667 நாட்களின் பின்னர் குடும்பத்துடன் இணைந்தார் ஹிஜாஸ்
கடவுச் சீட்டு புத்தளம் மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது ஹிஜாஸின் சகோதரரும் சகோதரியும் பிணையாளர்களாக ஏற்பு
(புத்தளம் நீதிமன்றிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்களின் பின்னர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CA/ Pu;C/APN/10/22 எனும் சீராய்வு மனுவின் உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர்.
அந்த உத்தரவை நேற்று புத்தளம் மேல் நீதிமன்றில் பி.ப. 2.35 மணிக்கு பிரதிவாதியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தெளிவுபடுத்திய, இந்த விவகாரத்தை விசாரிக்க என நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
அதன்படி, ஒரு இலட்;சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ஹிஜாஸை விடுவிக்க, மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நீதிபதி குமாரி அபேரத்ன கட்டளையிட்டார்.
அதன்படி ஹிஜாஸின் சகோதரரும் சகோதரியும் பிணையாளர்களாக நீதிமன்றால் திறந்த நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
இதனைவிட, பிணை நிபந்தனைகளாக, இதுவரை ஹிஜாஸ் தனது கடவுச் சீட்டை புத்தளம் மேல் நீதிமன்றில் சமர்ப்பித்திருக்காத நிலையில் அது திறந்த மன்றில் நேற்று உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் தனது நிரந்தர வதிவிடத்தை அவர் உரிய கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மேல் நீதிமன்றுக்கு பிணை நிபந்தனையாக முன் வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2 ஆம் 4 ஆம் ஞாயிற்றுக் கிழமைகளில் மு.ப.9.00 மணிக்கும் பி.ப. 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்தளம் சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் கையெழுத்திடுவது போதுமானது எனவும் எந்த நிலைமையிலும், வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது சாட்சியாளர்களில் தலையீடுகள் செய்யக் கூடாது எனவும் நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மேனக விஜேசுந்தரவின் ஒப்புதலுடன் நீதிபதி நீல் இத்தவல அறிவித்த பிணை உத்தரவின் பிரகாரம், நேற்று 10 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு முன் கூட்டி விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதற்காக ஹிஜாஸ் தரப்பால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஹிஜாசுக்காக நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, ஹபீல் பாரிஸ், கனேஷ் யொகன், நிரான் அங்கிடெல் உள்ளிட்டோர் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி கிஹான் குணசேகர ஆஜரானார். இந் நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக தனக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த 2022 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வழங்கிய உத்தரவை திருத்தி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் உத்தரவு நேற்று அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2021 நவம்பர் 19 ஆம் திகதி ஹிஜாஸுக்கு பிணையளிக்க மறுத்த புத்தளம் மேல் நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிரான CA/Pu;C/APN 128/2021 எனும் சீராய்வு மனு கடந்த 2022 ஜனவரி 21ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது, ஹிஜாஸுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை எனவும் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, அவ்வழக்கின் பிரதிவாதி (ஹிஜாஸ்) சார்பில் பிணைக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அவ்வழக்கில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த 2022 ஜனவரி 28 ஆம் திகதி, புத்தளம் மேல் நீதிமன்றம் ஹிஜாஸ் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை, மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேல் நீதிமன்றத்துக்கு பிணை வழங்குவதற்கு அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்னர் கடந்த 2021 நவம்பர் மாதம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளமையினால், அதே நிலைப்பாட்டில் பிணையை மீள நிராகரிப்பதாக நீதிபதி குமாரி அபேரத்ன அறிவித்திருந்தார். இந் நிலையிலேயே கடந்த 2022 ஜனவரி 31 ஆம் திகதி CA/ Pu;C/APN/10/22 ஆம் இலக்க சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு தொடர்பில் மனுதாரரான ஹிஜாஸுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் நிரான் அங்கிடெல்லும் ஆஜரானதுடன், பிரதிவாதி சட்ட மா அதிபருக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹந்த அபேசூரியவும் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி கிரிஹாகமவும் ஆஜராகினர். இந்த மனு தொடர்பிலான வதங்கள் கடந்த 2022 பெப்ரவரி 2 ஆம் திகதி நடந்த நிலையிலேயே, 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இந்த சீராய்வு மனு பரிசீலிக்கப்பட்ட போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜராகி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லை எனவும் அதற்கான அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளதாகவும் சுட்டிக்காட்டி மேல் நீதிமன்ற நீதிபதியால் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் தனது சேவை பெறுநரை பிணையில் விடுவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ள நிலையில், அவரை பிணையில் விடுவித்து உத்தரவிடுமாறு கோருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதிட்டிருந்தார்.
இதன்போது மனுவின் பிரதிவாதியான சட்ட மா அதிபருக்காக மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டிருந்ததுடன், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 404 ஆம் அத்தியாயம் பிரகாரம் அதற்கான எந்த தடையும் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையில் கடந்த 7 ஆம் திகதி தனது 8 பக்க தீர்ப்பை அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், பிணை வழங்குவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உள்ள அதிகாரத்தை குற்றவியல் நடை முறைச் சட்டக் கோவையின் 404 ஆம் அத்தியாயம் பிரகாரம் உறுதி செய்தது. இதற்காக உயர் நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்ட சிங்கராயர் எதிர் சட்ட மா அதிபர் மற்றும் பென்வெல் எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்குத் தீர்ப்புக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் வழிகாட்டல்களாக பயன்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அரசியலமைப்பின் 145 ஆவது உறுப்புரை பிரகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரத்தை விளக்கி, அதன் பிரகாரம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பில் தீர்ப்பறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளதுடன், பிணையில் விடுவிக்கும் தீர்மானத்தை எடுப்பதற்காக, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுமார் 2 வருடங்களாக தடுப்பில் உள்ளமை, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கூட வழங்க முடியுமான தண்டனை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட மா அதிபர் பிணையளிக்க ஆட்சேபனை தெரிவிக்காமை மற்றும் வழக்கை விசாரிக்கும் மேல் நீதிமன்றுக்கு பிணையளிக்க அதிகாரம் இல்லாமை ஆகிய காரணிகளையும் பகுப்பாய்வு செய்து, ஹிஜாஸுக்கு பிணையளிக்க தீர்மானித்ததாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli