மரபுச் சின்னங்களை அழிக்க வேண்டாம்
அரசாங்கத்திடம் முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்து ஜெய்லானி நுழைவாயில் இடிக்கப்பட்டமைக்கும் கண்டனம்
தப்தர் ஜெய்லானியில் உள்ள கட்டிட நிர்மாணங்கள் இடித்தழிக்கப்பட்டமை இலங்கை முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை உட்பட 26 முஸ்லிம் அமைப்புகள் நேற்றைய தினம் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பலாங்கொடையில் உள்ள தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அடக்கஸ்தலத்திற்குரிய சில கட்டிடங்கள் அண்மையில் இடிக்கப்பட்டமை குறித்து எங்களின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பல நூற்றாண்டுகள் பழமையான பள்ளிவாசல் மற்றும் அடக்கஸ்தலத்தின் சில பகுதிகள் தேவையற்ற முறையில் அழிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது விடயத்தில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காதிருப்பது குறித்தும் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.
தொல்பொருள் திணைக்களத்தினால் இந்த வளாகம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தப்தர் ஜெய்லானியில் உள்ள முக்கியக் கொடிக் கம்பம், கற்களாலான படிகள் கொண்ட அலங்கார நுழைவாயில் ஆகியவை தகர்க்கப்பட்டுள்ளன. மேலும் இப் பகுதியில் புதிய பௌத்த தூபியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குறிப்பிடத்தக்க முஸ்லிம் பாரம்பரிய தளத்தை வேண்டுமென்றே அழிப்பது சமூக நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு என்பவற்றுக்கு எதிரான செயற்பாடாகும். அத்துடன் எதிர்காலத்தில் வெறுப்பு மற்றும் சமூக அமைதியின்மை மற்றும் பிளவுகளைத் தூண்டவும் இது வழிவகுக்கும்.
மேலும், இந்த சம்பவம் சர்வதேசத்தின் பார்வையில் குறிப்பாக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற முஸ்லிம் நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் அவப்பெயரை ஏற்படுத்தும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத் தொடர் 2022 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 1 வரை ஜெனிவாவில் நடைபெறும் சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளமை கவனிப்புக்குரியதாகும்.
கடந்த காலங்களில் சமூக அடையாளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார், எங்கிருந்து இத்தகைய வெறுப்பு தூண்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும், குற்றவாளிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் நாங்கள் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாரபட்சமற்ற முறையில் சட்டம் மற்றும் ஒழுங்கை எப்பொழுதும் நிலைநிறுத்துமாறும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
2021 நவம்பர் 30ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துரையாடும்போது, வேறுபாடுகளின்றி அனைவரினதும் மத மற்றும் கலாசார உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார். அவ்வாறு உறுதியளித்தும் கூட முஸ்லிம்களின் பூர்வீக தளம் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
எனவே பல நூற்றாண்டுகளாக இந்நாட்டில் ஏனைய சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தினரின் சமய, கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்து, தப்தர் ஜெயிலானியில் உள்ள முஸ்லிம்களின் மரபுச் சின்னத்தை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli