்கள். அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள்.
இதுவரை அதை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால் அதை செய்தது முழுக்க அரசாங்கம்தான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அவர்கள் பதவியில் இருப்பதற்காகத்தான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடாத்தி, முஸ்லிம் சகோதரர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள்.
எங்களுடைய எதிர்காலத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவர்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்.
இனிவரும் எங்களுடைய சந்ததிகளுக்கு இப்படியானதொரு நிலைமை வரவே கூடாது. அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
இவ்வளவு காலமும் பொறுத்தது போதும். அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க போராட வேண்டும்.
ஜெனீவா பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதற்காக சட்டத்தை திருத்தம் செய்திருக்கிறார்களாம். என்ன செய்திருக்கிறார்கள்? பன்னிரண்டு மாதங்களாக குறைத்து இருக்கிறார்களாம். 28 மாதங்கள் சிறையில் இருக்கும் எனது கணவருக்கு இந்த அரசாங்கம் விடிவு கொடுத்ததா?
அரசாங்கத்தின் நாடகம் வெளிவந்துவிட்டது. ஈஸ்டர் தின தாக்குதலை யார் செய்தார்கள் என்ற நாடகம் வெளிவந்து விட்டது. நான் சவால் விடுகிறேன். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சஹ்ரானுக்கு பின்னால் இருந்து உதவி செய்தது யார் என்று நிரூபியுங்கள்.
அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்காதீர்கள், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்.
தயவுசெய்து கேட்கிறேன். இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் அநியாயம் இழைக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு முடிவு கொடுங்கள். ஊடகங்களும் இதனை உண்மையான உள்ளத்தோடு தங்களது பணிகளை சரியாக செய்யுங்கள்” என அந்த பெண்மணி உருக்கமாக தனது கருத்தினை முன்வைத்தார்.
சாணக்கியன் உரை
இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரை நிகழ்த்தும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
“வழக்கமாக தமிழ் மக்கள் தான் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது முஸ்லிம் மக்களும் இந்த சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளார்கள்.
தற்போது நாம் முன்னெடுத்து வரும் இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் எம்முடன் முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்டார்கள்.
பல முஸ்லிம் தாய்மார்கள் இந்த இடத்துக்கு வந்துள்ளார்கள். இவர்களில் சிலரை இதற்கு முன்னர் நான் சந்தித்து அவர்களது குடும்பத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.
1980, 1990 காலப்பகுதியிலிருந்து தமிழ் இளைஞர்கள் சிறிய சிறிய குற்றச்சாட்டுக்களுக்கு 20 அல்லது 30 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதேபோன்றுதான் கடந்த மூக்று வருடங்களாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பத்து வருடங்களுக்கு கூட அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படலாம்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஸஹ்ரான் குழுவினர் சிலர் பயணிப்பதற்காக பஸ் ஆசனம் பதிவு செய்து கொடுத்த ஒருவரும் இருக்கிறார். இவ்வாறு பஸ் ஆசனம் பதிவு செய்யும் நிலையத்தை நடாத்திய குறித்த இளைஞரையும் இன்று 30 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளார்கள்.
இந்த சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமாக இருந்தால் தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் அனைவரும் இதன் மூலம் அரசாங்கம் குறிவைக்கும்.
எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இதில் சகலரும் இன மத பேதமின்றி கைகோர்க்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
மன்னாரில் அஹ்னாப் ஜெஸீம் குடும்பத்துடன் பங்கேற்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்குமாறு கோரும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் கடந்த சனிக்கிழமை மன்னார் நகரில் இடம்பெற்றது. இதன்போது குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து கையெழுத்திட்டார். அங்கு அவர் உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
“பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். இது இலங்கை சுதந்திரமடைந்த பிறகு சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட மிக மோசமான சட்டமாகும். அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டவன் என்ற வகையிலும் கடந்த 19 மாதங்களாக இச் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளவன் என்ற வகையிலும் இதனைக் கூறுகிறேன். என்னை சிறையிலிருந்து வெளியில் எடுப்பதற்காக பலர் பாடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கும் நான் இந்த இடத்தில் நன்றி கூறுகிறேன்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மதிக்காத மிகக் கொரூரமான, குரூரமான சட்டமாக உள்ளது. சிறுபான்மையினரை மாத்திரமன்றி பெரும்பான்மையினரைக் கூட இதன் கீழ் சிறை வைக்க முடியும். தங்களது அரசியலை முன்கொண்டு செல்ல யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ, யாரெல்லாம் அவர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க முடியும்.
முதலில் 18 மாதங்கள் தடுத்து வைத்து பின்னர் தேவைக்கேற்ப தடுப்புக் காலத்தை நீடித்துக் கொண்டே செல்வார்கள். ஒருவரை அவரது வாழ்நாள் முழுவதும் கூட இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கலாம்.
இந்த சட்டம் பல நூற்றுக் கணக்கான இளைஞர்களுடைய வாழ்க்கையை அழித்திருக்கிறது. இதற்கு மேலும் நாம் அமைதியாக இருப்போமானால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைமைகளைச் சந்திக்க வேண்டி வரும்.
அதனால்தான் நான் இன்று எனது தாய், தந்தை, சகோதரன், சகோதரிகளுடன் குடும்பமாக வந்து இந்த சட்டத்தை ஒழிப்பதற்கான மகஜரில் கையெழுத்திட்டுள்ளேன்” என்றார்.
காலம் கடந்தாவது முஸ்லிம்கள் போராடுகின்றனர்
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்குமாறு கோரி காலம் கடந்தேனும் முஸ்லிம் சமூகமும் போராடுவது திருப்தியளிக்கிறது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து அவர்களை அநியாயமாக தண்டிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இச்சட்டம் இன்று முஸ்லிம் இளைஞர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்படுகிறது. ஒரு இனத்துக்கு நடக்கின்ற அநீதியை, கொடுமையை இன்னுமொரு இனம் பல வருடங்கள் காத்திருந்து வேதனையை அனுபவித்து புரிந்து கொண்டுதான் இச் சட்டத்தை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாக இருந்தால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது, உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்த அநியாயம் நடந்த வேளையிலேயே இது போன்று அனைவரும் ஒன்றிணைந்து போராடியிருக்க வேண்டும். எனினும் காலம் கடந்தாவது இப்போதாவது இப் போராட்டம் நடப்பது திருப்தி தருகிறது” என்றார்.
முற்றாக நீக்க வேண்டும் : அமீர் அலி
மட்டக்களப்பில் நடந்த போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி உரையாற்றுகையில், சிறுபான்மை இனங்களை இலக்கு வைத்தும், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கிலும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதால் இப்பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிலைப்பாடாகும்.
எனவே இந்நாட்டிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இப்போராட்டத்திற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தமது பூரண பங்களிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.
நீர்கொழும்பிலும் முஸ்லிம்கள் பங்கேற்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் குறித்த போராட்டம் நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் இணைந்து பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மனித உரிமை செயற்பாட்டாளர்களான பிரிட்டோ பெனாண்டோ, ஹேர்மன் குமார உட்பட பல்வேறு சிவில் அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த மகஜரில் பலர் கையெழுத்திட்டனர். குறிப்பாக முஸ்லிம்கள் பலரும் இதில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli