மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பயணிக்கும்போது சுமார் 12 கிலோமீற்றர் தொலைதூரத்தில் அமைந்திருக்கிறது ஏறாவூர் நகரம்.
இந்த ஊர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடன் சுமார் 50 ஆயிரம் சனத்தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் – ஏறாவூர் பொலிஸ் நிலையம் முற்றாக அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஏறாவூர் பொலிஸ் நிலையம் இல்லாமல் போனதோடு அங்கிருந்த பாதுகாப்பும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டது. இராணுவம், எஸ்.ரி.எஃப் என்று எந்த அரச படை முகாம்களும் ஏறாவூரில் இருக்கவில்லை.
1990ல் பொலிஸ் நிலையம் அழிக்கப்பட்ட கையோடு ஏறாவூர் பிரதேச சபை, வாசிகசாலை என்பன எல்ரீரீஈ இனரால் பட்டப் பகலில் சூறையாடப்பட்ட பின்னர் முற்றாக தீவைத்து அழிக்கப்பட்டது.
மின்சாரம் நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. கிழக்கிலிருந்த ஏனைய முஸ்லிம் ஊர்களில் செய்ததைப் போன்று புலிகள் இயக்கத்தினர் ஏறாவூரிலும் முஸ்லிம்களைக் கடத்துவதும் கொல்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.
இதன் நோக்கம் அச்சுறுத்துவதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களை விட்டும் விரட்டுவதாகும். கிழக்கில் தமது பின்னடைவுக்கு முஸ்லிம் ஊர்களே காரணமென்றும் முஸ்லிம் ஊர்களை மையமாகக் கொண்டே இராணுவம், பொலிஸ் முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் எல்ரீரீஈ இனர் கூறிவந்தனர். இது அவர்கள் தம் தோல்விகளை மறைக்க முஸ்லிம்கள் மீது இட்டுக் கட்டி பழி போட்ட கதைகளாகும்.
எனவே, ஏறாவூர் முஸ்லிம் நகரப் பிரதேசம் பாதுகாப்பு ஏதுமற்ற இடமாக இருந்தது.
1990 ஆகஸ்ட் படுகொலை
இவ்வாறிருக்கும் தறுவாயிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் நகரமான காத்தான்குடியிலும் முஸ்லிம்கள் மீது எல்ரீரீஈ இனர் கூட்டுப் படுகொலைகளை மேற்கொண்டனர். இது முஸ்லிம்களை அப்பிரதேசங்களிலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்து அவர்களை விரட்டியடிக்கும் நோக்கில் செய்யப்பட்டது.
1990 ஆகஸ்ட் 03ஆம் திகதி எவருமே எதிர்பார்த்திராத விதத்தில் புலிகள் இயக்கத்தினர் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களைத் தாக்கி அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேரைப் படுகொலை செய்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் ஏறாவூர்ப் பொதுமக்களைக் குலைநடுங்கச் செய்தது. எப்போது என்ன நடக்குமென்ற பதைபதைப்புடனும் அச்சத்துடனும் ஒவ்வொருவரும் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் தூங்காமலேயே கழிந்த அந்த இரவுகள் பெரும் பயங்கரமாக இருந்தன.
அவ்வாறிருக்கும்போது 1990 ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் நகர், ஏறாவூர் ஆற்றங்கரைப் பிரதேசம், ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, சதாம் ஹுஸைன் கிராமம் போன்ற இடங்களில் மொத்தமாக 121 பேரை புலிகள் கொன்றுகுவித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சை பயனளிக்காமல் பின்னாட்களில் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் நடைப்பிணங்களாக ஆகினர். இறந்தவர்களின் உடல்களைக் குளிப்பாட்டி அடக்கம் செய்யும்போது பின்னேரமானது. சுஹதாக்கள் பூங்கா எனப் பெயர் பொறிக்கப்பட்ட காட்டுப்பள்ளி மையவாடியின் புறம்பான பகுதியில் கொல்லப்பட்டவர்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு எல்ரீரீஈ அமைப்பு மேற்கொண்ட கூட்டு இனப்படுகொலையின் பின்னர் ஏறாவூர் மக்கள் தமது நிருவாக ரீதியான கருமங்களுக்காக ஊரை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஏற்கெனவே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுடன் ஏறாவூர் நகரிலுள்ள மக்களின் அரச நிருவாகக் கடமைகள் இடம்பெற்று வந்தன.
இருந்தபோதிலும் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறைகளையும் முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலைகளையும் தொடர்ந்து ஏறாவூர்ப் பகுதி திறந்தவெளி அகதி முகாம்போல இருந்தது.
அங்கிருந்து வெளியில் நகரமுடியாத உயிரச்சுறுத்தல் இருந்ததால் ஏறாவூர் நகர மக்கள் அரச நிருவாகக் கடமைகளுக்காக ஏறாவூரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்தில் செங்கலடியில் அமைந்திருக்கும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குச் செல்ல முடியாமற் போனது.
இந்த சூழ்நிலையில்தான் ஏறாவூர் நகர பிரதேச முஸ்லிம் மக்கள் அரச சேவைகளைப் பெறும் பொருட்டு 1990ஆம் ஆண்டு தனியான மேலதிக உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஏறாவூரில் மேலதிக உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் இயங்கத் தொடங்கியது.
மேலதிக உதவி அரசாங்க அதிபராக யூ.எல்.எம். ஹனீபா 1990.08.22ல் நியமிக்கப்பட்டார். தளவாடங்கள் ஆளணி எதுவுமின்றி 13 கிராம உத்தியோகத்தர்களுடன் ஏறாவூர் மேலதிக உதவி அரசாங்க அதிபர் காரியாலயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலதிக உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் ஏறாவூர் பிரதான வீதியில் அல்ஹாஜ். பீ.எம். மீராசாஹிபு, அல்ஹாஜ். பீ.எம். அப்துல் மஜீது சகோதரர்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகளில் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் நிர்வாகத்தை பரவலாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஜோன் ஏ.ஈ. அமரதுங்கவினால் 1993.11.04 காலை 10.00 மணிக்கு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. கே. விமலநாதன் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக 1993.08.26ல் கடமையைப் பொறுப்பேற்றார்.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவு
1993.01.01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 1998.06.12ஆம் திகதி வெளியான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பையும், மிகக்கூடிய சனத்தொகை அடர்த்தியையும் கொண்ட ஒரு பிரதேசமாக ஏறாவூர் நகர பிரதேசம் விளங்குகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 2633.10 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றபோதும் ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவு 3.745 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை அதாவது மாவட்டத்தில் 0.14 சதவீத நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது.
ஏறாவூரில் வாழும் ஒரு குடும்பம் 0.000304 சதுர கிலோமீட்டர் நிலத்தை மட்டுமே கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் உள்ளபடி ஏறாவூரில் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 7785 பேர் என்று காணப்படும் அதேவேளை மாவட்டத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 236 பேர் என்றவாறு உள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டு திரட்டப்பட்ட விவரங்களின்படி ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 2373 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஒரு அங்குலக் காணிகூட இல்லாதோராக நிர்க்கதி நிலையில் உள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா தெரிவிக்கிறார்.
இதேவேளை ஏறாவூர் நகரைச் சூழ்ந்திருக்கும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவு 634.16 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 24.08 சத வீதமாகும். அப்பிரதேச செயலகப் பிரிவில் சனத்தொகை அடர்த்தி 2020இல் உள்ளபடி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 148 பேர் என்றவாறு உள்ளது.
மேலும் இதனடிப்படையில் நோக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகூடிய நிலப்பரப்பைக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவாக ஏறாவூர்ப்பற்று உள்ளது.
ஏறாவூரில் குறுகிய நிலப்பரப்பில் கூடுதலான மக்கள் செறிந்து வாழ்ந்து வருவதால் சுகாதாரம், இருப்பிடம் ஏனைய அரச வசதி வாய்ப்புகள் தொடர்பில் அநேகமான பிரச்சினைகளை ஏறாவூர் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
ஏறாவூரில் அரச கட்டிடங்களை அமைப்பதற்குக் காணித்துண்டொன்று இல்லாதிருப்பது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏறாவூர் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச மக்களுக்குச் சேவையாற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையம்கூட கடந்த 31 வருடங்களாக தனியாருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றிலேயே ஏறாவூரில் இயங்கி வருகின்றது.
ஏறாவூர் தபாற்கந்தோர் தனியாருக்குச் சொந்தமான கடைத்தொகுதி ஒன்றினை சுவீகரித்து அமைக்கப்பட்டது.
தற்போதுள்ள ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கூட வாவியை அண்டியுள்ள சதுப்பு நிலப்பகுதியில் இயற்கையாக நீர் வழிந்தோடக்கூடிய தனியாருக்குச் சொந்தமான சதுப்பு நிலத்தை செயற்கையாக மண் இட்டு நிரப்பியே அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அப்பிரதேச செயலகத்தை வருடாந்தம் மாரிகால வெள்ளம் சூழ்ந்து கொள்கின்றது.
(மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் பற்றிய தொடர் வரும் வாரமும் வரும்)