ஷ்ரீன் சரூர்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
2019 ஆம் ஆண்டின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய அரசு ஒட்டு மொத்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தையும் தண்டிக்கும் ஆயுதமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தியுள்ளது. சிவில் யுத்தத்தின் போது தமிழ் மக்கள் அனுபவித்ததைப் போன்று, அரசின் நடவடிக்கைகளால் பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகித்து மேற்கொள்ளப்பட்ட கைதுகளால் ஏற்பட்ட பின்விளைவுகள் அல்லது தடுப்புக்காவலில் உள்ள ஆண்களுடனான குடும்பப் பிணைப்புகளால் இலக்கு வைத்து பெண்கள் தனித்துவம் மிக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பான்மையினர் மட்டக்களப்பு மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்களாவர். இவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளுடன் அல்லது தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர். காத்தான்குடியில் ஸஹ்ரானின் போதனை வகுப்புகளுக்கு உணவுகளை கொண்டு சென்று விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நபர் தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு பேரூந்து ஆசனங்களை பதிவு செய்து கொடுத்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்கொலை குண்டுதாரியின் அயலவர் வீடு ஒன்றில் தொலைக்காட்சி அன்டெனாவை பொருத்தியமைக்காக மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸஹ்ரானின் சகோதரருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றை விலை கொடுத்து வாங்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நபரின் வேன் ஒன்று குறிப்பிடப்படாத “தீவிரவாத செயற்பாடுகளுக்கு” பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் வேனுக்குரிய லீசிங் மாதாந்தக் கட்டணம் செலுத்தப்பட தவறியமைக்காக அந்த லீசிங் வசதியை வழங்கிய நிறுவனம் அந்த வேனை கையகப்படுத்த முயற்சித்த வேளை அந்நபரின் மைத்துனர் லீசிங் பணத்தை செலுத்துவதற்கு உதவியமைக்காக அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஸஹ்ரானின் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி நிகழ்வுகளில், விடயத்தை அறிந்து கொள்ளாமல் கலந்து கொண்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கின்றோம் என்று எண்ணியே அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் சப்பாத்துகள் தயாரிக்கும் கடைகள், சிறிய உணவு விடுதிகள் மற்றும் வீதியோரக் கடைகளில் நாட் சம்பளத்துக்கு பணிபுரிந்த தொழிலாளர்களாவர். இவர்கள் கொத்துக் கொத்தாகக் கைது செய்யப்பட்டு இன்று வரை 34 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், இக்காலப்பகுதி பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தடுத்து வைக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள 18 மாத காலப் பகுதிக்கும் அதிகமானதாகும். அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மீதான திருத்தங்களில் தடுப்புக் காவல் காலப்பகுதியை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைப்பதற்கான முன்மொழிவும் உள்ளடங்கியிருந்தது, இம்முன்மொழிவு இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஏதாவது பயனை வழங்குமா என்பது கேள்விக்குறியாகும். அவர்கள் எப்போதாவது விடுதலையாகும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் எதேச்சையான முறையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டதன் விளைவாக வாழ்வாதார இழப்பு, நற்பெயருக்கு களங்கம் ஏற்படல் மற்றும் உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களாகவே விடுதலையாவர்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசனைச் சபை தவறாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது, எனினும், அவ்வாறு விடுதலை செய்யப்படும் நபர்களின் தடுப்புக்காவல் உத்தரவுகளை இரத்துச் செய்வதற்கான நியதிகள் மற்றும் நிபந்தனைகள் கடுமையானவை. இவ்வாறு விடுதலை செய்யப்படும் நபர்கள் “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட” தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களைப் போன்று தமது எஞ்சியுள்ள வாழ்நாளை அரச புலனாய்வு அமைப்புகளின் பிடிக்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களின் தடுப்புக்காவல் ஆணைகளை இடைநிறுத்துவதற்கான நிபந்தனைகளில் குறித்த சந்தேக நபர்கள் தமது இருப்பிடங்களை மாற்றுவதானால் அதனை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலன்விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல், உள்ளூர் பயணங்கள் பற்றி அறிவிப்பதுடன் தமது வசிப்பிடங்களுக்கு திரும்ப வந்தவுடன் அதனை அறிவித்தல், அப்பிரிவின் கொழும்பு பயங்கரவாத தடுப்பு அலுவலகத்துக்கு மாதாந்தம் நேரில் சென்று பிரசன்னமாகுதல், பொறுப்பதிகாரியின் அழைப்பாணை கிடைக்கப் பெற்றால் 72 மணித்தியாலங்களுக்குள் அங்கு செல்லல் அத்துடன் வெளிநாடு செல்வதாயின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளரின் எழுத்து மூல அனுமதியைப் பெறல் என்பன உள்ளடங்குகின்றன.
பதினொரு மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் எதிர்பாராத வகையில் விடுதலை பெற்று வீட்டுக்கு வந்த தனது மகன் முஹம்மதை கண்ட வேளை அவரின் தாயார் இஸ்மியா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். முஹம்மத் பாடசாலை மாணவராக இருந்த வேளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் மற்றும் தீவிரவாதக் காணொளிகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்பொழுது வீடு திரும்பியுள்ள முஹம்மத் மேற்குறிப்பிடப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். கணவனை இழந்த இஸ்மியா வாடகை வீட்டில் தனது மூன்று மகள்களுடன் வசித்து வருகின்றார். தனது மகன் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தைக் கற்றதன் பின்னர் அவரை மத்திய கிழக்குக்கு அனுப்புவதன் மூலம் சொந்த வீடு ஒன்றை அமைத்து தனது மகள்களுக்கு திருமணம் முடிக்கும் கனவுடன் இஸ்மியா வாழ்ந்திருந்தார். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு அறிவிக்காமல் அடுத்த மாவட்டத்துக்கு கூட பயணிக்க முடியாத முஹம்மதால் இப்போது வெளிநாட்டுக்கு பயணிப்பதை பற்றி எண்ணிப்பார்க்கவே முடியாதுள்ளது.
இந்த பாரிய அளவிலான எதேச்சையான தடுத்து வைத்தலின் சுமைகளை பெண்கள் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஒருவராலும் கவனிக்கப்படாத விடயமாக அமைந்துள்ளது. ஆணாதிக்க சமூகமொன்றில் குடும்பத்தில் வருமானமீட்டும் ஆண்கள் அரசினால் தடுத்து வைக்கப்படும் நிலையில் அதற்காக பெண்கள் கொடுக்கும் விலை மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அநேகமாக, கைதுக்கான ஆவணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை, இந்நிலை காரணமாக இப்பெண்கள் தமது வாழ்க்கைத் துணைகள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை நெடு நாட்களாக (சில வேளைகளில் வாரக் கணக்கில்) அறியாதவர்களாக உள்ளனர். அநேகமான குடும்பங்கள் வெளி மாவட்டங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களை சென்று பார்ப்பதற்கு வசதியற்ற வறுமையான குடும்பங்களாகவுள்ளன. இக்குடும்பங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பயணக் கொடுப்பனவை வழங்கும் வேளையில் மாத்திரமே அவர்களைக் காணச் செல்கின்றன. அரச புலனாய்வு கட்டமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் தொந்தரவு என்பவற்றுக்கு அஞ்சுவதால் சட்ட உதவிகளை வழங்குவதற்கு பல சட்டத்தரணிகள் தயங்குகிறார்கள். இந்த இடைவெளியை பயன்படுத்தும் சில நேர்மையற்ற சட்டத்தரணிகள் தடுப்புக் காவலில் உள்ளோருக்கு பிணை பெற்றுத் தருவதாகக் கூறி இவ்வாறான பாதிக்கப்பட்ட குடும்பங்களை தவறாக வழி நடத்தி பணம் சம்பாதிக்கின்றனர். இந்த சட்டத்தரணிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படாத நபர்களுக்கு மாத்திரமே சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் பிணை வழங்கப்படலாம் என்ற யதார்த்தத்தை இச்சட்டத்தரணிகள் குறித்த குடும்பங்களிடம் தெரிவிப்பதில்லை. ஆனாலும் சில சட்டத்தரணிகள் இவர்களுக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். தமது குடும்பங்களின் பிரதான வருமானமீட்டும் நபரை விடுவிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளும் நிலையில் உள்ள அத்துடன் இச்சட்ட ஏற்பாடுகள் பற்றி அறிந்திராத அப்பாவிக் குடும்பங்கள் இவ்வாறான நபர்களின் பொறிகளில் சிக்க தம்மிடம் காணப்படும் ஒரேயொரு சொத்தான தங்க நகைகளை விற்றுக் கூட பணத்தைக் கொடுத்து ஏமாறுகின்றன. தனது கணவனின் கைதின் பின்னர் அவர் நடத்திச் சென்ற வியாபாரம் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் சட்டத்தரணிகளின் கட்டணங்களைச் செலுத்த தனது வீட்டை விற்ற சம்பவம் பற்றியும் அறிய முடிகின்றது.
வீட்டின் முதன்மை வருமானம் ஈட்டும் நபர் தடுத்து வைக்கப்படும் நிலையில், வீட்டில் உள்ள ஏனையோர் வருமானத்தை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சில கட்டுப்பாடுமிக்க குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வருமானம் ஈட்டுவதற்காக முதன்முதலாக வெளியிறங்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஜாஸியா என்ற பெண் தனது கணவன் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் மீன்பிடி வலைகளை நெய்து வருமானமீட்ட ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். நாளொன்றுக்கு 300 தொடக்கம் 350 ரூபா வரை மட்டுமே உழைக்க முடிந்த அவரால் தனது பதின்ம வயது மகனின் பாடசாலை மூடப்பட்டதன் பின்னர் வேறு பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளார். ஏனைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக வீட்டில் உள்ள பெறுமதிமிக்க பொருட்கள் மற்றும் நிலங்களை விற்று வருவதாகக் கூறுகின்றனர்.
தடுப்புக் காவலில் உள்ள நபர்களின் மனைவிகள் தமது குடும்பங்களைக் கொண்டு செல்ல போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் வருவதும் இப்பெண்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பாதுகாப்பு தரப்பு நபர்கள் இக்குடும்பங்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று வாக்கு மூலங்களை சிங்களத்தில் எழுதிக் கொள்கின்றனர், இவ்வாக்கு மூலங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாக்கு மூலங்களை அளித்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. ஆண் பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி தமது வீடுகளுக்கு வருகை தரும் போது தாம் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் இவ்வருகைகள் சமூகம் தம்மை ஒதுக்குவதற்கு காரணமாக அமையலாம் என தாம் அஞ்சுவதாகவும் இப்பெண்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் ஒரு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் தடுப்புக்காவலில் உள்ள ஒரு நபரின் வீட்டுக்கு சென்று அந்நபரின் மனைவிக்குச் சொந்தமான தையல் இயந்திரம் ஒன்றை கைப்பற்றியுள்ளார். குறித்த தையல் இயந்திரத்தை பயன்படுத்தி தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு உடுப்புகள் தைக்கப்பட்டமையே இவ்வாறு கைப்பற்றியமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இத்தையல் இயந்திரத்தின் மூலமே தனது மூன்று பிள்ளைகளை பராமரிப்பதற்கான வருமானத்தை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் எவ்வித வருமானமுமற்ற நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ளார். குறித்த பெண் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார், எனினும் பலர் இவ்வாறான அமைப்புகளுக்கு தனியாகப் பயணம் செய்து உதவி கோருவதற்கு அஞ்சிய நிலையில் உள்ளனர்.
தமது அன்புக்குரியவர்கள் தடுப்புக் காவலில் இருப்பது சமூக ஒதுக்கலையும் உருவாக்குகின்றது, இது ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுள்ள பெண்களை மேலும் தனிமைப்படுத்தலுக்குள் தள்ளி விடுகின்றது. உதாரணமாக, பாத்திமா என்ற பெண் தனது சகோதரன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை எவ்வாறு தனது குடும்பத்தின் வருமானத்தை பாதித்தது என்பதையும் தானும் தனது தாயாரும் பாய்களை இழைத்து குடும்பத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதை விபரித்ததுடன் இச்சம்பவம் காரணமாக தனது திருமணப் பேச்சுவார்த்தை முறிவடைந்து நிச்சயதார்த்தம் தடைப்பட்ட சம்பவத்தையும் விபரித்தார். தற்போது அவர் திருமணம் முடித்துள்ள போதும் தனது கணவரை தனது சகோதரர் தொடர்பான விடயங்களில் தள்ளியே வைத்துள்ளார். தனது சகோதரனைக் காண சிறைச்சாலைக்கு செல்லும் வேளை தனது கணவரையும் அழைத்துச் செல்வது கணவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட ஏதுவாகலாம் என பாத்திமா அஞ்சுகின்றார்.
தடுப்புக்காவலில் உள்ள நபர்களின் குடும்பங்களுக்கு உதவும் நபர்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன் விசாரணைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். இந்நிலை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூக ஆதரவை பெறுவதைத் தடுக்கின்றது. உதாரணமாக, சிவில் சமூக நிறுவனம் ஒன்று வழங்கிய உலருணவுகளை இக்குடும்பங்களுக்கு விநியோகித்த பெண் ஒருவரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். நலன் விரும்பிகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுகளை வழங்கும் வேளை புலனாய்வு அதிகாரிகளால் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்கள் விசாரணைகளுக்கும் அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான நபர்கள் மற்றும் அமைப்புகள் தடுப்புக் காவலில் உள்ளோருடன் தொடர்புள்ளவர்களாக சித்தரிக்கப்படுவதுடன் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உறவினர்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் எனக் கூறி நிரந்தரமாக விலக்கி வைக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே, அரசாங்கம் குடும்பத்தலைவரை மாத்திரம் தடுத்து வைத்துள்ள போதும், கைவிடப்பட்ட பெண்கள் சமூகத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர்கள் என நடத்தப்படுவதுடன் அடிப்படை குடும்ப வாழ்வை பேணுவதற்கு அவசியமான பராமரிப்பு மற்றும் சேவைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு உலகளாவிய ரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை எதிர்த்து வரும் அரசாங்கம் அச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் “தீவிரமயமற்றதாக்குதல்” என்ற ஒழுங்குவிதிகளை முன்மொழிந்துள்ளது. மேலும், அண்மையில் கண்துடைப்பாக சில சீர்திருத்தங்களை இச்சட்டத்துக்கு முன்மொழிந்துள்ளது. தீவிரமயமற்றதாக்குதல் முன்மொழிவு சீனாவின் உய்குர் கொள்கைகளை பிரதிபலிப்பதாக தனது கரிசனையினை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையினை இடைநிறுத்த பரிந்துரை செய்திருந்தது. தீவிரமயமற்றதாக்குதல் ஒழுங்கு விதிகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் விசாரணைகள் முடிவடையும் வரை அவ்வொழுங்குவிதிகளின் இயக்கத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அரை மனதுடன் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் மீதான திருத்த முன்மொழிவுகளுக்கு எதிராகவும் மேலதிக சவால்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம், தமது அன்புக்குரியவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு வாக்கு மூலங்களில் கையொப்பமிடுமாறு பல குடும்பங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக நாம் கேள்விப்படுகின்றோம். தமது அன்புக்குரியவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கு சம்மதிக்காத பட்சத்தில் அவர்கள் மேலும் பல வருடங்களுக்கு தடுப்புக் காவலில் வாட நேரிடும் என இக்குடும்பங்கள் அஞ்சுகின்றன. எனவே, எதேச்சையாக தடுத்து வைப்பதை தடுப்பதற்கு மாற்றீடாக ஒரு குற்றப்பத்திரங்களும் தாக்கல் செய்யாமல் அவர்களை இரண்டு வருடங்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி இரண்டு வருடங்களில் அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி விடுவிப்பதே இதன் நோக்கமாகும்.
பெண்கள் தடுப்புக்காவலில் உள்ள போது இந்த பிரச்சினைகள் மேலும் தீவிரமாகின்றன. மட்டக்களப்பில் 66 நபர்களுக்கு எதிராக 16 டீ அறிக்கைகள் கோவையிடப்பட்டுள்ளன, இவர்களில் 6 பேர் பெண்களாவர். இந்த தனிநபர்களை எந்தவித குற்றச்சாட்டையும் குறிப்பிடாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனக் கூறி தடுப்புக் காவலில் வைப்பதில் அரசு வெற்றிகரமாக செயற்படுகின்றது. தடுப்புக் காவலில் உள்ள அநேகமான பெண்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் உறவினர்களாகவோ அல்லது தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் போதனைகளை செவியுற்றவர்களாகவோ உள்ளனர். வறிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் மத ரீதியாக இறுக்கமான பின்னணிகளைக் கொண்ட இப்பெண்கள் அரிதாகவே வீட்டை விட்டு வெளியே வரும் பழக்கம் உள்ளவர்கள். இப்பெண்களுக்கு தமது ஆண் உறவுகளின் செயற்பாடுகள் பற்றிய அறிவு மிகக் குறைவாகவே உள்ளது. 57 வயது நிரம்பிய ஒரு பெண் தனது மகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை திருமணம் செய்ததன் காரணமாக தடுப்புக் காவலில் உள்ளார். கடந்த பத்து வருடங்களாக மார்புப் புற்று நோயினால் அவதியுறும் இப்பெண்ணுக்கு தேவையான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் சந்தேக நபர் ஒருவரை திருமணம் முடித்த 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 2021 இல் கைது செய்யப்பட்டார். இவரின் ஒரு வயது நிரம்பிய குழந்தை தற்போது தாயின் பராமரிப்பு இன்றி வளர்ந்து வருகின்றது. இதே நிலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 38 மற்றும் 25 வயது நிரம்பிய பெண்கள் விடயத்திலும் அவதானிக்கத்தக்கதாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களுடனான திருமண உறவு காரணமாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு சம்பவங்களிலும், இப்பெண்களின் பிள்ளைகள் வயது முதிர்ந்த மற்றும் பலவீனமான பாட்டிகளிடம் வளர்கின்றன. இம்மூதாட்டிகள் இப்பிள்ளைகளை வளர்ப்பதற்கு எந்தவித வருமானமுமின்றி தவிக்கின்றனர்.-Vidivelli