எம்.எல்.எம். மன்சூர்
1915 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆந் திகதி தொடக்கம் நாடெங்கிலும் பரவலாக நிகழ்ந்து வந்த சிங்கள – முஸ்லிம் கலவரங்கள் ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த சூழ்நிலை. முன்னிரவு நேரம். ஆள் நடமாட்டமோ வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கும் காலி – மாத்தறை வீதியில் மெதுவாக நகர்ந்து செல்கிறது ஒரு மாட்டு வண்டி.
வண்டிக்குள் ஒரு வாள், கருங்கற்கள், மணல் போத்தல்கள் மற்றும் பொல்லுகள் என ஒரு சில ஆயுதங்கள். பயணத்தின் நோக்கம் வெலிகாமத்திற்குப் போய் முஸ்லிம்கள் மீது ஒரு தாக்குதலை நடத்துவது.
இருட்டில் அந்த வண்டிக்குப் பின்னால் மௌனமாக நடந்து கொண்டிருந்த ஐந்து இளைஞர்களில் ஒருவர் சுமார் 50 ஆண்டுகளின் பின்னர் நவீன சிங்கள இலக்கியத்தின் பிதாமகர் எனக் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்க (1890 -1976). சிங்கள மொழியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பை 1924 வெளியிட்டவர். நாவல், சிறுகதை, விமர்சனம், பௌத்த தத்துவம், வரலாறு மற்றும் சமூகவியல் போன்ற பரந்த தளங்களில் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் 90 இற்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பித்த பொழுது அவர் கொழும்பில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். கலவரத்தை அடுத்து கடை மூடப்படுவதுடன் வீடு வந்து சேர்கிறார். அப்பொழுது அவருக்கு வயது 25. காலி நகரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் கொக்கல அவருடைய சொந்த ஊர்.
அன்று இரவு நடந்த சம்பவங்களை தனது வாழ்க்கை சரிதத்தில் ஒரு வித சங்கட உணர்வுடன், குற்ற உணர்ச்சி மேலிடப் பதிவு செய்திருக்கிறார் மார்ட்டின் விக்கிரமசிங்க.
“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த போதிலும் மாலை 6.00 மணிக்குப் பின்னர் காலி – மாத்தறை வீதி ஆள் நடமாட்டமோ வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. வீதி இரு மருங்கிலும் இருந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் எவரும் வெளியில் வருவதில்லை….. புடவைக் கட்டுக்களை தோளில் சுமந்து கொண்டு வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்யும் முஸ்லிம் (பொட்டணி) வியாபாரி ஒருவர் எங்கள் அயல் கிராமத்தில் கொல்லப்பட்டிருக்கிறார் என ஒரு வதந்தி பரப்பப்பட்டிருந்தது. ஆனால், அதை ஊரில் யாரும் நம்பவில்லை. கிராமத்தில் வீடு வீடாகச் சென்று அவ்விதம் துணி வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் இருவரும் அன்று எமது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள் என்ற விடயத்தை நாங்கள் அறிந்திருந்தோம்”.
(முஸ்லிம்களை குறிப்பதற்கென மார்ட்டின் விக்கிரமசிங்க ‘தம்பி’ என்ற சொல்லை தொடர்ந்தும் பயன்படுத்துகிறார். அக்கால சிங்கள கிராம மக்களுக்கு மத்தியில் சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வந்த சொல் அது. அதில் எத்தகைய காழ்ப்புணர்ச்சியும் இருக்கவில்லை).
“சிறு பருவத்தில் முஸ்லிம் பொட்டணி வியாபாரிகள் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஒரே சந்தோசம். துணிக்கட்டுக்களில் ஒட்டப்பட்டிருக்கும் வண்ணப் படங்களுடன் கூடிய லேபிள்கள் என்னை கவர்பவை. சில நாட்களில் அந்த வியாபாரியிடம் கெஞ்சிக் கேட்டு அத்தகைய வண்ண லேபிள்களை பெற்றுக்கொள்வேன்.
நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் மனதை கவர்ந்த மற்றொரு நபர் முஸ்லிம் ‘மணிப் பெட்டி’ வியாபாரி. ஒரு நூதனசாலையைப் போன்ற அவருடைய பெட்டியை திறக்கும் பொழுது சவர்க்கார வாசனை வெளியில் வீசும். அந்தப் பெட்டிக்குள் இருக்கும் விதவிதமான மணிகள், அணிகலன்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பவற்றைப் பார்த்து நாங்கள் எல்லோரும் சந்தோசப்பட்டோம்.
கிராமத்து சிறுவர்களை மட்டுமல்லாமல் சிறுமிகளையும், பெண்களையும் மகிழ்வித்தவாறு வீடு வீடாகச் சென்று துணிமணிகளையும், சாப்புச் சாமான்களையும் விற்று வரும் முஸ்லிம் வியாபாரி ஒருவரை கொலை செய்யக்கூடிய எந்த ஒரு ஈனப் பிறவியும் எங்கள் கிராமத்தில் இருந்து வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.”
விக்கிரமசிங்கவின் ஊர் நண்பன் ஒய்பர்ட் அவரிடம் வந்து “இன்று இரவு நாங்கள் வெலிகாமத்திற்கு போவோமா” எனக் கேட்கிறான். ஆனால், அந்தப் பயணத்தை அவர் விரும்பவில்லை. அவரது எண்ண ஓட்டம் இப்படிச் செல்கிறது:
“மாலை 6.00 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து வெளியில் வருவதை தடை செய்யும் கட்டளை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த போதிலும், மாத்தறை – காலி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் பஞ்சாப் சிப்பாய்களின்; வாகனம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றது. சிங்கள – முஸ்லிம் கலவரம் தணிந்து சில நாட்களே கடந்துள்ளன. வெலிகாமத்தில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவொரு கலவரமும் நடக்கவில்லை. நாங்கள் இந்த இரவில் அங்கு செல்வது அணைந்து கொண்டிருக்கும் நெருப்பை மீண்டும் எரிய விடுவதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கும்.”
ஆனால், நண்பர்களின் வற்புறுத்தலை அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை.
“… நாங்கள் ஐந்து பேர் மாட்டு வண்டிக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினோம். சலமன் சில்வா ஒரு துருப்பிடித்த வாளை எடுத்துக் கொடுத்து, அதனை வண்டிக்குள் வைக்குமாறு லைறிசிடம் சொன்னான்.
“வண்டிக்குள் வேறு என்ன சாமான்கள் இருக்கின்றன” என்று கேட்டேன்.
“மணல் போத்தல், கருங்கற்கள் மற்றும் பொல்லுகள்.”
அவர்களுடைய வண்டி நடு இரவில் வெலிகாமத்தைச் சென்றடைகிறது. இருட்டில் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குதிரை வண்டி மங்கலாகத் தெரிகிறது. ஒரு வாழைப் புதருக்கு அருகில் மாட்டு வண்டியை ஓரமாக நிறுத்துகிறார்கள்.
குதிரை வண்டிப் பக்கமிருந்து விதானையார் இறங்கி வருகிறார்.
“அவர் எங்களில் இரண்டு மூன்று பேரின் உறவினர்.”
“குதிரை வண்டியில் இருப்பவர் வெலிகம கோரளையின் முதலியார். அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.”
அப்பொழுது முதலியார் வண்டியிலிருந்து இறங்கி எங்களை நோக்கி வந்தார்.
“இந்த இரவில் ஏன் வெலிகாமத்திற்கு வந்தீர்கள்”?
“எங்கள் உறவினர்களுக்கு முஸ்லிம்கள் தொல்லை கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டோம்!” என சலமன் சில்வா சொன்னான்.
“அது பொய்யான செய்தி; இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் சகோதரர்களைப் போல வாழ்ந்து வருகின்றார்கள்” என்கிறார் முதலியார்.
“ஆம், எங்களுக்கும் அப்படித் தான் தெரிகிறது. நாங்கள் திரும்பிச் செல்கிறோம்.”
“இன்னும் ஐந்து நிமிடங்கள் நீங்கள் தரித்து நிற்க வேண்டும்” எனக் கட்டளையிட்டு விட்டு, முதலியார் போய் குதிரை வண்டியில் ஏறிக் கொண்டார்.
நாங்கள் மாட்டு வண்டியை மறுபக்கம் திருப்ப முன்னர் துப்பாக்கி ஏந்திய இரு பஞ்சாபி சிப்பாய்களுடன் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது.
வண்டியிலிருந்து புன்னகையுடன் இறங்கிய அரசாங்க அதிபர் பிரவ்ணிங் எங்களிடம் கேட்டார்.
“இந்த இரவில் எதற்காக வெலிகாமத்திற்கு வந்தீர்கள்? உடனடியாக நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.”
´ஐந்து நிமிடத்தில் திரும்பிச் செல்கிறோம்” என்றான் ஒய்பெர்ட்.
அப்பொழுது விதானையார் என்னை அணுகி, தணிந்த குரலில் சொன்னார்:
“வண்டியில் ஆயுதங்கள் எவையும் இருக்கின்றனவா என தேடிப் பார்க்குமாறு முதலியார் சொல்கிறார். அப்படி ஏதாவது இருந்தால் வாழைப் புதருக்குள் எறிந்து விடுங்கள்.”
ஆயுதங்களை வாழைப் புதருக்குள் வீசி எறிந்து விட்டு, பின்னிரவில் ஊர் திரும்புகிறார்கள் மார்ட்டின் விக்கிரமசிங்கவும், அவர்களுடைய நான்கு நண்பர்களும்.
அவர் தொடர்ந்து இப்படி எழுதுகிறார்:
“எங்கள் பயணம் ஒரு விளையாட்டு அல்ல என்பதை நாங்கள் எல்லோரும் உணர்ந்து கொண்டிருந்தோம். அந்த உணர்வை மறைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டு வந்தோம். பிரவ்ணிங் அரசாங்க அதிபரின் சமயயோசித புத்தி காரணமாக அந்த நேரத்தில் வன்முறைச் சம்பவங்கள் எவையும் நிகழவில்லை.
நாங்கள் இரவில் வெலிகாமத்திற்கு வருவதைத் தெரிவித்து அரசாங்க அதிபருக்கும், முதலியாருக்கும், வெலிகம கிராம விதானையாருக்கும் எங்கள் உறவினர்களே தந்திச் செய்திகளை அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற விடயம் ஊருக்கு புறப்படுவதற்கு முன்னர் எங்களுக்குத் தெரிய வந்தது…… எங்களை பிடித்துக் கொண்டு போய், வழக்குத் தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத் தருவதற்கான எல்லா சாட்சியங்களையும் எமது உறவினர்களே வழங்கியிருந்தார்கள்.”
நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எவையும் இல்லாத அந்த நாட்களில் ‘ஐந்து சிங்கள இளைஞர்கள் ஒரு சில ஆயுதங்களுடன் மாட்டு வண்டியில் வெலிகாமத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்ற எச்சரிக்கையை ஊர் பெரியவர்கள் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அரச இயந்திரம் உடனடியாக முடுக்கிவிடப்படுகிறது. ஒரு சில நிமிடங்களில் முதலியார், விதானையார், அரசாங்க அதிபர் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் சிப்பாய்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். நடக்கவிருந்த விபரீதம் உரிய நேரத்தில் தடுக்கப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த ஒரு சூழலில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்த மார்ட்டின் விக்கிரமசிங்கவின் இந்த நினைவுப் பகிர்வு இன்றைய இலங்கையின் பின்னணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் நாட்டில் அசாதாரண நிலைமைகள் தோன்றும் பொழுது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் விடயத்திற்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தார்கள் என்பதனையும், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்து வந்த கிராம மட்ட விதானைமார் தொடக்கம் முதலியார், பொலிஸார் மற்றும் அரசாங்க அதிபர் வரையிலான தரப்புக்கள் எவ்வித நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் எவ்வாறு தமது கடமைகளை புரிந்து வந்தார்கள் என்பதனையும் காட்டும் ஓர் உதாரணமாக இதனைப் பார்க்க முடியும்.
துரதிர்ஷ்டவசமாக, அதற்கு சுமார் 100 ஆண்டுகளின் பின்னர் நவீன தொடர்பு சாதன வசதிகள் அனைத்தும் உச்ச மட்டத்தில் வளர்ச்சி கண்டிருந்த ஒரு பின்னணியில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அம்பாறையிலும், மார்ச் முதல் வாரம் திகனயிலும், 2019 மே மாதம் வயம்ப மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெற்ற இன வன்முறைகளின் போது பொலிசாரையும் உள்ளடக்கிய விதத்தில் பாதுகாப்பு படைகளும், முழு அரச யந்திரமும் செயலற்று, முடங்கிப் போயிருந்தது ஏன்? சுந்திரத்திற்கு பின்னர் 1958, 1983, 2001, 2014 எனப் பல தடவைகள் இந்த அவலம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.
அரசு (State) வேறு, அரசாங்கம் (Government) வேறு என்ற அரசியலின் அடிப்படை தத்துவத்தை மூத்த சிவில் சேவை அதிகாரிகளும், பொலிஸாரும் புரிந்து கொள்ளத் தவறியிருந்ததே இதற்கான மூல காரணம். 1950 கள் வரையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இந்தப் புரிதல் இருந்திருக்கிறது. அதற்கான ஓர் உதாரணம் :
1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்புத்துறை முகத்தில் ஒரு பாரிய வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது. போச்சுவார்த்தைகள் தோல்வி கண்டதனையடுத்து துறைமுகச் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் அளவுக்கு நிலைமை தீவிரமடைகிறது. பிரதம மந்திரி பண்டாரநாயக்க பொலிஸ் மா அதிபர் ஒஸ்மன்ட் டி சில்வாவை அழைத்து, உடனடியாக பொலிஸார் துறைமுகத்திற்குள் பிரவேசித்து, வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்றும், அதற்கு தலைதாங்கி வரும் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
அப்படிச் செய்வது ஒரு சட்ட விரோதமான செயலாக இருந்து வரும் என தான் கருதுவதனால் தன்னால் அதனைச் செய்ய முடியாது என பொலிஸ் மா அதிபர் திட்டவட்டமாக பிரதம மந்திரியிடம் சொல்கிறார். அத்துடன் நின்று விடாது, உடனடியாக உயர் பொலிஸ் அதிகாரிகளினதும், கொழும்பு மாநகர பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினதும் ஒரு மாநாட்டை கூட்டுகிறார். பொலிஸார் தமது கடமைகளை செய்யும் பொழுது அரசியல்வாதிகளிடமிருந்து வரும் சட்டத்திற்கு புறம்பான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கக்கூடாது என அவர்களுக்கு கண்டிப்பான விதத்தில் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.- Vidivelli