மூலம்: திஸரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்
2019 ஆண்டைய ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் ஒரு மெகா வீர நாடகமாகும். சிங்கள மக்களை (விசேடமாக சிங்கள பௌத்தர்களை) எதிரிகளின் இன்னல்களிலிருந்து மீட்டு தாய்நாட்டுக்கு சுபீட்சத்தை அழைத்து வரும் அரசியல், பொருளாதார ஜாம்பவானை உருவாக்குவதே அதன் நோக்கமாக அமைந்தது. நாடகம் பெருவெற்றி பெற்றமைக்கு பிரதான நடிகரின் திறன் காரணமல்ல, வாக்காளர்களில் பெரும்பான்மையினர் அப்படியொரு ஏமாறுதலை ஆவலுடன் எதிர்பார்த்தமையாகும்.
சிறிசேன-– விக்ரமசிங்க ஆட்சியின் குறைபாடுகள் ஜனநாயக முறையின் சில குறைபாடுகளாக வரைவிலக்கணப் படுத்த எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்சாக்களுக்கு முடியுமாக இருந்தது. உத்தியோக பூர்வமற்ற ஒரு அரசனைப் போன்ற ஒரு மீட்டெடுக்கும் தலைவர் பற்றி இலங்கை மக்களிடையே ஏற்பட்ட ஆசையும் நம்பிக்கையும் இந்த வரைவிலக்கணத்துடன் நன்கு பொருந்தியது. மஹிந்த ராஜபக்சவின் தயாரிப்பில் பசில் ராஜபக்ச இயக்கிய மீட்டெடுக்கும் இளவரசன் வேடத்தில் கோட்டாபய நடித்த அந்தப் படைப்பு இத்தகையதொரு சூழ்நிலையில் தான் வெளிவந்தது.
நாடகத்தின் பிரதான நடிகர் ஒரு திறமைசாலி அல்ல என்பது அவரின் முதலாவது ஊடகச் சந்திப்பிலேயே தெளிவாகியது. குறிப்பாக பொருளாதாரம் தொடர்பாகக் கேட்ட சில எளிமையான கேள்விகளுக்குக் கூட அவரால் பதில் கூறமுடியவில்லை. அந்த ஊடக சந்திப்பே முதலாவதும் கடைசியுமாக அமைந்ததும் அதனால்தான். அதன் பின்னர் அரசியல் மேடைகளில் கூட எழுதப்பட்ட உரையை இலத்திரனியல் கருவியின் உதவியுடன் வாசிப்பதில் தான் ஈடுபட்டார்.
இவையனைத்திலும் நடிப்பு மாயையே தவிர உண்மையல்ல என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆயினும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் விரக்தியுற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பீதியடைந்திருந்த பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் அந்த அறிகுறிகளைக் கண்டும் காணாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். எனவே தான் 2019 தேர்தல் ஓர் ஏமாற்று என்பதை விட சுய ஏமாற்றமாக முடிந்தது.
தெறிக்கும் வெய்யிலில் மணிக்கணக்கில் சமையல் எரிவாயு கியூவரிசையில் அல்லது பால்மா வாங்கும் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, முன்பெல்லாம் முத்துச் சம்பா அரிசி வாங்கிய விலைக்கு நாட்டரிசி கூடக் கிடைக்காத நிலையில் சுய ஏமாறுதலைச் சகித்துக் கொள்வது இலகுவாக இல்லை. வெட்டினாலும் ராஜபக்சவாதிகள் என்று கூறிக் கொள்ளும் சிலரை விட்டால் 69 இலட்சத்திய பெரும்பான்மையினர் இன்பக் கனவில் இருந்து துன்பியல் யதார்த்தத்தை நோக்கி மீண்டு கொண்டு வருகின்றனர். வலைத்தளங்களில் கேலிச் சிரிப்புகளும் நிஜ உலகில் கூக்குரல்களும் வெளிப்படுத்தும் விடயம் யாதெனில் மீட்டெடுக்கும் இளவரசன் என்ற நாடகத்தை உண்மை என நம்பியவர்களின் துன்பியலாகும்.
69 லட்சத்தில் பெரும்பான்மையினரின் கண்கள் திறந்து கொண்டபோது ராஜபக்சாக்கள் இன்னும் தங்கள் உருவாக்கிய நாடகத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் இரட்சகன் வேடங்களில் நடித்துக் கொண்டு தான் உள்ளனர். அவர்கள் வெளியிடும் எதிர்விளைவு மேடையிலிருந்து நிஜ உலகிற்கு வருவதனால் அல்ல. மாறாக நாடகத்தை மென்மேலும் கவர்ச்சிகரமாக கலப்பு வர்ணங்களில் தயாரிப்பதன் மூலமாகும்.
புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரையில் இது மிகவும் தெளிவடைந்தது. நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு எப்படிப் போனாலும் பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவு கூட ஆட்சியாளர்களிடம் இல்லை. அவர்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினை நாடகத்தின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களிடமிருந்து விலகிக் கொள்வதாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச மொட்டுக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய உரையினதும் கோட்டாபய ராஜபக்ச அதிவேகப் பாதையை திறந்து வைத்து ஆற்றிய உரையினதும் சாரம் அதுதான். இதற்கான காரணம் தங்கள் தவறு என்று அவர்கள் கருதவில்லை. ஏதாவது தவறு இருக்குமானால் அது மற்றவர்களுடையது அல்லது எல்லாவற்றுக்கும் காரணம் உள்நாட்டு வெளிநாட்டுச் சதிகளாகும்.
இல்லை. இல்லை. குண்டு வைப்பு நாடகம் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அரங்கேற்றப் படுகிறது. எதிரிகள் இல்லையேல் வீரர்களும் இல்லை. இருப்பு தொடர்பான சவால்கள் இல்லாதபோது இரட்சகர்களும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒன்று பற்றி சில கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பௌத்த விகாரைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுபற்றி விளக்கம் கேட்டபோது அது ஒரு ஒத்திகை என்று கூறி ஆட்சியாளர்கள் கையைக் கழுவிக் கொண்டனர்.
பொரளை கிறிஸ்துவ ஆலயத்தில் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இதில் புதிய தொடராகும். சம்பவத்தின் பின்னணியில் மாபெரும் சூத்திரதாரியொருவர் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இதுபோன்ற செயல்களின் நோக்கம் அரசாங்கத்தையும், பொலிசாரையும், இராணுவத்தையும் அசௌகரியத்தில் வீழ்த்துவதே என்றும் அவர் கூறினார்.
இரண்டு மூன்று தினங்களில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் குண்டை அந்த இடத்தில் வைப்பதற்காக அவருக்கு 30,000 ரூபா பணத்தை வழங்கியவர் ஒரு முஸ்லிம் என்றும் பொலிசார் குறிப்பிட்டனர். இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்த இணையத்தளத்தில் ஒரு வாசகர் “இது போன்ற உத்திகள் இனிமேல் சரிவராது” என்று குறிப்பிட்டிருந்தார். “வேறு ஏதாவது கதை எழுதிப் பாருங்கள்” என்றும் ஒருவர் கூறியிருந்தார். எதிரிகளின் சதி தவிர்ந்த எந்த ஒரு திரைக்கதை வசனத்தையும் ராஜபக்சாக்களால் எழுத முடியாதுள்ளது. தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி வேகமடையும் போது மக்களின் பொருளாதார அழுத்தம் தீவிரமடையும்போது முஸ்லிம், தமிழ் மட்டுமன்றி கத்தோலிக்க சூத்திதாரர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் சிங்கள பௌத்தர்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் நாடகங்கள் அரங்கேற்றப் படுவதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் ராஜபக்சாக்களிடம் உள்ளதா?
வாக்குறுதிகளும் கோசங்களும் மாற்று வழியாகாது
பேராசிரியர் லீ புக்ஹய்ட் (Lee Buchheit) அரசாங்கக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்தவர். இலங்கை தொடர்பாக நடைபெற்ற ஒரு மாநாட்டில் அவர் கடன் மறு சீரமைப்புச் செய்யும் போது கடன் படுனர் விடுக்கும் பிரதான கேள்வியானது மறுசீரமைப்புச் செய்யப்படும் கடனின் எவ்வளவு பங்கை குறிப்பிட்ட நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதாகும் என்று குறிப்பிட்டார்.
மக்கள் என்பது ஒற்றைக் கம்பம் (Monolith) அல்ல. மக்கள் இன, மத, பால் தனித்துவ அடிப்படையில் மட்டுமன்றி சமூக வகுப்பு, சமூகப் பின்னணி போன்ற பல்வேறு விதமாக பிரிந்து காணப்படுகின்றனர். மக்களின் ஒரு பிரிவினருக்கு அழிவு ரீதியானதாக இருக்கும் ஒன்று மற்றொரு பிரிவினருக்கு ஆக்க ரீதியானதாக இருக்கும். இது வரலாற்று ரீதியான சர்வதேச உண்மையாகும். கொவிட் தொற்று உலகத்தை விழுங்கிய இந்த இரண்டு வருடங்களில் கூட அதன் தாக்கம் சமூகத்தின் அனைத்து வகுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வில்லை. உலகில் பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான மக்கள் வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்ட போதிலும் உலகில் அதியுயர் தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாக மாறியமை இந்த உண்மையை விளங்கப் போதுமானது.
ராஜபக்சாக்கள் உருவாக்கிய அசாதாரண பொருளாதார நெருக்கடியில் பெரும்பகுதிச் சுமையை ஏற்பவர்கள் இன்று இடைநிலை மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களே. பொருளாதார விருத்தி வேகம் எதிர்க்கணியமாகும் போது பங்குச்சந்தை மீண்டும் விருத்தியடைகின்றமை மற்றுமொரு தோற்றமாகும். சென்ற வாரம் பங்குச்சந்தையின் முதலீட்டுப் பெறுமானம் முதற்தடவையாக ஆறு ட்ரிலியன்(6) ரூபாவை மிஞ்சியது. எதிர்காலத்தில் இந்நிலைமை மேலும் உயர்வடையலாம் என்று நம்பலாம்.
கடன் மறு சீரமைப்புச் செய்வதற்காக தாம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர் ஆனால் கடன் மறுசீரமைப்பில் இருந்து அரசாங்கம் விடுபட முடியாது. சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ள கடனை மறுசீரமைக்கும் கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ஷ சீனா வெளிநாட்டமைச்சரிடம் முன்வைத்தமை அதனால் தான். அதற்கான பதிலாக அமைந்தது சீனா இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட இது நல்ல சந்தர்ப்பம் என்பதாகும். இரு தரப்புக் கடனை மறுதிகதியிட சீனா விரும்பவில்லை என்பதை இது காட்டுகின்றது. சீனா இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் Belt and Road செயற்திட்டத்தின் கீழ் சீனாவிடமிருந்து கடன் பெற்றுள்ள அனைத்து ஆசிய ஆபிரிக்க அமெரிக்க நாடுகளுக்கும் அதற்குச் சமனான சலுகையை வழங்க வேண்டி வரும் என்ற ஆபத்து ராஜபக்சாக்களுக்கு விளங்காவிட்டாலும் சீனத் தலைவருக்கு விளங்கியிருக்கும். இருதரப்பு கடன் மறுதிகதியிடல் தொடர்பாக ஏனைய நாடுகளின் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் துலங்களும் இதனை ஒத்ததாகவே அமையலாம்.
இந்த வருடத்துக்குள் இலங்கை செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன் 4 பில்லியன் டொலர்களாகும். இந்தக் கடனைச் செலுத்துவதற்குரிய அத்தியாவசியமான இறக்குமதிகளைச் சமநிலையில் வைத்திருக்கும் விடயமும் ராஜபக்சாக்களுக்கு விளங்காதுள்ளது. பசில் ராஜபக்சவின் சலுகைப் பொதி காரணமாக நெருக்கடி மேலும் கூர்மை அடைவதால் அவசர மாகாணசபைத் தேர்தலை நடத்தி சலுகைப் பொதியை நீக்கிவிடும் அவசியமும் ராஜபக்சாக்களுக்கு இருக்கலாம்.
ராஜபக்சாக்களுக்கு உள்ள ஒரு சாதகம் யாதெனில் இப்பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதற்குரிய ஒரு திட்டம் இதுவரை எதிர்க்கட்சிகளிடம் இல்லாதிருப்பதாகும். ராஜபக்சாக்கள் சூரியனைக் காட்டி சந்திரன் என்று சொன்னாலும் அதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களின் பொதுக் காரணியாக இருப்பது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதமும், ஜனநாயகத் தீர்வுகளின் மீதுள்ள விருப்பமின்மையுமாகும். தாம் விரும்பும் சிங்கள-பௌத்த தீர்வை வழங்க ராஜபக்சாக்களுக்கு முடியாது போனால் வேறு ஒரு தீவிரவாத தலைவரின் அல்லது இராணுவத்தின் தலையீடு சாத்தியமாகலாம். விசேடமாக ராஜபக்சாக்களுக்குப் பின்னரான அரசர்களின் நிலவரத்தில் இதுபோன்ற ஒரு நகர்வுக்கான் வாய்ப்புகள் அதிகம்.
2015இல் ராஜபக்சாக்களுக்கு எதிராக வாக்களித்து மீண்டும் 2019இல் ராஜபக்சாக்களை வெற்றி பெற வாக்களித்த எந்த கட்சியையும் சாராதவர்களின் நிலைமை வேறுபட்டதே. இந்த மிதக்கும் வாக்குகள் இப்போது ராஜபக்சாக்களில் இருந்து விலகியிருப்பது உறுதி. ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் இதுவரை எந்த எதிர்க்கட்சியையும் ஆதரிக்கும் நிலைக்கு வரவில்லை. தீக்காயம் பட்டவன் மின்மினிப் பூச்சிக்கும் பயப்படுவது போலவே ராஜபக்சாக்களிடம் ஏற்பட்ட ஏமாற்றத்தை மீண்டும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அவர்களது மனதை வெல்வதற்கு கோஷங்களால், வாக்குறுதிகளால் மட்டும் முடியாது. குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான விளக்கம், தூரநோக்கு, அதற்கான சாத்தியமான வேலைத்திட்டம் முன்வைக்கப்படுபவர்கள் விடயத்திலேயே வாக்காளர்கள் அக்கறை செலுத்துவார்கள்.
வரிச் சுமையை மறுசீரமைப்புச் செய்வதில் வரிச்சுமை பங்கீட்டைத் தீர்மானிப்பது எவ்வாறு? அரசாங்கச் செலவீனங்களை எந்தெந்த இடங்களில் குறைப்பது? மக்கள் மீது வரிச்சுமையை தளர்த்துதல், ஊழல் மோசடிகளை இல்லாமற்செய்வதன் மூலம் செலவுகளைக் குறைக்கும் வாக்குறுதி போன்றவை மட்டும் போதுமானதாக இருக்காது. வரிச்சுமை அதிகம் விதிக்கப்படுவது யார் மீது? செலவுக் குறைப்பு எதில் இடம்பெறும்? என்பன அடிப்படையான கேள்விகளாகும். இலகுவில் விடுபட முடியாத கேள்விகளாகும். அரசியல் ரீதியான மிகவும் சிரமமான தெரிவுகளாகும். இத்தகைய அடிப்படை அம்சங்களில் தெளிவான நோக்கு இல்லாத நிலையில் வெறுமனே ராஜபக்சாக்களை விமர்சிப்பதன் மூலம் மட்டும் கட்சிகளற்ற மிதக்கும் வாக்காளர்களை வென்றெடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு இலகுவாக இருக்காது.
2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே வேட்பாளர்களைப் பெயர் குறிப்பிட்டு ஒருவரையொருவர் குழப்புவதை விட்டு ராஜபக்சாக்களற்ற ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளால் ஏன் முடியாதுள்ளது? ஜனாதிபதிக் கனவில் மூழ்கி அனைவரும் கண்கள் மங்களாகிவிட்டதா? நிறைவேற்று நிர்வாக ஜனாதிபதி முறையின் அதிகார மோகத்திற்கு இவை நல்ல உதாரணமில்லையா?
குண்டுத் தீர்வு
பெற்றோலிய இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து அவசரக் கடன் கிடைத்த போதிலும் அது ஆகக் கூடியது இன்னும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது. அதன் பின்னர் என்ன நடக்கும்? எரிவாயு, பால்மா பிரச்சினைக்கு தீர்வேதும் உண்டா? அரிசி விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது எவ்வாறு?
மக்களில் பெரும்பான்மையினர் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இடர்படும் போது ஆட்சியாளர்கள் வேறொரு உலகத்தில் வாழ்கின்றனர். அதிவேகப் பாதைகளும், சொகுசு நடைபாதைகளுமே அவர்களின் தேவையாக உள்ளது.
மக்களுக்கும் தமக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கு வன்முறையின் பாலத்தை, வெறுப்புணர்வின் சங்கிலியை அவசரமாகக் கட்டியெழுப்பும் பணியில் ஆட்சியாளர்கள் இறங்கி இருப்பது வேறு வழியில்லாததாலா?
வெறுமனே பயங்கரவாத லேபிள் ஒட்டி தம்மிஷ்டப்படி சந்தேகநபர்களை (தமிழ்-–முஸ்லிம்) சிறையிலடைக்கும் சட்ட ஆற்றல் ஆட்சியாளர்களுக்கு இல்லையெனின் பொரளை குண்டுப் புரளி ஜோக்காகப் போயிருக்கத் தேவையில்லை. முதலில் கைது செய்யப்பட்டவர்களில் தேவாலயத்தின் பணியாளரான 14ஆவது தமிழ் இளைஞர் ஒருவரும் இருந்தார். பனாமுற பிரதேசத்தின் வைத்தியர் ஒருவர் கொடுத்த குண்டை தேவாலயத்தில் வைத்ததாக இப்போது கூறப்படுகிறது.
அமைச்சரின் முதல் அறிக்கையும், பொலிஸாரின் இரண்டாவது கண்டுபிடிப்பு ஆகிய இரண்டும் உண்மையாக இருக்க முடியாது பொலிசாரின் கண்டுபிடிப்பு உண்மையெனின் அமைச்சர் வீரசேகரவின் முதல் அறிக்கை பொய்யானது. அதனடிப்படையில் ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டுள்ளார். அது பொய்யாயின் 14 வயதுச் சிறுவன் குண்டு வைத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறியதும் அதனை சரி கண்டதும் எவ்வாறு? யாரின் தேவைக்காக எதற்காக இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பொலிஸில் சிறுவன் பயமுறுத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதா? உளவியல் உடலியல் நோவினைகள் இடம் பெற்றதா?
ஷானி அபேசேகரவுக்கு எதிராக பொய்ச்சாட்சி வழங்குமாறு தன்னைப் பொலிஸார் பலவந்தப்படுத்தியதாக உதவி பொலிஸ் பரீட்சகர் சுகத் மொஹான் மென்டிஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார். அண்மையில் விடுவிக்கப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லுமாறு இரண்டு சிறுவர்களுக்கும் இரண்டு மௌலவிமார்களுக்கும் அச்சுறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பொரளை தேவஸ்தான குண்டு வைப்பிலும் அது தான் நடந்ததா?
சம்பவ தினத்தன்று காலையில் இருந்தே சிசிரிவி (CCTV) கமராவை அங்குள்ள மதகுருமார்கள் பரிசீலனை செய்யாதிருந்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்காது. அப்படி நடந்திருக்காவிட்டால் அப்பாவி சிறுவன் தண்டிக்கப்பட்டிருப்பான். இவற்றின் மூலம் வெளிச்சத்துக்கு வருவது கதை வசனம் எழுதுவதில் உள்ள திறமையின்மையா? இந்த வகையில் அடுத்த குண்டு நாடகம் எங்கு அரங்கேற்றப்படும்? இவ்வாறு எத்தனை போலி நாடகங்களைத் தான் இந்த நாட்டு மக்கள் எதிர் காலத்தில் பார்க்க உள்ளார்கள்? எத்தனை முறை பொய்கள் ஒப்புவிக்கப்பட்டாலும் தொடர்ந்து அதனையே ரசித்துப்பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கும் வரை நாடக எழுத்தாளர்கள் ஓயப்போவதில்லை.- Vidivelli