கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் தொடர்பாக ஆராய்வதற்கு சபாநாயகர் கருஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழு இன்று முதன் முறையாகக் கூடவுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடாத்தும் பொலிஸ் குழுவின் தலைவரும் இன்றைய பாராளுமன்ற குழுக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பொலிஸ் விசாரணைகளின் விபரங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே பொலிஸ் குழுவின் தலைவர் அழைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற களேபவரம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஏனைய உறுப்பினர்களாக சமல் ராஜபக் ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜவீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத்தில் கலவர நிலைமை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
இந்த சம்பவங்களினால் பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. களேபவரங்கள், தாக்குதல்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் இன்று பரிசீலனைக்குட் படுத்தப்படவுள்ளன.