(உடுநுவர நிருபர்)
கம்பளை, கஹட்டபிடிய சம்பவம் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறாகும். இது இனரீதியான சம்பவமல்ல என்று கம்பளை நகரசபையின் உப தலைவர் எச்.எல்.எம். புர்கான் தெரிவித்தார்.
இச்சம்பவம் இரு இளைஞர் குழுக்களிடையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவமாகும். இதில் இன முறுகல்கள் எதுமில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கம்பளை போத்தலபிட்டிய பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கம்பளை இலம்காம்வத்தை சந்தியில் உணவகமொன்றுக்கு உணவருந்த வந்த இளைஞர்களுக்கும் போத்தலபிட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களுக்கும் இடையில் மீண்டும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரவு 11 மணியளவில் மதுபோதையில் அங்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வீடொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் உணவகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இளைஞர் குழுக்கள் கலைத்து விரட்டப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த எட்டுப் பேர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய கம்பளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.- Vidivelli