மூலம்: பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்
சில காலமாக அமுக்கிவைக்கப்பட்டிருந்த இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பான கருப்பொருள் மீண்டும் ஒருமுறை அரசியல் உரையாடலுக்கு உட்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல்களை பலப்படுத்தல், அதற்குப் பொருத்தமான வகையில் 13ஆவது யாப்புச் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தல் போன்ற செயல்முறைகள் தமிழர் தேசியக் கூட்டணி தவிர்ந்த ஏனையவர்களின் கவனத்திலிருந்து சறுக்கியுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
எனினும் அது சிவில் சமூக அமைப்புக்களின் கவனத்திலிருந்து விலகவில்லை. அரசியல் கட்சிகளின் எண்ணம் பற்றிய பலமான இரு அறிகுறிகள் சென்ற வாரங்களில் தென்பட்டன. முதலாவது, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின்போது தேசிய பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற விடயம் இடம்பெறவில்லை.
அதற்குப் பதிலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான, கவலைகளுக்கான பரிகாரம், பொருளாதார தீர்வு வழங்குவதே என்று கூறப்பட்டுள்ளது. அது ராஜபக்ச குடும்பத்தின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்ததும் தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மாறியுள்ளதுமான நிலைப்பாடாகும். தமிழ் மக்களுக்கு இருப்பது அரசியல் பிரச்சினையல்ல, மாறாக பொருளாதார விருத்தியின்மை பற்றிய பிரச்சினையாகும். அதற்கு வழங்க வேண்டியது பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தீர்வே என்பது இந்த நிலைப்பாட்டின் விளக்கமாகும்.
இரண்டாவது அடையாளம், ஜே.வி.பி தலைமைத்துவத்தின் கீழுள்ள தேசிய மக்கள் சக்தியின் “நெருக்கடியை வெல்வதற்கான அவசரப் பிரவேசம்” என்ற கொள்கை வெளியீட்டுப் பிரசுரத்தில் தேசிய பிரச்சினை என்ற பிரயோகத்தை பயன்படுத்துவதையே தவிர்த்துள்ளனா;. அந்த வெளியீட்டில் இலங்கையின் தேசிய இனம் என்ற தொனிப்பொருளில் மூன்று விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முதலாவது, அதிகாரத்தைப் பரவலாக்கும் புதிய வழிமுறையுடன் கூடிய ஆட்சியமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதும் மாகாண சபைகளை முறையானதும் வினைத்திறனுள்ளதுமான நிறுவனங்களாக மாற்றுவதுமாகும். அது தமிழ் முஸ்லிம் மக்களை சிறப்பாக இலக்கு வைத்ததாக அன்றி நாட்டின் சகல இனத்தவர்களதும் இலங்கைத் தனித்துவம் உறுதிப்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகவே அந்த வெளியீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட இலங்கையின் தேசிய தனித்துவம் பற்றிய பிரச்சினை தீர்வு பற்றியதான ஒரு நோக்காகும்.
முன்வைக்கப்படும் இரண்டாவது தீர்வின் பின்னணி பாரபட்சம் காட்டாதிருத்தல் என்ற விடயத்தைப் பலப்படுத்துவதாகும். இது இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பிலான இழிவளவு யோசனையாகும்.
மூன்றாவது விடயம், இலங்கை சமூகத்திலுள்ள பன்முகக் கலாசாரத்தை அங்கீகரிப்பதாகும். இதுவும் லிபரல் (தாராண்மைவாத) அரசியல் கோட்பாட்டின் அண்மைக்காலமாக விருத்தியடைந்த ஒரு கருத்தாகும்.
இந்த மூன்று பிரேரணைகளும் முக்கியமானவை. ஆயினும் இதனை இன்று தாராண்மைவாத (லிபரல்) அரசியல் யாப்பு தொடர்பிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட தீர்வுக் கட்டங்கள் என்றே சொல்ல முடியும். தேசிய பிரச்சினைக்கு வழங்கும் நிரந்தரமான தீர்வின் அடிப்படையாக அரசைப் புனர்நிர்மாணம் செய்வது தொடர்பான ஒரு எதிர்கால நோக்கு இல்லாதிருப்பதும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்களின் கோணத்தில் அதனைப் பார்க்காதிருப்பதும் இந்த தீர்வு செயலொழுங்கில் காணப்படும் முக்கிய குறைபாடாகும். நிறுவனப் புனர்நிர்மாணம் மற்றும் சட்ட ரீதியான புனரமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வரவேற்கக்கூடிய ஆனால், ஆகக் குறைந்தளவிலான ஒரு பிரவேசம் என்றே இதனைக் கூறலாம்.
அண்மைக்காலமாக விருத்தியடைந்துள்ள தீவிர சிங்கள இனவாதப் போக்குகளுக்கு இசைந்து போவதாக இருக்கக்கூடிய சாத்தியமே இவற்றில் பெரும்பாலும் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமானால் தாமும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளைக் கவர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற பிரவேசம் மூன்று பிரதான கட்சிகளிலும் உள்ளீர்க்கப்பட்டிருக்கலாம்.
கவனமான பிரவேசம்
இப்போதுள்ள அரசியல் யாப்பு மாற்ற விவாதத்தின்போது தேசியப் பிரச்சினை தொடர்பிலான முற்போக்கான ஒரு பிரவேசத்தை தேர்ந்தெடுத்திருப்பவர்கள் நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் மட்டுமே. அதிகாரப் பரவலாக்கத்தை பலப்படுத்துவதற்காக 13ஆவது யாப்புத் திருத்தத்தை மேலும் விரிவுபடுத்துதல், அதிகாரப் பரவல் அலகுகளாக மாகாணங்களை தொடர்ந்தும் பேணுதல், அரசியல் நிர்வாக அமைப்பின் ஆகக் குறைந்த அலகுகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குதல் என்பன அவர்களது பிரேரணையில் இருக்கும் பிரதான விடயங்களாகும். இவை தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பாக தெற்கிலிருந்து முன்வைக்கப்படும் முன்னேற்றகரமான முன்மொழிவாக இருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நாம் காணக்கூடியதாகவுள்ள போக்கு குறிப்பாக சிங்கள சமூகத்துடன் உறவாடும் பிரதான அரசியல் கட்சிகள் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ‘கவனமான பிரவேசம்’ என்ற பதத்தினால் அறியப்படக்கூடிய ஒரு பிரவேசத்தைத் தேடும் ஒரு கட்டத்தை அடைந்துள்ளமையாகும். இது இலங்கை அரசியலில் 2015 இன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலை என்பதும் தெரிகிறது.
விசேடமாக சிங்கள சமூகத்தில் சிங்கள பௌத்த இனவாதத்தின் எழுச்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா கோட்பாட்டைத் தூக்கிப் பிடித்திருப்பது போன்று சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலொன்றை தொடர்ந்தும் முன்வைக்கும் ஒரு பின்னணியில் இது இலங்கை அரசியலில் ஏற்பட்டிருகின்ற ஒரு பின்னடைவாகவும் வீழ்ச்சியாகவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதனை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும். எனவே அதன் நகர்வை அவதானிக்க வேண்டும்.
பின்னணியும் நகர்வும்
இலங்கையின் இன அரசியல் தொடர்புகளில் காணப்படும் அண்மைக்கால மற்றும் நிகழ்கால நகர்வுகளை பின்வரும் வகையில் இனங்கண்டு கொள்ளலாம்.
(I) இனப் பிரச்சினை, தேசிய பிரச்சினையை அரசியல் யாப்பு மறுசீரமைப்பு மூலம் அரசியல் ரீதியாகத் தீர்த்தல் என்பது இப்போது பிரதான அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒரு விடயமாக இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், அல்லது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் அமைக்க எதிர்பார்க்கின்ற இப்போது பதவியிலில்லாத அரசியல் கட்சிகள் விடயத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் காணப்படுவது கவனமானதும் இழிவளவானதுமான ஒரு பிரவேசமே.
(II) இப்போது பதவியிலுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி இலங்கையின் இனத் தொடர்புகள் பற்றிய அரசியல் திரைக்கதை வசனத்தை மறுசீரமைத்து எழுதும் நோக்கில் இல்லை.
(அ) சிங்கள பௌத்த இனவாத அரசியலின் ஆதிக்கத்தை மீளக் கட்டமைத்தல்
(ஆ) நடுநிலை தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேசிய அரசியலில் ஆற்றும் பங்களிப்பை பலவீனமான இழிவளவு நிலைக்குக் கொண்டு வருதல்
(இ) முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அரசியல் வகுப்பையும் தமிழ் அரசியல் வகுப்பின் சில பகுதிகளையும் அரசியல் ரீதியாக வளைத்துப் பிடித்துக் கொள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமை ஆற்றல் பெற்றுள்ளமை ஆகிய செயற்பாடுகள் மூலமே இவற்றை செய்துள்ளது.
(III) பொதுஜன ஐக்கிய முன்னணியில் பசில், மகிந்த தலைமையும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் முன்வைக்கின்ற விடயமானது இலங்கை தமிழ் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினை கிடையாது என்பதும் இருப்பதெல்லாம் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளே என்பதுமாகும். எனவே அரசியல் தீர்வு காண வேண்டிய தேசிய பிரச்சினை எதுவும் இலங்கையில் இல்லை எனவும் இதன் மூலம் கூறப்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபியும் சிங்கள பௌத்தவாத விளக்கத்துக்கு சவால் விடுவதாக இல்லை. அரச மறுசீரமைப்புக்கு பதிலாக குறைந்தபட்ச சட்ட மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்பு என்ற புதிய மாற்று வழியை அவர்கள் தெரிவுசெய்து கொள்வதற்கான பிரதான காரணமாக இருப்பதும் இந்த விடயமாகும்.
(IV) சிங்கள அரசியல் கட்சிகளின் தலைமைகள் மலையகத் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள் என்பவர்களை நோக்கி எப்போதும் முன்வைக்க ஆயத்தமாகவுள்ள அரசியல் தீர்வு பெரும்பாலும் தமது ஆதிக்கத்தின் கீழ் அமைக்கப்படும் இனங்களுக்கு இடையிலான போலிக் கூட்டாட்சி நிர்வாக அமைப்பின் அங்கத்துவமாகும். இது 1947 முதலே சிங்கள அரசியல் வகுப்பினர் பரீட்சித்துள்ள பிரித்தாளும் தந்திரத்தை முன்கொண்டு செல்வதாகும்.
நேரடி யுத்தமல்லாத வேறு வழிகளில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளை தம் பக்கம் வளைத்துக் கொள்ளும் ராஜபக்ச மூலோபாயத்தைப் பற்றி சிங்கள அரசியல் தலைமைகள் இப்போதெல்லாம் ஆர்வத்துடன் அவதானித்திருப்பதாகவும் கூற முடியும். இது இலங்கையின் இனத் தொடர்புகள் பற்றிய அரசியல் முகாமைத்துவத்துக்காக உருவாகியுள்ள ராஜபக்சவாத பிரவேசத்தைப் பொதுமைப்படுத்தல் என்றும் அறிமுகம் செய்யலாம்.
(V)- இலங்கையின் இனங்கள் தொடர்பான அரசியல் பற்றி எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் அரசியல் கருத்தாடல் பெரும்பாலும் இத்தகைய பெயரளவு தீர்வு நோக்கியதாகவே அமையும். அதன் பிரதான அம்சங்களாக
(அ) சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் அல்லாத பொருளாதார மற்றும் அபிவிருத்தி தீர்வு முன்வைக்கப்படல்
(ஆ) மேலோட்டமாகச் செய்யப்படும் குறைந்தளவு யாப்பு மாற்றங்கள் மூலம் அரசியல் ரீதியாக முக்கியத்துவமற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்படுதல்.
(VI)- தமிழர் தேசிய கூட்டணி தவிர்ந்த ஏனைய எந்தக் கட்சியும் தேசிய பிரச்சினை அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான ஓர் அரசியல் பிரச்சினையாக கருதாமல் இருக்க இடமுண்டு.
(VII)- இலங்கை தற்போது எதிர்நோக்கும் கூர்மையான பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சவால்களின் முன்னே இருளில் அங்குமிங்கும் துலாவிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் ஜாம்பவான்களுக்கும் வேறு அரசியல் சவால்கள் பற்றி சிந்திப்பதற்கான ஆற்றல் உள்ளதா என்பது சந்தேகமே. இலங்கை இனக்குழுக்களுக்கு இடையிலான அதிகாரத் தொடர்புகளும் அதிகாரச் சமநிலையும் சிறுபான்மையினருக்கு தீமை பயக்கும் விதமாக மாற்றம் பெற்றிருப்பது தொடர்ந்து நீடிக்கும் பின்னணியில் இந்நிலைமையில் மாற்றம் கொண்டுவருவது என்பது சற்று சிரமமான விடயமே.
(VIII)- அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நெருங்கும் வரை இலங்கையின் அரசியல் முறை மற்றும் யாப்பு மாற்றக் கலந்துரையாடல்களில் தேசிய பிரச்சினைத் தீர்வு என்ற கருத்து உள்வாங்கப்படுதல் எவ்வாறு நிகழும் என்பது தெளிவில்லை. அதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாரில்லாத சூழலில் அக்கட்சிகள் இனங்களுக்கு இடையிலான சுயாதீனமானதும் பரந்துபட்டதுமான ஒரு முயற்சியின் தேவை எழுப்பப்படுகின்றது.
மேற்படி விடயங்களில் இருந்து விளங்குவது இலங்கை அரசியலில் ஓர் இடைவெளி அல்லது வெறுமை நிலை உருவாகியிருப்பதாகும். அது இனப்பிரச்சினை தீர்வு மட்டுமன்றி இலங்கையின் அரசியல் பாதையை ஜனநாயக வழியில் திருப்புதல் மற்றும் உக்கிரமடையும் பொருளாதார சமூக நெருக்கடியை எதிர்நோக்குதல் ஆகிய மூன்று கருப்பொருள்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு புதிய அரசியல் கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கான அவகாசமுமாகும். அதாவது இலங்கை அரசியலை புதிய பாதைக்குத் திருப்புவதை நோக்காகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் உருவாகும் கட்சியல்லாத அரசியல் இயக்கங்களுக்கான அவகாசமுமாகும். 2014ஆம் 2015ஆம் ஆண்டுகளின் அனுபவங்களின் ஒரு சாதகமான பக்கத்தை நாம் இங்கு நினைவுகூரலாம். அது யாதெனில் அரசியல் கட்சிகளில் இருந்து தூரமான பிரசைகள் மற்றும் சிவில் சமூக முயற்சிகள் மூலம் நாட்டின் அரசியல் பாதைக்கு சவால்விடக் கூடியதும் அதனைத் திசைதிருப்பக் கூடியதுமான ஆற்றல் மிக்க ஓரளவுக்கேனும் மாற்று அரசியல் பார்வையும் நிகழ்ச்சித் திட்டமும் முன்மொழியப்பட்டமையே.
புதிய பின்னணி
இத்தகைய புதியதொரு சமூக முயற்சி ஏற்படுவதற்கான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளது. அந்தப் பின்னணி மற்றும் அவகாசத்தினூடாக எழும் பிரசைகள் மற்றும் சிவில் சமூக இயக்கம் பின்வரும் பண்புகளுடன் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
(I)- அதன்மூலம் முன்னெடுக்கப்படும் மாற்றுநோக்கும் நிகழ்ச்சி நிரலும் வலியுறுத்தப்பட வேண்டியுள்ளவை.
(அ) நாட்டின் பொருளாதார சமூக நெருக்கடியை முகாமைத்துவப்படுத்தலும் தீர்வு காண்பதும்
(ஆ) ஜனநாயக மயமாக்கல் மற்றும் தீவிர ஆதிக்கவாத அரசியல் சீரழிவைத் தடுத்து நிறுத்துதல்
(இ) இனப்பிரச்சினையைத் தீர்த்தல்
ஆகிய மூன்று நோக்கங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடைய ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க இயலாத விடயங்கள் என்பதாகும். அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தெடுத்தல் அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின்போது பொருத்தமாக இருப்பினும் சிவில் சமூக இயக்கமொன்றின் நிர்ணயிக்கப்பட்ட பண்பாக இருக்க வேண்டியது; அந்த நோக்கங்களின் இடைத் தொடர்பையும் பரஸ்பர பிரிக்க முடியாத தன்மையையும் காண்பதாகும்.
(II)- அத்தகையதொரு முயற்சியின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்பட முடியுமாவது அது இலங்கையின் சகல இனங்களையும் சேர்ந்த சமூகக் குழுக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்குபற்ற முடியுமான வகையிலான இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பன்மைத்துவமான பங்குபற்றல் இருந்தாலேயாகும். அது எந்த வகையிலும் சிங்கள பௌத்த பெரும்பான்மை அமைப்பாக இருக்கக் கூடாது.
தேசிய பிரச்சினை பற்றி பேசும்போது அது சிறுபான்மையினரின் தேவையாக மட்டுப்படுத்தும் தவறை மீண்டும் செய்யாதிருப்பது அப்போதுதான்.
(III)- 2013–-2015 ஆண்டுகளின்போது ஜனநாயகத்திற்கு திரும்பிய காலப்பகுதியில் “நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல்” என்ற தனிப்பட்ட ஒரு கோசம் எழுந்தமை தனியான ஒரு நோக்கத்தின் அடிப்படையிலான கட்சிகளுக்கு அப்பால் நிற்கும் ஓர் இயக்கத்தின் பலத்தினாலாகும். ஆயினும் அதன் மட்டுப்பாடுகளும் காலக்கிரமத்தில் கண்டறியப்பட்டது. அந்த அனுபவத்தை இனப் பிரச்சினை தீர்வுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை சிறுபான்மை மக்களின் கட்சிகளின் தேர்தல் கோசங்களாக சுருக்கிக் கொள்ளக் கூடாது. அத்துடன் தமிழ் முஸ்லிம் பிரசைகள் இனம் என்ற வகையில் அனுபவிக்கும் அழுத்தங்கள் மற்றும் கவலைகள் தொடர்பில் அவர்களது இனத்துக்கே உரிய தீர்வுகளை முன்மொழிவதுடன் அந்தப் போராட்டத்தை சிங்கள இனத்தின் பிரசைகள் சமூக நீதிக்காக மேற்கொள்ளும் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தும் ஓர் அரசியல் முன்நோக்கும் கடியெழுப்பப்பட வேண்டும்.
இங்கு எழும் இரண்டு இடைக்கால முடிவுகளை வலியுறுத்தி எமது இக்கலந்துரையாடலை நிறைவு செய்யலாம். இனப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை புதிய பாணியிலான ஒரு மாற்று அரசியல் நோக்குடன் தொடர்புபடுத்துதல், மற்றும் இனத் தொடர்பு அரசியலுக்கு இன்று இலங்கையில் ஏற்பட்டிருப்பது முன்னே செல்ல முடியாத வகையில் ஸ்தம்பித்து இருக்கின்ற நிலை அதாவது டெட்லொக் ஆக்கப்பட்டிருப்பதால் அதனை உடைத்து முன் செல்ல முடியுமான ஒரு சாதக நிலையாகும். இரண்டாவது, இனப் பிரச்சினைக்குத் தீர்வு சிறுபான்மையினரதும் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் உரிமைகள், சமூக நீதி, சமத்துவம், பொருளாதார, சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக மயமாக்கல் தொடர்பான மொத்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும் என்பதால் சிங்கள மக்களும் நன்மையடையும் ஓர் இயக்கம் என்ற கருத்தை அரசியல் கலந்துரையாடலுக்குள் கொண்டு வருவதாகும்.-Vidivelli