சுலைமா சமி இக்பால்
இந்தியாவின் பிரபல நாவல் சிறுகதை எழுத்தாளர் ஹிமானா சையத் 21.02.2022 அன்று காலமானார்.
தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், பன்நூலாசிரியர் என பன்முக திறமை மிக்க மருத்துவர் ஹிமானா சையத்.
தமிழ் நாட்டிலிருந்து நான்கு தசாப்த காலங்களாக வெளிவரும் நர்கீஸ் மாத இதழில் கௌரவ ஆசிரியராக பணியாற்றிய Dr.ஹிமானா சையத் தமிழ் மாமணி, பாரத் ஜோதி, சிறந்த குடிமகன் எனும் உயரிய பட்டங்களை பெற்றவர். இதுவரை 40 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் இந்தியா, தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் சித்தார் கோட்டை எனுமிடத்தில், மல்லாரி அப்துல் கனி மரைக்காயர், உம்மு ஹபீபா தம்பதியினரின் புதல்வராக ஜனவரி 20, 1947 இல் பிறந்தார்.
தேவகோட்டை தேபிரித்தோ பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று பின்பு சென்னை லொயோலா பள்ளியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1966 ஆம் ஆண்டில் மதுரை மருத்துவக் கல்லூரிக்குத் (மதுரை பல்கலைக்கழகம்) தெரிவாகி 1972 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.
பள்ளிக் கல்வியை மேற்கொள்ளும் காலகட்டங்களிலேயே வாசிப்புப் பழக்கமும், கவிதைகள் எழுதும் பழக்கமும் இவரிடம் இயல்பாகவே காணப்பட்டது.
கற்கும் காலத்தில் நூற்றுக்கணக்கான கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களில் எழுதிவருவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவரின் முதல் கவிதை மறுமலர்ச்சி இதழில் 1964ஆம் ஆண்டில் பிரசுரமானது.
முதல் சிறுகதை மலர்வதி (1987 ஒக்டோபர்) மாத இதழில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறுபட்ட இதழ்களிலும், பத்திரிகைகளிலும் இவர் எழுதினார்.
சென்னை, மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரின் இலக்கியங்களை இதுவரை ஆய்வு மாணவர்கள் ஐந்து தடவை ஆய்வு செய்து எம்.பில்.பட்டம் பெற்றுள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் செல்வி சண்முகவனம் எனும் மாணவி இவரின் இலக்கியத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிப் பேராசிரியர் முகம்மது இக்பாலும் இவரின் இலக்கியத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
இவரது ‘ருசி’ சிறுகதைத் தொகுதி கேரள பல்கலைக் கழகத்தில் 1992 முதல் 1996 வரை முதுகலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் வைக்கப் பட்டிருந்தது.
கேரள மேல்நிலைப்பள்ளி 11 வகுப்புப் பாடத்திட்டத்தில் இவரின் கோடுகள் கோலங்கள் நாவல் 2004 –- 2006 சேர்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் எட்டாம் வகுப்புப் பாடநூலில் ஆணிவேர் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். எனது வைகறைப் பூக்கள், மனச்சுமைகள் புத்தகங்களைப் படித்து விட்டு அது குறித்து கடிதங்கள் அனுப்பினார். 1989ஆம் ஆண்டு தொடக்கம் அவருடனும், அவரது குடும்பத்துடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இருந்து வந்தது.
2003ஆம் ஆண்டு திசை மாறிய தீர்மானங்கள் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பதிதியாக இலங்கை வந்து கலந்து கொண்டார். எனது புத்தகத்தைப் பற்றிய அவரது உரை தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அன்றைய தினம் அவர் எனது வீட்டுக்கும் வந்து சென்றார். அதன் பின்னரும் மூன்று தடவைகளுக்கு மேல் இலங்கை வந்த போது எங்கள் வீட்டுக்கும் வந்து சென்றார். அதன் போது அவர் எழுதிய சிறுகதை, நாவல் நூல்களை அன்பளிப்புச்செய்தார்.
30 வருடங்களாக என்னுடனும், என் கணவர், பிள்ளைகளுடனும் தொடர்புள்ள அவர், இலங்கை வந்திருந்த போது எனக்கு சேலை, பிள்ளைகளுக்கு சல்வார் துணி, கணவருக்கு உடுப்பு என கொண்டு வந்து அன்பளிப்புச் செய்தமையை என்னால் மறக்க முடியாது. என்னை அவரின் உடன்பிறந்த சகோதரியாக நினைத்த அவர், என் கணவனையும் மச்சான் மச்சான் என்று தான் அழைத்து வந்தார்.
என் மகள் இன்ஷிராஹ் இக்பாலின் “நிழலைத்தேடி” நாவலுக்கும் ஒரு உரையினை எழுதி அனுப்பியிருந்தார். எனது பிள்ளைகளும் அவரின் சிறுகதை நாவல்களை விரும்பி வாசித்து வந்தனர். அவரின் சிறுகதைகள் தினகரன், விடிவெள்ளி, நவமணி போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.
டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளுமாக 3 பிள்ளைகள் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த எனது உண்டியல் சிறுகதைத்தொகுதிக்கு ஒரு உரையினை எதிர்பார்த்து சிறுகதைகளை அனுப்பி வைத்தேன். உம்ராவிற்குப் போய் வந்த பின் உரையினை அனுப்புவதாகக் கூறியிருந்தார். அதன் பின்பு பல மாதங்களாகியும் எந்த உரையும் வந்து சேரவில்லை. அவரின் பிள்ளைகளிடம் விசாரித்த போது அவர் நோய் வாய்ப்பட்டிருப்பதாக அறிந்து துஆச் செய்தேன்.
அவர் சிறந்த எழுத்தாளராகவும், தலை சிறந்த வைத்தியராகவும் மாத்திரமின்றி சமூகப் பணிகள் ஆற்றுவதிலும் சிறந்து விளங்கினார்.
அவரின் மறைவானது அவரின் பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல எமக்கும் எமது சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அவர் செய்த அத்தனை பணிகளுக்கும், நல்லமல்களுக்கும் அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு மேலான ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவனத்தினை வழங்க வேண்டுமெனவும், அவரின் மனைவி, பிள்ளைகளுக்கு மேலான பொறுமையையும், மன ஆறுதலையும் தர வேண்டுமென இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.-Vidivelli