கர்தினாலை முன்மாதிரியாகக் கொண்டு உலமா சபை சமூகத்திற்காக குரலெழுப்ப வேண்டும்
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி வேண்டுகோள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமூகத்தின் தலைமைப்பொறுப்பினை ஏற்கவேண்டும். எவ்வித அரசியல் மற்றும் இயக்கசார்பின்றிய உலமா சபையின் செயற்பாடுகளையே சமூகம் எதிர்பார்க்கிறது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அசாத்சாலி இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் உலமா சபையின் நிர்வாக உறுப்பினர்களுடனும், பொதுச் செயலாளர் அர்கம் நூராமித்துடனும் கலந்துரையாடினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் எவ்வித குற்றமும் புரியாத பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காக உலமா சபை குரல் எழுப்ப வேண்டும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தமது சமூகத்துக்காக பல சவால்களை எதிர்கொண்ட நிலையில் போராடி வருகிறார். அவரை உலமா சபை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் சமய பாடநூல் விவகாரம், கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் என்பவற்றில் உலமா சபை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டியதும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவேண்டியதும் உலமா சபையின் கடமையாகும் என்று வேண்டிக் கொண்டார்.
உலமா சபை மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலிக்கிடையிலான மேலுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli