(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம்களிடம் விட்டுக்கொடுப்புகளும், சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமைப்படவேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுப்புடன் மற்றவர்களை மதித்து நடக்கவேண்டும்.
குர்ஆன் பிற மதங்களை நிந்திக்கக்கூடாது என எச்சரித்துள்ளது. உலமா சபை எப்போதும் ஒரு கூட்டான சபையாக எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி இந்நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் பொருத்தமான சில வழிகாட்டல்களை முன்வைத்துள்ளது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு சாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஊடக மாநாடொன்றினை நடத்தியது. ஊடக மாநாட்டில் மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடும் வழிகாட்டல்களும் (மன்ஹஜ்) அறிக்கையாக வெளியிடப்பட்டது.
உலமா சபையின் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘நாட்டின் உலமாக்கள் ஒன்றுபட்டு இந்நாட்டின் முஸ்லிம்கள் ஏனைய மக்களுடன் எப்படி ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதற்கான அழகான வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் வாழ்ந்த காலங்களில் எப்போதுமே இஸ்லாமிய அடையாளங்களை, அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை பாதுகாக்கக் கூடியவர்களாக உலமாக்கள் இருந்து வந்துள்ளார்கள். 1924 இல் ஆரம்பிக்கப்பட்ட உலமா சபையினால் இந்நாட்டு முஸ்லிம்கள் வழி நடாத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறியது போன்று நாம் ஒரு சமூகம். அல்லாஹ் பல சிறப்புகளை எமக்கு வைத்திருக்கிறான். நபிகளின் வழிகாட்டல்கள் படி சமூகம் செயற்படும்போது நல்ல ஈடேற்றத்தை அடைய முடியும். எப்போதும் நபிகளின் போதனை அப்படியே அமைந்திருக்கின்றது. ‘மன்ஹஜ் ஒவ்வொரு வீட்டிலும் விளங்கப்படுத்தப்படவேண்டும். பிறமதத்தவர்களிடம் இந்த விளக்கங்கள் செல்ல வேண்டும்’ என்றார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் உரையாற்றுகையில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாம் கட்டுக்கோப்பான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்று படவேண்டும். முஸ்லிம்கள் சமூக,சமய விவகாரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உலமாக்கள், புத்தி ஜீவிகள், சட்டத்தரணிகள் போன்றோரின் கருத்துகளை உள்வாங்கி வழிகாட்டல்கள் ஆவணமாக்கப்பட்டுள்ளன. இதுவே மன்ஹஜ் பிரகடனமாகும்.
எமக்குள் பிரச்சினைகள் உருவானால் நாம் அவற்றை எமக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்றார்.-Vidivelli