சிங்களத்தில்: நிமந்தி ரணசிங்க
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 1000 நாட்கள் கடந்து சென்றுவிட்டன. தங்களின் அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீட்டிப்பார்த்து இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த நினைவுகள் அத்தனை கொடூரமானவை.
அண்மையில் பொரளை சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் கைக்குண்டொன்று வெடிக்கவிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மக்களின் மனதில் மீண்டும் நினைவுக்கு வந்துள்ளன. கடந்த வாரங்களில் இச்சம்பவம் பற்றியே பேசப்பட்டது.
இங்கு நாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்வதற்கு தற்கொலை குண்டுதாரிகளுக்கு வலுச்சேர்த்த பெண்களைப் பற்றி விபரிக்கிறோம்.
இஸ்லாமிய ஆட்சியொன்றினை நிறுவுவதற்காக தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானுடன் பலியான தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதலுக்கு முன்தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு வீடியோ பதிவொன்றினை வெளியிட்டனர். இந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. இது இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களை உள்ளடக்கிய வீடியோ பதிவாகும்.
தற்கொலை குண்டுதாரிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 01.12 இலிருந்து பிற்பகல் 3.32 மணிவரையான காலப்பகுதியில் இந்த வீடியோ பதிவினை மேற்கொண்டுள்ளார்கள். அதாவது உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் மாத தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு முன்னைய தினமாகும்.
இந்த வீடியோ கல்கிசை ஸ்பேன் டவர் மாடி வீட்டுத் தொகுதியில் 9 ஆம் மாடியில் 3 ஆவது வீட்டிலிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். வீடியோ பதிவினை கண்காணித்தபோது அந்தப்பதிவில் தங்க வளையலொன்று அணிந்திருந்த பெண் ஒருவரும் இருந்துள்ளமையை விசாரணையாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்தப்பெண் புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜெஸ்மின் என அடையாளம் கண்டுள்ளனர்.
புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜெஸ்மின் என்னும் பெண் யார்? கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவியே சாரா ஜெஸ்மின். “சாரா” இறந்து விட்டாரா? இல்லையா? இவர் இந்தியாவுக்கு தப்பி ஓடிச் சென்று விட்டாரா? என்றெல்லாம் நிலவிய சந்தேகம் சமூகத்தில் தொடர்ந்தும் அவ்வாறே இருந்து வருகின்றது.
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் தாங்கள் வாழ்ந்த வீட்டிலேயே இறுதியாக சாரா ஜெஸ்மின் தங்கியிருந்ததாக மொஹமட் சஹ்ரானின் மனைவி விசாரணைகளின் போது தெரிவித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து குண்டுதாரிகள் பலியானார்கள். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம் பெற்று ஐந்து தினங்களுக்குப் பின்பே இச்சம்பவம் நடைபெற்றது. அந்த வீட்டில் இரண்டு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு அங்கிருந்த 16 பேர் பலியானமை உறுதி செய்யப்பட்டது. 5 ஆண்களும், 5 பெண்களும் 3 ஆண் பிள்ளைகளும், 3 பெண்பிள்ளைகளும் பலியானார்கள். அவர்களின் சிதறிய உடற்பாகங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. பலியானவர்களில் மொஹமட் சஹ்ரான் ஹஷீம் உட்பட தீவிரவாதிகளுக்கு நிந்தவூர் மற்றும் சென்ட்ரல் கேம்ப் வீடுகளில் பொருட்களை மறைத்து வைப்பதற்கு உதவிய மொஹமட் நியாஸ், சஹ்ரானின் தந்தை, சஹ்ரானின் சகோதரர்களான மொஹமட் சைனி, மொஹமட் காசிம், மொஹமட் ரில்வான் மற்றும் அவரது மகன் மொஹமட் சஹ்ரான் வசீம், அவரது சகோதரி மொஹமட் காசிம் ஹிதாயா (கர்ப்பிணி பெண்), அவரது தாயார் அப்துல் சகார் சித்தி உம்மா, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தி பலியான மொஹமட் நஸார் மொஹமட் அசாத் என்பவரின் மனைவி அப்துல் ரஹீம் பெரோசா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதர் என்பவரும் அவரின் மகளான மொஹமட் சஹ்ரான் ருதைனா ஆகிய இருவருமே உயிர் தப்பியுள்ளனர். வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் அறையொன்றினுள் இருந்து சாரா ஜெஸ்மினின் பணப்பை (பர்ஸ்) ஒன்றினை பொலிஸார் கண்டெடுத்தனர். என்றாலும் சாரா ஜெஸ்மினின் உடற்பாகங்களை பொலிஸாரால் அடையாளம் காண்பதற்கு முடியாமற் போனது. சஹ்ரானின் மனைவி வழங்கியுள்ள வாக்கு மூலங்களின்படி இறுதி நேரம் வரை சாரா ஜெஸ்மின் அவர்களுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரா ஜெஸ்மின் சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானமை உறுதி செய்யப்படவில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கடந்த 2020 ஜூலை மாதம் 21 ஆம் திகதி சாட்சியமளித்தபோது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமன்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டத்தில் சாரா ஜெஸ்மின் சாய்ந்தமருது வீட்டில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்பு காணப்பட்ட எந்தவொரு சடலமும் சாரா ஜெஸ்மினின் தாயாரது டி.என்.ஏ. உடன் சம்பந்தப்பட்டதாகக் காணப்படவில்லை எனவும் பொலிஸ் அத்தியட்சகர் சாமன்த விஜேசேகர தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கிய பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மாஹின்கந்த வேறுபட்ட சர்ச்சைக்குரிய விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிர்தப்பிய புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜெஸ்மின் களுவாஞ்சிக்குடி மாங்காடு பகுதியில் மறைந்து இருப்பதாக கண்களினால் கண்டவர் ஒருவர் கடந்த 2020 ஜூலை மாதம் 6ஆம் திகதி தகவல் ஒன்றினை வழங்கினார். அந்தத் தகவலையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நான் மட்டக்களப்புக்குச் சென்றேன். அங்கு சாரா ஜெஸ்மினை நேரில் கண்ட நபரைச் சந்தித்தேன்.
அவர் எனக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணியளவில் நான் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேத்தாதீவு பிரதேசத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பிரதான வீதியை அடையக்கூடியதான குறுக்கு பாதையான பீச் வீதியிலிருந்து பெண்ணொருவரும் நபர் ஒருவரும் பிரதான வீதிக்குள் நுழைவதைக் கண்டேன் என்று சாட்சியமளித்துள்ளார்.
அந்தப் பெண் முகத்தை மறைக்காத வகையில் கறுப்பு நிற பர்தா அணிந்திருந்தாள். அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா ஜெஸ்மின் சிறிய வயதிலிருந்தே தனது வீட்டுக்கு அருகில் ஓர் வீட்டில் வாழ்ந்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் சாரா ஜெஸ்மின் தொடர்புபட்டவர் என ஊடகங்கள் பிரசாரம் செய்தமை காரணமாக அவரை இலகுவில் நான் அடையாளம் கண்டு கொண்டேன் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பிரதான வீதிக்கு வந்த அந்தப் பெண் அங்கு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பிக்அப் வண்டியின் பின் ஆசனத்தில் ஏறுவதை சாட்சியாளர் கண்டுள்ளார். வண்டியில் சாரதியின் ஆசனத்துக்கு அடுத்த முன் ஆசனத்தில் அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அமர்ந்திருப்பதையும் சாட்சியாளர் கண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப்பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பின்பு கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட அபூபக்கர் எனும் அதிகாரியாவார். அவரையே சாட்சியாளர் கண்டுள்ளார். சாட்சியாளர் பொலிஸ் அதிகாரியுடன் கதைப்பதற்கு தயாரானபோது அந்த பிக்அப் வண்டி மட்டக்களப்பு பகுதியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
சாரா ஜெஸ்மின் படகொன்றின் மூலம் இந்தியாவுக்கு தப்பித்துச் செல்வதற்கு சாராவின் தாயினது உறவினர் ஒருவரே உதவி செய்துள்ளார். மேலும் அவளது சகோதரரும் உதவி செய்துள்ளார் என்பதை விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறென்றால் சாரா ஜெஸ்மின் இப்போது எங்கே இருக்கிறார்.?
தற்போது சாரா ஜெஸ்மினின் புதிய கதையொன்றை அண்மையில் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து கேட்க முடிந்தது.
அது, சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப்பயிற்சி மற்றும் அடிப்படைவாத போதனைகளில் கலந்து கொண்ட பெண்கள் பற்றியதாகும்.
இஸ்லாமிய அரசொன்றினை நிறுவுவதற்காக சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்து கொண்டதாக கூறப்படும் 10 பெண்கள் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவர்களை விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாரா ஜெஸ்மினின் தலைமையில் 16 பெண்கள் இஸ்லாமிய அரசொன்றினை நிறுவுவதற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 6 பேர் சாய்ந்தமருது பிரதேசம் மற்றும் தெமட்டகொட மஹவில கார்டன் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியாகியுள்ளார்கள் என்று பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட 16 பெண்களுடன் 9 ஆண்களும், இந்த சத்தியப்பிரமாணம் (பைஅத்) நிகழ்வில் பங்குகொண்டிருந்துள்ளனர். இந்த வகையில் மொத்தம் 25 பேர் இஸ்லாமிய அரசாங்கம் (ஆட்சி)யொன்றினை நிறுவுவதற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளமை இதிலிருந்து தெரியவருகிறது.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களான 10 பெண்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பல தகவல்களை நீதிமன்றின்முன் வைத்தது. இந்தப்பெண்கள் சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப்பயிற்சி பெற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக முகாமிட்டு அடிப்படைவாத போதனைகளில் கலந்து கொண்டுள்ளார்கள். அத்தோடு அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கைகளுக்கு உட்பட்டு ஆயுதப்பயிற்சிகள் கூட பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனும் விபரங்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த 10 பெண்கள் உட்பட மொத்தம் 25 பேரும் அம்பாந்தோட்டை, நுவரெலியா பிளக்பூல், காத்தான்குடி, பன்டா மல்டி ஸ்போர்ட்ஸ், கர்பலா நகர், லேவெல்ல, யடிஹேன மல்வான, செட்டிக்குளம், தல்கஸ்வெவ, ரம்பேவ, மதவாச்சி ஆகிய பகுதிகளில் நடாத்தப்பட்ட ஆயுதப்பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் பெற்றுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்த 10 பெண் சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இவ்விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த அனைத்து விபரங்களும் பொலிஸ் விசாரணைகளையடுத்தே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அப்படியென்றால் இந்தப் பெண்கள் இஸ்லாமிய ஆட்சியொன்றை தேடிச் செல்வதற்கு அல்லது நிறுவிக் கொள்வதற்கு முயற்சித்தார்களா? தமது பிள்ளைகளை விட இஸ்லாமிய ஆட்சி மேலானதா?
தங்கள் பிள்ளைகளைக்கூட பலி கொடுத்து இஸ்லாமிய ஆட்சியை தேடிச் செல்லும் வகையில் அவர்களது மூளைகளை சலவை செய்தவர்கள் இன்று எங்கே?
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரியின் சாட்சியத்தை நாம் மீட்டுப்பார்க்க வேண்டும்.
‘தெமட்டகொட மஹவில கார்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தை கண்காணிக்கச் சென்ற சொகோ பொலிஸ் பிரிவின் அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆரச்சி தனது சாட்சியத்தில் இவ்வாறு கூறுகிறார்.
“தற்கொலை குண்டுதாரியான பெண் நிலத்தில் குண்டினை வைத்து பிள்ளைகளை தன்னுடன் அணைத்துக்கொண்டு நிலத்தின்மீது படுத்துக்கொண்டு அதனை வெடிக்கச் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
அப்படியானால் அந்தத் தாய் தனது கர்ப்பப் பையிலிருந்த குழந்தை மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இறுதியாக எங்கு பயணமானார்?
நன்றி : ஞாயிறு லங்காதீப.
-Vidivelli