கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

0 849
தகவல் அறியும் சட்ட மூலம் ஊடாக பெறப்­பட்ட தக­வல்­களை அடிப்­ப­டை­யா­க­க்கொண்டு எழு­தப்­பட்ட கட்­டுரை

 

றிப்தி அலி

கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை உப பிர­தேச செய­லகம் தொடர்­பாக உள்ளூர் மட்­டத்தில் மட்­டு­மன்றி, அரச நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யிலும் மாறு­பட்ட, குழப்­ப­க­ர­மான தக­வல்கள் உள்­ளமை – தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட விவ­ரங்­களின் ஊடாக வெளிப்­பட்­டுள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு அரச நிறு­வ­னங்­க­ளுக்கும் இடை­யி­லான அதி­காரப் பகிர்வு மற்றும் எல்லை நிர்­ணயம் போன்ற விட­யங்­களில் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இழு­பறி நீடித்து வரு­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­கு­தலை அடுத்து கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்தக் கோரி கல்­முனை ஸ்ரீ சுபத்­ரா­ராம விகா­ரையின் விகா­ரா­தி­பதி ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேர­ரினால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் உண்­ணா­வி­ரத போராட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரின் உறு­தி­மொ­ழி­யினை அடுத்து குறித்த போராட்டம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதே­வேளை, தேர்தல் காலங்­களில் அனைத்து இன அர­சி­யல்­வா­தி­களும் இந்த விட­யத்­தினை கையில் எடுத்து தேர்தல் முத­லீ­டாக பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் பிரதி அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் மற்றும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் ஆகி­யோரின் பேசு­பொ­ரு­ளாக இந்த விட­யமே காணப்­பட்­டது.

தேர்­த­லுக்குப் பின்னர் கல்­முனை பிர­தேச செய­லக பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் அர­சி­யல்­வா­திகள் எடுக்­க­வில்லை.

இந்த சர்ச்­சை­யினை ஆராயும் நோக்கில் நாட்­டி­லுள்ள பல அரச நிறு­வனங்­க­ளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜன­வரி முதல் டிசம்பர் மாதம் வரை­யான காலப் பகு­தியில் தகவல் அறியும் உரிமை விண்­ணப்­பங்களை சமர்ப்­பித்­தி­ருந்தோம். அர­சி­யல்­வா­திகள் போன்று அரச நிறு­வ­னங்­களும் இந்த விட­யத்தில் மாறு­பட்ட தக­வல்­க­ளையே வழங்­கி­யது.

தகவல் அறியும் விண்­ணப்­பங்­க­ளிற்கு உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சு, அம்­பாறை மாவட்ட செய­லகம், கல்­முனை பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் பணி­மனை, கல்­முனை மாவட்ட காணிப் பதி­வகம், கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து கிடைக்கப் பெற்ற பதில்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த கட்­டுரை எழு­தப்­ப­டு­கின்­றது.

பின்­னணி
நீண்ட வர­லாற்­றினைக் கொண்ட கல்­முனை பொது நிர்­வாகம், கரை­வாகு என்றும் அழைக்­கப்­பட்­டது. ஆங்­கி­லேயர் காலத்தில் ‘வன்­னிமை’ முறையில் இயங்­கிய இந்த நிர்­வாக சபை, 1946 இல் பிர­தேச வரு­மான அதி­காரி (DRO) முறைக்கும், 1978 இல் உதவி அர­சாங்க அதிபர் முறைக்கும் மாற்­றப்­பட்­டது.

இவ்­வாறு செயற்­பட்ட கல்­முனை உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­ல­கத்­தினை இரண்­டாகப் பிரித்து உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் – கரை­வாகு வடக்கு (தமிழ்) என்ற ஒன்றை உரு­வாக்­கு­மாறு 1989.01.12ஆம் திகதி அப்­போ­தைய உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­ராக செயற்­பட்ட கே.டப்­ளியூ. தேவநா­யகம் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­ப­ருக்கு எழுத்து மூலம் அறி­வித்தார்.

இது போன்ற உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் அமைச்சின் செய­லா­ள­ரி­னா­லேயே மேற்­கொள்ள முடி­யுமே தவிர அமைச்­ச­ரினால் மேற்­கொள்ள முடி­யாது என்­ப­தனால், அப்­போது கரை­வாகு உதவி அர­சாங்க அதி­ப­ராக செயற்­பட்ட எம்.எச். முயி­னுதீன் இந்த உத்­த­ர­வினை அமுல்­ப­டுத்­த­வில்லை.

இதனால், இந்­திய இரா­ணு­வத்

தின் ஆத­ர­வுடன் அக்­கால கட்­டத்தில் செயற்­பட்ட தமிழ் ஆயுதக் குழு­வான ஈ.என்.டி.எல்.எப் என அழைக்­கப்­படும் ஈழத் தேசிய ஜன­நா­யக விடு­தலை முன்­ன­ணி­ 1989.04.12ஆம் திகதி ஆயுத முனையில் சட்­ட­வி­ரோ­த­மாக கல்­முனை உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­ல­கத்­தினை முஸ்லிம் மற்றும் தமிழ் என இரண்­டாக பிரித்­தது.

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் 1985ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் கல்­முனை உதவி அர­சாங்க அதி­ப­ராக செயற்­பட்ட எம்.எச். முயி­னுதீன் சத்­தியக் கட­தா­சி­யொன்­றி­னையும் வழங்­கி­யுள்ளார்.

எனினும், பிர­தேச மக்­க­ளிற்கு சேவை­யாற்­று­வ­தற்­காக 1989.01.12ஆம் திகதி இந்த ‘பிர­தேச செய­லகம்’ உரு­வாக்­கப்­பட்­டது என கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் தெரி­விக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, நாட்டில் இயங்­கிய அனைத்து உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­ல­கங்­களும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்­து­வங்கள் கைமாறல் (பெரும்­பாகச் செய­லா­ளர்கள்) சட்­டத்தின் கீழ் பிர­தேச செய­ல­கங்­க­ளாக மாற்­றப்­பட்­டன.
எனினும், வட – கிழக்கு மாகாண சபையின் ஆசிர்­வா­தத்­துடன் செயற்­பட்ட கரை­வாகு தமிழ் உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் இன்று வரை பிர­தேச செய­ல­க­மாக மாற்­றப்­பட்­ட­வில்லை.

புதிய பிர­தேச செய­ல­க­மொன்­றினை ஸ்தாபித்தல் அல்­லது உப பிர­தேச செய­ல­க­மொன்­றினை பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­துதல் ஆகி­ய­வற்­றுக்கு எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சுடன் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­திற்கு அமைய விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ரினால் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட வேண்டும்.

அவ்­வா­றா­ன­தொரு வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று வரை குறித்த உப பிர­தேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்­து­வ­தற்­காக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றான நிலையில் இந்த உப பிர­தேச செய­லகம் “பிர­தேச செய­லகம் – கல்­முனை வடக்கு” மற்றும் “பிர­தேச செய­லகம் – கல்­முனை தமிழ் பிரிவு என பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

எனினும், அம்­பாறை மாவட்­டத்தில் “கல்­முனை – தமிழ் அல்­லது கல்­முனை – வடக்கு” என்ற பிர­தேச செய­ல­க­மொன்று இல்லை என உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சு தெரி­வித்­தது.

இதே­வேளை, அம்­பாறை மாவட்­டத்தில் 19 பிர­தேச செய­ல­கங்­களும், கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கமும் காணப்­ப­டு­வ­தாக உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சு குறிப்­பிட்­டது.

பிர­தேச செய­ல­கங்கள்

01 அட்­டா­ளைச்­சேனை
02 ஆலை­ய­டி­வேம்பு
03 அம்­பாறை
04 தமண
05 தெஹி­யத்­த­கண்டி
06 கல்­முனை தெற்கு
07 காரை­தீவு
08 லகு­கல
09 மகா­ஓயா
10 நிந்­தவூர்
11 பொத்­துவில்
12 சம்­மாந்­துறை
13 திருக்­கோவில்
14 உஹண
15 இறக்­காமம்
16 சாய்ந்­த­ம­ருது
17 நாவி­தன்­வெளி
18 அக்­க­ரைப்­பற்று
19 பதி­யத்­த­லாவ

அது மாத்­தி­ர­மல்­லாமல் கல்­முனை தெற்கு பிர­தேச செய­ல­கத்தின் கீழேயே கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் செயற்­ப­டு­கின்­றது என அமைச்சு மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.

எனினும், கல்­முனை பிர­தே­சத்தில் இரண்டு பிர­தேச செய­லகப் பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் “கல்­முனை வடக்கு மற்றும் தெற்கு” என இரண்டு சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்கும் கல்­முனை பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் பணி­மனை, இந்த உரு­வாக்கம் தொடர்­பான ஆவ­ணங்கள் எதுவும் எமது அலு­வ­ல­கத்தில் இல்லை என கூறு­கின்­றது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், அம்­பாறை மாவட்­டத்தில் “கல்­முனை தமிழ் பிரிவு” மற்றும் “கல்­முனை முஸ்லிம் பிரிவு” என்ற இரண்டு பிர­தேச செய­ல­கங்கள் காணப்­ப­டு­வ­தாக கல்­முனை மாவட்ட காணிப் பதி­வகம் தெரி­வித்­தது.

இவ்­வா­றான நிலையில், கல்­முனை பிர­தேச செய­லகம் இன ரீதி­யாக “கல்­முனை முஸ்லிம்” மற்றும் “கல்­முனை தமிழ்” பிர­தேச செய­ல­கங்கள் என பதி­வாளர் திணைக்­க­ளத்தின் கீழுள்ள கல்­முனை காணி மற்றும் மாவட்ட பதி­வ­கத்­தினால் பிரிக்­கப்­பட்டு காணிப் பதி­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இங்கு மாத்­தி­ர­மல்­லாமல், கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பல அரச நிறு­வ­னங்­க­ளினால் இந்த உப பிர­தேச செய­லகம், “பிர­தேச செய­லகம் – கல்­முனை தமிழ் பிரிவு” என அழைக்­கப்­ப­டு­வதை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

பெயர் மாற்றம்:
இதே­வேளை, கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் எல்­லை­களை உள்­ள­டக்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் இறு­தி­யாக 2001.01.31ஆம் திகதி அப்­போ­தைய பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் நிர்­வாக மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் ரிச்சட் பத்­தி­ர­ண­வினால் வெளி­யி­டப்­பட்­டது.

இந்த வர்த்­த­மா­னியில் கல்­முனை பிர­தேச செய­லகம் என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்­சினால் வழங்­கப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்­கான பதிலில் “கல்­முனை தெற்கு” பிர­தேச செயலம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சின் இணை­யத்­த­ளத்­திலும் “கல்­முனை தெற்கு” பிர­தேச செய­லகம் என்றே பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.
எனினும், “எமது பிர­தேச செய­ல­கத்தின் பெயரில் எந்­த­வொரு மாற்­றமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வு­மில்லை, அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­புகள் எதுவும் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வு­மில்லை” என கல்­முனை பிர­தேச செய­லகம் தெரி­வித்­தது.

இதே­வேளை, உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்­சினால் அம்­பாறை மாவட்ட செய­லா­ள­ருக்கு 2021.03.31ஆம் திகதி அனுப்­பிய கடி­தத்தில் “பிர­தேச செய­லகம் – கல்­முனை” மற்றும் “உப பிர­தேச செய­லகம் – கல்­முனை வடக்கு” என்றே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அறி­வித்­த­லினால் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்தின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து குறித்த அறி­விப்பை நீக்­கு­வ­தற்கு பல தமிழ் அர­சி­யல்­வா­திகள் முயற்­சித்த போதிலும் அது தொடர்­பி­லான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு எதுவும் இது­வரை வெளி­யா­க­வில்லை.

இரா­ஜாங்க அமைச்சின் குறித்த அறி­வித்­த­லையும் மீறி கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம், “கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்” என்ற இறப்பர் முத்­தி­ரையையும் கடித தலைப்­பி­னையும் தற்­போதும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது.
கடந்த 2021.04.18ஆம் திகதி குறித்த உப பிர­தேச செய­ல­கத்­தினால் வழங்­கப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்­கான பதி­லி­லேயே இந்த விடயம் வெளிப்­பட்­டது.

அதி­காரம்:
பிர­தேச செய­லாளர் இது­வரை நிய­மிக்­கப்­ப­டா­மை­யினால் உப பிர­தேச செய­லா­ளரே நிறு­வனத் தலை­வ­ராக இருந்து பிர­தேச செய­லா­ள­ருக்­கு­ரிய கட­மை­களை நிறை­வேற்றி வரு­வ­தாக கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் தெரி­விக்­கின்­றது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் அம்­பாறை மாவட்ட செய­லா­ள­ருக்கே அறிக்­கை­யி­டப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் “கல்­முனை தெற்கு பிர­தேச செய­லா­ளரே கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்தின் தலை­வ­ராக செயற்­ப­டு­கின்றார் எனவும், சந்­தர்ப்­பங்­க­ளுக்­கேற்ப அமைச்சின் செய­லாளர் மற்றும் மாவட்ட செய­லாளர் ஆகி­யோரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய பிர­தேச செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் உப பிர­தேச செய­லா­ள­ருக்கு பகிர்ந்­த­ளிக்க முடியும்” எனவும் உள்­நாட்­ட­லுவல்கள் அமைச்சு தெரி­விக்­கி­றது.

இதே­வேளை, கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்தின் உப பிர­தேச செய­லா­ள­ரான ரீ.ஜே. அதி­ச­ய­ரா­ஜிற்கு கடந்த 2019.05.27ஆம் திகதி கல்­முனை பிர­தேச செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய எம்.எம்.நசீர் கடமைப் பட்­டி­ய­லொன்றை வழங்­கி­யுள்ளார். இதில் காணி மற்றும் நிதி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

கோரிக்கை நிரா­க­ரிப்பு:
கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் உப பிர­தேச செய­லகம் தொடர்பில் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட கோரிக்­கை­யினை மாவட்ட செய­லக தகவல் அதி­கா­ரி­யான மேல­திக மாவட்ட செய­லாளர் வீ. ஜெக­தீசன் நிரா­க­ரித்தார்.
இதற்கு எதி­ராக அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரிக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மேன் முறை­யீட்­டுக்கு இன்று வரை எந்­த­வித பதி­லு­மில்லை. இது தொடர்பில் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்ட போதும் சாத­க­மான பதில்கள் எதுவும் கிடைக்­க­வில்லை.
எவ்­வா­றா­யினும் குறித்த கோரிக்­கைக்­கான பதி­லினை உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சு வழங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கால இழுத்­த­டிப்பு
அது மாத்­தி­ர­மல்­லாமல், கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் பெயர் மாற்­றப்­பட்­டமை, கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் ஸ்தாபிக்­கப்­பட்­டமை தொடர்­பான மேல­திக ஆவ­ணங்­களை வழங்கக் கோரி உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்­சிற்கு 2021.03.31ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட கோரிக்­கையும் 2021.12.14ஆம் திகதி நிரா­க­ரிக்­கப்­பட்­டது.
இந்த விடயம் தொடர்பில் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யி­னா­லேயே தகவல் வழங்க முடி­யாது எனவும் இரா­ஜாங்க அமைச்சு குறிப்பிட்டது.

தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம், சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நிராகரிப்பு அறிவிப்பிற்கு இராஜாங்க அமைச்சு ஒன்பது மாதங்கள் எடுத்து கால இழுத்தடிப்பு செய்தது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்கு 2019 இல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உப பிரதேச செயலகம் தொடர்பில் 2021.03.19ஆம் திகதி பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சு, குறித்த பதில் தொடர்பான மேலதிக தகவலை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தினை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிராகரிப்புக்கு எதிராக அங்கீகாரமளிக்கப்பட்ட அதிகாரியான உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்புக்கு எதிராக தற்போது தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் இந்த விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டு இரு சமூகங்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த வழிவகுக்கின்றன.

எவ்வாறாயினும் மூன்று தசாப்த காலமாக நீடிக்கும் குறித்த பிரச்சினைக்கு நிலத் தொடர்புடனான நிரந்தர தீர்வொன்று விரைவில் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே அப்பிரதேச மக்களின் அவாவாக உள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.