உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவினையடுத்து முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு செயற்படாத நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் ஏற்பாடுகளை வழமைபோன்று தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவரது பதவிக்காலத்திலே திணைக்களத்துக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்தார். முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த அரச ஹஜ் குழு அவரது பதவி இழப்புடன் இயங்காதிருந்த நிலையிலே அவற்றின் அதிகாரங்களும், திணைக்களத்துக்கு முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வழங்கப்பட்டன.
அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளில் எதுவித தாமதங்களும் ஏற்படாது. தற்போது ஹஜ் முகவர் நியமனங்களுக்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் 18ஆம் திகதிவரை நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சையில் முகவர் நிலையங்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்படும்.
2019ஆம் ஆண்டு ஹஜ் தொடர்பாக சவூதி ஹஜ் அமைச்சர் எதிர்வரும் 28ஆம் திகதி கூட்டவுள்ள ஹஜ் மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை. இம்மாத இறுதிக்குள் நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடும் என்பதால் புதிதாக நியமனம் பெறும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரே மாநாட்டில் கலந்து கொள்வார் என்றார்.
-Vidivelli