ஜெய்லானி விவகாரம்: பள்ளியை பாதுகாக்க கூட்டாக நடவடிக்கை
வக்பு சபை, திணைக்களத்தினால் ஐவர் அடங்கிய குழு; ஆவணங்களைத் திரட்ட சட்டத்தரணிகள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சர்ச்சைக்குள்ளாகியுள்ள கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலைப் பாதுகாப்பதற்கு வக்பு சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கூட்டாக செயற்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கென ஐவர் அடங்கிய நடவடிக்கை குழுவொன்றினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நியமிக்கவுள்ளது.
கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் 11 பேரில் 8 பேர் பங்கு கொண்டனர்.
பள்ளிவாசல் தொடர்பான தேவையான ஆவணங்களைத் திரட்டுவதற்கு சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் தற்போதைய நிலைமைக்கு தற்போதைய நிர்வாகமும் முன்னாள் நிர்வாகமும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நிர்வாக சபைகள் பள்ளிவாசலின் அபிவிருத்தியில் அக்கறை காட்டாமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி’க்கு கருத்துத் தெரிவிக்கையில் ‘கூரகல பள்ளிவாசல் தொல்பொருள் வலயத்தில் அமைந்துள்ளது. அதனை எவராலும் அகற்ற முடியாது. இப்பள்ளிவாசலைப் பாதுகாப்பது எமது கடமையா-கும். பள்ளிவாசலின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு பள்ளிவாசலைப் பாதுகாக்க வேண்டும்.
இப்பள்ளி வாசலே இலங்கையில் முதலாவது பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசல் 1958 ஆம் ஆண்டு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலாங்கொடைபகுதியில் இயங்கிவரும் 15பள்ளிவாசல் நிர்வாகிகளை ஒன்றிணைத்து விரைவில் கலந்துரையாடலொன்றினை நடாத்தி கள நிலைமையினை ஆராயவுள்ளோம்.
அத்தோடு தொல்பொருள் ஆணையாளர் நாயகத்துடன் இதுதொடர்பில் வக்புசபையும் திணைக்களமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
பள்ளிவாசலின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை நடாத்தி அவ்வறிக்கையை திணைக்களத்துக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாம் கூட்டாக, ஒற்றுமையாகச் செயற்பட்டாலே எம்மால் பள்ளிவாசலைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். சட்டரீதியான மேலும் தேவையான ஆவணங்களைத் திரட்டுவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுவிடயத்தில் சமூகம் ஒத்துழைக்கவேண்டும் என்றார். Vidivelli