(எம்.எப்.எம்.பஸீர்)
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடச்சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை (ரிட் மனு) எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் கடந்த திங்களன்று தீர்மானித்தது.
CA/Writ/125/2021 எனும் குறித்த மனு திங்களன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான சோபித ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே இவ்வாறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அபாயா அணிந்து கற்பிக்கச்சென்ற ஆசிரியைகளை அபாயா அணியக்கூடாது என்றும் சேலை அணிந்து வருமாறும் கூறி சண்முகா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியிருந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் 2018 மேமாதம் 21 ஆம் திகதி HRC/TCO/27/18 எனும் இலக்கத்தின்கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தனர். அந்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு குறித்த சம்பவம் மனித உரிமை மீறல் எனத் தீர்மானித்து, கடந்த 2019 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தனது பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. அதன்படி குறித்த ஆசிரியர்கள் மீண்டும் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படவேண்டும் என்பது உள்ளடங்கலாக 5 பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
இந்நிலையில் அந்தப் பரிந்துரைகள் அமுல்செய்யப்படாததையடுத்து அவற்றை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்படி எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சண்முகா பாடசாலையின் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மனுவானது நேற்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. இதன்போது மனுதாரரான ஆசிரியைக்காக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் ஆஜரானார்.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி நீதிமன்றில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய கல்வியமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்ட இடமாற்றக் கடிதத்திற்கு அமைய பெப்ரவரி 2 ஆம் திகதி தனது சேவை பெறுனர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்குக் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகச் சென்றதாக அவர் மன்றுக்குக் குறிப்பிட்டார். எனினும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது பாடசாலை வரவுப்புத்தகத்தில் கையெழுத்திடவோ அன்றைய தினம் அவர் அனுமதிக்கப்படவில்லை எனவும் அதனை மையப்படுத்திய சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை உருவானதாகவும் தெரிவித்தார். பெப்ரவரி 2 ஆம் திகதி தனது சேவை பெறுநர் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முகங்கொடுத்த சம்பவம் என்ன என்பதையும் அவர் மன்றில் விபரித்தார்.
மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான கல்வியமைச்சின் செயலாளர் அனுப்பிய கடிதத்திற்கு அமைவாகவே தனது சேவை பெறுநர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி சென்றதாகவும் அங்கு இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை அவரை திருகோணமலை வலயக்கல்விப் பணிமனைக்கு இடமாற்றி மாகாணக்கல்விப் பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தனது சேவை பெறுநர் கல்வியமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு அமைவாக செயற்படவேண்டுமா அல்லது மாகாணக்கல்விப் பணிப்பாளரின் கடித்திற்கு அமைய செயற்படவேண்டுமா என்றும் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் மன்றில் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி கடந்த ஜனவரி 19 ஆம் திகதி நீதிமன்றில் காணப்பட்ட இணக்கப்பாடு தற்போது முறிந்துள்ள நிலையில், இவ்வழக்கை விசாரணைசெய்ய வாதங்களுக்கு திகதி குறிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுவை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. – Vidivelli