சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு: பிணை கிடைக்குமா?
எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க கடந்த ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்திருந்தது. இது பொதுவாக அன்றைய தினம் வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து எல்லா ஊடகங்களிலும் பிரச்சாரப்படுத்தப்பட்ட, எல்லோரும் அறிந்த செய்தியாகும்.
எனினும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வாவை புத்தளம் மேல் நீதிமன்றம் இவ்வழக்கின் போது கடுமையாக எச்சரித்தது. இது ஊடகங்களில் பெரிதாக வெளிச்சமிட்டு காட்டப்படாத போதும், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் போது இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வாக இதனை குறிப்பிட முடியும். ஏனெனில் அதற்கு காரணம் உள்ளது.
இந்த வழக்கின் பிரதான சாட்சியாளரான புத்தளம் அல் சுஹைரியா மத்ரசாவின் முன்னாள் மாணவன் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்சியங்களை நெறிப்படுத்தும் போது, சாட்சியாளரிடம் நேரடியான, பதிலை உணர்த்த முடியுமான முறையில் கேள்விகளை தொடுத்தமையை மையப்படுத்தி நீதிமன்றால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்னவினால் இவ்வாறு அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எச்சரிக்கப்பட்டார். பொதுவாக சாட்சி விசாரணைகளின் போது, நேரடியான அல்லது பதிலை உணர்த்தும் கேள்விகளைக் கொண்டு நெறிப்படுத்தல்களை முன்னெடுக்க முடியாது. வேறு வகையில் கேள்விகளை எழுப்ப முடியாத சந்தர்ப்பங்களில் நீதிமன்றின் அனுமதியுடன் மட்டும் அவ்வாறான நேரடியாக கேள்விகளை தொடுக்க முடியும். இதுவே பொதுவான சம்பிரதாயமாகும்.
சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ்
ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும்
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வாவை
புத்தளம் மேல் நீதிமன்றம் இவ்வழக்கின் போது கடுமையாக எச்சரித்தது. இது ஊடகங்களில் பெரிதாக
வெளிச்சமிட்டு காட்டப்படாத போதும், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் போது இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வாக இதனை குறிப்பிட முடியும்.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற போது இந்த சம்பவம் நீதிமன்றில் பதிவானது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்” என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்ததாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு வாசித்து காட்டப்பட்ட நிலையில், அவர்கள் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் நிரபராதிகள் என அறிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ள நிலையில், ஹிஜாஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்ய விசேட சட்டத்தரணிகள் குழாம் அச்சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட தலைமையில் சட்டத்தரணி சரித் கல்ஹேன இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இந் நிலையில் சாட்சியாளரின் சாட்சியம் பெறும் நடவடிக்கைகள், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வாவின் நெறிப்படுத்தலில் ஆரம்பமானது.
இதன்போது சாட்சியமளித்த சாட்சியாளரான மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக், 2018 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இருவர் சுஹைரியா மத்ரசா பாடசாலைக்கு வந்து விரிவுரைகளை முன்னெடுத்ததாகவும், பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அதிலிருந்து ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு பிறகு வந்து விரிவுரை நடாத்தியதாக கூறினார். அத்துடன் இதன்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் புரஜெக்டர் ஒன்றினை பயன்படுத்தியதாகவும், அதனை பயன்படுத்தி அவர் என்ன கூறினார் என்பது ஞாபகத்தில் இல்லை எனவும் சாட்சியாளர் சாட்சியமளித்தார்.
இதன்போது, சாட்சியாளருக்கு நேரடியாக ஆம், இல்லை எனும் பதிலை அளிக்க முடியுமான வண்ணமும், பதிலை கேள்வியில் மறைத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வா கேள்விகளை தொடுப்பதாக , சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளும் நீதிபதி குமாரி அபேரத்னவிடம் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, சாட்சியாளர் சாட்சிக் கூண்டிலிருந்து இறக்கப்பட்டு, நீதிமன்ற அறைக்கு வெளியே தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வாவின் குறித்த நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோரால் ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது. அதற்கான பதில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சனவினால் வழங்கப்பட்டது.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி குமாரி அபேரத்ன, ‘ சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் தான் இவ்வாறான பதிலை உணர்த்தும் கேள்விகளை எதிர்பார்க்கவில்லை எனவும், அவ்வாறு பதிலை உணர்த்தும் கேள்விகளை இனி மேல் நீதிமன்றின் அனுமதியில்லாமல் கேட்கக் கூடாது” எனவும் உத்தரவிட்டார்.
அவ்வாறு உத்தரவிடப்பட்ட பின்னர் மீள சாட்சி நெறிப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டு 2 ஆவது கேள்வியே நேரடியான, பதிலை உணர்த்தும் கேள்வியாக அமைந்திருந்தது. இந் நிலையில், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸவும், சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும் மீண்டும் தமது ஆட்சேபனைகளை பதிவு செய்தனர்.
இதனையடுத்து, சாட்சியாளரிடம் நேரடியான, பதிலை உணர்த்தும் கேள்விகளை தொடர்ந்து கேட்பது தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன சில்வாவை கடுமையாக எச்சரிப்பதாக நீதிபதி குமாரி அபேரத்ன திறந்த மன்றில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத்தில், சாட்சிகளை நெறிப்படுத்தும் பொறுப்பை, அவரோடு மன்றில் ஆஜராகியிருந்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி லக்மினி கிரியாகம கையேற்றார்.
இவ்வாறான நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவர் மீதான குற்றப் பத்திரிகையும் கடந்த 2018 ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்த குற்றம் ஒன்றினை அடிப்படையாக கொண்டு முன் வைக்கப்பட்டுள்ளமையால், குற்றப் பத்திரிகையின் குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியை 2018 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதி என திருத்த வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகமவினால் குற்றவியல் சட்டத்தின் 167 ஆவது அத்தியாயத்துக்கு அமைய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
எனினும் அந்த கோரிக்கைக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரலவும் கடும் ஆட்சேபனை முன் வைத்தனர்.
அவ்வாறு குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும், ஒவ்வொரு சாட்சியாளரின் சாட்சியத்துக்கு அமைய திருத்தச் சென்றால் அது பிரதிவாதிக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் குற்றப் பத்திரிகையில் குற்றம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2018 ஆகஸ்ட் 1 முதல் 31 வரையிலான காலப்பகுதி குறிப்பிடப்பட, சாட்சியாளரின் இரு உறுதியான சி.ஐ.டி. வாக்குமூலங்களை சட்ட மா அதிபர் அடிப்படையாக பயன்படுத்தியுள்ள நிலையில், குற்றப் பத்திரிகையை திருத்த அனுமதிக்க கூடாது என அவர்கள் வாதிட்டனர்.
ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, குற்றப் பத்திரிகையை திருத்த அனுமதியளிக்க மறுத்தார்.
இவ்வாறான நிலையிலேயே, முதல் சாட்சியாளரின் சாட்சி நெறிப்படுத்தல் நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் தரப்பு முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், சாட்சியாளரை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனையடுத்தே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, பிணைக் கோரிக்கையை முன் வைத்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் கடந்த வாரம் சீராய்வு மனு முன் வைத்து பிணை கோரிய போது, அதற்கு ஆட்சேபனை இல்லையென சட்டமா அதிபர் அறிவித்திருந்ததாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ மன்றில் சுட்டிக்காட்டினார். இதனை சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்சன டி சில்வாவும் அதனை ஆமோதித்தார். சட்ட மா அதிபருடனான பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் சந்திப்பின் போதும் அது உறுதி செய்யப்பட்டதாக மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் சட்ட மா அதிபர் பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என கூறினாலும், மேல் நீதிமன்றுக்கு பிணை வழங்க பயங்கரவாத தடைச் சட்டம் பிரகாரம் அதிகாரம் இல்லை என்ற தனது முன்னைய உத்தரவை தானே மீள மாற்ற முடியாது என நீதிபதி குமாரி அபேரத்ன சுட்டிக்காட்டி பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டால், அதனை நகர்த்தல் பத்திரத்தினூடாக அறிவிக்குமாறும் முடியுமான முதலாவது தினத்திலேயே பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது தெரிவித்தார். இந் நிலையில் இவ்வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.- Vidivelli