றிப்தி அலி
“அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் கடற்கரையோரத்தில் 75 தென்னை மரங்களுடன் காணப்பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டது. இக்காணிக்கான உறுதி என்னிடம் இருந்தும் காணி இல்லை” என்கிறார் 50 வயதான ஏ.எல்.எம். ஜெமீல்.
முப்பது வருடங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இது இலங்கையில் பெரும் பிரச்சினையொன்றாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே, ஒலுவிலைச் சேர்ந்த மீனவரான ஜெமீல், தனது காணியைக் காணவில்லை என்கிறார்.
தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமையப் பெற்றுள்ள ஒலுவில் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி கடற்கரையைக் கொண்டதாகும். சுமார் ஆறு கிலோ மீற்றர் நீளமான இந்த கடற்கரைப் பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் அப்போதைய துறைமுக அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் முன்மொழியப்பட்டு 1998.10.23ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனமானது.
ஆனாலும் இதன் நிர்மாணப் பணிகள் 2008.07.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2013.09.01ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியும் துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
வர்த்தகம் மற்றும் மீன்பிடி என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்துறைமுகம் சுமார் 52 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. இதற்காக ஒலுவில் மற்றும் அதனை அண்டிய பாலமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
“காணி சுவீகரிக்கப்பட்டவர்களுக்கு 7 கோடி 71 இலட்சத்து 55ஆயிரத்து 662 ரூபா இதுவரையில் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது” என துறைமுக அதிகார சபை தெரிவித்தது. எனினும் சில காணி உரிமையாளர்களுக்கு, இன்னும் நஷ்டஈடு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
வர்த்தக கப்பல்களுக்கு சரியான துறைமுகம், கரையோர சலுகைகளை வழங்கல் மற்றும் கரையோர மார்க்கத்தை முன்னேற்றல், சீமெந்து மற்றும் உரம் தொழிற்சாலை உருவாக்குவதற்கான முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல், மீன் உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்த்து தொழில் வாய்ப்புகளை வழங்கல், கடலின் ஆழமான பகுதிகளில் பயணிக்கின்ற மீன்பிடி படகுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது என துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
இதேவேளை, ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்காக டென்மார்க் நோர்டியா வங்கி மூலம் 4 கோடி 60 இலட்சத்து 95ஆயிரத்து 369 யூரோ மற்றும் 45 சதம் வட்டியில்லாக் கடனாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாணயப் பெறுமதியில் இந்தத் தொகையானது 1,069 கோடி 19 இலட்சத்து 34 ஆயிரத்து 870 ரூபாவாகும்.
2011.03.31ஆம் திகதியிலிருந்து 10 ஆண்டுகளிற்குள் 20 தவணைகளில் செலுத்தி தீர்க்கும் நிபந்தனையில் இக்கடன் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய 2015.09.30ஆம் திகதியளவில் இக்கடன் தொகையில் 2 கோடியே 30 இலட்சத்து 4 ஆயிரத்து 634 யூரோ செலுத்தவேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடனை திருப்பிச் செலுத்தும் பணி திறைசேரியினாலேயே முன்னெடுக்கப்படுவதானால் இது தொடர்பான தகவல் எதுவும் எம்மிடமில்லை என துறைமுக அதிகார சபை குறிப்பிட்டது.
இத்துறைமுக நிர்மாணப் பணிகள் டென்மார்க் கம்பனிக்கே வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய MT Hojgaard எனும் நிறுவனமே இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது.
இந்தத் துறைமுகம் திறக்கப்பட்டு எட்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் வர்த்தகத் துறைமுகம் இன்னும் செயற்படத் தொடங்காமையினால் ஒரு கப்பல் கூட இந்த துறைமுகத்திற்கு இதுவரை வரவில்லை.
எனினும், மீன்பிடித் துறைமுகம் மாத்திரம் ஒரு குறிப்பிட காலப்பகுதியில் இயங்கியது. அதனையடுத்தே இயற்கைக்கு பெரும் அழிவு ஆரம்பமானது. இத்துறைமுக நிர்மாணத்தின் பின்பு துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக பல நூறு மீற்றர் நிலப்பரப்பை, கடல் விழுங்கிவிட்டது. இதனால் காணியை இழந்தவர்களில் ஒருவர் தான் ஏ.எல்.எம். ஜெமீல்.
சுமார் 30 வருடங்களாக பராமரித்து வந்த தென்னந் தோட்டம் கண் முன்னாலேயே கடலரிப்புக்குள்ளாகி அழிவடைந்தமையை பொறுக்க முடியாதுள்ளது என வேதனைப்பட்ட ஜெமீல், “இதற்காக அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித நஷ்டஈடும் கிடைக்கவில்லை” என்றார்.
இலங்கையின் மேற்கு பக்க நிலப்பரப்பு “துறைமுக நகரமாக” கடலினுள் அதிகரித்துச் செல்கின்ற சமயத்தில், கிழக்குப் பக்கமாக செயற்கையாக உருவாக்கப்பட்ட துறைமுகத்தினால் நிலப்பரப்பினுள் கடல் புகுந்துள்ளது. (பார்க்க வரைபடம் 1)
“இக்கடலரிப்பு காரணமாக இன்று எங்களது கிராமம் அழிந்துவிட்டது. இத்துறைமுகத்தினால் எமது ஊரிற்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் கூட நினைக்கவில்லை” என்கிறார் 52 வயதான மீனவர் எம்.எஸ்.ஜெமீல்.
துறைமுகத்தினால் ஊர் அழிவடையும் என்ற விடயம் முன்னரே தெரிந்திருந்தால், இதன் நிர்மாணப் பணிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, “இக்கடலரிப்பு நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப் பகுதியிலேயே அதிகமாகும். இதனால் மீன்பிடித் தொழிலை ஒழுங்காக மேற்கொள்ள முடியாமையின் காரணமாக பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்” என நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பீ. லத்தீப் தெரிவித்தார்.
“இந்த கடலரிப்பு தொடர்ந்தால் எமது பரம்பரையே அழிந்துவிடும்” என அவர் மேலும் கூறினார். 52 வயதான லத்தீப் கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருகின்ற மீன்பிடித் தொழிலை நம்பியே அவரது குடும்பம் வாழ்கின்றது.
இத்துறைமுகத்தினால் பாரிய சுற்றாடல் பாதிப்பு மாத்திரமல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலங்களும் சூறையாடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான ஒலுவில், அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இந்த கடலரிப்பினால் மீன்பிடித் தொழில் மாத்திரமன்றி, நன்னீர் மீன்பிடி, தென்னந் தோட்டம், பண் பயிர்ச்செய்கை மற்றும் விவசாயம் ஆகியன முற்றாக பாதிப்படைந்துள்ளன.
இக்கடலரிப்பு காரணமாக நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் 148 ஏக்கர் தனியார் காணிகள் கடலுக்குள் மூழ்கியுள்ளதுடன், சுமார் 120 ஏக்கர் தனியார் காணிகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 45 சதவீதம் விவசாயம் மற்றும் தென்னங் காணிகளும், 33 சதவீதம் விவசாய காணிகளும், 12 சதவீதம் தென்னங் காணிகளும் காணப்படுகின்றன. இக்காணிகளின் விளைச்சலும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கு பாறாங் கற்கள் போடுவதற்கு மேலதிகமாக மண் திட்டும் (Sand Barrier) போட வேண்டியுள்ளது. இதன் ஊடாக பகுதியளவில் பாதிக்கப்பட்ட 120 ஏக்கர் காணியினை பாதுகாக்க முடியும்” என நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் தயாரிக்கப்பட்டு காணி அமைச்சின் கீழுள்ள காணிப் பயன்பாடு கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டு முதல் ஒலுவிலில் செயற்பட்டு வந்த தும்புத் தொழிற்சாலையும் இக்கடலரிப்பினால் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, “இக்கடலரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், வழங்கப்பட்ட நஷ்டஈடு தொடர்பான எந்த தரவுகளும், இத்துறைமுகம் அமையப்பெற்றுள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இல்லை” என அங்குள்ள உயர் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
இக்கடலரிப்பைத் தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் பல மில்லியன் ரூபா செலவில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தினால் இப்பிரதேசங்களில் பாறாங்கற்கள் போடப்பட்டு வருகின்றன.
இதுவரை ஒலுவில் பிரதேசத்தில் 1,050 மீற்றரும், நிந்தவூர் பிரதேசத்தில் 45 மீற்றரும், காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் 150 மீற்றரிலும் பாறாங்கற்கள் போடப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்தது.
இருந்தபோதிலும், கடலரிப்பின் தீவிரம் குறைவடையவில்லை. அது மாத்திரமல்லாமல் துறைமுகத்தின் வடக்குப் பக்கத்திலுள்ள மண் தெற்குப் பக்கம் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டமையினால் வடக்குப் பக்கம் நிலப்பரப்பு குறைவடைய, தெற்குப் பக்கம் நிலப்பரப்பு அதிகரிக்கின்றது.
அதுமாத்திரமல்லாமல், வடக்கிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட மண் துறைமுகத்தின் நுழைவாயிலை மூடி மண் மேடாக இன்றும் காட்சியளிப்பதையும், கட்டாக்காலி மாடுகளின் தரிப்பிடமாக இத்துறைமுகம் மாறியுள்ளதையும் ஏர்த் ஜேர்னலிசம் நெட்வர்கின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இந்த மண் மேடு காரணமாக மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்ற படகுகள் கடலுக்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் 2018.09.23ஆம் திகதியுடன் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
இந்த மீன்பிடித் துறைமுகம் செயற்பட்ட காலப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தின் மீன் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டதாக கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள கல்முனை மாவட்ட காரியாலயம் தெரிவித்தது.
இதேவேளை, “பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று செயலிழந்துள்ள ஒலுவில் துறைமுகத்தின் பராமரிப்பிற்காக மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது” என துறைமுக அதிகார சபை, தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலில் தெரிவிக்கின்றது.
“இத்துறைமுகம் ஒழுங்கான முறையில் நிர்மாணிக்கப்படாமையே கடலரிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும்” என சூழலியலாளர் கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்தார்.
சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டின் பிரகாரம் இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டிருந்தால் கடலரிப்பு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறினார்.
“சிலரின் தேவைகளுக்காக மிக அவசரமாக இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டமையினாலேயே இப்பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது” என சூழலியலாளர் அஜந்த பெரேரா குற்றஞ்சாட்டினார்.
எவ்வாறாயினும், சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படாமலேயே இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இக்குற்றச்சாட்டினை நிராகரித்த துறைமுக அதிகார சபை, மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் (CECB) மூலம் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு அறிக்கையினை அதிகார சபையின் நூலகத்தில் பார்வையிடலாம் என்றது.
ஆனாலும், “இந்தத் துறைமுகத்தின் வடிமைப்பில் ஏற்பட்ட தவறுதான் இப்பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையகத்தின் (NARA) சமுத்திரவியல் விஞ்ஞானி கலாநிதி கே. அருளானந்தம் தெரிவிக்கிறார்.
இத்துறைமுகத்தின் அலை தாங்கிகள் (Break Water) கடல் நீரோட்டத்தினை குறுக்கீடு செய்யும் வகையில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் நீரோட்டத்துடனான மண்ணோட்டம் தடைப்படுகின்றமையினால் துறைமுக நுழைவாயிலில் மண் மேடு ஏற்படுவதுடன் வடக்கு பக்கத்தில் கடலரிப்பும் ஏற்படுகின்றது என அவர் கூறினார்.
“அலை தாங்கிக்காக போடப்பட்ட கற்களை தொழிநுட்ப ரீதியாக மாற்றி கட்டியமைக்க வேண்டியுள்ளது. இதற்கு பாரிய நிதித் தேவைப்படும்” என கலாநிதி அருளானந்தம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, “இந்த மீன்பிடி துறைமுகத்தினை நம்பி பல மில்லியன் ரூபாய்களை முதலிட்டவர்கள் இன்று நடுத் தெருவில் நிற்கின்றனர்” என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி கூட்டுறவு சங்கத்தின் தலைவரான எம்.எஸ்.எம். நசீர் தெரிவித்தார்.
இவர்களின் படகுகள் தற்போது வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. இதனால் சொல்லொன்னா துயரங்களை இந்த மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மீனவர்களின் பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நசீர், துறைமுக நுழைவாயிலில் காணப்படுகின்ற மண் மேட்டை அகற்றினால் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என்றார்.
இந்த மேட்டில் உள்ள மண்ணை தனியார் கம்பனிக்கு விற்பனை செய்வதன் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்கும் பாரிய வருமானத்தின் ஊடாக இந்த மீன்பிடி துறைமுகத்தினை இலகுவாக சரி செய்ய முடியும் என நசீர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறான நிலையில், மீன்பிடி துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சிற்கு கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் துறைமுக அதிகார சபையும் சம்மதம் வெளியிட்டுள்ளது.
இந்த துறைமுகம் தொடர்பில் பல ஆய்வுகளை NARA மேற்கொண்டு மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது போன்று இக்கடலரிப்பினால் பாதிக்கப்படுகின்ற தென் கிழக்கு பல்கலைக்கழகமும் பல்வேறு ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
“மீன்பிடிக்கு பிரபல்யமான கிராமம் என்ற நாமத்தினை கடலரிப்பினால் ஒலுவில் இன்று இழந்து விட்டது” என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் விரிவுரையாளர் கே. நிஜாமீர் தெரிவித்தார்.
இந்தக் கடலரிப்பினை ஒருபோதும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எனினும், கடற்கரையோரங்களில் கண்டல் தாவரங்கள் வளர்ப்பதன் ஊடாக இதனை தற்காலிகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமல்லாமல், இறுதி மூன்று வருடங்களின் கடல் அலையின் தரவுகளை எடுத்து ஆய்வு செய்வதன் ஊடாக இப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை பெற முடியும் என விரிவுரையாளர் நிஜாமீர் நம்பிக்கை வெளியிட்டார்.
இது போன்று கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக குறித்த துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்கு செலவாகிய நிதியைப் போன்று ஐந்து மடங்கு நிதி செலவிடப்பட்டே ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கடல் மட்டம் உயர உயர கடலரிப்பு ஏற்படுவதனை ஒருபோதும் தடுக்க முடியாது என கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய பொறியியலாளர் கே.எம். றிபாஸ் தெரிவித்தார்.
ஒலுவில் கடலின் உட் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் பாறாங் கற்கள் போடப்பட்டமையினாலேயே அக்கிராமம் தற்போது கடலரிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த துறைமுகத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், இப்பிரதேசத்தின் கடலரிப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார் பொறியியலாளர் றிபாஸ். ஆனாலும், இப்பிரச்சினையினை இலகுவில் சீர் செய்துவிடலாம் என கடற்றொழில் அமைச்சு நம்புகிறது.
இதேவேளை, “இயற்கைக்கு பாதிப்பற்ற வகையில் விஞ்ஞான ரீதியாக குறித்த மீன்பிடி துறைமுகத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.
தற்போது துறைமுக நுழைவாயிலில் தங்கியுள்ள மண்ணின் மூன்றில் ஒரு பங்கினை கடலுக்குள் போடுவிட்டு மற்றைய பங்கினை விற்பனை செய்வதன் ஊடாக துறைமுகத்தினை மீள இயக்குவதற்கான செலவினை ஈடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
“இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த மீன்பிடி துறைமுகத்தினை இயக்க முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டார். எவ்வாறாயினும் கடந்த எட்டு வருடங்களாக தீர்க்க முடியாதுள்ள இப்பிரச்சினையினை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்த்துவிட முடியுமா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.- Vidivelli