மூலம்: மனு வர்ண
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்
சில வாரங்களுக்கு முன்னர் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்தபோது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்தவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவே. பொதுவாக வெளிநாட்டு அமைச்சரொருவர் வருகை தரும்போது அவரை வரவேற்கும் (Protocol Minister) உபசார அமைச்சராக நியமிக்கப்படுவது அதே துறையைச் சேர்ந்த அமைச்சராவார். ஆயினும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் விமான நிலையத்துக்கு செல்லவில்லை என்பதுடன் சீன அமைச்சரை கவனித்துக் கொள்ளும் பணியில் தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜபக்சவே ஈடுபட்டிருந்தாரேயன்றி அதற்குரியவரான அமைச்சர் ஜி.எல் பீரிஸல்ல. அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இப்பணியில் பங்குபற்றாதுவிடின் அதற்கான அடுத்த இடம் வழங்கப்பட்டு இருக்க வேண்டியது வேறு ஒரு சிரேஷ்ட அமைச்சருக்காகும். சீனா இராஜதந்திர ரீதியில் பலம் பொருந்திய பெரிய ஒரு நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன்படி தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்ற ஒருவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். விமல் வீரவன்ச போன்றதொரு சிரேஷ்ட அமைச்சரும் இதற்குப் பொருத்தமானவரே. ஆனால் அப்படியெதுவுமின்றி நாமல் ராஜபக்சவே பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் என்ன? இந்த அரசில் ராஜபக்சாக்களின் பலம் அந்த அளவுக்கு வியாபித்திருப்பதாகும்.
உயர்மட்ட ராஜதந்திரியொருவருக்காக மிகவும் கனிஷ்ட நிலை அமைச்சர் ஒருவர் விருந்துபசார அமைச்சராக நியமிக்கப்படுவது சாதாரண வழக்கில் இராஜதந்திர உறவுகளைக் கூட பாதிக்கும் ஒரு விடயமாக அமைய முடியும். ஆனால் இங்கு அத்தகைய ஏதும் நடைபெறாததற்குக் காரணம் சீனாவுக்கும் ராஜபக்ச அரசுக்கும் இடையிலுள்ள விசேட பரஸ்பர உறவுகளாகவே இருக்க முடியும். அமைச்சர் நாமலின் கனிஷ்ட நிலை ராஜபக்ச குடும்பத்தின் ஒளிக் கீற்றால் மூடப்படுவதாகும்.
இந்த விடயத்துக்கு அப்பால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக சீனாவுக்குச் சென்றிருந்த போதெல்லாம் தனது குழுவில் நாமல் ராஜபக்சவை இணைத்துக்கொண்டிருந்தமை கடந்த காலத்தை மீட்டும் எவருக்கும் தெரியும். நாமலுக்கு வழங்கப்படும் அமைச்சுக்களும் எதிர்காலத்தில் அரசியலில் அதிகாரத்தின் போது அவசியம் தேவைப்படும் இளைஞர் யுவதிகளை ஒன்று திரட்டும் விதத்திலான அமைச்சுகளாகும். இதனை விட ஜனாதிபதி சித்தப்பா, நாமலை எத்தனை செயலணிகளில், குழுக்களில் அங்கத்தவராகச் சேர்ந்துள்ளார்? அவருக்கு கிடைக்கும் இந்த சிறப்பு மொட்டு கட்சியின் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்களுக்கு கூட கிடைப்பதில்லையே ஏன்?
அரசாங்கத்துக்குள் ஏழு ராஜபக்சாக்கள் இருக்கின்றனர். ஜனாதிபதி தவிர்ந்து இன்னும் நால்வர் பலம் வாய்ந்த அமைச்சர்கள். ஒருவர் இராஜாங்க அமைச்சர் மற்றொருவர் பாராளுமன்ற உறுப்பினர்; மொத்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 30 வீதம் ராஜபக்ச குடும்பத்தின் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனைப் புதிதாக விளக்க வேண்டிய தேவை இருக்காது.
ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டின் மானியமுறையின் தற்கால அடையாளமாகும். தொடர்ந்தும் குடும்ப ஆட்சியைத் தொடர வேண்டுமா? என்று கேட்க வேண்டியது இலங்கை மக்களிடம் மட்டுமன்றி மொட்டுக்குள் இணைந்துள்ள ராஜபக்ச அல்லாத சிறிய பெரிய அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடல்ரீதியாக இப்போது மிகவும் நலிந்த நிலையில் காணப்படுகின்றார். அவரைத் தொலைக் காட்சியில் காணும் எவருக்கும் அது விளங்கும். உண்மையில் அவர் இப்போது சகல பொறுப்புகளில் இருந்தும் விலகி வீட்டில் ஓய்வை அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் பிரதமராகவே இருக்கிறார். தொடர்ந்தும் தனது பதவியை விட தயாரில்லை என்பதை அவர் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை ஜனாதிபதி சந்திரிகா, சிறிமாவோ அம்மையாரை பிரதமராக வைத்திருந்ததுடன் ஒப்பிடலாம். மிகவும் நலிவடைந்து சக்கர நாற்காலியில் நடமாடும் நிலையிலும் அவரைப் பிரதமர் பதவியில் வைத்திருந்தமை தொடர்பில் அன்று விமர்சனங்கள் எழுந்தன. மஹிந்த ராஜபக்சவும் அவ்வாறு விமர்சித்தவர்தான். அன்று விமர்சித்தவர் இன்று அதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சிலவேளை அவரின் ஓய்வு காலம் நாமல் ராஜபக்சவின் அரசியல் நிலையை ஸ்தீரப்படுத்துவதுடன் இணைந்த ஒன்றாக இருக்கலாம். கடந்த வருட இறுதியில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகப் போகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தபோது அந்த இடத்தை நிரப்புபவராக யாருடைய பெயர் முன்வைக்கப்பட்டிருந்தது? பசில் ராஜபக்ச அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இலங்கை வந்தவுடன் பிரதமர் பதவியில் சத்தியப் பிரமாணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன. கேள்வி என்னவென்றால் மஹிந்த பதவி விலகும் போது அடுத்த தகுதியுடையவராக இருப்பது ராஜபக்ச குடும்பத்தின் அங்கத்தவர் ஒருவர் மட்டும்தானா என்பதாகும். பசிலின் பெயருக்குப் பதிலாக தினேஷ் குணவர்தனவின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை? எது எவ்வாறாயினும் தினேஷ் குணவர்தன நீண்டகாலம் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மூத்த அரசியல்வாதியாவார். ஒரு கட்சியின் தலைவராகவும் உள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்கவின் சம காலத்தவர். இலங்கையின் ஒரு பிரபல அரசியல் குடும்பத்தின் அங்கத்தவருமாவார்.
தினேஷ் பிரதமர் பதவிக்கு தகுதி இல்லையெனில் ஜீ.எல் பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார அல்லது மஹிந்த யாப்பா அபேவர்தன போன்ற எவர் பற்றியும் பிரதமர் பதவி குறித்து பேசப்படாதது ஏன்? அந்தப் பரம்பரையினரில் தகுதியானவர் இல்லையெனில் விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க போன்ற ஒருவரின் பெயராவது முன் வைக்கப்படாதது ஏன்?
காரணம் தெளிவானது. மொட்டு அரசாங்கத்தின் எந்த ஒரு உயர் பதவிக்கும் ராஜபக்ச அல்லாதவர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்று கொள்கை வகுத்திருப்பதாகும். இந்த விடயத்தை ஒப்புவிக்கும் விசேட சந்தர்ப்பமும், வெட்கங்கெட்ட சந்தர்ப்பமுமாக அமைந்தது 2019 கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான இறுதித் தீர்மானம் வெளிவருவதற்கு நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பமாகும்.
கோட்டாபய வேட்புமனு தொடர்பிலான கட்டுப் பணத்தை செலுத்தியிருந்த நிலையிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் ஏதாவது பிரச்சினை வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மாற்று வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நோக்கில் கட்டுப் பணம் செலுத்தியிருந்தவர் யார்? சமல் ராஜபக்சவேயாவார். சமலின் பெயர் அந்த இடத்திற்கு வரக் காரணம் பசில் அப்போது இரட்டைக்குடியுரிமை கொண்டவராக இருந்தமையாகும் (20ஆவது திருத்தத்துக்கு முன்னர்) ராஜபக்சாக்கள் தவிர்ந்த வேறு எவரும் அதற்கு தகுதி பெறவில்லை. இதனை ராஜபக்சாக்களல்லாதவர்கள் தங்களை அவமானப்படுத்தும் செயலாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எடுக்கவில்லை.
இதுபோன்று அமைச்சுப் பதவிகள் மற்றைய பிரதான பதவிகள் ராஜபக்சாக்களுக்கிடையே சுற்றிச் சுழலுவதுடன் அவர்கள் விரும்பாத அல்லது அவர்களால் தாங்க முடியாத சுமையாய் உள்ளவை மட்டும் ஏனையவர்களுக்கு வழங்கப்படும்.
மொட்டுக் கட்சியில் உள்ள ராஜபக்சாக்களல்லாத ஏனைய மூத்த அரசியல்வாதிகள் எவ்வித அனுபவமும் தகைமையும் இல்லாதவர்களா? அவர்களின் தகுதியீனம் ராஜபக்சாக்களல்லாதிருப்பதா? இவ்விதமான ஒரு கொள்கை கோத்தாபயவின் கொள்கையுடன் மோதுவதை அவதானிக்கலாம். முறைமை மாற்றம் (system Change) செய்வதற்காக அதிகாரத்தைக் கேட்ட கோட்டாபய தான் ஒருபோதும் உறவினர்களுக்கு பதவிகளைத் தாரை வார்ப்பவராக இருக்கமாட்டேன் என்றார். தனது அரசில் அதனை வேறு யாரும் செய்ய அனுமதிப்பதுமில்லை என்றும் கூறினார். அரச நிறுவனங்களுக்கும் ஏனைய பதவிகளுக்கும் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் உள்ள ஒரு நிபுணத்துவக்குழு மூலம் தகைமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறினார்.
ஆனால் தொடர்ந்தது என்ன? கோட்டாபய ராஜபக்சவும் பழைய சேற்றுக் குழியிலேயே மூழ்கியமை தான். தனது குடும்பப் பாசம் அவரை அவ்வாறு செய்ய வைத்துள்ளது.
தற்போது பாராளுமன்றத்திலுள்ள மூத்த ராஜபக்ஷக்களுக்குப் பின்னர் அரசியலை முன்கொண்டு செல்லும் இரண்டாம் நிலை தலைவர்களும் இனங்காணப்பட்டுவிட்டனர். நாமல் ராஜபக்ச, சசீந்தர ராஜபக்ச இருவரும் அமைச்சர் அந்தஸ்தில் உள்ளனர். குடும்பத்தின் புதிய அங்கத்தவர் நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்தில் ராஜபக்சாக்களின் செல்வாக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மாத்தறை மாவட்ட பட்டியலில் எப்போதும் முதலிடம் பெறும் டளஸ் அழகப்பெரும நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். டலஸ், காஞ்சன விஜயசேகர போன்ற அம்மாவட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்களிடம் கேட்டால் தமது குடும்பத்தின் வாரிசை முதலிடம் பெறச் செய்ய ராஜபக்சக்கள் செய்த பணிகளை எடுத்துக் கூறுவர். நிபுண ரணவக்க ஒரு கனிஷ்ட உறுப்பினர் என்பதால் மட்டுமே இன்னும் அமைச்சுப் பொறுப்புப் பெறாமல் இருக்கிறார். ஆயினும் கோட்டாபய அவருக்கு மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ராஜபக்சகளும் அதிகார சங்கிலியின் வளையங்களாகவே உள்ளனர். யோசித்த ராஜபக்ச பிரதமரின் அலுவலக ஆளணித் தலைமை அதிகாரியாக உள்ளார். குருநாகல் மாவட்டத்தில் மகிந்தவை பிரதிநிதித்துவப்படுத்தி சகல அரசியல் நடவடிக்கைகளையும் செய்பவர் கடைக்குட்டி ரோஹித்த ராஜபக்ச ஆவார். எந்த ஒரு தேர்தலிலும் அவர் தந்தையை பிரதிநிதித்துவப்படுத்தி குருநாகல் மாவட்டத்திலிருந்து வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அதன்படி ராஜபக்ச தயார் நிலையிலேயே உள்ளது.
2015 இல் ராஜபக்சாக்களின் குடும்ப அரசியலை விமர்சித்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேன டெலிகொம் தலைவராக தனது தம்பியை நியமித்தார். சிறிசேனவின் மகள் சதுரிக்கா அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படாவிட்டாலும் அவரது கணவர் ஆரம்பித்த ‘நெட் சிரி’ விளம்பர நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் பூரண அனுசரணையைப் பெற்றுக்கொடுத்தார். அனைத்து அரசு நிறுவனங்களினதும் விளம்பரங்கள் அந்த கம்பெனிக்கே கிடைத்தன. ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச வைபவங்களில் கூட பங்குபற்றும் அளவுக்கு சதுரிக்கா செல்வாக்கு பெற்றிருந்தார். பொலன்னறுவையில் உள்ள அவரது ‘திதஸ் அரண’ ஹோட்டலுக்கு அவரது பெயரிலேயே மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் பெறப்பட்டது. மைத்திரிபால சிறிசேன பெண்கள் மது வியாபாரத்தில் ஈடுபடக் கூடாதென்று வேறு கூறி வந்தார்.
ஆனாலும் ராஜபக்ச குடும்பத்துக்கான பங்கீட்டுடன் ஒப்பிடும்போது சிறிசேனவின் பங்கீடு மிகவும் அற்பமானதும் புறக்கணிக்க கூடியதுமாகும்.
ராஜபக்ச மானிய முறை ஆட்சி 2005 இல் ஆரம்பமானது. அது அவர் முதற் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதலாகும். பதவிக்கு வந்து இரண்டு நாட்களில் அமெரிக்கப் பிரஜையான கோட்டாபயவை அழைத்து இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி குடும்ப ஆட்சி வாரிசுரிமையை ஆரம்பித்து வைத்தார்.
இன்று இலங்கை ஜனநாயகத் தன்மைக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற ஒரு நிலையில் இருப்பதற்கான சில காரணங்களை முன்வைக்கலாம்.
முதலாவது, ஓர் அரசாங்கத்தில் அவசியம் இருக்க வேண்டிய சட்ட ஆட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு குடும்ப ஆட்சி இருப்பதாகும். பிரான்ஸ் அறிஞர் மொண்டஸ்கியூவின் கருத்து இங்கு குறிப்பிட வேண்டியதொன்றாகும் “நாட்டின் சட்டமியற்றும், நிறைவேற்று நிர்வாகிக்கும், நீதி வழங்கும் அதிகாரம் தனி ஒருவரிடமோ (ஒரு குடும்பத்திடமோ) ஒரு குழுவிடமோ மையப்படுத்தப்படின் அனைத்து விடயங்களும் நாசமாகி போகும்” அவரின் கூற்று இலங்கை விடயத்தில் இன்று ஒப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது விடயம் சார்பளவில் விசாலமான ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்தினரின் கீழ் முன்னொருபோதுமில்லாத வகையில் ஊழல், மோசடி, களவு, கொள்ளை, சட்டத்தினால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது. இந்த பாதிப்பு உச்ச நிலையை அடைந்திருப்பது ராஜபக்ச குடும்பத்தின் அதிக எண்ணிக்கையினரும் மற்றும் இரண்டாவது பரம்பரையினரும் பதவிகளில் நீடித்துள்ள நிலைமையின் காரணத்தினாலாகும். இதற்கான காரணம் அரச பொறிமுறையில் ராஜபக்சக்களின் கரங்களை நுழைப்பது இலகுவாயுள்ளதே.
மூன்றாவது, ராஜபக்சக்கள் தம் இஷ்டப்படி முன்னெடுக்கும் தொடர்ந்தும் விரிவடைந்து செல்வதுமான சிங்கள பௌத்த தேசியவாத கொள்கை நாடுபூராகவும் தடையின்றிப் பரவியுள்ளமையாகும். இதனால் இன்று சிங்கள-பௌத்த பெரும்பான்மை பலத்தை ஏற்றுக்கொள்ளும், அதனைப் பாதுகாக்கும் கொள்கையில் மொட்டுக் கட்சியல்லாத இடதுசாரிப் பின்னணியிலுள்ள மற்றும் வலதுசாரிப் பின்னணியுள்ள கட்சிகளும் பிரித்தெடுக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டுள்ளமை தெரிகிறது. ராஜபக்சவின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் அவர்களால் இந்த நாட்டில் விதைக்கப்பட்டுள்ள இனவாதக் கருத்தியல்பைத் தோற்கடிப்பது இலகுவானதாக இல்லை. குறைந்தபட்சம் இன்னும் ஓரிரு தசாப்தங்களுக்கு அதனை இலகுவில் அகற்ற முடியாது.
மஹிந்த ராஜபக்ச மொத்த ராஜபக்ஷாக்களுக்கிடையில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரமாக இருப்பதுடன் ராஜபக்சாக்களையும் அதுவல்லாதவர்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு மாலை போன்றும் உள்ளார். இப்போது அவரின் அரசியல் பயணம் தீர்க்கமான ஒரு கட்டத்துக்கு வந்துள்ளது. முப்பதாண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு அனைவரும் நிபந்தனையின்றி கௌரவம் வழங்கியது எனின் அந்த கௌரவத்துக்கு நிகராக ஒரு நாடு செலுத்தக்கூடிய அதிக கூடிய விலையை அளவுக்கு அதிகமாகவே செலுத்தியுள்ளது. அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அளவில்லா ஊழல் நிறைந்த ராஜபக்ச குடும்பத்தினர் விதித்த நிபந்தனைகளைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினரில் மக்களுக்கு சேவை செய்த விடயத்தில் அடுத்த இடம் கோத்தபாயவுக்கு வழங்கப்பட வேண்டும். வேறு யாரும் அந்தப் பட்டியலில் வரமுடியாது ஆனால் இப்போது கோட்டாபய ராஜபக்ச தனது இயலாமையை ஒப்புவித்த நிலையிலேயே உள்ளார். 2024 உடன் அவருடைய ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும். வயோதிப ஓய்வு நிலையை கழிக்க அவர் அமெரிக்காவை தேர்ந்தெடுப்பார். எனவே அதன் பின்னர் தூக்கி வைத்துக் கொண்டாட எந்த ராஜபக்சக்களும் இல்லை. எனவே ராஜபக்சக்கள் அல்லாத அரசியல் தலைமைகள் இந்நாட்டில் இனங்காணப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு முழுமையாக மக்களைச் சார்ந்தது என்றாலும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளும் இந்த விடயத்தில் வகை கூற வேண்டியவர்களாக உள்ளனர். மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தினேஷ் குணவர்தன போன்ற ஒரு பிரதமர் அல்லது வாசுதேவ நாணயக்கார போன்றோரை முன் நிறுத்துவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்க வேண்டியுள்ளது. அந்தப் பரம்பரையில் உள்ள பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன போன்றோர் மொட்டு அரசியலின் தலைமைத்துவத்திற்குத் தீண்டத் தகாதவர்களா? அடுத்த பரம்பரையினரான விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறக் கூடாதா? நாமல் ராஜபக்ச, சசிந்திர ராஜபக்ச, நிபுண ரணவக்க போன்றவர்களுக்கு தங்களது அரசியல் அர்ப்பணிப்புகளாலன்றி ராஜபக்சாக்கள் என்பதற்காக மட்டும் கட்சியில் முதன்மை கிடைக்காது என்பதை எடுத்துச் சொல்வதற்கு மொட்டு அரசியல் தலைமைக்கு ஏன் முடியாது?
விமர்சனங்கள் பல இருந்தாலும் விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில போன்றோர் தங்களின் முயற்சியால் மற்றும் அர்ப்பணிப்பால் அரசியல் செய்தவர்கள். பசில், சமல், நாமல், சசீந்தர போன்றோருடன் ஒப்பிடும்போது முன்னையவர்கள் நீண்ட தூரம் முன்னேறியுள்ளார்கள் என்பதே உண்மை. ஆயினும் ராஜபக்ச வம்ச வழிபாடு காரணமாக வீரவன்ச போன்றோருக்கு மொட்டு அரசியலில் முன் ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது ராஜபக்ஷ அதிகார வாதத்தை உடைத்து மொட்டு அரசியலின் எதிர்காலத்தை தம் கைகளுக்கு எடுத்துக் கொள்வதா? என்ற கேள்வியை விமல், டளஸ் போன்றோரிடம் கேட்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.
இன்றைய இலங்கை அரசியலில் இரண்டு பொதுப் பண்புகள் காணப்படுகின்றன. ஒன்று எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து இலங்கையை மீட்டெடுப்பதாகும். இரண்டாவது இலவச கல்வியிலிருந்து பயன்பெற்று அடிமட்டத்திலிருந்து அரசியல் செய்து முன் நோக்கி வந்துகொண்டிருக்கும் இளைஞர்களான புதிய அரசியல் தலைவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதாகும். இந்த இரு சவால்கள் குறித்தும் இந்த சந்தர்ப்பத்தில் மொட்டு கட்சியும் அதன் இணை தரப்பினரும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.- Vidivelli