மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றம் மறுப்பு
( எம்.எப்.எம்.பஸீர்)
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, அவர்களது சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மேல் நீதிமன்றில் நீதிபதி ஜகத் கஹந்தகமகே தலைமையிலான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இந்த பிணைக் கோரிக்கையை நிராகரித்து நேற்று அறிவித்தது.
அத்துடன் 3,4,14 ஆம் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணி சஷிக பெரேரா குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் குற்றவியல் சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு மாற்றமானது என அடிப்படை ஆட்சேபனை ஒன்றினை முன் வைத்திருந்த நிலையில், அதனையும் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நிராகரித்து வழக்கை விசாரணை செய்ய தீர்மானித்தது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்த வழக்கு, நேற்று, கேகாலை மேல் நீதிமன்றில் நீதிபதி ஜகத் கஹந்தகமகே தலைமையிலான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் வழக்குத் தொடுநர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா தலைமையில், சட்டவாதிகளான ஹரீந்ர ஜயசிங்க, உதார கருணாதிலக, சஜின் பண்டார ஆகியோர் ஆஜராகினர்.
1,2,5,12,13,16 ஆம் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையில் சட்டத்தரணிகளான எம்.சி.எம். முனீர், எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்டோர் ஆஜராகின்றனர்.
3,4,14 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி முபீனுடன் சட்டத்தரணி சஷிக பெரேரா ஆஜராகின்றனர்.
15 ஆம் பிரதிவாதிக்காக சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரணவும் சட்டத்தரணி அவ்தானும் ஆஜராகினர். 9 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி துஷாரி வராபிட்டியவுடன் சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆஜராகிறார்.. 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி எம். இம்தியாசுடன் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகின்றார்.
இந் நிலையில் வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 மார்ச் மாதம்22 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்காப்பாட்டு சட்டத்தின் கீழும் 21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர் மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதியில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயஙரவாத தடை சட்டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமகும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.
மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப், மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட், நஜிமுதீன் மொஹம்மட் பெளசான், ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர், அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, அபூ நஜா எனபப்டும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி, அபூ பலாஹ் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ ஹினா அல்லது சிவப்பு தாடி என அறியப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன், ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா எனப்படும் ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், ஹாஜா மொஹிதீன், ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.- Vidivelli