ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணியில்லாப் பிரச்சினையைப் பற்றியும் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றியும் இதற்கு முன்னரும் அக்கறையுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாண காணிகள் தொடர்பாக தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் 2009.10.23 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையின்போது அப்போதைய இடர் நிவாரண சேவைகள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாகப் பேசினார்.
அமீரலியின் நாடாளுமன்ற உரை இந்த வாரம் நோக்குவோம்.
“இன்று இந்த சபையிலே நான் மிகவும் கௌரவமாக மதிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அரச காணிகளிலே சட்ட விரோதமாகக் குடியேறியிருக்கின்றவர்களை வெளியேற்றுவது சம்பந்தமாக அதனோடு சேர்ந்த பல கேள்விகளையும் உள்ளடக்கியதாக ஒத்திவைப்புப் பிரேரணையில் இங்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிகழ்விலே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதற்கு முன்பாக கடந்த கால ஆரம்ப விடயங்கள் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சற்று நான் பேச வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
கௌரவ சம்பந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகாணத்திலே அரச காணிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கின்றவர்கள் வெளியேற வேண்டும் என்கின்ற பிரேரணையிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே சட்டபூர்வமான ஆதாரங்களோடு இருக்கின்றவர்களுக்குரிய காணி உடனடியாக வழங்கப்பட வேண்டும் அல்லது அதற்குத் தடையாக இருக்கின்றவர்கள் அதை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருப்பாரென்றால் நான் சந்தோசடைந்திருப்பேன்.
கடந்த காலங்களிலே என்னுடைய பாராளுமன்றப் பேச்சுக்களிலே நான் தெளிவாகக் கூறியிருக்கின்றேன், விஷேடமாக கிழக்கு மாகாணத்திலே இந்தப் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்தந்தக் கால கட்டங்களிலே இருப்பதை நாங்கள் கண்டு கொண்டோம்.
விஷேடமாக தமிழ் முஸ்லிம் எல்லைக் கிராமங்களிலே இந்தப் பிரச்சினை பூதாகாரமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதை நாம் ஏன் இன்னும் முடிவுக்குக் கொண்டு வராமல் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதில் எனக்கு ஒப்புதல் கிடையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலே பல தடவை என்னுடைய பாராளுமன்ற உரையிலே நான் தெளிவாகக் கூறியிருக்கின்றேன். நாங்கள் சமூக ரீதியான பிரச்சினைகளுக்குப் பேசவந்த அரசியல் தலைவர்கள்.
எங்களுக்குள்ளே ஒரு உடன்பாடு கண்டு கொள்ளாத நிலையில் அல்லது அந்தப் பிராந்தியத்திலே இருக்கின்ற நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்வுக்குக் கொண்டு வருவதற்கு ஏதாவதொரு முயற்சி எடுக்காத வரையில் நிச்சயமாக இனங்களுக்கிடையிலே ஒற்றுமையைக் கொண்டு வரமுடியாது.
நாங்கள் தெளிவாகக் கூறினோம் அந்த நாட்களிலே அந்தப் பிரதேசங்களிலே இருந்த விடுதலைப் புலிகளினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபொழுது விஷேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கு விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது பாதிக்கப்பட்டார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக செய்கை பண்ணப்பட்டது. அந்தக் காலகட்டத்திலும் கூட இந்தச் சபையிலும் பிரதேச அரசியல் தலைவர்களுக்கும் இது விடயமாக எல்லை ரீதியான ஒரு தீர்க்கமான முடிவினை நாங்கள் எடுக்கவில்லை என்று சொன்னால் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் ஒரு நிம்மதியான சூழ்நிலை இந்த இரு சமூகங்களுக்கு மத்தியிலும் உருவாகாது என்று நான் தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறியிருக்கின்றேன்.
இவற்றுக்கெல்லாம் அப்பாலும் பிராந்தியத்திலே இருக்கின்ற அரசியல் தலைவர்கள் கடந்த காலத்திலே தவறிழைத்து விட்டார்கள்.
எதிர்காலத்திலும் அவ்வாறு பிழை விடக் கூடாது என்பதுதான் என் பிரார்த்தனை.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையிலே அது 2600 சதுர மைல்களைக் கொண்டமைந்துள்ளது. ஆனால் அங்கே மூன்றிலொரு பங்கினராக வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் 26 சதுர மைல்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்
சம்பந்தன் ஐயா இந்த விடயத்தையும் அவரது ஒத்தி வைப்புப் பிரேரணையிலே செருகியிருப்பாரென்றால் அந்தப் பிராந்தியத்திலே பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்ற மக்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
2600 சதுர மைல்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்றிலொரு பங்காக வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் 26 சதுர மைல்களுக்குள் வாழ்கின்றார்களென்று சொன்னால் அவர்கள் எவ்வளவு கஸ்டத்தோடும் பிரச்சினையோடும் வாழ்வார்கள் என்பதை இந்த சபை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்கின்ற 31 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் வியாதி வருவதாக ஒரு புதிய மருத்துவ ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெருக்கமான சன அடர்த்தி மிக்கதொரு சூழலுக்குள் வாழ்கின்ற நிலையில். ஒரு வீட்டுரிமையாளரின் கிணறு உள்ள அதேபக்கத்தில் அண்டை வீட்டாரின் மலசல கூடக் குழி இருக்கின்றது. இந்த அவலத்தை முஸ்லிம் சமூகம் விலை கொடுத்து வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட எல்லை ரீதியான கோடு இன்னும் வெளிப்படையாக வராமல் இருக்கின்ற ஒரு கவலையான விடயம்.
வாகரைப் பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்திலே பிரமாண்டமான நிலப்பரப்பைக் கொண்டது. ஆனால் அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் காணியில்லாமல் விரட்டப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகளாலும் அந்தப் பிராந்தியத்திலே இருக்கின்ற புலிகள் இயக்கத்தினுடைய எச்ச சொச்சங்களின் நடவடிக்கையின் அடிப்படையிலும் இன்னும் முஸ்லிம் பிரதேச நிருவாக உரிமைகள் முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கோறளைப்பற்று மத்தியென்று முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாகவும் கோறளைப்பற்று தெற்கு கிரான் என்று தமிழ் மக்களை உள்ளடக்கியதாகவும் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகள் 2002.05.24ஆம் திகதி உருவாக்கப்பட்டன.
அன்றைய பிரதேச செயலகப் பிரிப்போடு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலிருந்த பெறுமதியான 5 கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவோடு இணைக்கப்பட்டதன் விளைவாக இப்பொழுது அந்தப் பகுதியிலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் ஒரு கிலோமீற்றருக்குள் இருக்கின்ற ஓட்டமாவடி பிரதேச செயலகத்தை விட்டு விட்டு 13 கிலோமீற்றர்களுக்கப்பால் இருக்கின்ற கிரான் பிரதேச செயலகத்திற்குச் சென்று தமது அலுவல்களுக்காக அலைய வேண்டி நேரிட்டுள்ளது.
அவர்களது வயல் நிலங்கள் இன்னும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படாத ஒரு கேவலமான நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
வாகரைப் பிரதேசத்திற்குள்ளே பூர்வீகமாக இருக்கின்ற முஸ்லிம் விவசாய சமூகத்தின் காணிகள் அவர்களிடம் போதியளவு ஆவணங்கள் இருந்தும் இன்னும் அவர்களுக்கு மீளக் கொடுக்கப்படவில்லை.
மதுரங்கேணிக் குளம் பகுதியிலே என்னுடைய தகப்பனின் பேரால் எனக்குச் சொந்தமான காணி உள்ளது.
அங்கு ஒரு முஸ்லிம் பாடசாலை பள்ளிவாசல் எல்லாம் இருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் அழித்தொழித்து விட்டார்கள்.
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களிலே தமிழ் மக்களுக்கு இப்பொழுது வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு வாழ்விடம் அமைத்துக் கொடுக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.
அரசாங்க நிதியளிப்பின் மூலம் இடம்பெறும் இந்த மீள் குடியேற்ற வேலைத் திட்டங்களில் அங்கு முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதுபற்றி சம்பந்தன் ஐயா அவர்கள் அவரது பிரேரணையில் ஒரு வார்த்தை சேர்த்திருக்க வேண்டும்.
அந்தப் பிரதேசத்திலே 1985ஆம் ஆண்டுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலே இருந்தன. அப்படியிருந்தும் அவர்கள் அங்கு மீளத் திரும்புவதற்கு தமிழ் சமூகம் இன்னும் அனுமதிக்கவில்லை.
இது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற மாபெரிய துரோகமும் அநியாயமுமாகும்.
இவ்வாறே தொடர்ந்து பேசிக்கொண்டே செல்லக் கூடிய நிலைமை இருந்தால் நிச்சயமாக அது விடிவைக் காண முடியாத ஆரோக்கியமில்லாத சூழலை ஏற்படுத்தும்.
முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தம் வசம் வைத்திருந்த ஆவணங்களைக் கூட கைப்பற்றி அழித்தொழித்து விட்டார்கள்.
இந்த மாவட்டத்திலே ஒரு நல்ல சூழலை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி அம்மா, கனகசபை ஐயா எல்லோரும் இருக்கத்தக்கதாக இந்த சபையிலே பல தடவைகள் நான் கூறியிருக்கின்றேன்.
83ஆம் ஆண்டுக்கு முன்பு இரண்டு சமூகங்களும் எவ்வளவு ஐக்கியமாக வாழ்ந்தார்கள். அதே ஐக்கியத்தை நாங்கள் மீண்டும் கொண்டு வரவேண்டுமென்று சொல்கின்றேன்.
அந்தப் பிராந்தியத்திலே இருக்கின்ற இரண்டு சமூகங்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளின் அரசியல் தேவைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் அப்பால் நின்று நாங்கள் இதற்கு ஏதேனுமொரு வடிவத்தில் தீர்வு கண்டு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு நாம் செய்யவில்லையென்றால் இதே பாராளுமன்றத்திலே தொடர்ந்தேர்ச்சையாக சம்பந்தன் ஐயாவும் அமீரலியும் அதன் பின்பாக வரக்கூடிய வேறு தலைவர்களும் இதைப்பற்றிப் பேசிக் கொண்டு செல்வார்களே தவிர பிரச்சினைக்கு ஒருபோதும் முடிவு கிட்டாது.
இந்தப் பிரச்சினைக்கு மிகவும் இலகுவாகத் தீர்வு காணலாம். இதை கொடுங்கள் அல்லது கொடுக்கக் கூடாது என்று அரசாங்கமோ அரசாங்கத்திலுள்ள பிரதிநிதிகளோ எந்தவித அழுத்தமும் தெரிவிக்கவில்லை.
இரண்டு சமூகத்திற்குமிடைப்பட்ட பிரச்சினை இப்பொழுது அங்கு பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது.
தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்பிடியும் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.
தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர் என்றில்லாமல் விவசாயிகளும் மீனவர் சமூகமும் மற்றுமள்ளவர்களும் மேம்பாடு அடைய வேண்டும் என்று கனவு காண்பவர்களில் நானும் ஒருவன்.
வாழைச்சேனையிலே சங்கத்துக் கொலனி என்கின்ற ஒரு பிரதேசம் இருக்கின்றது. அங்கு 59 முஸ்லிம் குடும்பங்கள் காலங்காலமாக அவர்களுடைய உறுதிக் காணிளோடு வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் அந்தப் பிரதேசத்து மக்கள் இப்பொழுது அங்கே செல்ல முடியாதவாறு தமிழ் மக்கள் அவர்களது காணிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
பிரதேச மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக நான் உங்களிடம் இதை மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
பிரதேசத்திலே இருக்கின்ற அரசியல்வாதிகள் அதன் தலைவர்கள் இந்த விடயம்பற்றி எதிர்காலத்திலே நீங்கள் அவர அவசரமாக ஒரு தீர்வைத் நீங்களே தேடித் தரவேண்டும்.
பாதிக்கப்பட்ட சமூகம் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுமாத்திரமல்லாமல் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் உரிமை எல்லாம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதிலும் எங்களுக்கு உடன்பாடு அதிகமிருக்கின்றது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எங்களிடம் கிடையாது.
இரண்டு சமூகங்களின் குறைபாடுகள் என்ன என்று அவர்கள் வாழும் எல்லைகளுக்குச் சென்று ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும். அந்த சமூகங்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
இதை சம்பந்தன் ஐயா அவர்கள் உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் செய்ய முடியுமென்று சொன்னால் இந்த அரசியல் வாழ்வில் அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும்
வாகரை கிரான் ஆகிய பிரதேசங்களிலே இருக்கின்ற முஸ்லிம் மக்களுடைய காணி வயல் பிரச்சினை இதேபோன்று காத்தான்குடி ஏறாவூர் கல்குடா பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்களுக்குரிய காணிப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன.
மட்டக்களப்பில் வாழும் எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலுமுள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் காணிப் பிரச்சினை உள்ளது. அதனை நியாயமாகத் தீர்ப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்க அரசியல் தலைமைகள் தவறிவிட்டன.
அதன் காரணமாகத்தான் இப்பொழுதும் இனிவரும் காலங்களிலும் நாங்கள் இதைப்பற்றிப் பேச வேண்டிய நிலையுள்ளது.
எப்பொழுது யார் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது? இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தனியொருத்தனாக முயற்சிக்கின்றபொழுது அங்கே இனத்துவேஷம் பேசப்படுகின்றது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலே பெரும்பான்மை சமூகமாக இருக்கின்ற நீங்கள் இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதன் மூலம்தான் சகவாழ்வை உருவாக்க முடியும்.
(மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் வரும் வாரமும் வரும்)
-Vidivelli