கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
அறிமுகம்
இக்கட்டுரையை தமிழிலே வார்த்துத் தமிழர்கள் விரும்பிவாசிக்கும் ஒரு பத்திரிகையில் வெளியிடுவதா அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கிப் பல இனத்தினரும் படிக்கும் கொழும்பு தெலிகிராப் மின்னிதழில் வெளியிடுவதா என்று மனதுக்குள் போரிட்டு இறுதியாக தமிழிலே படைத்து முஸ்லிம்கள் விரும்பி வாசிக்கும் விடிவெள்ளியில் பிரசுரிக்க முடிவுசெய்தேன். ஆனால் கடந்த சில நாட்களாக இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளதால் அதனை ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்றெண்ணி இக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். முஸ்லிம்களின் சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். எனது கருத்துக்களை எல்லாரும் ஜீரணிக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் யதார்த்தவாதி வெகுசன விரோதி என்பதை உணர்ந்து இக்கட்டுரையை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
அபாயாவின் ஆரம்பம்
ஷண்முகா கல்லூரியின் அபாயா பிரச்சினையை அணுகுமுன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை எவ்வாறு தோன்றிற்று என்பதையும் அது இலங்கைக்கு எப்போது வந்தது என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. உலகளாவிய ரீதியில் அபாயாவின் ஆரம்பம் 1970களின் இறுதி ஆண்டுகளுக்குச் செல்லும். இவ்வாறு கூறுவதனால் அபாயா உடையே அப்போதுதான் தோன்றியது என்பது அர்த்தமல்ல. அது பெண்களின் உடையாக இஸ்லாம் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசப்பொத்தேமியாவில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இஸ்லாம் தோன்றியதன் பின்பு அது பெண்களின் ஒரு கௌரவமான ஆடையாக பிரபல்யம் அடைந்தது. காமப் பிசாசுகளாகவும் பாவனை முடிந்தபின் தூக்கி எறியப்படவேண்டிய ஒரு சாதாரண வீட்டுப் பொருளாகவும் பெண்களைப் பாவித்த அரேபியரிடையே இஸ்லாம் ஒரு பெண்ணினப் புரட்சியையே உண்டுபண்ணியதென்றால் அது மிகையாகாது. ஆரம்பத்தில் அந்த உடை பல நிறங்களில் குறிப்பாகப் பச்சை நிறத்தில் அணியப்பட்டிருந்தாலும் அப்பாசியராட்சிக் காலத்தில் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் அது கறுப்பு நிற ஆடையாக மாறிற்று. இது ஒரு சுவையான வரலாறு. அதை இங்கே விபரிப்பின் கட்டுரை மிகவும் நீண்டுவிடும்.
மத்தியகிழக்கில் மாற்றம்
1970களின் இறுதிவரை அந்த ஆடை மத்திய கிழக்கிலும் வடஆபிரிக்காவிலும் மட்டுமே பெரும்பாலும் காணப்பட்ட வேளையிலேதான் மத்திய கிழக்கின் அரபு நாடுகள் எண்ணெய் வளத்தால் உலகப் புகழ் பெற்றதும், ஈரானியப் புரட்சி ஏற்பட்டதும், இஸ்லாமிய விழிப்புணர்வொன்று உலக முஸ்லிம்களை ஆட்கொண்டதும். அந்த உணர்வினால் உந்தப்பட்ட சில முஸ்லிம் இயக்கங்கள் மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கை இஸ்லாமிய உலக ஒழுங்காக மாற்றியமைக்கலாம் என எண்ணத் துணிந்தன, அந்தத் துணிவின் ஒரு செயற்பாடாக அல்கைதா இயக்கம் அமெரிக்காவை தாக்கியதால் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் படைகள் ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் குண்டுவீசித் தகர்க்க அது பின்னர் பயங்கரவாதத்துக்கு வழிவகுத்து முஸ்லிம் மத்திய கிழக்கே ஒரு போர்க்களமாக மாறிற்று. அந்த அழிவினாலும் அட்டூழியங்களாலும் பல இலட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சிறார்களும் அகதிகளாக்கப்பட்டுப் புலம்பெயரலாயினர். இந்தப் புலம்பெயர்வுடன் ஆடையலங்காரங்களும் புலம்பெயரத் தொடங்கின. வேற்றுக் கலாசார நாடுகளுக்குள் முஸ்லிம்கள் படைபடையாக நுழையத் தொடங்கியதும் முஸ்லிம்களின் கலாசார அம்சங்கள் பிரச்சினைகளைத் தோற்றுவித்தமை தவிர்க்கமுடியாத ஒரு விளைவு. அவற்றுள் ஒன்றுதான் அபாயா பிரச்சினை. அந்தப் பிரச்சினையின் சில விபரீத விளைவுகளை நேரிலே கண்டு அனுபவித்துள்ளேன். ஆனால் காலம் செல்லச் செல்ல மக்களின் புரிந்துணர்வினாலும் சிவில் அமைப்புகளின் அறிவூட்டலாலும் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களாலும் அப்பிரச்சினை இப்போது மேற்கு நாடுகளில் தணிந்துள்ளதை காணமுடிகிறது.
இலங்கைக்குள் அபாயா
இலங்கைக்குள் 1980களின் பின்னர் அபாயா நுழைந்தமை புலம்பெயர்வினாலல்ல; ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கைகளால். மத்திய கிழக்குக்குத் தொழில்தேடிச்சென்ற முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அங்குள்ள நடையுடை பாவனைகளாலும் மத ஆசாரங்களாலும் கவரப்பட்டு தாயகம் திரும்பும்போது அவற்றையும் தம்முடன் கொண்டுவந்தனர். ஆனால் 1980களுக்குப்பின் இனவெறியால் பீடிக்கப்பட்டு ஒரு போர்க்களமாக மாறியிருந்த இலங்கையில் வேற்றுநாட்டு முஸ்லிம் கலாச்சார அமிசங்களும் இனவெறிக்குத் தூபம் போடுவதாகவே தோன்றலாயின. இதனால் அபாயாவும் வேறு சில முஸ்லிம் கலாசார அடையாளங்களும் குறிப்பாகப் பெரும்பான்மைச் சமூகத்துக்குள் முஸ்லிம்களும் தீவிர மதவாதிகளாகி நாட்டைக் கூறுபோடுவதற்கு ஆயத்தமாகின்றனர் என்ற ஒரு தப்பபிப்பிராயத்தையும் அசாதாரண அச்சத்தையும் வளர்க்கலாயிற்று. அவ்வாறான ஓர் ஆபத்தான வளர்ச்சியை முஸ்லிம் தலைமைத்துவம் அப்போதே உணர்ந்து அதனைத்தவிர்க்க வழிகளைத் தேடாததையிட்டு ஏற்கனவே பல கட்டுரைகளில் இக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் இன்றுவரை அபாயா ஒரு பிரச்சினைக்குரிய கலாசாரச் சின்னமாகவே சிருஷ்டிக்கப்பட்டு வருவது கண்கூடு. இந்நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடும்வரை அபாயாவும் பிரச்சினைகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இனி ஷண்முகா கல்லூரிப் பிரச்சினைக்கு வருவோம்.
ஷண்முகா கல்லூரிக்குள் அபாயா
ஷண்முகா கல்லூரி 1923ல் ஆரம்பிக்கப்பட்ட இந்து மாணவிகளின் கல்விக்கூடம். “எழுமின், விழிமின், இலக்கை அடையும்வரை”என்ற குறிக்கோளுடன் இந்துக் கலாச்சாரச் சூழலில் இயங்கும் ஓர் அறிவாலயம். எனவே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வயதுடைய இக்கல்லூரிக்கென சில தனிப்பட்ட மரபுகளும் நியதிகளும் வளர்ந்துள்ளமை தவிர்க்கமுடியாத ஒன்று. ஆகவே அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் மற்றும் பணியாளர்களும் அந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகம் எதிர்பார்ப்பது நியாயமானதே. அந்த நெறிகளுள் ஒன்று ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்பதாகும். ஆசிரியைகளுக்கான ஒரு சீருடை எனவும் அதைக் கருதலாம். அது அக்கல்லூரியின் ஒரு மரபேயன்றி சட்டமல்ல. அதற்கொப்ப, சில முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிந்து அங்கு பணியாற்றியுள்ளனர். அபாயா இலங்கைக்குள் நுழையுமுன்னர் எத்தனையோ நூற்றாண்டுகளாக சேலையே முஸ்லிம் பெண்களின் ஆடையாக இருந்ததென்பதையும் இன்னும் அது முற்றாக மாறவில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளல்வேண்டும்.
இந்த நிலையில் 2017ல் ஒரு நாள் அங்கு பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியைகள் அன்றுவரை அவர்கள் அணிந்துசென்ற சேலை இஸ்லாமிய உடையல்ல என்பதையும் அபாயாவே தூய இஸ்லாமிய உடை என்பதையும் இரவோடிரவாக உணர்ந்து மறு நாள் வரும்போது அபாயாவுடன் வந்ததால் சர்ச்சை வெடித்தது.
உண்மையான இஸ்லாமிய ஆடை எது என்ற சர்ச்சையை இக்கட்டுரை தவிர்த்துக்கொண்டு அபாயா இக்கல்லூரியில் தோற்றுவித்த பிரச்சினையை மட்டும் ஆராய விளைகிறது.
இந்த ஆடை அந்தக் கல்லூரியின் நீண்டகால மரபுக்கு ஒவ்வாதது என்பதை அவ்வாசிரியைகள் நிச்சயம் அறிந்திருப்பர். இவ்வாறிருக்கையில் சடுதியாக இவ்வாறு நடந்து கொண்டமை இஸ்லாமியப் பண்பா என்பது இக்கட்டுரையின் முதற்கேள்வி. இரண்டாவதாக, நிர்வாகத்தினர் கல்லூரியின் நலன்கருதி இவ்வாசிரியைகளின் முடிவினை ஏற்றுக்கொள்ளாததை அறிந்தும் ஏன் அபாயா அணிந்து செல்லக்கூடிய ஒரு பாடசாலைக்கு இவர்கள் மாறிச்செல்ல விரும்பவில்லை?
இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரு முக்கிய பண்பு எந்தப் பிரச்சினையையும் நடுநிலையில் நின்று அணுகுதல். அதனாலேதான் திருக்குர்ஆன் முஸ்லிம்களை உம்மத் அல் வஸத் அதாவது நடுநிலமையாளர் என அழைக்கிறது. நபிகளார் வாழ்க்கையிலும் சில உடன்படிக்கைகள் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையுமெனத் தெரிந்தும் பெருமானார் விட்டுக்கொடுத்து வீண்கலவரங்களை தவிர்த்ததை வரலாறு கூறும். பெருமானாரின் ஹுதைபியா உடன்படிக்கை இதற்கொரு தலைசிறந்த உதாரணம். அதேபோன்று பலஸ்தீனக் கிறிஸ்தவ ஆலயத்தின்முன் இரண்டாவது கலீபா உமர் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும் எப்படி அந்த ஆலயத்துக்கு மதிப்பளித்தார் என்பதும் இஸ்லாத்தின் விட்டுக்கொடுத்தல் பண்புக்கு ஒப்பற்ற உதாரணங்கள்.
இஸ்லாமிய ஆடை அலங்காரங்களைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு போராடும் வீராங்கனைகளின் சிந்தனையில் சமூக ஒழுங்கு பற்றிய இஸ்லாமிய விழுமியங்கள் எங்கே போனதோ?
மாறாக, அவ்வாசிரியைகள் அபாயா அணிவது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்று என்று கணித்து தமது முறைப்பாட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றனர். அங்கே அவர்கள் வெற்றியீட்டியதில் ஆச்சரியமில்லை. ஒருவர் எதனை உடுக்கவேண்டும் என்பது அவரின் சுயவிருப்பம். அது அவரின் அடிப்படை உரிமை. அதை சட்டம் அங்கீகரிக்கிறது, நீதிமன்றமும் நீரூபித்துவிட்டது. ஆனால் ஒரு நிறுவனம் தனது மரபுகளையும் விழுமியங்களையும் காப்பது அதன் அடிப்படை உரிமை என்ற உண்மை இந்தச் சர்ச்சையில் காற்றிலே பறக்கவிடப்பட்டமை புதுமை.
இதனாலேதான் அவர்கள் சென்ற நீதிமன்றம் பொருத்தமற்றது என்பதையும் தமது குறையை சமூகம் என்ற மன்றத்தில் விசாரித்திருக்க வேண்டும் என்பதையும் நான் அப்போதே ஓர் ஆங்கிலக் கட்டுரையில் வெளியிட்டு அதனை ஒரு தமிழேடும் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது.
சரி, வழக்கில் வென்றாகிவிட்டது. மனித உரிமையும் பாதுகாக்கப்பட்டு வழக்காளியின் கௌரவமும் காப்பாற்றுப்பட்டுவிட்டது. இப்போதாவது இஸ்லாமிய விட்டுக்கொடுக்கும் தார்மீகப் பண்புடனும் நபிபெருமானரின் உதாரணத்துடனும் தனக்குச் சிறிது வசதிக்குறைவு ஏற்பட்டாலும் சமூகத்தின் நலனுக்காக வேறு பாடசாலையொன்றிற்கு இவ் ஆசிரியைகள் மாற்றம்கேட்டுச் சென்றிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து மீண்டும் அதே கல்லூரிக்கே செல்ல நினைத்ததன் இரகசியம் என்னவோ? நீதிமன்றமும் அதைத்தான் விரும்பிற்றென்பது உண்மை. ஆனால் ஏற்கனவே மாசுபடுத்தப்பட்ட ஒரு சூழலுக்குள் எவ்வாறு மீண்டும் இவ்வாசிரியைகள் சென்று மன அமைதியுடனும் சினேக உறவுடனும் பணிபுரியலாம் என்பதை விளங்க முடியாதிருக்கிறது.
சட்டம் இப்பெண்மணிகளின் பக்கம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் சமூகநலன் இவர்களின் பக்கமா என்பது சந்தேகமே.
பிரித்தாளும் அரசியல் வலை
கல்வி இலாகா பிறப்பித்த உத்தரவின் பிரகாரமாகவே அவ்வாசிரியைகள் மீண்டும் அதே கல்லூரிக்குச் சென்றனர் என்பது இப்போது தெரியவருகிறது. ஆனால் அந்தக்கல்வி இலாகாவுக்கு இவ்வாசிரியைகளின் பிரச்சினை அக்கல்லூரியின் அமைதியான சூழலை குலைத்துவிட்டதால் அவர்களை மீண்டும் அங்கே பணியாற்ற அனுப்புவது ஆபத்தானது என்பதை உணரும் சக்தி ஏன் இல்லாமல் போனது? இங்கேதான் ஆட்சியாளர்களின் அரசியல் தந்திரமொன்று வெளிப்படுகிறது.
ராஜபக்ச ஆட்சி சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிலைப்படுத்திப் பதவிக்கு வந்த ஓர் அரசு. ஜனாதிபதி கோத்தாபய பௌத்த இனவாதத்தின் தூணாக நின்று செயற்படுகிறார். ராஜபக்ச ஆட்சியின் கொள்கைகளால் நாடே இன்று வறுமையின் பிடிக்குள் சிக்கி ஒரு பிச்சைக்கார நாடாக மாறியுள்ளது. நாட்டின் கடன்பளு, பாவனைப் பொருள்களின் பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், தொழிலின்மை, வருமானக் குறைவு, உற்பத்தி வீழ்ச்சி என்றவாறு பிரச்சினைகள் பெருகி பொது மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது இந்த அரசு. எனவே தேர்தல் என்ற ஒன்று நடந்தால் இந்த ஆட்சி நிச்சயம் மண் கௌவும் என்பதிலே சந்தேகம் இல்லை. ஆனால் அதை நடத்த அரசு தயாரில்லை.
மாறாக, ஆட்சியை எவ்வாறு 2025க்கு அப்பாலும் தொடரலாம் என்பதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றது. அந்த வழிகளுள் ஒன்று எதிரணிக்குள் பிளவுகளை உண்டுபண்ணி அதன் ஐக்கியத்தைக் குலைப்பது. இரண்டாவது அரசாங்கத்தின்மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வேறு திசைகளுக்குத் திருப்பிவிடுவது. அந்த வகையில் இனக்கலரங்களைத் தோற்றுவித்தல் ஒரு சிறந்த தந்திரம். அதற்கு வழிவகுத்துள்ளது ஷண்முகா கல்லூரியின் அபாயாப் பிரச்சினை. அந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்காமல் எரிகின்ற தீயிலே எண்ணெய்யை ஊற்றியுள்ளது கல்வி அலுவலகத்தின் உத்தரவு. அரசின் பிரித்தாளும் வலைக்குள் இரண்டு சிறுபான்மை இனங்களும் சிக்கியுள்ளன.
முஸ்லிம் தலைமைத்துவம்
இன்று முஸ்லிம் சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் அபாயா அணியும் சுதந்திரம்தான் முக்கியமானதா? முஸ்லிம்களுக்கு வசிப்பதற்கே போதிய இடமில்லை. அவர்களுடைய ஊர்கள் சேரிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. படித்தவர்களுக்குத் தொழில் வாய்ப்பில்லை. வியாபாரம் செய்வதற்கும் பல தடைகள். இவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாதம் முஸ்லிம்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி குற்றேவல் புரியும் ஓர் இனமாக மாற்றும் முயற்சிகளை முஸ்லிம்களால் தனித்துநின்று போராடித் தவிர்க்க முடியுமா? அப்படியான ஒரு சூழலில் சிறுபான்மை இனங்களிரண்டும் தமக்கிடையே இனவாதம் பேசுவதும் அதனை வளர்க்கும் வகையில் செயற்படுவதம் புத்திசாதுரியமானதா? மார்க்க ஞானமும் கல்வித் தேர்ச்சியும் சாணக்கியமும் நிறைந்த தலைவர்கள் சுமுகமாகத் தீர்த்திருக்க வேண்டிய கல்லூரிப் பிரச்சினையை நீதிமன்றம்வரை சென்று பூதாகரமாக்கிச் சாதிக்கப்போவதென்ன? இப்பிரச்சினையும் முஸ்லிம் சமூகத்துக்குள் தூரநோக்குடன் சிந்தித்து வழிகாட்டக்கூடிய தலைமைத்துவம் இல்லை என்பதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எந்த மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடவேண்டும் எதனை சமூக நன்மைக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதையாவது முஸ்லிம் தலைமைகள் தமது மக்களுக்கு விளக்கக்கூடாதா?
இதற்கிடையில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் சிலரும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை விட்டு இக்கல்லூரிப் பிரச்சினைக்கு இனவாத மெழுகு பூசி விளையாட்டுப் பார்க்கின்றனர். இலங்கை முஸ்லிம் சமூகம் இப்போது எதிர்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு உணர்சியூட்டும் முறையில் அறிக்கைகள் விடுவதை தவிர்த்தல் நல்லது.- Vidivelli