(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் இஸ்லாம் சமய பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் என்னைச் சந்தித்து விளக்கம் கோரினார்கள். திருத்தங்கள் தொடர்பில் எம்மால் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. உலமா சபையினர் எவ்வித எதிர்ப்பும் வெளியிடவில்லை. கலந்துரையாடல் சுமுகமாகவே இடம்பெற்றது’ என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.என்.அயிலப்பெரும விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், திருத்தங்களுடன் கூடிய இஸ்லாம் சமய பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சிங்கள, தமிழ் புதுவருடத்தின் பின்பு பாடசாலைகள் ஆரம்பமாகும் வேளையில் மாணவர்களுக்கு பாடநூல்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடநூல்களில் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. சிறிய திருத்தங்கள் அதாவது ஓரிரு சொற்களே மாற்றப்பட்டுள்ளன என்றார்.
பத்தரமுல்லையிலுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் இஸ்லாமிய சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாமெனவும் விநியோகிக்கப்பட்ட நூல்களை உடனடியாக மீளப்பெறுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை உலமா சபை பிரதிநிதிகள் கலந்துரையாடலின் போது வாசித்துக் காட்டினார்கள். இவ்வாறான ஒரு கடிதம் அனுப்பப்பட்டதால் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குழப்பநிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இக்கடிதம் தொடர்பில் அதிருப்தியும் வெளியிடப்பட்டது.
எதிர்காலத்தில் மார்க்க விடயங்கள் தொடர்பான திருத்தங்களை பாடநூல்களில் மேற்கொள்வதாயின் உலமா சபையின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளுமாறு உலமாசபை பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆணையாளர் நாயகம் இணக்கம் தெரிவித்தார்.
இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்களை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளே முக்கிய காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறினார்.
பாடநூல்களில் சமய விவகாரங்கள் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாயின் அந்தந்த மதங்களின் சமய பேரவைகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தையின்போது உலமா சபை வலியுறுத்தியது.
திணைக்களத்தில் பணியாற்றும் முஸ்லிம் அதிகாரிகளின் அங்கீகாரத்துடனே அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் உலமா சபை பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.-Vidivelli