வடக்கு சென்ற பின்னரே மீள்குடியேறிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெளிவாக புரிந்து கொண்டேன்
தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி
நேர்காணல் : ஆர்.யசி
“வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன என்பது அங்கு சென்ற பின்னரே தெரிந்துகொண்டேன். 12 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் இன்னமும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது அறிந்துகொள்ள முடிந்தது. இந்த விடயத்தில் வடக்கில் தமிழர்களின் பிரச்சினைகளை போலவே முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் பேசுவதை வரவேற்கின்றேன். விரைவில் பேசி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்” என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விடிவெள்ளிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
அண்மையில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளும் பொருட்டு வடக்கு மாகாணத்திற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் உட்பட மேலும் பல விவகாரங்கள் குறித்து அவர் வழங்கிய செவ்வி பின்வருமாறு:
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இடைக்கால அறிக்கை உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? செயலணியின் பரிந்துரைகளை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவீர்களா?
இன்னமும் எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை, அறிக்கை கிடைத்த பின்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து ஆராய்ந்தாலும் கூட நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்கும். ஆகவே அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்க்கலாம்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் எந்தக்கட்டத்தில் உள்ளது? சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா?
முஸ்லிம் சட்டத்தில் கண்டிப்பாக திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். அடிப்படை திருமண வயதெல்லை 18 என்பதும், காதி நீதிமன்றங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப்படுதல், குறிப்பாக பெண்களும் திருமண ஆலோசனையாளர்களாக பணியாற்ற முடியும், விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் பெண்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இப்போது இல்லை, பராமரிப்பு விடயங்களிலும் காதி நீதிமன்றத்திற்கு சென்று அங்கிருந்து நீதிவான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வெவ்வேறு திருத்தங்களை செய்யவுள்ளோம். சட்டத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை கூற முடியும். அதேபோல் விரைவில் பாராளுமன்றத்திற்கும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.
கொவிட் 19 தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஒரு வருடமாக ஓட்டமாவடியிலேயே அடக்கம் செய்யப்படுகின்றன. சடலங்களை அங்கு கொண்டு செல்வதில் தூரப் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மாவட்ட ரீதியாக அடக்கஸ்தலங்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடப்படுகிறது. இது பற்றிய உங்கள் கருத்து?
ஜனாஸாக்களை மாவட்ட ரீதியாக நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு நானும் கோரிக்கை விடுத்துள்ளேன். வெகு விரைவில் இதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும், கண்டிப்பாக அவ்வாறான நல்ல தீர்மானங்கள் வரும் என எதிர்பார்க்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்?
இது தவறான விமர்சனமாகும், இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதில் 26 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் உள்ள சகலரையும் சிறையில் அடைக்க முடியாதே. இப்போதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் வழக்குகள் முடிவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தில் அரசாங்கம் மட்டுமே தீர்மானம் எடுத்து எவரையும் கைதுசெய்ய முடியாது. இது சட்ட பொறிமுறையாகும்.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து, சட்டமா அதிபருக்கு அறிவித்து அதன் பின்னர் யாருக்கு எதிராக வழக்கு தொடர்வது யாரை விடுவது என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். குற்றவாளி யார் என்பதை அரசியல்வாதியினால் தீர்மானிக்க முடியாது. இதனை நீதிமன்றமே தீர்மானிக்கும். அதற்கான நடவடிக்கைகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் நேரடியாக தொடர்புபட்ட எவரும் இன்று உயிருடன் இல்லை. அனைவருமே இறந்துவிட்டனர். ஆகவே எம்மிடம் உள்ள ஆதாரங்களை கொண்டே அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்க முடியும். நேரடியாக தொடர்பில் உள்ள 26 பேரை கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதற்கு கால தாமதம் ஏற்படும். அதற்கு ஒன்றும் செய்ய இயலாது.
உலகத்தில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவ்வாறான விசாரணைகள் ஒரே நாளில் முடிவுக்கு வரவில்லை. எம்மால் முடிந்த அனைத்தையும் செய்து முடித்துள்ளோம், அடுத்ததாக நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெகு விரைவில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் வேண்டும். ஆகவே அதனை நீதிமன்றம் மூலமாக முன்னெடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளமை கூட ஒரு கண்துடைப்பு என கூறுகின்றனரே?
இதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். 42 ஆண்டுகளாக பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. அப்போதெல்லாம் இதனை எவரும் மாற்றவில்லை. நல்லாட்சி என கூறிக்கொண்டு ஒரு அரசாங்கம் இருந்தது அவர்கள் என்ன செய்தனர். இவர்கள் எவருமே ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் நாம் இதில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அநாவசிய கைதுகள் இடம்பெறக்கூடாது, அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு விடுதலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை கொண்டுவந்தால் பலருக்கு பிணை வழங்கும் நிலைமை கூட ஏற்படும். சகலரும் எதிர்பார்ப்பதை ஒரே நாளில் செய்து கொடுக்க முடியாது. படிப்படியாகவே ஏனைய விடயங்களை செய்ய முடியும். திருத்தம் சரியில்லை என்று நடைமுறையில் இருந்ததை வைத்திருக்க வேண்டுமா என்பதையும் இவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இவர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றாலும் கூட மெதுவாகவேனும் மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன.
அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்த நீங்கள் அங்கு வாழும் மீள்குடியேறிய முஸ்லிம்களைச் சந்தித்திருந்தீர்கள். அவர்களது அடிப்படை வசதிகள் பற்றிய என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்?
இது குறித்து நான் பெரிதாக எதனையும் அப்போது பேசவில்லை, ஆனால் முஸ்லிம் தரப்பை சந்தித்த வேளையில், அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்னர் மீண்டும் அந்த பகுதிகளுக்கு வந்து பார்த்தால் அங்கு அவர்களின் காணிகள் இல்லை என்பதையும், ஆரம்பத்தில் 2600 குடும்பங்களாக இருந்த போதிலும் இப்போது 12 ஆயிரம் குடும்பங்களாக பெருகியுள்ளதாகவும் அவர்களுக்கு இன்றுவரை எந்த நலன்களும் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்கள். அவர்கள் குறித்து எவருமே கவனம் செலுத்தாது உள்ளதாக வேதனைப்பட்டனர். இது பரிதாபமான நிலைமையாகும். அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அரச அதிகாரிகளிடம் பேசியிருந்தேன். இந்த விடயத்திற்கும் தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினைகளில் தமிழர்களா, சிங்களவர்களா அல்லது முஸ்லிம்களா என பாகுபாடு காட்ட வேண்டாம். பிரச்சினைகள் உள்ள மக்களுக்கு அதில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம்.
நல்லிணக்க வேலைத்திட்டம் எனும் போது முஸ்லிம்களுக்கும் நியாயம் கிடைத்தேயாக வேண்டும். அது குறித்து உங்களின் கவனம் எந்தளவு தூரத்தில் உள்ளது?
நிச்சயமாக, வடக்கில் முஸ் லிம் மக்களுக்கும் பாரதூரமான பிரச்சி னைகள் உள்ளது என்பது அங்கு சென்ற பின்னரே எனக்கும் தெரிய வந்தது. இடம்பெயர்ந்தார்கள் என்பது மட்டுமே எனக்கு தெரியும். ஆனால் 12 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் இன்னமும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னைய ஆட்சியில் கூட முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் எதனையும் செய்யவில்லை. ஆனால் இந்த விடயங்களை தீர்க்க வேண்டும். அதற்காக எம்மாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் ஆரோக்கியமான நிலைப்பாட்டில் உள்ளனர். தமிழர்களின் பிரச்சினைகளை போலவே முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண் போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் பேசுவதை வரவேற்கின்றேன். விரைவில் பேசி தீர்மானம் எடுப்போம்.- Vidivelli