மௌலவி எம்.ஐ.கலீலுர் றஹீம் (பலாஹி)
(முன்னாள் காதி நீதவான்)
சிரேஷ்ட விரிவுரையாளர், ஹாஷிமிய்யஹ் அறபுக் கல்லூரி,
நாவலப்பிட்டி
இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பான உரிமைகளில் ஒன்றுதான் முஸ்லிம் தனியார் சட்டம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம். இதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ளனர்.
இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டு பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் விவாக, விவாகரத்துத் தொடர்பான விவகாரங்கள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளமையையும் நாம் அறிவோம்.
இச்சட்டத்தை நீக்க வேண்டுமென்பதற்காக முன்வைக்கப்படும் பிரதான வாதங்களில் ஒன்றுதான் ‘முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை; அதனைப் பொதுச் சட்டத்தினால் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்’ என்ற வாதம். இதனை ஒப்புவிக்க, தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகளைப் பின்பற்றாது காதியின் மீது பழி சுமத்தும் சில முஸ்லிம் பெண்களைச் சாட்சிகளாகவும், ஊடக நடிகர்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். இது “ஊராகே மஸ் ஊராகே பிடே தியலா கபனவா” என்ற சிங்கள முதுமொழிக்கு அமைவாக இருக்கின்றது. அதாவது பன்றியின் இறைச்சியை பன்றியின் முதுகில் வைத்து வெட்டுவதைப் போல் முஸ்லிம்களின் உரிமைகளை முஸ்லிம்களைக் கொண்டே ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இருக்கின்றது.
பொதுவாக இன்று காதி நீதிமன்றம் என்றாலே பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் ஓரிடம் என்ற சிந்தனையே சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் விவாகரத்து எனும் போது ஆண்கள் பக்கம் எந்நியாயங்கள் இருந்த போதிலும் பெண்களே அப்பாவிகளாகவும் அநீதி இழைக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுவதாகும். எனினும் பெண்கள் போன்றே ஆண்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நம்மில் அதிகமானவர்கள் அறிவதில்லை. இக்காலத்தில் ஒரு கணவன் தன் மனைவியைத் தலாக் கூற காரணங்களாக அமைவது பெரும்பாலும் மனைவியின் தகாத உறவு, ஒழுக்கயீனம், குடும்ப வாழ்வுக்கு ஒத்துழைக்காமை, கணவனுக்கு கீழ்படியாமை போன்ற காரணங்களாகும். இந்தக் குறைபாடுகளை நீக்கி கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் சமரசம் செய்து வைக்க எடுக்கப்படும் முயற்சி தோல்வியுறும் போதே தலாக் நிகழ்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் மஹர் வழங்கி இன்னுமொரு பெண்ணை மணந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் விவாகரத்துச் செய்த பின் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய துன்பகரமான நிலையும் அப்பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய நெருக்கடியும் கணவனுக்கு ஏற்படுகின்றது. இதனாலேயே பெண்கள் போன்றே ஆண்களும் விவாகரத்தின் போது பாதிக்கப்படுகின்றனர் என்று இங்கு நான் குறிப்பிட்டேன். ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாரும் எழுதுவதுமில்லை; பேசுவதுமில்லை. நீதி நியாயம் எனும் போது இரு பாலாரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரம் சில கணவன்மார்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி மனைவியரைத் தலாக் கூறுகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. அதன் காரணமாக பெண்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக தலாக் கூறும் கணவன்மார்கள் எல்லோரும் அநியாயக் காரர்கள் என்றும் மனைவியர்கள் அப்பாவிகள் என்று சமூகத்துக்கும் நாட்டுக்கும் சித்தரித்துக் காட்டி காதி நீதிமன்ற அமைப்பை ஒழிக்க வழி அமைப்பது கூடாது.
காதி நீதிமன்றங்களுக்கு வரும் அதிகமான விவாகரத்து வழக்குகள் பெண்களாலே பதியப்படுகின்றன. விவாகரத்துக் கோருவதற்கு போதிய காரணங்கள் இல்லாத நிலையில் மிக மிக அற்பக் காரணங்களுக்காகவும் பெண்கள் விவாகரத்துக் கோருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இருந்தும் சமரச முயற்சி கைகூடாமையைக் கவனத்திற் கொண்டு பஸஹ் விவாகரத்து வழங்கப்படுகின்றது. இதனால் பிள்ளைத் தாபரிப்பு, இத்தா தாபரிப்பு போன்றவற்றை வழங்க வேண்டியதால் கணவன்மார் பாதிக்கப்படுகின்றனர்.
காதி நீதிமன்றங்களில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்ற கருத்து நிலவப் பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிடலாம். முதலாவது சில காதிகளின் தவறான செயற்பாடுகள் எனக் குறிப்பிடலாம். இதுவே பிரதான காரணமுமாகும். தவறான செயற்பாடுகள் என்னும்போது லஞ்சம் பெறல், பக்க சார்பாக நடத்தல் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். சில காதிமார்களால் நடக்கும் இவ்வாறான தவறுகளால் பொதுவாக எல்லா காதிகளும் அவ்வாறானவர்கள் தான் எனக் கருதப்பட்டு காதிகள் அனைவருமே லஞ்சம் பெறக்கூடியவர்கள் என்ற கண்ணோக்கில் பார்க்கப்படுகின்றனர். மற்றையது நேர்மையாக நடக்கும் காதிகளும் கூட தங்களது செயற்பாடுகளினால் வழக்காளிகள் சந்தேகத்துள்ளாகின்றனர். எனவே இவர்களும் லஞ்சம் பெற்றே இவ்வாறு நடக்கின்றனர் என்று மக்கள் கருதுகின்றனர். உதாரணமாக ஒரு தரப்பினருடன் மாத்திரம் கௌரவமாகவும் அன்பாகவும் பேசுவது, அவர்கள் விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்துவது, மற்றைய தரப்பினரை அலட்சியப்படுத்துவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுவாக காதி நீதிமன்ற சட்டவிதிகளைப் பற்றிய தெளிவு இல்லாமையும் பொது மக்களுக்கு மத்தியில் காதிநீதிமன்றம் பற்றி நல்லெண்ணத்தை இல்லாதாக்கி தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு காரணியாக அமைகின்றது. போதிய சட்டத் தெ ளிவு இல்லாமல் வரும் அதிகமானவர்கள் தன் பக்கமே நியாயம் இருக்கின்றது; அதன்படியே தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் சட்டமும் நியாயமும் அதற்கு மாற்றமாக இருக்கும் போது சட்ட விதிகளைப் பேணி காதி தீர்ப்பளிக்கும் போது, காதி தனக்கு அநியாயம் செய்து விட்டதாகக் கூறுகின்றனர். சட்டத்தின் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் காரணமாக நிவாரணம் பெற ஏற்படும் தாமதமும் காதி நீதிமன்றம் பற்றி அதிருப்தியை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. ஒருவர் தாபரிப்பு செலுத்த தவறும்போது அதனை அறவிட சட்டத்தில் நடைமுறையொன்று இருக்கின்றது. அதனைப் பின்பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கும் போது காலதாமதம் ஏற்படுகின்றது. உடனடியாக நிவாரணம் எதிர்பார்த்து வருபவர்கள் காதி நீதிவான் வேண்டுமென்று தாமதப்படுத்துகின்றார் என்று குறை கூறுகின்றனர். எனினும் பொது நீதிமன்றங்களில் இதனை விடக் கூடுதலான காலதாமதம் ஏற்படுவதை அவர்கள் அறிவதில்லை. காதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. அவ்வதிகாரங்களுக்கு உட்படாத விஷயங்களை அவைகளுக்குரிய நீதிமன்றங்களின் ஊடாகவே செய்து கொள்ள வேண்டும். இது பற்றிய தெளிவு இல்லாததன் காரணமாகவும் காதி நீதிமன்றங்களில் எமக்கு நீதி கிடைக்கவில்லை எனக் குறை கூறுபவர்களும் இருக்கின்றனர்.
காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை நம்மில் பலரும் அறியாது இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் இழப்புகளும் சிரமங்களும் அளப் பெரியன.
முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டால், நாம் எமது விவாக விவாகரத்து தொடர்பான விவகாரங்களில் பொதுச் சட்டத்தினால் ஆளப்படுவோம். அதனால் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேண முடியாத நிலைமை ஏற்படும்; முஸ்லிமான ஆண்களும் பெண்களும் இஸ்லாமியச் சட்டத்தினால் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை இழக்க நேரிடும். இதனால் ஆண் பெண் இருபாலாரும் பாதிக்கப்படுவர். அதிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். பின்வரும் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அதனை நாம் சுலபமாக புரிந்த கொள்ளலாம்.
மனைவி கணவனைத் தாபரிக்க
வேண்டிய நிலை ஏற்படும்
தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரகாரம் ஒரு முஸ்லிமான மனைவி எவ்வித செல்வ நிலையில் இருந்தாலும் தனது கணவனுக்குப் பராமரிப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. கணவனே அவளுக்குப் பராமரிப்பு வழங்க வேண்டும். எனினும் பொதுச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற ஒரு முஸ்லிம் அல்லாத பெண் போதிய வருமானமுள்ளவளாக இருந்தால் அவளுக்கு அவளது கணவன் பராமரிப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் கணவன், தனக்குப் போதிய வருமானம் இல்லாத சந்தர்ப்பத்தில் தன் மனைவியிடம் பராமரிப்புக் கோரி வழக்குத் தொடரலாம். ஆகவே , முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டால் வசதியுள்ள ஒரு முஸ்லிம் பெண், தன் கணவனிடம் பராமரிப்புப் பெற முடியாத நிலை ஏற்படுவதுடன் வருமானம் அற்ற தன் கணவனுக்கு அவள் பராமரிப்பு வழங்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
மனைவி கணவனுக்கு நஷ்டயீடு
வழங்க வேண்டும்
பொதுச்சட்டத்தில் கணவனது தவறின் காரணமாக மனைவி விவாகரத்துச் செய்தால், கணவன் மனைவிக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும். அவ்வாறே மனைவியின் தவறின் காரணமாக அவளைக் கணவன் விவாகரத்து செய்தால், மனைவி கணவனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எனினும் இஸ்லாமியச் சட்டத்தின் பிரகாரம் ஒரு கணவன் தன் மனைவியை எக்காரணத்துக்காக விவாகரத்துச் செய்தாலும் அவள், தன் கணவனுக்கு எவ்வித நஷ்டஈடும் வழங்க வேண்டிய அவசியமில்லை. இதுவே காதி நீதிமன்ற நடைமுறையிலும் உள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டு பொதுச் சட்டத்தினால் நாம் ஆளப்படும் நிலை ஏற்பட்டால், விவாகரத்தின் போது முஸ்லிமான மனைவியும் கணவனுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தாய் பிள்ளைகளைத் தாபரிக்க வேண்டிய நிலை ஏற்படும்
தாய்க்கு எவ்விதமான வருமானம் இருந்த போதிலும் தகப்பனே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டுமென்பது இஸ்லாமியச் சட்டமாகும். அவ்வாறே முஸ்லிம் தனியார் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. காதி நீதிமன்ற நடைமுறையிலும் அதுவே இருக்கின்றது. பொதுச் சட்டத்தில் தாய்க்கு வருமானம் இருக்கும் போது தாயே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. தகப்பனுக்கு அக்கடமை இல்லை. முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட்டு பொதுச் சட்டத்தினால் நாம் ஆளப்படும் நிலை ஏற்பட்டால் , தாய்க்கு வருமானம் இருப்பின் தகப்பனிடம் பிள்ளைத் தாபரிப்புக் கோர முடியாத நிலை ஏற்படும். தாயே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிவரும்.
மஹர், இத்தாப் பணம் இல்லை
இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உரித்தான இத்தாப் பணத்தையும் மஹரையும் பெறும் வாய்ப்பைப் பொதுச் சட்டத்தின் கீழ் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வழக்குக்காக தூரப் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்
தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரகாரம் விவாகரத்துக் கோருபவர் கணவன், மனைவி இருவரில் யாராக இருந்த போதிலும் மனைவி வசிக்கும் பிரதேசத்துக்குரிய காதி நீதிமன்றத்திலேயே அதற்கான வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இது முஸ்லிம் பெண்களினது வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட சட்ட விதியாகும். எனினும் பொதுச் சட்டத்தில் அது கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. பொதுச் சட்டத்தில் விவாகரத்துக்கான வழக்கை கணவனது பிரதேசம் அல்லது மனைவியினது பிரதேசம் அல்லது விவாகப் பதிவு செய்யப்பட்ட பிரதேசம் ஆகிய மூன்று பிரதேசங்களில் ஏதேனுமொரு பிரதேசத்துக்குரிய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். எனவே கண்டியில் வசிக்கும் மனைவியை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கணவன் விவாகரத்துச் செய்ய விரும்பினால், அவர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் அதற்கான வழக்கைத் தாக்கல் செய்யலாம். அப்போது மனைவி கண்டியிலிருந்து வழக்குக்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சமரசத்துக்கான வாய்ப்பு இல்லாமை
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாகரத்து வழங்க முன்னர் கணவன் மனைவிக்கிடையில் சமரசம் ஏற்படுத்துவதில் காதி கூடிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காதிமார்கள் சமரசத்திற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு அம்முயற்சிகள் பயனளிக்காத போதே விவாகரத்து வழங்குகின்றனர். வேறு நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தம் கட்சிக்காரர்களின் கோரிக்கையை நியாயப்படுத்தி அவர்களுக்கு விவாகரத்துப் பெற்றுக் கொடுப்பதிலேயே கரிசனையாக இருப்பர். சிலவேளை அப்பாவிப் பெண்கள் மீது அவர்கள் செய்யாத தவறுகளும் திணிக்கப்படுவதுண்டு. எனவே காதி நீதிமன்ற முறைமை நீக்கப்பட்டு முஸ்லிம் பெண்கள், பொது நீதிமன்றத்துக்கு செல்ல நேரிட்டால் அவர்களுக்கும் இந்த அவல நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
விவாகரத்துப் பெற அதிக காலம் செல்லும்
பொதுச் சட்டத்தில் விவாகரத்துக் கோருபவர் கணவன் மனைவி யாராக இருந்தாலும் அவர் மூன்று காரணங்களில் ஒன்றை அடுத்த தரப்பினரிடம் இருப்பதை ஒப்புவிப்பதன் மூலமே விவாகரத்துப் பெறலாம். 1. பாலியல் இயலாமை (விவாகரத்துக்கு முன்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.) 2. வன்மை உறவறுத்தல் (விட்டுச் செல்லல்) 3. சோரம் போகுதல் அதாவது பிரதிவாதி தவறான பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புவித்தல். இக்காரணங்களில் ஒன்றை நிரூபிக்காது பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்துப் பெற முடியாது. எனினும் தற்போதைய முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் ஒரு மனைவி பின்வரும் ஆறு காரணங்களில் ஒன்று கணவனிடம் இருக்கும் போது விவாகரத்துக் கோரலாம். 1. மனநோய், 2. குஷ்டம், 3. பாலியல் இயலாமை 4. தாபரிக்காமை, 5. உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல், 6. வன்மை உறவறுத்தல் (விட்டுச் செல்லல்)
அடுத்தது எவ்விதக் காரணங்கள் இல்லாத நிலையிலும் இருவரும் உடன்பட்டு பரஸ்பர இணக்கப்பாட்டுடன் ஒரே நாளில் விவாகரத்துப் பெறும் வாய்ப்பும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரமே இருக்கின்றது. இவ்வாய்ப்பு பொதுச் சட்டத்தில் இல்லை.
மாவட்ட நீதிமன்றங்களில் விவாகரத்துப் பெற ஆறு, ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்போது ஆணும் பெண்ணும் மறுமணம் செய்து மகிழ்ச்சியாக வாழும் வயதைத் தாண்டியிருப்பர்.
கூடிய பணச் செலவு ஏற்படும்
மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படல். அதிலும் பெண்கள் மிகச் சிரமப்படுவார்கள். வழக்குகளுக்காக காதி நீதிமன்றம் வருவதற்கு பஸ் பயணக் கட்டணம் கூட இல்லாது பெண்கள் சிரமப்படும் நிலைமைகளை காதி நீதிவான்களாகக் கடமையாற்றிய நாம் அவதானித்திருக்கின்றோம். இந்நிலையில் பொதுச் சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்காட சட்டத்தரணிகளுக்கு பணம் செலுத்த அவர்களால் எவ்வாறு முடியும்? ஆண்கள் எவ்வாறோ கூடிய பணம் செலுத்தி திறமையான சட்டத்தரணிகளைப் பிடித்து தம் இலக்குகளை அடைந்துகொள்வார்கள்.
சிரமம் உண்டாகும்
பொதுவாக பெண்கள் தமக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள காதி நீதிமன்றம் வருவதற்குக் கூட பின்வாங்குகின்றனர். அதிலும் ஆண்கள் தாபரிப்புப் பணத்தை செலுத்தத் தவறும் போது அதனை அறவிட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தல் கட்டளை அனுப்பப்படும் போது பணத்தைப் பெற அங்கு செல்ல முடியாதெனக் கூறி தாபரிப்புப் பெறுவதைக் கைவிட்டு விடுகின்றனர். இவ்வாறான நிலையில் காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் , முஸ்லிம் பெண்கள் பொது நீதிமன்றத்துக்கு எங்ஙனம் போகப்போகின்றார்கள்?
மேலும் உரிய நேரத்தில் கணவன் தாபரிப்பை செலுத்தத் தவறும் போது எந்நேரத்திலும் காதி நீதிவானுடன் தொடர்பு கொண்டு அதைப் பெற்றுத் தருமாறு கோரும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது உண்டு. பொதுச் சட்டத்தின் கீழ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாபரிப்புக் கோரும் நிலை வந்தால் இவ்வசதியை இழக்க வேண்டியிருக்கும். அப்போது சட்டத்தரணி மூலம் தோன்றியே மஜிஸ்ட்ரேட் நீதிவானிடம் கணவன் தாபரிப்பு வழங்கவில்லை என்பதை முறையிட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்திற் கொண்டு பார்க்கும் போது காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது பெண்களே. இவைகளைப் பற்றித் தெளிவில்லாமல் நம்மில் சிலர் காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டு முஸ்லிம்களது விவகாரங்கள் பொது நீதிமன்றத்துக்குச் செல்வது சிறந்தது எனக் கருதுகின்றனர். இது ‘கபலின் லிபட’ (சட்டி சூடு என அடுப்பில் குதித்தான்) என்ற சிங்கள முதுமொழிக்கு ஒப்பாக ஆகிவிடும். எனவே காதி நீதிமன்ற நடைமுறையில் இருக்கும் சில குறைபாடுகளை நீக்கி அதனைப் பாதுகாக்க முயற்சிப்பதுஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அல்லாஹ் அருள்புரிவானாக! -Vidivelli