(நா.தனுஜா)
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடச்சென்ற ஆசிரியைக்கு, சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இணைந்து தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடச்சென்றதன் காரணமாக ஆசிரியையொருவர் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது பாடசாலை வரவுப்புத்தகத்தில் கையெழுத்திடவோ அனுமதிக்கப்படாததுடன் அதனைத்தொடர்ந்து அப்பாடசாலைச்சூழலில் அமைதியின்மை நிலையொன்றும் உருவானது.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி நீதிமன்றில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய கல்வியமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்ட இடமாற்றக் கடிதத்திற்கு அமைய பெப்ரவரி 2 ஆம் திகதி சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்குக் கற்பித்தல் பணிகளுக்காகச்சென்ற அவர் மேற்குறிப்பிட்டவாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டதை அடுத்து, அவருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் கலந்துரையாடலொன்றை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவில் சமூக செயற்பாட்டாளரான ஷ்ரீன் சரூரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பவானி பொன்சேகா, ஆசிரியை பாத்திமா பஹ்மிதா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் உள்ளிட்ட சிலரும் திருகோணமலை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பொதுக்கட்டமைப்புக்களிலும் முகங்கொடுக்கநேர்ந்த இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர். ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவும் இந் நிகழ்வில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளியிட்டார்.
அக்கலந்துரையாடலில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண்கள், இவ்வாறான சம்பவங்களால் தாம் உளவியல் ரீதியில் முகங்கொடுத்த அழுத்தங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்கள். அதேவேளை இத்தகைய சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் ஓரங்கம் என்று தெரிவித்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இவ்வாறான சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டியதன் அவசியம் குறித்தும் பிரஸ்தாபித்தனர். அதுமாத்திரமன்றி இதற்கு எதிராக சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிடவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli