ஹிஜாஸுக்கு எதிராக இரகசிய வாக்குமூலமளிக்க சாட்சியாளருக்கு சட்டத்தரணியை ஏற்பாடு செய்துகொடுத்த சி.ஐ.டி.
குறுக்கு விசாரணைகளில் வெளிப்பட்ட பல உண்மைகள்
எம்.எப்.எம்.பஸீர்
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக கடந்த 2020 மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் ரங்க திஸாநாயக்க ( தற்போது மேல் நீதிமன்ற நீதிபதி) முன்னிலையில் இரகசிய வாக்குமூலமளிக்க, சி.சி.டி.யின் அதிகாரி ஒருவர் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் எனும் சாட்சியாளருக்கு சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில் புத்தளம் மேல் நீதிமன்றில் அரச தரப்பின் பிரதான சாட்சியாளராக அடையாளப்படுத்தப்படும் புத்தளம், அல் சுஹைரியா மதரஸாவின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்சியம் ஊடாக இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 18 ஆம் திகதி மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணியின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளித்தார்.இதன்போது மனோகர டி சில்வா எனும் சட்டத்தரணியை சி.ஐ.டி. அதிகாரி தனக்கு ஏற்பாடு செய்து தந்ததாகவும், தான் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலமளிக்கும் போது, அச்சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படங்களைக் காட்டி அடையாளம் காண உதவி செய்ததாகவும், இரகசிய வாக்கு மூலம் பெறும் சந்தர்ப்பத்தில் அச்சட்டத்தரணியும் நீதிவானின் அறையில் இருந்ததாகவும் சாட்சியாளர் மலிக் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 18 ஆம் திகதி அவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் இறுதியாக விசாரணைக்கு வந்திருந்தது.
அன்றைய தினம், பிணையில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா அதிபர் சகீல் கான் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸவின் குறுக்கு விசாரணைகள் பிரதானமாக குறித்த தினத்தன்று இடம்பெற்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸாவில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, முதலில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் கடந்த தவணை விசாரணை பதிவுகளில் உள்ள சில பிழைகள் திருத்தம் செய்யப்பட்டன. 7 தவறுகள் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டன.
வழக்குத் தொடுநர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி லக்மினி கிரிஹாகம, அரச சட்டவாதி கிஹான் குணசேகரவுடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா மன்றில் ஆஜராகியிருந்தார்.
முதல் பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ ஆஜரானார். 2 ஆம் பிரதிவாதியான அதிபருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள பிரசன்னமானார்.
இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வை செய்யும் நிலையில் அதற்காக சட்டத்தரணி அனுஷா கன்னங்கரவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட பிரசன்னமாகியிருந்தார்.
இந் நிலையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.
கடந்த தவணை ( 2022 ஜனவரி 28 ஆம் திகதி)சாட்சியாளர் நீதிமன்றில் வழக்குத் தொடுநர் தரப்பின் நெறிப்படுத்தலில் வழங்கிய சாட்சியங்களில் கூறிய விடயங்களை மையப்படுத்தி அவர் குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.
அதன்படி, இந்த விவகாரத்தில் சி.ஐ.டி.யினருக்கு முதல் வாக்கு மூலத்தை தான் தன் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் வைத்து வழங்கியதாகவும் அது கடந்த 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி வழங்கப்பட்டது என்பதையும் சாட்சியாளர் வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 2 ஆம் வாக்கு மூலத்தை மறுநாள் அதாவது 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி சி.ஐ.டி.யில் வைத்து வழங்கியதாகவும், அன்றைய தினம் சி.ஐ.டி.யினர் தன் வீட்டுக்கு வந்து தன்னையும் தனது சகோதரனையும் சி.ஐ.டி.க்கு அழைத்துச் சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகவும் சாட்சியாளர் குறுக்கு விசாரணைகளிடையே கூறினார்.
இந்த வாக்கு மூலத்தை வழங்கச் செல்ல முன்னர், 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு வேளையில் தான் அனைத்து விடயங்களையும் நினைவுபடுத்திக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாக்கு மூலம் வழங்கும் போதும், தான் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை அறிந்திருக்கவில்லை எனவும் சி.ஐ.டி.யினர் புகைப்படங்களை காட்டிய போது புகைப்படத்தையே அடையாளம் கண்டதாகவும், அவர்களே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என பெயரை தெரிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார். மூன்றாவது சி.ஐ.டி. வாக்கு மூலம் கடந்த 2021 பெப்ரவரி 13 ஆம் திகதி தன்னால் வழங்கப்பட்டது எனவும் அவ்வாக்கு மூலம், தான் அப்போது வேலைபார்த்த நீர்கொழும்பு, கட்டான வர்த்தக நிறுவனத்துக்கு வந்த சி.சி.டி. அதிகாரிகளால் பெறப்பட்டது எனவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
குறித்த அனைத்து வாக்கு மூலங்களிலும் தனக்கு தெரிந்த, மிக முக்கியமான, கண்டிப்பாக வெளிப்படுத்தவேண்டிய அனைத்து விடயங்களையும் கூறியதாக சாட்சியாளர் கூறினார்.
அதன்படியே, இந்த விவகாரத்தில் தான் அறிந்த, முக்கியமான தகவல்கள் அனைத்தையும், எந்த அழுத்தங்களும் இன்றி, சுயாதீனமாக சி.ஐ.டி.யினருக்கும், நீதிவானுக்கும், வழக்கு விசாரணை இடம்பெறும் மேல் நீதிமன்றில் சாட்சியமாகவும் தெரிவித்ததாக குறிப்பிட்ட சாட்சியாளர் ஏற்கனவே கடந்த 2022 ஜனவரி 28 ஆம் திகதி வழங்கிய சாட்சியத்தில் கூறிய விடயங்களை சி.ஐ.டி. அதிகாரிகளிடமும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அதன் படி, கடந்த 2022 ஜனவரி 28 ஆம் திகதி சாட்சியாளர் மலிக் தான் அறிந்த மிக முக்கியமானது என கருதும் விடயங்கள் அனைத்தையும் சாட்சியமாக வழங்கியதாக கூறிய நிலையில், அதில் கூறப்பட்ட விடயங்கள் எவையும் சி.சி.டி.யின் 3 வாக்கு மூலங்களிலும் சாட்சியாளரால் எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை என குறுக்கு கேள்விகளை தொடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றுக்கு பிரஸ்தாபித்தார்.
குறிப்பாக, முதல் பிரதிவாதியான ஹிஜாஸ், அல் சுஹைரியா மத்ரசாவுக்கு வந்து, அங்கிருந்த சுமார் 60 மாணவர்களுக்கு மத்தியில் விரிவுரை ஒன்றினை நடாத்தியதாகவும் (சாட்சியாளர் பயன்படுத்திய சொல் லெக்சர்) அதன்போது ஒவ்வொருவரையும் எழுந்து தம்மை அறிமுகம்( சாட்சியாளர் பயன்படுத்திய சொல் இன்ட்ரடியூஸ்) செய்துகொள்ளுமாறு கூறியதாகவும், பின்னர் ஒவ்வொருவரிடமும் அவர்களது இலட்சியம் ( சாட்சியாளர் பயன்படுத்திய சொல் எம்பிஷன்) தொடர்பில் வினவியதாகவும் சாட்சியாளர் கடந்த தவணையில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது புரொஜெக்டர் ஒன்றினை பயன்படுத்தி பலஸ்தீன் – இஸ்ரேல் விவகார காட்சிகளைக் காட்டி, பலஸ்தீனில் கிறிஸ்தவர்கள் எங்களது பள்ளிவாசலையே ஆக்கிரமித்துள்ளதாகவும், போராடுவதற்கு தயாரானவர்கள் யார் என கேட்டதாகவும், சிலர் விருப்பம் தெரிவித்து கை உயர்த்தியதாகவும் சாட்சியாளர் கடந்த தவணை ( 2022.ஜனவரி 28) சாட்சியமளித்திருந்தார்.
இந்த விடயங்கள் சாட்சியாளரின் முதல் 3 சி.ஐ.டி. வாக்கு மூலங்களில் ஒன்றிலேனும் கூறப்படவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ரதிஸ்ஸ மன்றுக்கு குறுக்கு விசாரணைகள் ஊடாக பிரஸ்தாபித்து அவற்றை பதிவு செய்தார்.
மிக முக்கியமானது என கூறி சாட்சியாளரால் கடந்த தவணையில் நீதிமன்றில் குறிப்பிடப்பட்ட அந்த விடயங்கள், சி.சி.டி. விசாரணையின் போது எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை என்பதை அவர் மன்றில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சாட்சியாளரிடம் வினவப்பட்ட போது, தனக்கு அவற்றை சி.ஐ.டி.யினரிடம் கூறினேனா இல்லையா என்பது தொடர்பில் ஞாபகம் இல்லை எனவும், வாக்கு மூலத்தில் அவை உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டால் தான் கூறவில்லை என ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே இந்த விவகாரத்தில், கடந்த 2020 மே 12 ஆம் திகதி கோட்டை நீதிவானுக்கு வழங்கப்பட்ட இரகசிய வாக்கு மூலத்தை மையப்படுத்தி கேள்விகள் தொடுக்கப்பட்டன. அந்த இரகசிய வாக்கு மூலத்தில் ஹிஜாசின் பெயரைக் கூட பிரதிவாதி கூறவில்லை எனவும், அவ்வாக்குமூலத்திலும் மிக முக்கியமான விடயமாக கருதி சாட்சியாளரால் மன்றில் கூறப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் எவையும் கூறப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றில் பதிவு செய்தார்.
இதனிடையே, கோட்டை நீதிமன்றில் இரகசிய வாக்கு மூலம் வழங்கச் சென்ற போது உங்களுக்காக சட்டத்தரணி ஒருவர் ஆஜரானாரா? அவர் யார்?, அவரை நீங்களா அல்லது உங்கள் தாயாரா ஏற்பாடு செய்தார் போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த சாட்சியாளர்,
‘ கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளிக்க சென்ற போது எனக்காக சட்டத்தரணி ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டார். சி.ஐ.டி. அதிகாரி ஒருவரே சட்டத்தரணியை ஏற்பாடு செய்தார். சட்டத்தரணியின் பெயர் மனோகர டி சில்வா. ஏற்பாடு செய்த சி.சி.டி. அதிகாரியின் பெயர் எனக்கு தெரியாது. எனினும் அவரை கண்டால் அடையாளம் காட்டலாம். இந்த விடயத்தில் விசாரணை செய்த சி.ஐ.டி. அதிகாரியே சட்டத்தரணியை ஏற்பாடு செய்தார். எனக்கோ, எனது தாயாருக்கோ சட்டத்தரணிகளுடன் பழக்கம் இருக்கவில்லை.’ என சாட்சியமளித்தார்.
அத்துடன் மற்றொரு சந்தர்ப்பத்தில், தொடுக்கப்பட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளித்த சாட்சியாளர், இரகசிய வாக்கு மூலம் வழங்க நீதிவானின் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட போது சி.ஐ.டி. அதிகாரியால் தனக்கு ஏற்பாடு செய்து தரப்பட்ட சட்டத்தரணியும் உடன் இருந்ததாகவும், வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் போது அவர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படத்தை தனக்கு காண்பித்ததாகவும், அதனூடாக அவரை அடையாளம் கண்டதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில், குறித்த இரகசிய வாக்கு மூலத்தில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஆரம்பித்த விசாரணைகளிலும், இவ்வழக்கின் பிரதான சாட்சியாளரான மலிக் வாக்கு மூலமளித்துள்ள நிலையில், அவ்வாக்கு மூலம் அவசியம் எனவும், அது இதுவரை அதனை கோரிய போதும் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அதில் இவ்வழக்குடன் தொடர்புடைய விடயங்கள் கூறப்பட்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் அதற்கு பதிலளித்த அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, அவ்வாக்கு மூலம் இவ்வழக்குடன் நேரடியாக தொடர்புபடாதது எனவும், எனினும் அவ்வாக்கு மூலத்தை பார்வையிட அவசியம் என பிரதிவாதிகள் கருதுவாராயின் அதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார். அதற்கு நீதிமன்றமே தேவையான உதவிகளை செய வேண்டும் எனவும், சி.சி.டி. பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டு அந்த வாக்கு மூலம் அடங்கிய புத்தகத்தை நீதிமன்றுக்கு எடுத்துவரச் செய்து அதனை பார்வையிட அனுமதிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதி குமாரி அபேரத்ன, குறித்த விவகார வாக்கு மூலம் அடங்கிய புத்தகத்தை அல்லது புத்தகங்களை அடுத்த தவணையின் போது எடுத்துவருமாறு சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இவ்வழக்கின் மேலதிக குறுக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. வழக்கில் விளக்கமறியலில் உள்ள 2 ஆம் பிரதிவாதியான மத்ரஸா அதிபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.- Vidivelli