ஏ.ஆர்.ஏ.பரீல்
பலாங்கொடையிலுள்ள ஹிட்டுவாங்கல கூரகல எனும் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளதே ஜெய்லானி பள்ளிவாசலாகும்.
கூரகல மலை (குகையைக் கொண்டுள்ள மலை) கால் அடி மலை எனவும் அழைக்கப்படுகிறது. பெரிய பாராங்கல் ஒன்றின் கீழ் மங்கலான பாதச் சுவடு காணப்படுவதனாலேயே அது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இம்மலை ஹிட்டுவாங்கல (உள்ளங்கை அடையாளம் பதிந்துள்ள மலை) என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய பாராங்கல் ஒன்று மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கும் வகையில் இயற்கையான கூரை போன்றும் காணப்படுகிறது. இரு பாறைகளுக்குமிடையிலான நெருக்கமான வழி ஊடாக மேடையை அடைய முடியும். அம்மேடையிலிருந்து கல்தொட்ட சமவெளியைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. வானம் தெளிவாக உள்ள காலங்களில் அதைப்பார்க்கலாம்.
கவ்துல் அஃழம் என பிரபல்யமாக அறியப்படும் செய்யது ஷெய்க் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி என்ற இறைநேசரை கண்ணியப்படுத்தும் நோக்கில் 800 வருடங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள் இங்கு சமய அனுஷ்டானங்களை நடத்தி வருகின்றனர். அப்துல் காதிர் ஜெய்லானி தியானத்தில் ஈடுபட்டிருந்த மலை விளிம்பிலிருந்து சுமார் 200 அடி தூரம் சிரமத்துடன் நடந்து குகையை அடைய முடியும்.
அதனுள் மலைப் பிளவினூடாக ஒரு வெ ளிச்சம் புலப்படுகிறது. இக்குகை பலாங்கொடை பீட பூமியின் உச்சியில் உள்ளதால் அதனூடாக ஊடுருவி வரும் சூரிய ஒளியே அதுவாகும்.
ஆர்.எச்.பாஸற் என்பவர் ‘ரொமான்றிக் சிலோன்’ எனும் நூலில் கூரகல குகையைப் பற்றி பின்வருமாறு விபரிக்கிறார். ‘அக்குகை கவனத்தை ஈர்க்கும் ஓர் இடமாகும். செயற்கையான அகழ்வுகளோ, அல்லது சடங்குகள் சம்பந்தமான அலங்காரங்களோ மேற்கொண்டதற்கான அத்தாட்சிகள் எதுவுமின்றி முற்றிலும் இயற்கையானதாக அது உள்ளது. செங்குத்தான மலை உச்சியிலிருந்து இறங்கிச் சென்றால் அதன் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனுள் நுழைந்தால் பெரிய மண்டபம் ஒன்றை அடையலாம். அதன் இருபுறங்களிலும் இரு வழிகள் காணப்படுகின்றன. இது பூமிக்கடியில் சுமார் 50 யார் தூரம் வரை புலப்படுகிறது. அதற்கப்பால் நிழல்களின் பொதுவான இருள் காணப்படுகிறது’ என்று பாஸற் விபரிக்கிறார்.
1922ஆம் ஆண்டு ஹிட்டுவாங்கல மலையின் கீழ் சிறிய பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. மலை நாகப் பாம்பின் படம் போன்று அமைந்திருந்ததால் அப்பள்ளிவாசலுக்கு கூரை ஒன்றின் அவசியம் ஏற்படவில்லை. பல அரபு எழுத்துக்கள் காணப்படுகின்றன. பாறையில் செதுக்கப்பட்ட மிஹ்ராப் ஒன்றின் வடிவத்தில் கிப்லா திசை காட்டப்பட்டிருக்கிறது. இப்பள்ளிவாசலை மர்ஹூம் சி.எல்.எம்.மரிக்கார் நிறுவினார்.
கூரகல பௌத்த துறவிகளின் தியான ஸ்தலம் என உரிமை கோரப்பட்டாலும் அதற்கான ஆதாரங்களில்லை. கூரகல குகையைத் தவிர ஏனைய குகைகளில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவை பௌத்த சங்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. எனவே கூரகல குகையில் முஸ்லிம்களின் வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றனவேயன்றி ஏனைய குகைகளில் போன்று கல்வெட்டுக்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1971ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் கூரகல பிரதேசத்தை தொல்பொருள் பிரதேசமாக பிரகடனப்படுத்தியதன் பின்பே பெரும்பான்மையினரின் எதிர்வலைகள் ஜெய்லானி பள்ளிவாசலை நோக்கி நகர்ந்தன.
சிங்கள ராவயவின் ஊர்வலம்
2015 ஏப்ரல் மாதத்தில் சிங்கள ராவய அமைப்பு கூரகலைக்கு ஊர்வலமொன்றை மேற்கொண்டது. ஊர்வலத்தில் பௌத்த குருமார்களும், பெரும்பான்மையின மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கூரகலயில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையொன்றினை நிறுவுவதே அவர்களது பிரதான இலக்காக இருந்தது. அவர்கள் ஊர்வலத்தில் புத்தர் சிலையொன்றினையும் சுமந்து சென்றனர்.
‘பௌத்தர்களின் புனித பிரதேசம் கூரகல. அதனை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். எமது உயிர்களைத் தியாகம் செய்தாவது கூரகலயை முஸ்லிம்களிடமிருந்து மீட்போம்’ என்று சிங்கள ராவய அமைப்பு சவால் விட்டது.
சிங்கள ராவயவின் ஊர்வலம் கூரகலயில் நல்லுறவுடன் வாழும் சிங்கள முஸ்லிம் சமூகத்தினரிடையே முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கலாம் எனக் கருதிய கல்தொட்ட பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்திடமிருந்து தடையுத்தரவொன்றினைப் பெற்றுக்கொண்டதால் சிங்கள ராவயவின் ஊர்வலம் பொலிஸாரினால் தடை செய்யப்பட்டது.
பிரதமரினால் குழு நியமனம்
அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்றினைப்பெற்றுக் கொள்வதற்காக 2015 ஏப்ரலில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவில் இரத்தினபுரி அரசாங்க அதிபர், பலாங்கொடை பிரதேச செயலாளர், கலாசார மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். 2015 ஏப்ரல் 21ஆம் திகதி இரத்தினபுரி அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் இக்குழு கூடியது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளரும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அப்போதைய இராஜாங்க அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க ஜெய்லானி பள்ளிவாசல் அகற்றப்படவுள்ளது என அறிவித்தார்.
‘கூரகல பிரதேசம் தொல்பொருள் பிரதேசம். இப்பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி பள்ளிவாசல் அங்கிருந்தும் அகற்றப்படவுள்ளது என அப்போதைய கலாசார மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை அகற்றப்படும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக 16 ஏக்கர் காணியில் நிர்மாணித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரத்திரனபுரி அரசாங்க அதிபர் தெரிவிப்பு
ஜெய்லானி பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் எனவும் அதற்கு ஈடாக முஸ்லிம்களுக்கு காணி வழங்கப்பட வேண்டுமெனவும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் , இதனை அமுல்படுத்துவதிலே காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் 2015லே அப்போதைய இரத்தினபுரி அரசாங்க அதிபர் நிமல் கன்னங்கர தெரிவித்திருந்தார்.
தொல்பொருள் பிரதேசங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கூரகல ஜெய்லானி பள்ளிவாசலுக்காக முஸ்லிம்களுக்கு மாற்றுக்காணி வழங்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தொல்பொருள் வலயத்திலுள்ள பள்ளிவாசல் காணி 1990ஆம் ஆண்டு குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 16 ஏக்கர் காணியில் பள்ளிவாசல் அகற்றப்பட்டு நிர்மாணிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார். அவர் பள்ளிவாசலை நிர்மாணித்துக்கொள்ள அரசாங்கம் உதவி செய்யும் எனவும் உறுதியளித்திருந்தார்.
இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்த குழு பள்ளிவாசலை அகற்றுவதற்கு சிபாரிசு செய்திருந்தாலும் அரசாங்கம் பள்ளிவாசல் நிர்வாகம் மூலமே அதனை அகற்றிக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தது.
முஸ்லிம்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ள விரும்பாத அரசாங்கமும், அரசியல்வாதிகளும் முஸ்லிம்களே பள்ளிவாசலை அகற்றிக்கொண்டார்கள் என்று நியாயப்படுத்துவதற்கே இந்த ஏற்பாடாகும். இவ்வாறான சூழ்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் பள்ளிவாசல் அகற்றப்படவில்லை.
பொதுபலசேனாவின் எதிர்ப்பு
கலகொட அத்தே ஞானசார தேரர் செயலாளராகப் பதவி வகிக்கும்பொதுபல சேனா அமைப்பும் ஜெய்லானி பள்ளிவாசல் அப்பகுதியிலிருந்தும் அகற்றப்பட வேண்டும் என 2010 – 2015 காலப்பகுதியில் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தது. ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தியது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு எதிராக சவால்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இக்காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த கோத்தாபய ராஜபக் ஷவின் உத்தரவின்படி பள்ளிவாசலுக்கு சொந்தமாக கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ தப்தர் ஜெய்லானிக்கு நேரடியாக விஜயம் செய்து அப்புறப்படுத்தப்பட்ட கடைகளையும் கட்டிடங்களையும் பார்வையிட்டார்.
100 அடி உயரமான தாதுகோபுரம்
கூரகலயில் சுரங்க மலையில் 100 அடி உயரமான தாதுகோபுரம், தியான மண்டபம், விடுதிகள், பாரிய சிங்கத்தின் உருவம், வீதிக்கட்டமைப்புகள் என்பன தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஜெய்லானி பள்ளிவாசலுக்கு அண்மித்ததாகவே இப்பாரிய தாதுகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. நிர்மாணப்பணிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பு பூர்த்தி செய்யப்படவுள்ளன.
இப்பிரதேசத்தை தொல்பொருள் பாதுகாப்பு வலயமாக தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழேயே பௌத்த புனித தல நிர்மாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதேசத்துக்குள் பல தசாப்தங்களுக்கு முன்பும் தாதுகோபுரமொன்று நிர்மாணிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த பதியுதீன் மஹ்முத் இதற்குப் பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதன் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
திருத்த வேலைகளுக்குத் தடை
பள்ளிவாசலின் திருத்த வேலைகள் மற்றும் நிறப்பூச்சு வேலைகள் என்பன தொல்பொருள் திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. கந்தூரி நடைபெறும் மாதத்தில் மாத்திரமே இந்த வேலைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி யைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
‘இங்குள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவது கூட எமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இரவு வேளையில் பள்ளிவாசலில் தங்கியிருப்பதும் எனக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பின்பு எனக்கென உள்ள தனியான அறையிலே நான் தங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என பள்ளிவாசலில் சில தசாப்தகாலமாக பணியாற்றிவரும் முகாமையாளர் எம்.எஸ்.எம்.ரபியுத்தீன் தெரிவிக்கிறார்.
நெல்லிகல வத்துரகும்புரே தம்மரதன தேரர்
பலாங்கொட கூரகல தொல்பொருள் வலயத்துக்குள் பிரமாண்டமான தூபி மற்றும் தியான மண்டபங்கள், ஓய்வு மண்டபங்கள் உட்பட மாடிக்கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்பிரதேசம் பெளத்த மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் அரச வெசாக் பண்டிகை நிகழ்வுகள்இப்பிரதேசத்திலே இடம் பெறவுள்ளன. இத்தனைக்கும் இப்பிரதேசம் பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் பிரதேசமாகும்.
இங்கு இடம் பெறும் நிர்மாணப்பணிகள் நெல்லிகல வத்துரகும்புரே தம்மரதன தேரரின் மேற்பார்வையின் கீழேயே இடம்பெறுகின்றன. நிர்மாணப்பணிகளில் ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் தொண்டர்களாக ஈடுபட்டுள்ளனர்.
இங்கு வரலாற்று புகழ்மிக்க முஸ்லிம்களின் புனித தலமாகக் கருதப்படும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலும் அமைந்துள்ளது. கூரகல பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசமாக மாற்றப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்லானி பள்ளிவாசலை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் வத்துரகும்புரே தம்மரதன தேரர் ஈடுபட்டுள்ளார். இவர் நெல்லிகல சர்வதேச பெளத்த நிலையத்தின் ஸ்தாபகராவார். இவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முழுமையான ஆதரவு உள்ளது.
கூரகல ஜெய்லானியில் பள்ளிவாசலாக இயங்கிவரும் தகரக்கொட்டிலை அகற்றிக் கொள்ளுமாறு அதன் நிர்வாக சபையிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால் பள்ளிவாசல் நிர்வாகமோ, வக்பு சபையோ இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விரைவில் அது அகற்றப்படாவிட்டால் பலாத்காரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் நெல்லிகல தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூரகல பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசமாகும். இப்பிரதேசத்திலே தகரக்கொட்டிலில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இக்கொட்டிலை அகற்றிக்கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை மகஜர் மூலம் கோரியிருக்கிறேன். ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்.எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்குள்ள ஸியாரத்தை வைத்துவிட்டு பள்ளிவாசலாக இயங்கும் தகர கொட்டிலை அகற்றும்படி வேண்டியிருக்கிறேன்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்னால் ஒரு மண்டபம் வேறாக அமைத்துக் கொடுக்க முடியும். கூரகல பிரதேசம் சிவனொளிபாத மலைபோன்று அனைத்து மக்களும் வந்து தங்கள் மதவழிபாடுகளை நடத்தும் வகையில் அமைய வேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகமோ அல்லது வக்பு சபையோ இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படும். பள்ளிவாசலின் புதிய நிர்வாகத்துக்குள் பிரச்சினை நிலவுவதாக அறிகிறேன். அவர்கள் பிரதேச ரீதியில் பிளவுபட்டுள்ளார்கள் என்றும் நெல்லிகலதேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
மு.ச.ப. அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் இவ்வாறான சர்ச்சைகளுக்கு உள்ளமைக்குக் காரணம் பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாக சபையும்,முன்னாள் நிர்வாக சபைகளுமே என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும்.
ஜெய்லானி பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று நெல்லிகல தேரர் சூளுரைத்தமையை அடுத்து பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் வெளியிட்டுள்ள கருத்து பள்ளிவாசலின் நிர்வாகம் திணைக்களத்துக்கோ,வக்பு சபைக்கோ உரிய ஒத்துழைப்புகளை வழங்கவில்லை. அத்தோடு பள்ளிவாசலின் நிலைமை தொடர்பில் காலத்துக்குக்காலம் தெளிவுபடுத்தவில்லை என்பது உறுதியாகிறது.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு எதிராக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையை அதன் நிர்வாகம் ஒத்துழைத்தால் மாத்திரமே தீர்த்து வைக்க முடியும். சுமுகமான தீர்வுகாண முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் தயார் நிலையில் உள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகசபை ஒத்துழைப்பு வழங்காதுவிடின் புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்கும் நிலைமை ஏற்படலாம். ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு புதிய நிர்வாக சபை அழைக்கப்பட்டும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 11 பேரில் மூவர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். நிர்வாக சபையை மீண்டும் அழைத்து கலந்துரையாடி சுமுக தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தமை வரவேற்கத்தக்கதாகும்.
ஜெய்லானி புனிததலம் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டரீதியான சமயஸ்தலமாகும். இந்நிலையில் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்புசபை என்பனவற்றுக்கு மாத்திரம் உரித்தானதல்ல. பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. பள்ளிவாசல் நிர்வாக சபை ஏகோபித்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். ஜெய்லானி பள்ளிவாசலும் அதனோடிணைந்த பகுதிகளும் முஸ்லிம்களின் தொன்மை மிகு புனிதத் தலங்களாகும்.மேலும் சட்ட ரீதியானதுமாகும். அதனை அகற்றுமாறு எவராலும் உத்தரவிடமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
செயற்திறனற்ற நிர்வாக சபை
ஜெய்லானி பள்ளிவாசலின் நிர்வாக சபை செயற்திறனற்றது என்பதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தற்போதைய மற்றும் முன்னைய நிர்வாகசபைகள் பள்ளிவாசல் அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.
பள்ளியை பாதுகாக்க நடவடிக்கை
ஜெய்லானி பள்ளிவாசல் நீண்டகாலமாக அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றைமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலத்தில் இப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான சில கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அவரது உத்தரவின் பேரிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும் கடந்த காலங்களில் இப்பள்ளிவாசலை அகற்றக்கோரி பேரணிகளை நடத்தியிருந்தார்.
பள்ளிவாசலுக்கு தொடராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அசமந்தபோக்கில் செயலற்று இருப்பதை அவதானித்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் உடனடியாக செயற்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
அவர் கடந்த 2ஆம் திகதி ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களையும் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களையும் திணைக்களத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 11 நிர்வாக சபை உறுப்பினர்களில் 8 பேர் மாத்திரமே கலந்துரையாடலில் ஆஜராகியிருந்தனர். முன்னாள் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின்போது ஜெய்லானி பள்ளிவாசலைப் பாதுகாப்பதற்கு வக்புசபையும் முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கூட்டாக செயற்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கென ஐவர் அடங்கிய நடவடிக்கை குழுவொன்றினையும் பள்ளிவாசல் தொடர்பான தேவையான ஆவணங்களைத் திரட்டுவதற்கு சட்டத்தரணிகள் குழுவொன்றினையும் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிவாசலின் தற்போதைய நிலைமைக்கு தற்போதைய நிர்வாகமும், முன்னாள் நிர்வாகமும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நிர்வாக சபைகள் பள்ளிவாசலின் அபிவிருத்தியில் அக்கறைகாட்டாமை தொடர்பில் கவலையும் வெளியிட்டது.
அத்தோடு பலாங்கொடை பகுதியில் இயங்கிவரும் 15 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை ஒன்றிணைத்து விரைவில் கலந்துரையாடலொன்றினை நடத்தி கள நிலைமை ஆராயப்படவுள்ளது. அத்தோடு தொல்பொருள் ஆணையாளர் நாயகத்துடன் வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வரவேற்கத்தக்கன. ஆனால் தீர்மானங்கள் காலம் தாழ்த்தப்படாது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.-Vidivelli