கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஒரே நாடு ஒரே சட்டச் செயலணியின் பரிந்துரைகளினால் பாடசாலைகளில் மாணவர்கள் படிக்கும் இஸ்லாம் சமய பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தில் சில மாற்றங்களை கல்வி இலாகா புகுத்தியுள்ளதாக அறிகிறோம். இந்த மாற்றங்கள் எவை, அவை ஏன் மாற்றப்பட்டன என்பன பற்றிய விபரங்களை இதுவரை கல்வி இலாகா வெளியிடாதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தச் சந்தேகங்களை நீக்குவதில் முஸ்லிம்களின் நாடாளுமன்ற அங்கத்தவர்களும் மௌனிகளாகிச் செயலிழந்து நிற்பதை முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இப்பிரச்சினைகளைப் பற்றிய சில பொதுவான கருத்துக்களை இக்கட்டுரை விடிவெள்ளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றது.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் எழுந்ததன் பின்னணியே முஸ்லிம்களின் திருமண விவாகரத்துச் சட்டம் சம்பந்தமான பிரச்சினைதான். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் இந்நாட்டின் இஸ்லாமோபோபியர்கள் அந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தையும் முன்வைத்து சிங்கள பௌத்த வாக்காளர்களிடையே கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டித் தேர்தலை வென்றெடுத்தனர். எனவே வெற்றிபெற்ற புதிய ஜனாதிபதி இஸ்லாமோபோபியர்களின் கோஷத்தை அமுல்படுத்தவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். ஆகவே அதற்காக ஒரு செயலணியை உருவாக்கி அதற்குத் தலைவராக ஞானசார தேரரை நியமித்தார். இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் நான் விளக்கியுள்ளதால் அந்த விபரங்களை மீண்டும் இங்கே விபரிப்பது பொருத்தமாகாது.
இச்செயலணி சட்டம் சம்பந்தமானது என்பதை வாசகர்கள் முதலில் உணரவேண்டும். இந்நிலையில் சட்ட வல்லுனர் ஒருவர் நீதி அமைச்சராக இருக்கையில் அவரையும் கலந்தாலோசிக்காமல் நீதிமன்றத்தையே அவமதித்ததற்காகச் சிறைசென்று முன்னைய ஜனாதிபதி சிறிசேனாவின் அரசியல் நலன்கருதி மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒரு கைதியை இச்செயலணிக்குத் தலைவனாக்கியமை நீதி அமைச்சரின் முகத்தில் கரி பூசவா அல்லது முஸ்லிம் சமூகத்தையே அவமானப்படுத்தவா? எதுவாகினும் பள்ளிக்கூட மாணவர்களின் இஸ்லாம்பாடப் புத்தகங்களில் இந்தச் செயலணி கைவைத்ததன் பொதுவான நோக்கமென்ன?
2019 ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று சஹ்ரானின் கொலைகாரக் கும்பல் நடத்திய கொலைவெறி ஆட்டத்தால் இஸ்லாமே பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும் ஒரு மார்க்கம் என்ற இஸ்லாமோபோபியரின் உலகளாவிய விஷபோதனையை அவர்களது இலங்கையின் சகாக்களும் இங்கே பரப்பலாயினர். அதனை நிரூபிக்கும் முகமாக குர்ஆனிலுள்ள போர்பற்றிய வசனங்களைப் பொறுக்கியெடுத்து அவை என்ன சந்தர்ப்பத்தில் நபிகளாருக்கு அருளப்பட்டன என்பதை உதறித்தள்ளி அவைதான் இப்பயங்கரவாதத்துக்கு வழிகாட்டுகின்றன என்று வாதிட்டனர்.
இவ்வாறான ஒரு கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியிலேதான் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யவேண்டும் என்ற குரல்கள் உலகெங்கும் கேட்கத் தொடங்கின. அந்தக் குரல்களுக்குப் பின்னால் சில பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் இஸ்லாமோபோபிய பேராசிரியர்களும் அடங்குவர். அவர்களின் ஆலோசனைகளை சில அரசாங்கங்கள் விலைகொடுத்து வாங்கியதாலும் பல செய்தித்தாபனங்கள் அவர்களின் கருத்துகளுக்கு முக்கிய இடமளித்ததாலும் அவர்கள் சர்வதேச மேடைகளில் கொடிகட்டிப் பறக்கலாயினர். ஆனால் அவர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றியோ அதன் வரலாறு பற்றியோ முஸ்லிம்கள் பேசும் மொழிகளைப் பற்றியோ எந்த அளவுக்கு அறிவுண்டு என்பதை யாரும் எடைபோட முன்வரவில்லை.
அவர்களின் அரைகுறை அறிவால் எவ்வாறு சில முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் இனவெறிக்குப் பலியாகியுள்ளன என்பதை இப்போதுதான் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, இன்று சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் சீன அரசின் மூளைச்சலவைக்குப் பலியாகியுள்ளதை உலகே அறியும். அந்த உய்கர்களின் மொழியே தெரியாமல் அவர்களின் அரசியல் இயக்கங்களுக்கு பயங்கரவாதப் பட்டம்சூட்டி அவர்களை பயங்கரவாதிகளென உலகுக்குச் சித்தரித்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொஹான் குணரத்தினவின் விஷமத்தனமான ஆய்வினை உய்கர் மொழியைக்கற்று அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உண்மையை அறிந்த அமெரிக்கப் பேராசிரியர் Sean Robers தனது The War on The Uyghurs என்ற நூலில் வெகுவாகக் கண்டித்துள்ளார். அதே பேராசிரியர் குணரத்தின காத்தான்குடி மௌலவி அப்துல் ரவூபின் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற தமிழ் நூலுக்கும் ஒரு முன்னுரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தப் பேராசிரியர் அந்தத் தமிழ் நூலை முற்றாக வாசித்தாரா என்பது வேறு விடயம்.
எனினும் இந்தப் பேராசிரியரின் முஸ்லிம் பயங்கரவாதம் பற்றிய கருத்துக்களும் வாதங்களும் ஒரே நாடு ஒரே சட்டச் செயலணித் தலைவர் ஞானசாரரையும் அவரது பொதுபல சேனா இயக்கத்தையும் கவர்ந்துள்ளது பரகசியம். ஞானசாரர் காத்தான்குடி சென்றதும் அங்கே அவருக்கு ரவூப் மௌலவியின் பள்ளிவாசலில் வரவேற்பளிக்கப்பட்டதும் அதன் பிறகு ஞானசாரரின் தூண்டுதலால் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நீதி அமைச்சருக்கு இந்த மௌலவி சார்பாகக் கடிதம் எழுதியதும் நாடறிந்த விடயங்கள். இந்த நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டுதான் ஒரே நாடு ஒரே சட்டச் செயலணியின் பாடப்புத்தகம் சம்பந்தமான பரிந்துரைகளை அணுகவேண்டியுள்ளது. ஆனால் அந்தப் பரிந்துரைகள் என்னவென்பதை அரசு வெளிப்படுத்தவேண்டும். அதையாவது ஏன் முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் கேட்கக்கூடாது?
இதுபற்றி இன்னுமொரு உண்மையையும் மறந்துவிடக் கூடாது. அதாவது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமொன்றும் அரசிடம் உண்டு. அதற்கென பிரத்தியேகமான முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் உய்கர் முகாம்களின் ஒரு நகல் என்பதை மறுக்கமுடியுமா? சீனாவின் சீடனல்லவா இன்றைய இலங்கை அரசு? ஆகவே அங்குபோல் இங்கும் நடக்கப்போவது மூளைச்சலவை எனக்கருதுவதில் தவறுண்டா?
இவற்றையெல்லாம் பின்னணியாகக்கொண்டு நோக்குகையில் கல்வி இலாகாவின் இஸ்லாம் பாடப்புத்தகங்களின் திருத்தம் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வி அவர்களை எதைப்பற்றியும் யதார்த்தமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் நாட்டுப்பற்றையும் இன ஒற்றுமையையும் வளர்ப்பதாகவும் அதேசமயம் மாணவர்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாகவும் அமைதல் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. கிளிப்பிள்ளைபோல் பழையதையே மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்கும் கல்வி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளுக்கு இஸ்லாம் பாடம் விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே அவற்றை நோக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் பாடச் சீர்திருத்தங்களை எல்லாரும் வரவேற்கவேண்டும். அதே சமயம் பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் ஓரினக்கலாசாரத்துக்கு மாற்றுவதாக கல்விச் சீர்திருத்தங்கள் அமையுமாயின் அது நாட்டின் இன அமைதியையும் குலைத்து பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாகி உலக அரங்கின் எதிர்ப்பையும் சம்பாதிக்கலாம். அவ்வாறான மாற்றங்கள் மூளைச்சலவையின் படிமுறைகளாக அமைவது திண்ணம். சிங்கள பௌத்த பேரினவாதத்தையே சதா உச்சரித்துக் கொண்டிருக்கும் அரசின் கல்வியாளர்கள் மத்தியில் சீர்திருத்தங்கள் மூளைச்சலவையின் படிக்கல்களாக அமையலாம் என்ற ஒரு பயம் இப்போது எழுந்துள்ளது.
இஸ்லாம் பாடப்புத்தகங்களில் நுழைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே அடிப்படையில் குர்ஆனை தழுவியனவாகவே இருப்பது தவிர்க்க முடியாத ஒரு நியதி. இந்த நியதி எல்லா மதங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு பௌத்தமதப் பாடப்புத்தகத்தில் பௌத்த பெருமானின் போதனைகளுக்கு நேர்மாறான கருத்துக்களை அனுமதிக்கலாமா? அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் அது ஈற்றில் பௌத்த பெருமானையே நிராகரிக்கும் அளவுக்கு அவற்றைப் படிக்கும் மாணவர்களைக் கொண்டு செல்லாதா? அதே போன்றுதான் குர்ஆனுக்கு நேர்மாறான கருத்துக்கள் சீர்திருத்தம் என்ற போர்வையில் பாடப்புத்தகங்களுக்குள் நுழைக்கப்படுமானால் அது குர்ஆனையே நிராகரிப்பதுபோல் ஆகாதா? எனவேதான் இப்போது கல்வி இலாகா எடுத்துள்ள நடவடிக்கை முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனைத் தீர்த்துவைப்பது அவ்விலாகாவின் கடமை. முஸ்லிம் பிரதிநிதிகள் உண்மையை அறிந்து அதனை விரைவில் வெளிப்படுத்துவார்களா?- Vidivelli