பயங்கரவாத தடை சட்டம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது
இஸ்லாமிய நிலையம் பீரிசுக்கு கடிதம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் பல உள்ளடக்கங்களை நோக்குமிடத்து அவை சட்டத்தில் மிகக் கொடியவை என இனங்காணப்பட்டுள்ளதாகவும் இச்சட்டம் இந்நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளதாகவும் இலங்கை இஸ்லாமிய நிலையம் சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் எம்.ஹுசைன் மொஹமட் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்திலே ஹுசைன் மொஹமட் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதம் எங்கும் பரவியிருந்த காலகட்டத்தில் முதன் முதல் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில் பயங்கரவாத சட்டத்தின் அமுலாக்கம் தேவையானது என அப்போதைய அரசாங்கம் தீர்மானித்தது. ஆயுதப்போராட்டக் காலத்தில் அமுலுக்கு வந்த இந்த சட்டம் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பீதியையும் தோற்றுவித்தது.
பயங்கரவாத தடைச்சட்டம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது. சிவில் சமூக பிரஜைகளை மாத்திரமல்ல எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதாக அமைந்துள்ளது.
அண்மைக்காலமாக சில சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் நியாயமானதென வாதாட முடியாத சட்ட உடன்பாடுகளுக்கு மாறாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அவர்களின் உரிமைகளுக்கு மாறாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கம், பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரை விடுதலை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் அழுத்தங்களை அடுத்தே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள திருத்தங்கள் இச்சட்டத்தின் கொடூரத்தன்மையை நீக்குவதாக அமையவில்லை.
அதனால் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்ய வேண்டுமென இலங்கை இஸ்லாமிய நிலையம் கோரிக்கை விடுக்கிறது. அத்தோடு நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துமாறும் இஸ்லாமிய நிலையம் வேண்டிக்கொள்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வதால் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை உருவாகாது. மக்கள் இனவேறுபாடுகளின்றி பழங்கால அரசர் காலம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. -Vidivelli