மூன்று சக்கர சைக்கிளையே வசிப்பிடமாக்கியுள்ள முதியவர்!
எச்.எம்.எம்.பர்ஸான்
இரு வாரங்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அது நள்ளிரவில், பொலன்னறுவ – மட்டக்களப்பு பிரதான வீதியில், வெலிகந்த பிரதேசத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் மூன்று சக்கர சைக்கிளில் வயோபதிபர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அந்த வீடியோவைப் பதிவு செய்தவர் குறித்த வயோபதிபருடன் உரையாடுவதும் அவருக்கு உதவி செய்வதும் அதில் பதிவாகியிருந்தது. தான் ஓட்டமாவடி நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அதில் குறித்த முதியவர் குறிப்பிடுகிறார்.
அவரது பெயர் முகம்மது ஜெலீல் ஹசன் லெப்பை. அவருக்கு 74 வயதாகிறது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது தள்ளாடும் வயதில் அநாதரவாக வாழ்ந்து வரும் அந்த முதியவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நாம் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.
“என்ட சொந்த ஊரு நாவலப்பிட்டி – ஹபுகஸ்தலாவ. நான் ஓட்டமாவடிக்கு பல வருடங்களுக்கு முன்னர் வந்தேன். ஓட்டமாவடியில் இருக்கும் எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர்தான் என்னை கவனித்தார். அவர்தான் எனக்கு தொழில் செய்ய ஏற்பாடுகளை செய்து தந்தார்.
நான் இப்ப கச்சான், கடலை, கஜு போன்ற பொருட்களை பக்கட் பண்ணி என்ட சைக்கிளில் வித்து வாறன்.
இப்ப வியாபாரமும் சரியான சவுப்பு, என்ட உடல் நிலையும் மிகவும் மோசமாக போய் கொண்டு இருக்கு.
என்னால எழும்பி நடக்க ஏலா அதால நான் என்ட சைக்கிளில்தான் இருப்பிடத்தை அமைத்துள்ளேன்.
அதில்தான் என்ட காலம் போய்க்கொண்டிருக்கிறது” என்று தனது துயரக் கதையை எம்மிடம் கூறினார் அந்த முதியவர்.
தொடர்ந்தும் நாம் அவரிடம் பேசியபோது, “நான் என்ட சைக்கிள்ல நீண்ட தூரம் பயணிப்பேன். பயணிக்கும் போது நேரம் சென்டு இருட்டாகினா சைக்கிள ஒரு ஓரத்துல நித்தாட்டி போட்டு சைக்கிளுக்குள்ளே தூங்கிடுவேன்.
சில சந்தர்ப்பங்களில் யானைகள் நடமாடும் இடத்திலும் நான் தன்னந்தனியாக தூங்குவேன். யானைகள் எனக்கு ஒன்டும் செய்யாது அது அதுட பாட்டுக்கு கடந்து செல்லும்.
அதப்போல நான் வெளியூர்களுக்கு செல்லும் போது தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ மக்கள் என்னை கவனிப்பார்கள். எனக்கு சாப்பாடு தந்து சந்தோசப்படுத்துவார்கள்.
கிரானில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணொருவர் இருக்கா. நான் அங்கு சென்றால் அந்தப் பெண்மணி எந்த சங்கடமும் இல்லாமல் என்னை குளிப்பாட்டி, சாப்பாடு தந்து காசு தருவா. இப்படியான மனிசங்க இருப்பதால்தான் நான் அல்லாஹ்ட உதவியால இன்றுவரை வாழ்ந்துகிட்டு இருக்கன்” என எம்முடன் பேசினார் அந்த முதியவர்.
“எனக்கு இப்போது ஓடியாடி தொழில் செய்ய முடியவில்லை. நான் ஒரு காலத்தில் நல்ல தொழில்களை செய்து நாளொன்றுக்கு நல்ல வருமானங்களை சம்பாதித்தேன்.
இவ்வாறு நான் 2019 ஏப்ரல் குண்டு வெடிப்புக்கு பின்னர் தொழில் காரணமாக வெளியூர் ஒன்றுக்கு சென்றபோது என்னை இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கினார்கள். அதனால்தான் நான் இன்றுவரை நடக்க முடியாமல் சைக்களில் தத்தளிக்கிறேன்.”
பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த முதியவர் பத்திரிகை வாசிப்பு பழக்கமுடையவராகவும் இருந்து வருகிறார். தான் பன்னிரண்டு வயதிலிருந்து வாசிப்பு பழக்கம் கொண்டவராகவும் தற்போது வரை பத்திரிகைகளை வாசித்து வருவதாகவும் அவர் எம்மிடம் கூறினார்.
ஆரோக்கியமான உணவும், உடல் பராமரிப்பும் இல்லாமல் தற்போது மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வரும் இந்த முதியவர் தொடர்பாக ஓட்டமாவடியில் அவருக்கு நன்கு அறிமுகமான சிலரை அணுகி இவரது நிலைமை பற்றிக் கேட்டோம்.
“ஹசன் லெப்பை எனும் இந்த நபர் கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்தார். அப்போது நாங்கள் கொழும்பு பகுதிக்கு செல்லும் போது அவரை சந்திப்போம்.
இவர் கொழும்பு சம்மான்கோட்டை பள்ளிக்கு முன்பாக அவரது தொழிலை திறன்பட செய்து வந்தார்.
பின்னர் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓட்டமாவடி பகுதிக்கு தொழில் நிமித்தம் வந்து அவரது தொழிலை சிறந்த முறையில் மேற்கொண்டு வந்தார்.
இப்போது அவரால் தொழில் செய்ய முடியாது. நடக்க முடியாது. அவரது உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைந்து செல்கிறது.
எங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்திருக்கிறோம்.
அவர் குடும்பங்கள் யாருமின்றி தனிமையில்தான் இதுவரை காலமும் இங்கு வாழ்ந்து வருகிறார்.
ஒருமுறை அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஓட்டமாவடிக்கு வந்துவிட்டார் என்றனர்.
இவரின் குடும்பத்தை நாம் தொடர்புகொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை.
இவரை விடிவெள்ளி பத்திரிகை ஊடாக அடையாளப்படுத்துவதன் மூலம் குடும்பத்தினர் அடையாளம் கண்டு இவரை பராமரிக்க முன்வரவேண்டும் என்பதற்காகவே நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.
உறவுகளின் பராமரிப்பில் வாழ வேண்டிய இந்த வயதானவர் அநாதரவாக மழையிலும், வெயிலிலும் யானைகள் நடமாடும் இடங்களிலும் சைக்கிளில் வாழ்ந்து வருவது கவலையடையச் செய்கிறது.
முதியவர் ஹசன் லெப்பை இறுதிக் காலத்திலாவது நிம்மதியாகவும், நல்ல பராமரிப்பிலும் வாழ்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.- Vidivelli